Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

 



(இது நவம்பர் 2025இல் எழுதப்பட்ட கட்டுரை. டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது. ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன்.)


அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன். தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும், செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார். எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம், அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது.


ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது. நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள். அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது. வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும். முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான். வணிகப் பட நாயகர்களுக்கு இந்த கதி வருவதில்லை. நடிக்கவே தெரியாத, உடல் தோற்றத்தில் அக்கறையே காட்டாத விஜயகாந்த், பிரபு போன்றவர்கள் கூட பலதரப்பட்ட வேடங்களில் தோன்றியிருக்கிறார்கள். ராணுவ வீரர், காவல்துறை அதிகாரி, பண்ணையார், வேலையில்லாத இளைஞர், மனநலம் பாதித்தவர், திருடன் என என்னென்னமோ வேடங்கள். இதுவே நடிகர்களைத் தம் 70வது வயது வரைக்கும் நீடிக்க உதவுகிறது. இதே ஆண் நடிகர்களில் 'சாக்லேட் பாயாக' அறியப்பட்டவர்களும் ஆக்‌ஷன் படங்களில் நடித்து அந்த பாத்திர வார்ப்பில் இருந்து வெளியேறாதவரைக்கும் "நடிகர்களாகவே" பார்க்கப்பட்டதில்லை. அப்பாஸ் ஒரு நல்ல உதாரணம். அரவிந்த் சாமி தன் நடிப்புத் திறனுக்கு பரவலான மக்கள் அங்கீகாரத்தைப் பெற  தனி ஒருவன்வில்லன் பாத்திரம் கிடைக்கும்வரைக்கும் காத்திருக்க நேர்ந்தது. அழகு இப்படி ஒரு நடிகருக்கு காலில் பூட்டப்பட்ட ஒரு விலங்காகிவிடுகிறது. அழகு ஒரு நடிகரைத் தான் நடிக்கும் படத்தின் திரைக்கதை, காட்சிகளின் நாடகீயம், பாத்திர குணவார்ப்பில் இருந்து வெளியேற்றி ஒரு ஆளுமையற்ற, மனங்கவர் பொம்மையாக்கி விடுகிறது. ஆண்களில் அழகு விதிவிலக்காக சிலரை எதிர்மறையாகப் பாதித்துள்ளது என்றாலும் (பேரழகான ஆண் நடிகர்கள் குறைவே என்பதால்) நடிகையரை அது நிச்சயமாக காலில் கல்லைக் கட்டி ஆழ்கடலில் தள்ளிவிடுகிறது. அவர்கள் தம் அழகை விஞ்சி நடிப்புக் கலைஞராக மிளிர நீண்ட காலம் காத்திருக்க நேர்கிறது.


