எனக்கு ஒரு வினோதமான பழக்கம் . ஆறு மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கட்டுரை , கதை என்றால் கூட சுத்தமாக மறந்து போய் விடுகிறது . அதில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை நானே தான் படித்து “ ஓ இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேனா ?” என யோசித்து புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது . ஒருமுறை கிளப் ஹவுஸில் பாத்திமா பாபுவின் சிறுகதை வாசிப்பு நேரம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன் . என்னுடைய சிறுகதை ஒன்றை எடுத்திருந்தார்கள் . அதன் முடிவை முழுக்க மறந்து விட்டேன் . அவர்கள் ஒரு குறிப்பிட்ட கதையை படிக்கும் போது கேட்டு விட்டு “ இதை ஏன் இப்படி எழுதியிருக்கிறேன் ? என்ன அர்த்தம் இதற்கு ?” என சற்று நேரம் குழம்பினேன் . பிறகு ஒருவாறாகப் புரிந்து கொண்டு அதைப் பற்றி பேசினேன் . ஆனால் வேறு இரு கதைகள் ஓரளவுக்கு நினைவிருந்தன - ஏனென்றால் தொகுப்பாக வரும் முன் அக்கதைகளை நிறைய முறைகள் திருத்தி எழுதியிருந்தேன் . என்னுடைய நாவல்களுக்கும் இது பொருந்தும் - எழுதி வரும் நாவலை ஆறு மாதம் தொடவில்லை என்றால் அதில் என்னதான் இருக்கிறது ...