சுதந்திரப் போராட்டத்தின்போது நாடகக் கலைஞர்கள் பிரச்சாரத்துக்குப் பயன்பட்டார்கள். அச்சூழலில் பிரச்சார நாடகங்களுக்கு மக்களிடையே மவுசிருக்கும் என்று தெரிந்தேதான் சில குழுக்கள் அத்தகைய நாடகங்கள் பக்கமாக நகர்ந்தார்கள். அதன்பிறகு திராவிட அரசியல் தேர்தல் களத்தில் வெல்ல நாடகங்களும் சினிமாவும் பெருமளவில் உதவின. அல்லது இந்நாடகங்களும் சினிமாக்களும் வெல்ல திராவிடக் கொள்கைகளின் புகழும் மக்கள் ஏற்பும் உதவின. இந்த பரஸ்பரச் சார்பு கவனிக்கத்தக்கது. இதுவே பின்னர் மாறப் போகிறது. (அதாவது இன்று மாறியுள்ளது)
இதன் பிறகு நமது தேசிய (காங்கிரஸ்), துணைத்தேசிய (உள்ளூர் கட்சிகள்) அரசியல் களங்கள் பெரும்பளவில் நிலைப்பெற்ற தடத்திலே ஓடின. பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் பிரச்சாரத்தையே நம்பியிருந்தன. எழுபதுகளில் இந்திரா காந்திக்கு எதிரான ஜனதா தளத்தின் போராட்டங்களில் கூட சினிமாவும் நாடகமும் பெரிய பங்காற்றவில்லை, மாணவர் அமைப்புகளும் தொழிலாளர் அமைப்புகளுமே அப்போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர் என நினைக்கிறேன். அடுத்து, உலகமயமாக்கல் வரும்போது இந்தியாவை ஒரு வளரும் தேசமாக முன்வைக்க சினிமா உதவியது என்றாலும் அது கட்சிப் பிரச்சாரம் ஆகவில்லை. இதன்பிறகு மிகப்பெரிய அளவில் சினிமா அரசியலுக்குப் பயன்பட்டது பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபிறகே. அதுவும் உடனடியாக அல்ல. மோடியின் இரண்டாவது கட்ட ஆட்சியில் பாஜகவின் பிரச்சாரத்துக்கு உகந்த இயக்குநர்களுக்கு நிதியளித்து ஆதரித்தார்கள். அவர்கள் காஷ்மீர் பைல்ஸ், அது இதுவென பக்கா பிரச்சாரக் கொந்தளிப்பு சினிமாவாக எடுத்தார்கள்.
தமிழ்நாட்டில் அதிமுக (என்னதான் ஒரு நடிகரால் ஆரம்பிக்கப்பட்டது என்றாலும்) சினிமாவைப் பெரிதும் பொருட்படுத்தவில்லை. கலைஞர் சினிமாவில் பணிசெய்திருந்தாலும் அவர் எண்பதுகளுக்குப் பிறகு முழுமையான அரசியல் சினிமாவை எழுதவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அந்தக் காலத்தில்தான் இடதுசாரிப் பார்வை கொண்ட மசாலா படங்கள் (ஸ்டாலின் ராஜாங்கம் இவற்றை தலித் படங்களாகவும் பார்க்கிறார்) எடுக்கப்பட்டன. ஆனால் இப்படங்களின் இயக்குநர்கள் எந்தக் கட்சியின் சார்பாகவும், கட்சிக் கொள்கையைப் பரப்பும் நோக்கத்துடனும் படமெடுக்கவில்லை. அவர்களுக்கு இக்கதையாடல் சினிமாவுக்கான கச்சாப்பொருள். அவ்வளவுதான்.
அடுத்து, பாஜகவின் வருகையும், நவதாராளவாதப் பொருளாதாரத்தின் கடைசிக் கட்டமும், பின்-உலகமயமாதலும் தமிழ்நாட்டில் அடையாள அரசியல் சினிமாவுக்கு வழிகோலியது என நினைக்கிறேன். இங்கு மூன்றாவது அணிக்கான ஒரு வெற்றிடம் இருந்தது. அந்த இடத்தை நோக்கிய நகர்வுகள் சிறுபத்திரிகைத் தளத்தில் தொண்ணூறுகளில் ஆரம்பிக்கப்பட்டு பா. ரஞ்சித்துக்குப் பிறகு (குறிப்பாக "மெட்ராஸுக்குப்" பிறகு) அறுவடை செய்யப்பட்டது. இது முதல் கட்டம் - இயக்குநர்கள் கதைசொல்லிகளாக சமூக அரசியல் கதையாடல்களை, மீள்-நினைவு உருவாக்கத்தை கையில் எடுத்த கட்டம். இதற்கு அடுத்த கட்டம் என்பது ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்பு திமுகவின் பேரெழுச்சியுடன் துவங்குகிறது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அறிவுத் தரப்பில் - பெரும்பாலும் பத்திரிகையாளர்களால், செயல்பாட்டாளர்களால் ஆன - பேச்சாளர்கள் தரப்பொன்று உருவாகி வந்தது. அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்காற்றினார்கள். திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் அவர்களுக்கு விருதுகள், அங்கீகாரம், வீடு வழங்கப்பட்டது. அவர்கள் பல கொள்கை உருவாக்கக் குழுக்களில் சேர்க்கப்பட்டார்கள். இதன்பிறகு திமுகவின் பிரச்சார அணியில் சில திமுகவில் அதிகாரபூர்வமாக இல்லாத எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டார்கள். இன்னொரு பக்கம் திராவிட அரசியல், அதன் இலக்கிய அழகியலைப் பற்றிப் பேசுவதற்கும், நூல்கள் தயாரிப்பதற்குமான பணிகளிலும் பத்திரிகையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் சமூகவலைதள எழுச்சியாலும் பாஜகவின் குறுக்கிட்டாலும் வேலை இழந்தவர்கள் என நினைக்கிறேன் (வேறு நபர்களும் இருக்கலாம்).