 அழகு குறையக்குறைய நடிகர்கள் நடிப்பில் ஜொலிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. இது அடிப்படையில் ஒரு தத்துவப் பிரச்சினையும்தான் - அன்றாட உலகிலும் அழகு மனிதர்களைத் தம் மனிதத்தன்மையில் இருந்து வெளியேற்றி உறைய வைக்கிறது. அழகில் விஞ்சுவோரை தமக்குச் சமமாகக் கருதாமல் தம்மில் இருந்து வெகுவாக விலகியவர்களாகக் காணவே மக்கள் தலைப்படுகிறார்கள். பேரழகிடத்து ஒருவித அச்சம் கலந்த மரியாதை தோன்றுகிறது. பேரழகியையோ அழகனையோ எல்லா சாதாரண சிக்கல்களும் மிக்க மனிதராக நம்மால் சுலபத்தில் பார்க்க முடியாது. அவர்கள் நம் கண்ணில் ஒளியாக நிறைந்து நம்மைக் 'கண்ணற்றவராக்குகிறார்கள்'. அன்றாட உலகில் நடக்கும் இந்த வினோதம்தான் சினிமாவிலும் நடக்கிறது. சினிமாவில் நட்சத்திர நடிகர்கள் இயல்பை மீறி அதிமனிதர்களாகக் கட்டமைக்கப்படும்போதும் அவர்களுடன் பார்வையாளர்கள் ஒன்றாக உணர்வதற்கான கூறுகளை பாத்திர அமைப்பில் திரைக்கதையாளரும் இயக்குநரும் சேர்த்திருப்பார்கள். ஒளிப்பதிவும், பின்னணி இசையும், துணைப்பாத்திரங்களும் அதிமனித நாயகனை சகமனிதராக மாற்றுவதற்கு உதவும். ஆனால் நடிகையரின் பாத்திரங்களைப் பொறுத்தமட்டில் கதையும் ஒளிப்பதிவும், இசையும், துணைப்பாத்திரங்களும் முடிந்தளவுக்கு கதையில் இருந்து அவர்களை வெளியேற்றி பார்வைப்புலன் சார்ந்த துய்ப்புக்காகவே முன்னிலைப்படுத்தவே முயலும். இப்படி ஒரு பொம்மையாக மாற்றப்பட்டு துய்க்கப்படும் இப்பாத்திரங்களை நாம் அன்றாட உலகின் பகுதியாகக் காண்பதில்லை. அதனாலே சிவப்பான பெண்கள் அதிகமாக நாயகியராக, கறுப்பு, பழுப்புத்தோல் ஆண்கள் நாயகராகுகிறார்கள். இதன் சிக்கல் அனைத்துக்கும் அப்பாலான பெண்ணழகு சினிமாவில் பொருளற்றுப் போகிறது, மதிப்பிழக்கிறது. அதனாலே ஒரளவுக்குத் திறமையான நடிகையர் கூட தம் நடிப்பு வாழ்க்கை விரைவில் முடிந்துபோகும், அதற்குள் உச்சபட்சமாகப் புகழடைய வேண்டும், சம்பாதிக்க வேண்டும் எனும் பதற்றத்தில் இருக்கிறார்கள். உடலைக் கடந்து தம் ஆன்மாவை நடிப்பில் பிரதிபலிக்க தவிக்கிறார்கள். இந்த எதிரெதிர் விசைகளுக்கு நடுவே அவர்களுடைய நடிப்புலகம் சிக்கிக்கொள்கிறது.


தம் அழகைப் பயன்படுத்தி உடனடி அங்கீகாரத்தையும் புகழையும் பெறும் ஒரு நடிகையால் அதே அழகில் இருந்து முழுக்க மீண்டு வராமல் 'நடிகராகி' பல்வேறு பாத்திரங்களில் தோன்றி ஜொலிக்க முடிவதில்லை. இதனாலே தமது திரைவாழ்வின் பிற்பகுதியிலேயே அழகான நடிகையரால் 'நடிக்க' முடிகிறது. அதிலும் நயன்தாரா என்னதான் முன்னணி வேடங்களில் நடிக்க முயன்றபோதும் அவராலும் சாதாரணப் பெண்ணாக அழகற்று நடிக்க இயலவில்லை. ஆனால் மனோரமா, கோவை சரளாவால் இதை அனாயசமாகச் சாதிக்க முடிகிறது. அவர்களிடமும் அழகிருந்தது - ஆனால் அது பெரிய அரணாக இருக்கவில்லை.


 அழகில் இருந்து மீளாதோரால் நடிக்கவே முடிவதில்லை. அவர்கள் வெற்றிகரமாக நீடிக்க முடிந்தாலும் - எம்.ஜி.ஆர் இதற்குச் சிறந்த உதாரணம். கடந்த நாற்பதாண்டு கால முன்னணி நடிகர்களில் அழகரான கமல் பல்வேறு வேடங்களைப் புனைந்து தன் அழகைச் சிதைக்கவே தொடர்ந்து முயல்கிறார். அவரது மிகப்பெரிய போராட்டமே அதுதான். என்ன செய்தாலும் அழகு ஒட்டிக்கொண்டே வருகிறது.  


