அசோகமித்திரனுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இலக்கிய அறிமுகம் இல்லாதவர்களும் அவரைப் படிக்கலாம். யாரும் சுலபத்தில் நுழையும் அளவுக்கு லகுவான கதைமொழி அவருடையது. ஆனால் இலக்கியத்தை நுணுகி வாசித்து பழகாதவர்களுக்கு அவரது கதையை படித்து முடித்ததும் கூட்டத்தில் ஏதோ ஒரு மிருதுவான பெண் உடலை உரசிய உணர்வு இருக்கும். கையில் கிட்டியும் கிட்டாத ஒரு நுணுக்கமான அனுபவமாக அவரது கதை தோன்றும். இலக்கிய எழுத்துக்கள் பழகும் முன்னரே அவரை வாசிக்க துவங்கிய எனக்கு இந்த உணர்வு தான் ஏற்பட்டது. அவரது எளிமையான, அலங்காரமற்ற, அங்கதமும் கரிப்புணர்வும் கலந்த மொழி வெகுவாக கவர்ந்தது.