முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல பெண்களை ஒரே சமயம் காதலிப்பது



பலதார மணம் (polyandry) போல பல-இணை காதலுறவு (polyamory) என ஒன்று உள்ளது. Cuffing Lounge என ஒரு கிளப்பில் (கிளப் ஹவுஸ்) இன்று அதைப் பற்றி நிறைய கறுப்பின ஆண்கள், சில கறுப்பின மற்றும் வெள்ளையின பெண்கள் சேர்ந்து புலம்பிக் கொண்டிருந்தனர். பெண்கள் அநேகமாய் அதை எதிர்த்தார்கள். ஆண்களில் கணிசமானோர் வெளிப்படையாக அதை ஆதரித்தார்கள். ஆண்கள் சொன்ன காரணம் பல பேரிடம் காதல் வருவது அல்லது குறைந்த பட்சம் ஒன்றுக்கு மேலானோரிடம் காதல் கொள்வது மனித இயல்பு. இன்றுள்ள ஒருதார முறையில் அப்படி ஒரு திருமணம் மீறிய உறவு தோன்றும் போது அதை மறைத்து வைக்க வேண்டி உள்ளது; அது அவமானமாக நெருக்கடியாக இருக்கிறது என்பதே. திருமண உறவை முறிக்கலாம் என்றால் அதற்கு விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது, சான்றுகள் சமர்ப்பித்து வழக்கு நடத்துவது என நரகமாகி விடுகிறது; வேறு வழியில்லாமல் இரட்டை முகத்துடன் வாழ வேண்டி இருக்கிறது என தம்மையே சபித்துக் கொண்டனர். இவர்கள் தமது தாத்தா, தந்தை ஆகியோர் எப்படி இரண்டு மனைவியருடன் நிறைய குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருந்தார்கள் என்று ஏக்கப்பெருமூச்சு விட்டன. இதை எதிர்த்த பெண்டிர் விவிலியத்தில் இது ஏற்கப்படவில்லை, கடவுள் முதலில் ஒரு ஆணை படைத்தவுடன் அவனுக்குத் துணையாக ஒரு பெண்ணை படைத்தாரே அன்றி இரண்டு மூன்று பெண்களை அல்ல என அபத்தமாக பரலோகப் பிதாவை எல்லாம் பஞ்சாயத்துக்கு இழுத்தார்கள்.


இந்த அரட்டையை கவனித்த போது  ஒன்று புரிந்தது: ஆண்கள் பல-இணை காதல் உறவை இன்பத்தை பெருக்கும் ஒரு வழியாக காண்கிறார்கள். அதிலுள்ள சுதந்திரமும் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. பெண்கள் இதை வெளிப்படையாக பேச விரும்பவில்லையா அல்லது அவர்கள் திருமண உறவை தம் பாதுகாப்புக்காக ஆதரிக்கிறார்களா எனத் தெரியவில்லை. அவர்கள் தமக்கு சமூகத்தில் உள்ள மதிப்பு, கற்பு, சம்பிரதாயம், மதம் எனும் வட்டத்துக்குள் நின்றபடி இதைப் பார்ப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். ஆண்களும் அப்படித்தான், ஆனால் கற்பு சார்ந்த நெருக்கடிகள் தமக்கில்லை என்பதால் ஒரே நேரத்தில் பல துணைகள் என்பது திறந்து கிடக்கும் மிட்டாய்க்கடை போல இருக்கும் என கற்பனை செய்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் யாருமே ஒரு பெண்ணின் தரப்பில் இருந்து பல-இணை காதல் உறவைப் பார்க்கவில்லை. ஒரு ஆண் தன் காதலிக்கு பல காதலர்கள் இருப்பதை, தன் வீட்டில் அவளுடன் பல ஆண்கள் வசிப்பதை விரும்புவானா? தன் காதலி தனக்கு அளிக்கும் நேரத்தை அவள் பலருடன் பகிர்ந்து கொள்வதை ஒப்புக்கொள்வானா? சந்தேகமே. ஆண்களின் இந்தசுதந்திர தாகத்துக்குப்பின்னால் ஒரு பாசாங்கு உள்ளது. அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள அவர்கள் தயாரில்லை.

 எது எப்படியோ, என் பார்வை என்ன?

 திருமணம் எனும் சட்டகத்தைக் கடந்து பல-இணை உறவு என்பது ஒரு அற்புதமான சாத்தியம் என சிலருக்குத் தோன்றலாம். ஆனால் எத்தனை இணையர் இருந்தாலும் அதனால் இன்பம் பல்கிப் பெருகாது என நினைக்கிறேன். பொறாமையும் மீயுடைமை உணர்வும் (possessiveness) உடல் சார்ந்த ஆண் பெண் உறவில் இருந்தே ஆகும். ஆக, சமூகப் பண்பாட்டு கட்டமைப்புகள் தோதாக இருக்கும் போது மட்டுமே சுதந்திரமான பாலுறவு, பல-இணைகளைக் கொண்ட காதல் சாத்தியமாகும். அப்படியான சமூகங்கள் நம் பழங்குடியினர் இடையே இருந்ததாக, அதுவே ஆதி ஆண்-பெண் உறவுத் தோற்றம் என ஏங்கல்ஸ் தனதுகுடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இன்று அது சாத்தியமாகாது. மாறாக பலதார மணத்தையே இந்த ஆண்கள் மறைமுகமாக பல-இணை உறவின் பெயரில் விழைகிறார்கள் என நினைக்கிறேன்.