இங்கிருந்து யோசித்துப் பார்த்தால் ஏன் நடிகையரின் உடற்தோற்றம் குறித்து இவ்வளவு வக்கிரமான கருத்துக்கள் வருகின்றன என்று புரிந்துகொள்ள முடிகிறது - தமிழ் சினிமா அவர்களை ஒரு ஷுட்ஸு நாய்க்குட்டியைப் போல பாவிக்கிறது. அலங்கார மீனைப் போல கண்ணாடிக் கூண்டில் அடைக்கிறது. தொடர்ந்து அவர்கள் குறித்து எதிர்-விமர்சனங்களை, கவலைகளைச் சொல்லி வருகிறது, பரிகசிக்கிறது, நிராகரிக்கிறது. விளைவாக அவர்கள் முழுக்க உள்ளிருந்தே வெளியேற்றத்தக்கவர்கள் எனக் கருதுகிறது. ஒரு வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்படும் அலங்காரப் பொருட்களாக நடிகையர் மாறுகிறார்கள். இது உடற்கேலி பிரச்சினை மட்டும் அல்ல - அழகான பெண்களுக்கு நடிக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படும் நெருக்கடியும்தான். கடந்த 80 ஆண்டுகளில் எத்தனை எத்தனை நடிகைகளின் திறமையை வீணடித்திருக்கிறோம்! அவர்களுக்கு 'நடிக்க' வாய்ப்பை மறுக்கையில் நாம் விதவிதமான கதைகளை எழுதி இயக்கும் வாய்ப்பையும் தாம் வெகுசனக் கலைஞர்களுக்கு மறுக்கிறோம். 


பெண்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படங்களும்கூட ஆக்‌ஷன் நாயகி, பெண்ணியப் போராளி என்று ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்கப்படுகின்றன. இல்லாவிட்டால் தைரியமான மனைவி, அன்பான தங்கை, பாசமான அம்மா இப்படிப் போகும். மிருணாள் சென்னின் "நேர்முகம்" (Interview) என்றொரு படமுண்டு - வேலைக்காக முயற்சி செய்யும் இளைஞன் ஒருவன் ஒருநாளில் எதிர்கொள்ளும் பல்வேறு தடைகளும், வேலைக்காக பல்வேறு பாவனைகளைத் தான் ஏன் செய்ய வேண்டும் என்று அவன் கேள்வி எழுப்புவதுடன் படம் முடிகிறது. ஆண்-பெண் எதிரிடையைக் கடந்து இப்படியான எத்தனையோ கதைகளைப் பெண்களை வைத்தும் எடுக்க முடியும். சுவாரஸ்யமாக அமைந்தால் அவ்வகைப் படங்களை ஆண்களும் பெருமளவில் பார்ப்பார்கள். ஆனால் இந்திய சினிமாவில் அழகு படுத்தும் பாட்டினால் அன்றாட உலகில் வாழும் பெண்கள், டெம்பிளேட்டுக்கு வெளியே உள்ள சித்தரிக்கப்படுவதே இல்லை (கடந்த பத்தாண்டுகளாக மலையாளத்தில் எடுக்கப்படும் பெண் பாத்திர படங்களில் மட்டுமே விதிவிலக்கான நிலையைக் காண்கிறோம்).


நடிக்க வரும் பெண்கள் எல்லாரும் சைஸ் ஜீரோவாக வேண்டும் என அழுத்தம் கொடுப்பது, அவர்கள் ஒரே மாதிரி சிரித்து நடனமாடி அழகை வெளிப்படுத்தி மறைய வேண்டும் என எதிர்பார்ப்பது ஒருவித அவமானத்துக்கு அவர்களை உட்படுத்துவதாகும். பணத்துக்காகவும் பெயருக்காகவும் நடிகைகள் அதைச் சகிக்கிறார்கள். ஆனால் எல்லாரும் எப்போதும் அதைச் சகிப்பதில்லை.  


அழகு தமிழ் சினிமாவைப் பீடித்த கேடு மட்டுமல்ல அது நம் சமூகத்துக்கே ஏற்பட்ட நோய்மையும்தான். அழகில் இருந்து நம்மில் ஒவ்வொருவருக்கும் விடுதலை தேவைப்படுகிறது. ஏனெனில் அழகு நம் இருப்பைக் குறித்துச் சிந்திக்க, அதை உணரவிடாமல் நம்மை நம்மில் இருந்து வெளியேற்றுகிறது. நம்மருகே உள்ளவர்களைப் 'பார்க்க' விடாமல் தடுக்கிறது. பிரமிக்க வைக்கிறது. பிரமித்தல் பிரமையில் இருந்து வருவது. நாம் ஒன்றுமில்லாததைப் பல்கிப் பெருக்கி அந்தக் கட்டமைப்பிலே திளைக்க ஏங்குகிறோம். உலகில் 'இருக்க' முடியாதவர்கள் ஆகிறோம்.  