ஆங்கிலத்திலும் பத்திரிகைகள், பதிப்பகங்கள் (பெரும்பாலும் பிராமணச் சமூகத்தினரால் நடத்தப்படுபவை, ஒழுங்கு செய்யப்படுபவை, எடிட் செய்யப்படுபவை) பெரியார், திமுக குறித்த கட்டுரைகள், நூல்களை இப்போது அதிகமாக வெளியிடுகிறார்கள். ஆங்கில இலக்கிய விழாக்களில் தவறாமல் திராவிட அழகியல், திராவிட அரசியல் போன்ற அமர்வுகளை ஒருங்கிணைக்கிறார்கள். வடக்கே இது இதைவிட பெரும் தாக்கத்துடன் இந்துத்துவ அரசியல் மரபு, பண்பாடு, மதம் எனும் பெயரில் ஊடகங்கள், நூல் பதிப்புகள், கல்விக் கொள்கை, பாடத்திட்டம் என முன்னெடுக்கப்படுகிறது.
இந்த அலையின் ஒரு பகுதியாகவே சினிமா தயாரிப்பு வழியாக திமுக குடும்பம் திரை அழகியலையும் பயன்படுத்தத் தொடங்கியது. பா.ரஞ்சித் வேலைக்கு ஆக மாட்டார் என மாரி செல்வராஜை தம்வயப்படுத்தினர். மாரியும் திமுகவின் ஆதரவாளர்களையும் நிதியாதரவையும் பயன்படுத்தினார். இதைக் கொண்டு அவர் ரஞ்சித்தின் எல்லையைக் கடந்து சென்றார். பாஜக தலித் சமூகங்களிடம் நல்ல பெயர் பெற முயன்ற சந்தர்பங்களில்தான் திமுக சாமர்த்தியமாக இந்த அணுகுமுறையை எடுத்தது என்பது கவனிக்கத்தக்கது. "பராசக்தி" தயாரிப்பு இதன் அடுத்த கட்டம்தான். மாரி செல்வராஜுக்கு அடுத்து சுதா கோங்கரா. படம் வெற்றியடையாவிடினும் அவர்களுடைய நோக்கம் நிறைவேறிவிட்டது என்றே நினைக்கிறேன். இன்று சினிமா ரசிகர்கள் அரசியல் கட்சி உறுப்பினர்களாகவும் உருமாறி தம் ரசனையை அரசியலாகவும் காணும் அபத்தம் நடந்தேறுகிறது.
கடந்த நூறு வருடங்களின் நாடக, சினிமா வரலாற்றைப் பார்த்தால் கட்சிகளும் அரசியல் அதிகாரமுமே கலைஞர்களைக் கட்டுப்படுத்தி பயன்படுத்தி இருக்கிறார்கள், ஆனால் இன்று இதன் வணிகத்தைச் சிறப்பாக தம் நலனுக்குப் பயன்படுத்தி கணக்குப் போட்டு நகரும் இயக்குநர்களும் நடிகர்களும் உருவாகி இருக்கிறார்கள் என்பது புரியும். முன்பு வணிக வெற்றியே அவர்களுடைய எல்லையைத் தீர்மானித்தது. ஆனால் இன்று வணிக வெற்றியும் இரண்டாம் பட்சம்தான். அரசியல் வெற்றியே சினிமாவின் வெற்றி என்றாகிவிட்டது. பணம், அதிகாரம் தோல்விப் படத்துக்குக் கூட ஒரு இயக்குநரிடம் குவியும். சினிமாக்காரர்கள் முழுமையான உயர் வர்க்க 'கட்சிப் பணியாளர்களாக' மறைமுகமாக மாறிவிட்டார்கள். அவர்களிடம் நாம் நேரடி அரசியல் கேள்விகளையே எழுப்புகிற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு முன்பு இது இலக்கியத்தில் ஸ்டாலினிய ரஷ்யாவிலும், எழுத்திலும் போர்த் திரைப்படங்களிலும் ஹிட்லரின் ஜெர்மனியிலும்தாம் நடந்துள்ளது.
