பலதார மணம் (polyandry) போல பல - இணை காதலுறவு (polyamory) என ஒன்று உள்ளது . Cuffing Lounge என ஒரு கிளப்பில் (கிளப் ஹவுஸ்) இன்று அதைப் பற்றி நிறைய கறுப்பின ஆண்கள் , சில கறுப்பின மற்றும் வெள்ளையின பெண்கள் சேர்ந்து புலம்பிக் கொண்டிருந்தனர் . பெண்கள் அநேகமாய் அதை எதிர்த்தார்கள் . ஆண்களில் கணிசமானோர் வெளிப்படையாக அதை ஆதரித்தார்கள் . ஆண்கள் சொன்ன காரணம் பல பேரிடம் காதல் வருவது அல்லது குறைந்த பட்சம் ஒன்றுக்கு மேலானோரிடம் காதல் கொள்வது மனித இயல்பு . இன்றுள்ள ஒருதார முறையில் அப்படி ஒரு திருமணம் மீறிய உறவு தோன்றும் போது அதை மறைத்து வைக்க வேண்டி உள்ளது ; அது அவமானமாக நெருக்கடியாக இருக்கிறது என்பதே . திருமண உறவை முறிக்கலாம் என்றால் அதற்கு விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது , சான்றுகள் சமர்ப்பித்து வழக்கு நடத்துவது என நரகமாகி விடுகிறது ; வேறு வழியில்லாமல் இரட்டை முகத்துடன் வாழ வேண்டி இருக்கிறது என தம்மையே சபித்துக் கொண்டனர் . இவர்கள் தமது தாத்தா , தந்தை ஆகியோர் எப்படி இரண்டு மனைவியருடன் நிறைய குழந்தைகளுடன் மகிழ்...