எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதல் காட்சியைப் பார்த்ததும் ரொம்ப கிரிஞ்சாக 96 போல இருக்கும் போல என நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் மணிகண்டன் பாத்திரத்தின் நிஜ சொரூபத்தைக் காட்டியதும் செமையான படம் என உட்கார்ந்து விட்டேன். காதலை மட்டுமல்ல எல்லா உறவுகளையும் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளும், தன்னுடைய போதாமைகளை உறவின் ஆறுதலில் கடப்பதற்காக முயன்று ஏமாற்றும் கொள்ளும் ஆணின் அகச்சித்திரம் நன்றாக இருந்தது. கூடவே அவனுக்கு ஈடுகொடுத்து தடுமாறும், துன்பப்படும், பிறகு விட்டுவிடலாம் என நினைக்கும் போதும் அவனிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கருதி குழப்பி மேலும் காயப்படுத்தும், காயப்படும் அந்த பெண்ணின் பாத்திரம். தெளிவாக யோசித்து இரு பாத்திரங்களையும் உருவாக்கி அவர்களுக்காக மேலும் மேலும் கதையை சிக்கலாக்கிக் கொண்டு திரும்ப வர முடியாத அவல நிலைக்கு அவர்களை நகர்த்தியதும் பிடித்திருந்தது. ஏனென்றால் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய்கள், கெர்ள்களின் உலகில் இப்படியான நிஜ மனிதர்களின் பார்க்கவே கிடைப்பதில்லை. அம்மா தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கிக் கிடக்கும் போது நாயகன் மெதுவாக தூங்கி எழுந்து வர வேலைக்கா...