இங்கிருந்து நாம் அழகை ஒரு இருத்தலியல் பிரச்சினையாகவும், தத்துவச் சிக்கலாகவும் பரிசீலிக்க வேண்டும்.


அழகைக் குறித்து ஹைடெக்கர் பேசுகையில் அதைக் கையிருப்புத் தொகையாக, பொதுப்பயன்பாட்டு நிலமாகச் சித்தரிக்கிறார் (standing reserve). அழகானவர் அழகானவர் ஆவது அழகு ஒரு துய்ப்புக்கான சேகரிப்பாக மாற்றப்படும்போதே. ஒருவர் தன்னைத் தொடர்ந்து அவ்வாறு முன்வைக்கும்போது 'அழகுப் பண்டமாகிறார்'. அழகுப் பண்டம் காலாவதியாகக் கூடாது, காலியாகக் கூடாது எனும் பதற்றம் அனைவரிடமும் உள்ளது. ஆகையால் இத்தகைய அழகுச் சேகரிப்பை நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இது மனிதச் செயல்பாட்டை ஒரு சட்டகத்தில் அடைக்கிற வேலை மட்டுமே, சட்டக்கப்படுத்தப்படும் அழகு சிறைப்படுகிறது, அது 'வெளிவருவதில்லை' என்கிறார் அவர் (enframing). அதாவது நீங்கள் ஒரு மலர்ச்செடியை நெருங்கும்போது அது தன் ஒளியால், வண்ணத்தால், வாசத்தால் வெளியையும், காலத்தையும் ஒரு கதவைப் போலத் திறந்து ஒரு வெற்றிடத்தை அடைந்து தன்னை உங்களிடம் காட்டுகிறது. நீங்களும் அதனிடம் செல்லும்போது வெளியையும் காலத்தையும் திறந்து ஒரு வெற்றிடத்தை நோக்கிப் போகிறீர்கள். இருத்தல் இப்படித்தான் வெளிப்படுகிறது. ஆனால் அச்செடி அழகாகத் துய்க்கப்படுகையில் அதற்கு இருத்தலே இருப்பதில்லை. நீங்களும் அதை நோக்கிப் போக முடிவதில்லை. ஒரு டப்பாவைத் திறந்து தின்பண்டத்தை எடுப்பதைப் போல அதன் அழகைப் 'பருக' நினைக்கிறீர்கள். சட்டகப்படுத்தப்படும் அழகின் பிரச்சினை இது. (இதுவே உருவக்கேலியாக இன்னொரு எதிர்மறை வடிவம் எடுக்கிறது.) தமிழ் சினிமாவில் நடிகையர் எப்போதுமே standing reserveதான். இது வாழ்தலின் எதிர்நிலை.