அடுத்து, நிறைய பேரிடத்து மனம் இச்சை கொள்வது இயல்பே. நம் உடல் அவ்வாறே படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது குறைவான மக்கள் ஒரு பகுதியில் வாழ்ந்த வனாந்திர சூழலில் ஒரு சிறிய இனக்குழுக்குள் ஒரு ஆண் தேர்வு செய்யக்கூடிய பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் சிக்கல் இராது (இதை நீங்கள் ஒரு தெருவில் அல்லது ஒன்றிரண்டு தெருக்கள் இணைந்த பகுதியில் வாழும் நாய்கள் இடையே உள்ள உறவைக் கொண்ட கணிக்கலாம். எந்த நாயும் ஆயிரம் ரெண்டாயிரம் விடுங்க நூறு இருநூறு இணைகளைக் கொண்டிருப்பதில்லை.) தொழில்நுட்ப, பயண வசதிகள் அதிகமாகிய உலகமே ஒரு கிராமமாக சுருங்கிய இன்றைய உலகில் மனிதனை இது முடிவற்ற தேடலுக்கும், தீராத நெருக்கடிக்கும் ஆளாக்கும் என நினைக்கிறேன்.


நான் காதலை உடல் வேட்கையை தணிப்பதற்கும் உறவுக்குள் அர்த்தத்தை நாடும் முயற்சியாகவுமே பார்க்கிறேன். பணம், உடல்நிலை, சமூக ஆதரவு, அதிகாரம் என பல சங்கதிகளை சார்ந்து தோன்றும் உறவு இது. ஆகையாலே இது நிரந்தரமானது அல்ல. இதை மகத்துவப்படுத்தாமல், ரொமாண்டிசைஸ் பண்ணாமல் இயல்பாக எடுத்துக் கொள்வது மன ஆரோக்கியத்துக்கு நல்லது என இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒருவரை மிதமிஞ்சி விரும்புகிறோம், அவரைக் குறித்து அடிக்கடி நினைத்துக் கொள்கிறோம் என்றால் மிகப்பெரிய துயரத்துக்குள் அது நம்மை விரைவில் தள்ளப் போகிறது எனப் பொருள். புக்காவஸ்கி தன் நாவல்களில் சொல்வதைப் போல பெண்ணுடல் வெறும் ஒரு உடல் தான். ஆளுமையாகவும் பெண்கள் எல்லா மனிதர்களையும் போலத் தான். எந்த பிரத்யேக முக்கியத்துமும் அளிக்காமல் ஒரு பெண்ணை நடத்தும் போதே அவளுக்கு மரியாதை அளிக்கவும், சமத்துவமாக அவளை நடத்தவும் முடியும்; நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆனால் ஆண்களால் இது எப்போதும் முடிவதில்லை.


 ஆண்கள் பலவீனமாக உணரும் போதெல்லாம் ஒரு ஊன்றுகோல் போல பெண்ணை பயன்படுத்துகிறார்கள். அதற்காக காதலிக்க தொடங்குகிறார்கள். அப்போது இன்னும் பதற்றமாகி தன்னை நியாயப்படுத்த, தம் ஈகோவைக் காப்பாற்ற நிறைய பொய்களை கட்டமைக்கிறார்கள். ஒரு பெண் அவனை ஏற்கும் போது அவன் நிதானமாகிறான். தன்னம்பிக்கை பெறுகிறான். அப்போதுஅட இவள் வெறும் பெண் தானேஎன அவனுக்குத் தோன்றுகிறது. உடனே அவன் திருந்தினால் பிரச்சனை இல்லை. ஆனால் அதன் பிறகு தான் அவன் தனது இந்த ஏமாற்றத்தை மறைக்கும் வேலைகளில் ஈடுபடுவான். அதனால் தான் காதல் பலவீனத்தின் வெளிப்பாடாக, அநீதியின், ஏற்றத்தாழ்வின் நிகழ்த்து களமாக இருக்கிறது. அதனாலே காதலின் பெயரில் ஆண்களும் பெண்களும் எலும்புத் துண்டுக்கு அலையும் நாயாக, மிட்டாய் கொடுத்து ஏமாற்றும் குழந்தையாக பரஸ்பரம் நடத்துகிறோம். நாம் அந்த ஏற்றத்தாழ்வை, அடிமைத்தனத்தை, பொய்களைக் கூட ரொமாண்டிசைஸ் பண்ணுகிறோம். அதனாலே வலுவான ஆண்கள் காதலிப்பதில்லை என புக்காவஸ்கி சொல்கிறார். எனக்கென்னவோ சமத்துவத்தை விரும்புகிறவர்கள் காதலிக்கக் கூடாது எனத் தோன்றுகிறது. ஒரு பெண்ணை காதலிப்பதே இவ்வளவு பிரச்சனைகளைத் தரும் எனும் போது பலரை ஒரே நேரத்தில் காதலிப்பது (polyamory) நம்மை துன்பம் கடலில் ஆழ்த்தி விடும். இன்னும் சொல்லப் போனால் காதலின் போதாமையை உணரும் ஆண்களே மேலும் மேலும் பலவீனமாகி ஒரே நேரத்தில் பல உளவியல் ஊன்றுகோல்களை நாடுகிறார்கள். ஒரு பெண்ணை ஊன்றி நிற்க முடியாதவன் பல பெண்கள் மீது சாய்ந்து மட்டும் நின்று விடவா போகிறான்?


நன்றி: உயிர்மை.காம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...