எதார்த்தக் கதையுலகை எழுதுவது ‘ராமாயணத்தில்’ ராவணச் சேனையினர் அனுமனின் வாலுக்குத் தீ வைப்பதைப் போன்றது (ராமாயணத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஏனோ அதுதான்.). அனுமார் அங்கிங்கு தாவி குதித்து மொத்த தீவையும் பற்றி எரிய வைப்பார். இந்த நெருப்பை நாம் எதார்த்தம் என்று கொள்வோமெனில், நம் கதையுலகம்தான் வால். ஒவ்வொரு சொல்லையும், சேதியையும், மதிப்பீட்டையும், திருப்பம், காட்சிச் சித்தரிப்பு, கருத்தையும் ஒரு குறிப்பிட்ட தர்க்கச் சட்டகத்துக்குள் நாம் அதன்பிறகு அடக்க வேண்டி வரும். அது ஒரு பெரும் அவதி. அதாவது தர்க்கப்படி எழுதுவது அல்ல பிரச்சினை. அது ஒரு மெனக்கெடல் மட்டும்தான். எதார்த்தக் கதையை எழுதும்போது நாம் இந்தச் சட்டகத்துக்குள் அங்குலம் பிசகாமல் கச்சிதமாக நிற்பதால் அதன் நெருக்கடியை, செயற்கையான கட்டுப்பாட்டை, அடிமை நிலையை நாம் உணர்வதில்லை.
எதார்த்தத்தை மீறி ஒரு நாவலை இப்போது நான் எழுதும்போது எனக்கு ஒன்று விளங்குகிறது - எதார்த்தப் புனைவை எழுதுகையில் நான் சம்பவ வரிசையின் காரண காரிய நியாயத்தையும், நம்பகத்தன்மையையும் மட்டுமே செதுக்கவில்லை, நான் ஒரு துவக்க-முடிவெனும் எல்லைக் கோட்டுக்குள் என் கதையைத் திணிக்கிறேன். சிலநேரங்களில் இந்தச் சட்டகம் அமேசானில் பொருள் வாங்கும் நமக்கு வைத்து அனுப்பப்படும் கெட்டி அட்டைப் பெட்டிகளை நினைவுபடுத்துகிறது. சிலநேரங்களில் ஒரு சிறிய பொருளைக் கூட பெரிய பெட்டிக்குள் வைத்து பெரிய பார்சலாக அனுப்புவார்கள் (பொருளின் பாதுகாப்பை நிச்சயப்படுத்தவும் நம் நன்மதிப்பைப் பெறவும்). எந்த ஒரு சம்பவத்தையும் அதற்கு உரிய இடத்தில் சரியாகப் பொருத்துகிறோம். இப்படிச் செய்யும்போது நாம் வாசகர்களின் பிரக்ஞையையும் தான் இப்படி ஒரு அட்டைப் பெட்டிக்குள் அடைக்கிறோம்.
நிஜ உலகம் இப்படி இல்லையா? இது ‘எதார்த்தம்’ இல்லையா? இக்கேள்விகளுக்குள் நாம் போனாலே எதார்த்த இலக்கியத்தின் பாம்பு வாய்க்குள் மாட்டிக் கொள்வோம். ஏன் ஒரு புனைவு நாம் காணும் புறவுலகை ஒத்திருக்க வேண்டும்? நாம் பார்க்கும் பொருட்களையும் உயிர்களையும், புறக்காலத்தையும் வெளியையும் ஒருங்கிணைத்து ஒரு கதையாடலை உருவாக்குகிறோம். இதுவே நமது ‘புற எதார்த்தம்’. அடுத்து நாம் எதார்த்தப் புனைவுக்குள் இதையே கற்பனையில் உருவாக்குகிறோம். ஒரு கதையை நிச்சயப்படுத்த அதன் மீதாக ஒரு மீ-கதையை உருவாக்குகிறோம். அதுவே எதார்த்தப் புனைவு. இது ஒரு தேவையில்லாத கட்டுப்பாட்டை நம் கற்பனையிலும் மொழியிலும் புனைவுக்குள் செயல்படும் காலத்திலும், இப்புனைவுக் காலத்தால் கட்டுப்படுத்தப்படும் புனைவு வெளியிலும் திணிக்கிறோம். என்னுடைய ஒரு பாத்திரம் எட்டாவது மாடியில் இருக்கிறது. அவர் வீட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்து மாடிப்படிக்கட்டில் இறங்கி வந்து வாயிற் கதவைத் தாண்டிச் சென்று சாலையை அடைய வேண்டும். அல்லது அவர் தன் பால்கனியில் இருந்து கீழே குதித்து தன் மண்டையையோ கைகால்களையோ உடைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் புற எதார்த்தத்தை நாம் ஏன் இலக்கியத்தில் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையே நான் இதை மீறி எழுதும்போது மட்டுமே உணர்கிறேன். மற்ற சமயங்களில் இந்தப் புற எதார்த்தத்தின் கட்டுக்குள் இருப்பதை நானே பலமுறை உணர்த்தி என்னை இந்தப் புற நிபந்தனைகளால் ஆன ஒருவராக மீளமீள உணர்த்துகிறேன். இப்படி என் கற்பனையும் என் நம்பிக்கையும் எதார்த்தப் புனைவில் இருந்தும் வருகின்றன. அதாவது நான் எதார்த்த உலகை நோக்கி எதார்த்தப் புனைவெழுதவில்லை, நான் எதார்த்தப் புனைவெழுதும்போதும் படிக்கும்போதும் ‘எதார்த்தம்’ எனும் ஒரு கருத்தமைவை நம்பவும் ஏற்கவும் அதற்கு ஏற்ப என் மன அமைப்பில் துணிசுற்றி நெருப்பு வைக்கவும் செய்கிறேன்.
எதார்த்தத்தின் சங்கிலியை அறுக்கும்போது அது நம் உலகை எவ்வளவு விடுவிக்கிறது என உணர்கிறேன். ஆனால் அதைப் புறவுலகில் செய்வது கடினம். புனைவில் இருந்து அதை ஆரம்பிக்கும்போதே அதன் சாத்தியங்கள் புலனாகின்றன - நமது அரசியல், மதிப்பீடுகள், நம்பிக்கைகள் எதார்த்தச் சட்டக்கத்தினுள் மட்டுமே உயிர்க்கக் கூடியவை. பாத்திரங்கள் எதார்த்தத்தை மீறும்போது அவை அரசியலையும் மதிப்பீடுகளையும் பல்வேறு எதிர்மைகளையும் கடந்து அவ்வளவு சுதந்திரமாக உலவுகின்றன.