எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதல் காட்சியைப் பார்த்ததும் ரொம்ப கிரிஞ்சாக 96 போல இருக்கும் போல என நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் மணிகண்டன் பாத்திரத்தின் நிஜ சொரூபத்தைக் காட்டியதும் செமையான படம் என உட்கார்ந்து விட்டேன். காதலை மட்டுமல்ல எல்லா உறவுகளையும் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளும், தன்னுடைய போதாமைகளை உறவின் ஆறுதலில் கடப்பதற்காக முயன்று ஏமாற்றும் கொள்ளும் ஆணின் அகச்சித்திரம் நன்றாக இருந்தது. கூடவே அவனுக்கு ஈடுகொடுத்து தடுமாறும், துன்பப்படும், பிறகு விட்டுவிடலாம் என நினைக்கும் போதும் அவனிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கருதி குழப்பி மேலும் காயப்படுத்தும், காயப்படும் அந்த பெண்ணின் பாத்திரம். தெளிவாக யோசித்து இரு பாத்திரங்களையும் உருவாக்கி அவர்களுக்காக மேலும் மேலும் கதையை சிக்கலாக்கிக் கொண்டு திரும்ப வர முடியாத அவல நிலைக்கு அவர்களை நகர்த்தியதும் பிடித்திருந்தது. ஏனென்றால் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய்கள், கெர்ள்களின் உலகில் இப்படியான நிஜ மனிதர்களின் பார்க்கவே கிடைப்பதில்லை. அம்மா தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கிக் கிடக்கும் போது நாயகன் மெதுவாக தூங்கி எழுந்து வர வேலைக்காரி பார்த்துவிட்டு கதற என்ன செய்வதென நிற்கும் இடமும் சிறப்பு. வேறு இயக்குநர்கள் என்றால் நாயகனை கதறி அழுது மாரில் அடித்து களேபரம் பண்ண வைத்திருப்பார்கள். இங்கு நாயகனோ ஆஸ்பத்திரியில் அம்மாவைப் பார்க்க வரும் பொறுப்பில்லாத அப்பாவைப் பார்த்து கத்தி தன் கோபத்தை தணித்துக் கொள்கிறான். காதலியை தேவடியா எனத் திட்டும் இடம் கூட சிறப்பு - எனக்குத் தெரிந்து மிக சாதாரணமாக ஆண்களால் பிரயோகிக்கப்படும் சொல். ஒரு பெண் மறுத்தவுடனே அவளைக் குறித்த ஐயம் வருவதும், தேவடியா என்பதும் நம் பண்பாட்டு உளவியலின் மையம். அதையும் சிறப்பாக காட்டியிருந்தார்கள்.
பிரிவை ஆண்களால் சுலபத்தில் ஏற்றுக்கொள்ள இயலாதது அது அவர்களுடைய ஈகோவுடன் சம்மந்தப்பட்டது என்பதால் தான் - நவீன உலகில் ஆணுக்கென்று நிலம் சார்ந்த உரிமையோ சமூக அந்தஸ்தோ இல்லை. நகரங்களில் அவனுக்கான சமூக அந்தஸ்து இல்லை. அழகாக சேலை அணிந்து வந்தாலோ, நவீன ஆடையில் ஜிங்கு ஜிங்கென நடந்தாலோ ஊரே ஒரு பெண்ணைக் கொண்டாடும். அவள் வேலை பார்த்து சம்பாதித்தால் இன்னும் அதிகமாக கொண்டாடும். (கூடவே தேவடியா என்றும் கூப்பிடும் என்பது வேறு பிரச்சினை.) ஆனால் ஆணுக்கு பணத்தையும் சொத்தையும் கடந்து எந்த அங்கீகாரமும் இல்லை. முன்பு இவையிரண்டும் மரபுவழியாக கிடைத்தது. இன்று அதற்காக அவன் ஆயுள் பூராவும் உழைத்தாலும் சுலபத்தில் கிடைப்பதில்லை. அப்போது அவனுக்கு பெண்ணுடலை உடமையாக்குவது தான் ஒரே வழியாக இருக்கிறது. ஒரு உறவை முறிப்பது அவனுடைய ஆண்மையை முறிப்பதைப் போல இருக்கிறது. ஒரு பெண்ணால் தன் உடலின் ஊடாக புது உலகம், உறவுகள் என நகர முடியும். தம் தோற்றத்தை மேம்படுத்துவது, சின்னச்சின்ன விசயங்களை மாற்றுவது என. அவர்களுக்கு இது தன்னிலை சார்ந்த பெரிய சிக்கல் அல்ல. நம் சமூகத்தில் ஆணுக்கு உடலே இல்லை (குறியீட்டு அளவில்). மனம் மட்டும் தான். அதனாலே அவன் பெண்ணின் கவனம் தன் மீது மட்டுமே இருக்க வேண்டும் எனக் கிடந்து அடித்துக்கொள்கிறான். பொறாமையில், பாதுகாப்பின்மையில் தவிக்கிறான். வன்முறையை கையாள்கிறான். போதையில் சிக்கி கோபத்தை கட்டுப்படுத்த தெரியாமல் அழிகிறான். “நான் ஒன்றுமே இல்லை, யாருமே எனக்கு இல்லை” எனும் அங்கலாய்ப்பு நன்றாக இப்படத்தில் வந்துள்ளது. வேறெந்த தமிழ் சினிமாவிலும் இதைப் பார்த்த நினைவில்லை.
ஒரே பிரச்சினை கிளைமேக்ஸில் நாயகனோ நாயகியோ முழுமையாக மாறவில்லை என்பதுதான். அவர்கள் ஆரம்பித்த இடத்திலே வந்து நிற்கிறார்கள். அவர்கள் தம் வாழ்வில் பெற்ற பாடத்தை, முதிர்ச்சியால், அதனால் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டியிருந்தால் நிறைவு ஏற்பட்டிருக்கும்.