சென்னைக்கு வந்து புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ள ஆசைதான். மைசூரில் இருந்து கிளம்பி சென்னையை அடைந்து ஒருநாள் சுற்றித் திரிந்து அடுத்த நாள் கிளம்பி வந்து சேர வேண்டும். அதற்கு மூன்று நாட்கள் வேண்டும். ஆனால் கர்நாடகாவில் பொங்கலுக்கு ஒருநாள்தான் விடுப்பு. நடுவே ஒரு சனிக்கிழமை வந்தாலும் அன்று அலுவல்ரீதியான பணியுள்ளது. அதற்கும் அனுமதி பெற்று விடுப்பெடுக்கலாம் என்றாலும்கூட என் இரண்டு புத்தகங்களும் இன்னும் அச்சாகி வரவில்லை.
வரவர வாழ்க்கையில் நிராசையும் அவநம்பிக்கையும் பெருகுகிறது. எதுவும் உருப்படவில்லை, எதிர்காலம் இருட்டாகத் தெரிகிறது. மைசூர் அழகாக இருந்தாலும் "பெட்ரோ பரோமாவில்" வரும் கொமாலாவைப் போல ஒரு இறந்த நகரமாக உள்ளது. எப்போதுமே சிறு உறக்கக் கலக்கத்துடன் பாதி விழிப்புடன் இருக்கும் மக்கள். மூச்சுவிடும் தொனியும் பேசுகிறவர்கள். ஏதோ ரகசிய நடவடிக்கைகளைப் போல சிறிய அளவில் வணிகம், வேலை, உரையாடல் என இருக்கிறார்கள். புத்தாண்டு கூட இங்கு ஏதோ பக்கத்து நாட்டு சுதந்திர தினம் போலத்தான் பார்க்கப்படுகிறது. தசரா அன்று மட்டுமே விழித்துக் கொள்ளும் இந்நகரம் "எங்களை இன்னும் 100 ஆண்டுகள் தூங்க விடுங்கடா" எனும் கணக்கில் உள்ளது. இந்த ஊரில் எதாவது ஊர்வலம் நடந்தால்கூட சாமியார்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகளை அழைத்துக் கொண்டு அமைதியாகத் தான் போகிறார்கள். மாலையானால் ஸ்னேக் சாப்பிடுவோம் என்று கடைக்குப் போய் ஒரு தட்டில் சிறிய வெடிகுண்டுகளைப் போல ஐந்து போண்டாக்கள், ஐந்து பஜ்ஜிகளை வைத்து கண்ணைப் பிதுக்கிக் கொன்டு தனியாளாகச் சாப்பிடுகிறார்கள். அப்போ இரவுணவுக்கு என்னதாண்டா சாப்பிடுவீங்க எனக் கேட்கலாம் என்றால் போண்டா தொண்டையில் சிக்கிக்கொண்டு விபரீதமாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது. பெங்களூரிலாவது நான் வேலை செய்த இடத்தில் தமிழர்களும் மலையாளிகளும் அதிகம். நான் வாழ்ந்த பகுதிகளிலும் கூடத்தான். பெங்களூர் ஒரு குட்டிக் கேரளாதான். ஆனால் மைசூர் ஒரு அசல் அந்நிய நகரம். பெருங்கூட்டத்தையும் ஜன நெரிசடியையும் இடையறா உரையாடல்களையும் விரும்பும் எனக்கு ஏதோ இடுகாட்டில் சமாதிகள் மத்தியில் அமர்ந்திருப்பதைப் போல இருக்கிறது. என் தலையெழுத்து வேலைக்காக இப்படி கொமாலா கொமாலாவாகப் போய்க் கொண்டிருக்கிறேன். எங்கு போனாலும் பல நூற்றாண்டுகள் பழைய ஆவிகள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. எதாவது ஒசூரில் வேலை கிடைத்திருந்தாலும் தப்பித்திருத்திருக்கலாம். ம்ஹும். கடந்த ஜென்மத்தில் கடாமுடா மீசை வைத்துக் கொண்டு அபலைகளைக் கடத்திப் போய் கொன்று தூக்கில் போட்டு பத்து பதினைந்து குழந்தைகளை நான் கிணற்றில் தூக்கிப் போட்டிருக்க வேண்டும். இப்படியெல்லாம் இடைவிடாமல் துன்பப்படுகிறேன்.
அதனால்தான் என்ன வாய்ப்பு கிடைத்தாலும் இந்த கொமாலாவில் இருந்து பைக்கை எடுத்துக்கொண்டு ஓடித் தப்பிப்பதற்காகத் தவிக்கிறேன். திரும்ப வரும்போது கூட கர்நாடக எல்லையில் வைத்து "உள்ளே போகக் கூடாது" என்னைத் தடுத்து திரும்ப அனுப்பிவிட மாட்டார்களா என்று ஒவ்வொரு முறையும் ஆசையாக இருக்கும். ஆனால் படுபாவிகள் அதை மட்டும் பண்ண மாட்டார்கள். இம்முறை தப்பித்து மூன்று நாட்களாவது இருக்கலாம் என்றால் முகாந்திரம் இல்லை.
தமிழ் எழுத்தாளர்கள் யாரும் கர்நாடகாவில் இருக்கக் கூடாது என்று கர்நாடக அரசு எதாவது சட்டம் போட்டால் ஜாலியாக இருக்கும்!