நட . சிவகுமாரின் சமீப கவிதைகள் (" வெட்டி முறிப்புக்களம் ") தனி நபராகவும் , சமூக மனிதனாகவும் கவிதை சொல்லியின் பல்வேறுபட்ட பிளவுகளைப் பேசுபவை . மாந்திரிகச் சடங்குகள் பற்றின நுண்தகவல்கள் , மைய நீரோட்ட சாதியினரின் வரலாற்றுப் புனைவுகளை சாடும் எதிர்கலாச்சார பதிவுகள் ஆகியன இவர் கவிதைகளுக்கு காற்றில் பறந்து விடாதபடியான கனபரிமாணத்தை , மண்ணில் காலூன்றும் வலுவை அளிக்கின்றன . பழம் கலாச்சாரக் கூறுகள் , வை விளிம்பு நிலை சமூகத்தினுடையதாகினும் , இன்றைய முதலாளித்துவ , அறிவியல் சமூக ஓட்டங்கள் முன் பொருளற்றுப் போகும் தருணங்கள் நிறைய உள்ளன . சிவகுமார் ஒருபுறம் தலித் தெய்வங்களாய் மேலாங்கோட்டு , கொல்லங்க்கோட்டு அம்மன்கள் , இசக்கி , மாடன் , சுடலையின் வீரியம் பேசுகிறார் . மறுபுறம் தான் பயங்கரவாத உலகில் பிழைக்க குண்டு துளைக்காத வீடும் , இரண்டாய் வெட்டிப் போட்டால் உடல் ஒன்று சேரவும் , காசு கொட்டவும் வரங்கள் கேட்டால் தர இயலாது உருத்தெரியாது மாயமாகும் தனது உதவாத தலித் தெய்வத்தையும் பகடி செய்கிறார் (" மாந்திரிக ஓலைச...