அழகு அதன் இயல்பில் தன்னைப் புறவயமாக முன்வைப்பதில்லை. ஆனால் தொழில்நுட்ப உலகம் தொடர்ந்து நம்மை அழகுப்படுத்தும்படி கோருகிறது. ஒரு புறவயமான மதிப்பீட்டு அலகை வைத்தே நம் அழகை மதிப்பிட்டு வெளிப்படுத்த வைக்கிறது. நாம் கண்ணாடி முன் நின்று அழகாக இருக்கிறோமா, வெளியே பிறர் அழகாக உள்ளார்களா எனக் கேட்கையில் புறவயத்தன்மைக்காகவே ஏங்குகிறோம். புறவயமான ஒன்று நிலையானது, அதை முடிவற்று நாம் எடுத்தாள முடியும். இது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதாலே நாம் உருவ கேலிக்குள், தாழ்வுணர்வுக்குள் ஆழ்கிறோம். சிறுவயதில் இருந்தே குறிப்பிட்ட விதமாக நம்மை முன்னிலைப்படுத்த போராடுகிறோம். ஒவ்வொரு பிசிறையும் மறைக்க களிம்புகளை, சிகிச்சைகளை, அழகுக்கலையின் நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம், அழகை மறைக்கவோ அதன் ஒரு பகுதியை மிகைப்படுத்தவோ ஏற்ற ஒரு உடல் மொழியைக் கட்டமைக்கிறோம். இப்படியெல்லாம் செய்கையில் நாம் ஒரு எந்திரமாக மாறுகிறோம். குறிப்பிட்ட ஆணைகளுக்கு உட்பட்டுச் செயல்படும் ஒரு எந்திரம். பயன்பாட்டுக்கான எந்திரம். காலத்துக்கும் வெளிக்கும் அப்ப்பால் என்றென்றைக்குமான பொதுப்பயன்பாட்டு இயற்கை வளமாக மாறுகிறோம். தொழில்நுட்பத்தின் இடையீடு மிக அதிகமாக உள்ள இக்காலத்தில் நாம் நம்மைத் தொடர்ந்து பயன்படுத்தத்தக்க பண்டமாக, கருவியாக முன்வைப்பதையே வெற்றி எனக் கருதுகிறோம். அதே நேரத்தில், ’துய்ப்புக்கான அழகில்இருந்து வெளியேறுவது நம்மை மனிதராக்க அவசியம் எனக் ஹைடெக்கர் சொல்கிறார். 


அதற்காக அழகுஒழிக்கப்படவேண்டியது என்று ஹைடெக்கர் கருதவில்லை. அழகு கலையின் பகுதியாக எப்போதுமே தனக்கான முகமையுடன்தான் இருக்கிறது. ஏனென்றால் கலை எப்போதுமே பயன்பாட்டுக்கு உரியதாவதில்லை என்கிறார். இங்கு, கலையென ஹைடெக்கர் கருதியது இலக்கியமே, குறிப்பாக கவிதையே, என்பதைக் குறிப்பிடுவது அவசியம். அவர் சினிமாவையும் டிவியையும் பற்றிப் பரவலாகப் பேசவில்லை எனினும் தொழில்நுட்பக் கருவிகள் தமது பயன்பாட்டு நோக்கத்தினால் நம்மை நமது இருத்தலில் இருந்து வெளியேற்றுகின்றன என்றே அவர் கருதினார். அதாவது ஒரு சுத்தியலை நான் எடுக்கும்போது அதை ஆணியில் அடிக்கிற விதத்தை நானே தீர்மானிக்கிறேன். நான் மட்டுமல்ல ஆணி, அது இறங்க வேண்டிய சுவர், சீதோஷ்ணம், ஒளியமைப்பு, என் உடலமைப்பு, உடல் நிலை என பல விசயங்கள். சுத்தியை எடுத்து அடிக்கும்போது நான் சுத்தியை என் உடலின் பகுதியாகக் கருதுகிறேன், அவ்வாறே நான் அறையப்படும் ஆணியையும், அது இருக்கும் உலகையும் என் உலகமாக மாற்றுகிறேன். ஆனால் டிவியை இயக்கும்போது நான் என்ன, எப்படி பார்க்க வேண்டும் என்பது முன்-தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவே திரையரங்கிலும் நடக்கிறது. அதனாலே இந்த அனுபவங்கள் நம் இருத்தலாக அல்ல துய்த்தலாக, வெளியேற்றமாக உள்ளன. ஒரு நடிகையை நேரில் பார்க்கையில் அவரை உடலாகவும், மனமாகவும் சொற்களாகவும் நினைவுகளாகவும் எதிர்கொள்கிறோம். ஆனால் பிம்பமாக திரையில் பார்க்கையில் அவர்கள் ஒற்றைப் பரிமாண பிம்பமே. அவர்களை நாம் பார்க்கும்போது அறிய முடிவதில்லை. ஏனென்றால் அவர்கள் அப்போது நம்முடன் நம்காலத்தில்இருப்பதில்லை. ஏற்கனவே உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து நம்முடன் உரையாடும் அவர்களை நாம் காலத்திலோ வெளியிலோ சந்திப்பதில்லை. ஆகையால் இயல்பாகவே அவர்கள் நுகர்வுக்கு உள்ளாக வேண்டி வருகிறது. நம்மையும் நுகர்வோராக்குகிறார்கள். கற்பனையுடன் கலைநயத்துடன் எடுக்கப்படும் படங்களில் ஒரு பெண் (அல்லது ஆண்) நடிக்கும்போது அவரால் அழகு எனும் சட்டகத்தில் மாட்டாமல் இருக்கையில் ஒருவேளை சாத்தியப்படலாம் என்றாலும் அந்த தொழில்நுட்பம் சார்ந்த ஊடகத்தின் அடிப்படையான கோளாறே அது நம்மை அந்நியப்படுத்தி வெளியே நிறுத்துகிறது என்பதே. அழகு இந்த அந்நியமாதலை இன்னும் தீவிரமாக்குகிறது. 