இப்போக்குத் தொடர்ந்தால் (அதாவது தமிழில் அதிமுக நீண்டதொரு வனவாசம் மேற்கொண்டால், ஒன்றியத்தில் பாஜக அடுத்த சில அடுத்த பத்தாண்டுகள் ஆண்டால்) சினிமாவில் அரசியல் என்பதே முழுமையான கட்சிப் பணியாக மாறிவிடும். அதற்கான இயக்குநர்கள் எல்லா கட்சிகளுக்காகவும் (யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து) உருவாவார்கள். அவர்களைக் கட்சிக்காரர்களாகவே மக்கள் பார்ப்பார்கள். இன்னொரு பக்கம் அரசியலற்ற முழுமையான வணிகப்படங்கள் எடுப்பதற்கான இயக்குநர்கள் தோன்றுவார்கள். நடிகர்கள் அரசியல் இயக்குநர்களிடம் சிக்கித் தவிப்பார்கள் அல்லது அவர்களும் கட்சி ஆட்களாகப் பார்க்கப்பட்டு அதற்கேற்ப பேசுவார்கள். கலை சார்ந்த சுதந்திர அரசியல், எதிர்ப்பரசியல் காணாமல் போகும்.
பி.கு: திமுக நிச்சயமாக பாஜகவிடம் இருந்து கற்றுக் கொள்கிறது. இரு கட்சிகளுக்கு இடையிலான் யுத்தமும் கூட பரஸ்பர மரியாதையுடன் சதுரங்கப் போட்டியைப் போலவே நடக்கிறது. "குஜராத் ஒளிர்கிறது" போன்ற மோடி பிம்பக் கட்டமைப்பின் தாக்கத்தினாலே தமிழிநாட்டிலும் "நான் முதல்வன்" போன்ற திட்டங்களும், ஸ்டாலினை கருணை மிகுந்த மாட்சிமைப் பொருந்திய தலைவர் எனும் பிம்பக் கட்டமைப்பும் காட்சி ஊடகத்தில் உருவாக்கப்பட்டு பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றன. அரசுத் தேர்வுக்குப் படிக்கிறவர்கள் இப்போது அரசின் திட்டங்களை மனனம் செய்கிறார்கள். கேள்விகள் தேர்விலும் நேர்முகத்திலும் அங்கிருந்து வரக்கூடும். ஒன்றிய அரசுப் பணிகளுக்காகப் படிப்பவர்கள் பாஜகவின் திட்டங்களை மனனம் செய்கிறார்கள்.
தொழில் வளர்ச்சி, மேல்மத்திய வர்க்க வளர்ச்சி, மத்திய வர்க்கம் கீழ்மத்திய வர்க்கமாவது, தொழில் வளர்ச்சி தரும் லாபத்தைக் கொண்டு நலத்திட்டங்களை முன்னெடுப்பது எனக் கொள்கையளவிலும் திமுக பாஜகவையே பின்பற்றுகிறது. தொழில்துறையில் மோனோபோலி, பிரச்சாரத்தில் வெறுப்பரசியல் இன்மை மட்டுமே அதை வேறுபடுத்துகிறது. தமிழ்நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி மக்களிடையே நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் வளத்தைக் கீழ்த்தட்டினருக்குக் கொண்டு போவதிலே சவால் இன்னும் உள்ளது.
எதிர்ப்பரசியலில் இருந்து திமுக 'பிரதிபலிப்பு அரசியலுக்குள்' போய் விட்டது. அல்லது அது தன் எதிர்ப்பரசியலை பாஜகவின் டெம்பிளேட்டுக்குள் இருந்தபடிச் செய்கிறது. கடந்த தேர்தலில் நிச்சயமாக இவ்வகைப் பிரச்சாரம் பலனளித்தது. இம்முறையும் பலனளிக்கும் என நினைக்கிறேன்.
இந்தப் பெரும் கட்டமைப்புக்குள்தான் சினிமாவும் இன்று வருகிறது - அரசியல் சினிமாவில் இருந்து கட்சி சினிமாவாக. ஏனெனில் இன்று நாம் கட்சிக்கு அப்பால் அரசியலைப் பேசும் படங்களை தேசிய அளவில் கூடக் காண்பதில்லை. கட்சியின் புகழைப் பயன்படுத்தி வளரும் சினிமாவும் குறைவு. கட்சிக்குப் பயன்படும் சினிமாக்கள் பெருகிவிட்டன. சிவகார்த்திகேயனின் "அமரன்" கூட பாஜகவுக்கான படமென்பதே என் கணிப்பு. தெலுங்கிலும் கன்னடத்திலும் இத்தகைய படங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்தியில் சொல்லவே வேண்டாம். நிதியாதாரம், கட்சி ஆதரவு, தேசிய விருது, அமலாக்கத்துறையின் கருணை இன்றைய கட்சி சினிமாவின் நோக்கங்களாக உள்ளன.