முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Mother Mary Comes to Me


 

இதைப் படிக்கையில் ஏற்பட்ட முதல் எண்ணம் இப்புத்தகத்தை அருந்ததி ராய் இப்படி எழுதியிருக்கக் கூடாது என்பது. இது ஒரு சுயசரிதை. தனக்கும் அவரது அம்மாவுக்குமான உறவை முன்வைத்து தன் வாழ்க்கையை எழுதுகிறார் அருந்ததி ராய்.

பயங்கர வெளிப்படையாக எழுதுகிறார் என்று சொல்ல முடியாது - அன்னையின் பிம்பம், அவரை மையமிட்டு எழுதுவதால் வரும் தயக்கம் தோளில் தட்டி எச்சரிக்கும் சமிக்ஞையாக அவருக்கு இருந்திருக்க வேண்டும். எதைச் சொன்னாலும் அது தன்னை நோக்கி மட்டும் வராது எனும் உணர்வு அவரைத் தடுக்கிறது என நினைக்கிறேன். ஆகையால் யாரையும் காயப்படுத்தலாகாது எனும் ஜாக்கிரதை அவரது எல்லா பக்கங்களிலும் தெரிகிறது. தன் அன்னையைக் குறித்த ஆழமான அலசலும் இல்லை. அன்னையைக் குறித்த ஒரு உணர்ச்சிகரமான நிலைப்பாட்டை ஆரம்பத்திலேயே எடுப்பதால் அதை மீறிப் போய் எதார்த்தமாக அவரைக் காண ராயால் முடிவதில்லை எனத் தோன்றுகிறது.
இதன் பலம் 'கேட்க' இனிமையான ராயின் நடை. மனத்தின் லயங்களுக்கு வடிவம் கொடுப்பதைப் போன்ற வாக்கிய அமைப்புகள். கவிதைக்கு அருகில் வருகிற நளினமும் மென்மையும் கொண்ட பல பகுதிகள். அதாவது இது 'கவித்துவம்' அல்ல. மொழியின் கவிதைத்தன்மை. நீரோட்டத்தில் தோன்றும் சிற்றலைகள் எப்படி உள்ளிருந்து எதையும் உணர்த்தாமல், வெளிப்படுத்தாமல் தன்னளவில் அழகைக் கொண்டிருக்குமோ அவ்வாறு செயல்படுவது ராயின் மொழி. அதனளவில் அது பல அர்த்தங்களைத் தரும்.
ராய் குறித்து நெருக்கமாக அறிந்து கொள்ள, அவரது சாதாரணத்துவத்தை எதிர்கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது. ஆனால் அதுதான் இதன் பலவீனமும். அவரது "சிறிய விசயங்களின் கடவுள்" நாவலின் அழகே அது உண்மையை உருமாற்றுவதுதான். அதில் வரும் தகவல்கள் பிரதான பாத்திரங்களின் அகநெருக்கடியின் வழியாக புது வடிவம் எடுக்கின்றன. அந்த உண்மை மயக்கம் சுழல் வட்டப்பாதையொன்றை உருவாக்க அவருக்கு உதவியது. இரட்டைக் குழந்தைகளின் மனம் காலச்சுழலில் அகப்பட்டு வெளியேறாமல் தவிப்பது காலம் என்றால் என்ன எனும் கேள்விக்கு பதில் தேடும் சாத்தியங்களை அளித்தது. இப்பின்னணியில் ராய் ஒரு ஊறுகாய் தொழிற்சாலையைப் பற்றிச் சொன்னாலும், பூச்சியலாளரான தாத்தாவைப் பற்றிச் சொன்னாலும் ஒரு மேஜிக் நிகழ்ந்கது. அவை நாவலின் கருப்பொருளினால் ஒளியூட்டப்பட்டன. ஆனால் இதே தகவல்கள் இப்புத்தகத்தில் வரும்போது பொலிவிழக்கின்றன. அதனாலே இப்புத்தகத்தைப் படித்துவிட்டு "சிறிய விசயங்களின் கடவுள்" நாவலைப் படித்தால் அதன் குறியீட்டுத்தன்மை பலவீனமாகி விடும் எனத் தோன்றுகிறது.
அதற்காக வேறெப்படித்தான் எழுதியிருக்க முடியும்? உரைநடையையே புனைவு கலந்து எழுத முடியும் - மார்க்வெஸ் "Living to Tell a Tale" சுயசரிதையில் செய்வதைப் போல.
உரைநடையில் உண்மை பொய்யாகி விடுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...