அதேநேரம், கலையின் இயல்பே தன் இருத்தலை வெளிப்படுத்துவதுதான். ஒரு கவிதை அழகானது, ஆனால் ஒரு பெண்ணின் அழகை நேரடியான உணர்வுத்தூண்டுதலுக்கும், இன்பத்துக்கும்பயன்படுத்துவதைப்போல கவிதையின் அழகைப் பயன்படுத்த முடியாது. கவிதையின் அழகு உங்களைத் தன் செயல்பாட்டின் பகுதியாக அழைக்கிறது. கவிதையின் அழகு தன் வாசனைக் காலத்தின், வெளியின் ஊடாகப் பரப்புகிறது, இரண்டையும் ஊடுருவி ஒரு கணம் அது நகர்கையில் உங்களையும் கைப்பற்றி தன்னுடன் வர அழைக்கிறது. இதுவே வாசிப்பு. வாசிப்பு இருத்தலின் உயர்ந்த நிலையாவது. இது புறவயமானது அல்ல, அகவயமானது. நாம் புறத்தே காணும் அழகு நம்மை அகவயமாகச் சலனப்படுத்துவதில்லை. ஏனென்றால் அதற்கு அத்தகைய முகமை இருப்பதில்லை. 

சினிமா எனும் வெகுஜனக் கலையின் முக்கியமான பிரச்சினை அதனால் நம் அகத்துடன் நேரடியாக உரையாட முடியாது, அதற்கு அது பிம்பங்களை நம்பியிருக்கிறது என்பது. பிம்பங்களின் இயல்பே புறவயமான அனுபவத்தைக் கொடுத்து நம்மை நமக்கு வெளியே திருப்பி விடுவதுதான்.

நடிகையர் பிம்பங்களாக மட்டுமே பார்க்கப்படுவதால்தான் அவர்களை நுகர்வைத் தாண்டி வெகுஜனப் பார்வையாளர்களால் கருத முடியாமல் போகிறது. அழகு என்பதே பிரதிபலிக்கப்படும் ஒன்று என்பதால் (நீங்கள் நிலைக்கண்ணாடியிலோ புகைப்படத்திலோ காணொளியிலோ வெளியே காண்போரை உங்கள் அகத்தில் பிரதிபலித்தோ அழகை ரசிக்கிறீர்கள், பொருண்மையாக அதை மதிப்பிட்டு அறிய முடியாது) அழகு பிம்பமாகும் பெண்ணால் மேலும் நுகர்வுக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடிவதில்லை. ஆகையால் சினிமா பெண்ணின் அழகை சமோஸா, கட்லெட்டைப் போன்றே விற்றுக்கொண்டிருக்கிறது. இதை முறியடிக்க, புதிய வகையான கலை, நுகர்வுக்கு அப்பாலான கலை ஒன்று வரவேண்டும். அது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெகுவேகமாக பெருவணிகமாக மாறிவரும் வெகுஜன தமிழ் சினிமாவில் சாத்தியப்படும் வாய்ப்பு குறைவெனத் தோன்றினாலும் ஒருவேளை நடந்தால் கௌரி கிஷனையும் பிற நடிகையரையும் போன்று பிம்பத்தில் சிறைப்படும் பெண்களுக்கு தம் இருத்தலை கலையில் உணரும், உணர்த்தும் வாய்ப்பு கிடைக்கும். அற்பமான யுடியூபர்கள், மலினமான பத்திரிகையாளர்களிடம் சண்டையிடும் அவலம் நேராது.  


Comments

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...