இத்தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கையில் நகைமுரண்தான் இவற்றின் பொதுவான தொனி என்று தோன்றுகிறது. ஆய்வு, கல்விப்புலம், பதிப்புத் துறை, தொல்பெருமை, அறிவியல், பரிசோதனை, வேலை, அறம், நேர்மை என விரியும் கதைகள் இவை. என் கல்லூரிப் பருவம் முதல் முப்பதுகளின் பிற்பகுதி வரையிலும் எழுதிய கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு எனும் அளவில் இக்கதைகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைச் சேர்ந்தவை அல்ல.
முன்னோடிகளின் சாயல் அதிகம் தெரியாமல் எழுதியிருக்கிறேன். திட்டமிட்டல்ல. என் இயல்பே பழைய ஒன்றை மறந்து புதிய ஒன்றை நோக்கி நகர்வதுதான். எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளிகளின் நடையின் மீதான நினைவுகளோ ஈடுபாடோ பணவீக்கத்தின்போது சம்பளக் காசைப் போல எழுதும்போது காணாமல் போய்விடும்.
அசோகமித்திரனுக்கு இத்தொகுப்பை நான் அர்ப்பணித்திருப்பதற்கு ஒரு காரணம் இக்கதைகளின் முடிவில் உள்ள நுட்பத்தையும் அமைதியையும் நான் அவரிடம் இருந்தே கற்றுக் கொண்டேன் என்பதே. மேலும் இதிலுள்ள சில கதைகளை எழுதிய காலத்தில் அவரை அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்பும் அமையப்பெற்றது. அதற்காக நான் அவருடைய வாரிசு என்றெல்லாம் கோரிக் கொள்ளவில்லை. ஒரு கடப்பாட்டின் அடிப்படையில் மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
ஏற்கனவே பிரசுரமான கதைகளே என்றாலும் இத்தொகுப்பிற்காக கதைகளின் மொழியையும், சில கதைகளின் முடிவையும் மாற்றியுள்ளேன்.
நன்றி! இனி இக்கதைகளை படித்து விட்டு எதையாவது சொல்லத் தோன்றினால் சமூகவலைதளங்களிலோ மின்னஞ்சலிலோ தொடர்புகொண்டு எனக்கு எழுதுங்கள்.
https://www.amazon.in/dp/B0GFP2PPMM
