வாழ்க்கை ஒருவர் வாழ்ந்ததல்ல,
சொல்வதன் பொருட்டு
வீட்டை விற்க தன்னுடன் வருமாறு அம்மா என்னை அழைத்தாள். என் குடும்பம் வாழ்ந்த தூரத்து நகரமொன்றிலிருந்து அன்று காலை அவள் வ்ந்திருந்தாள். மேலும் என்னை எப்படி கண்டுபிடிப்பது என்பது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. தெரிந்தவர்களிடம் கேட்டதில், லைப்பறியோ முண்டோவிலோ, நான் தினமும் எழுத்தாள நண்பர்களை சந்திப்பதற்காக செல்லும் அருகிலுள்ள கபேக்களிலோ தேடுமாறு கூறினர். அவளிடம் இதைக் கூறிய ஒருவர் இவ்வாறு எச்சரித்தார்: "கவனமா இருங்க, அவனுங்களுக்கு எல்லாம் மரை கழன்று போச்சு". சரியாக பன்னிரெண்டு மணிக்கு அவள் வந்தாள். பார்வைக்கு புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள மேஜைகளிடையே சத்தமின்றி நடந்து என் முன் வந்து நின்று, தன் நல்ல காலத்தில் அவள் கொண்டிருந்த குறும்புத்தனமான புன்னகையுடன் என் கண்களை நோக்கி, நான் எதிர்வினையாற்றும் முன்பே சொன்னாள்: "நான் உன் அம்மா"
அவளிடம் எதுவோ மாறியிருந்தது; அதனால் முதல் பார்வையிலேயே அவளை அடையாளம் காண இயலவில்லை. அவளுக்கு நாற்பத்தைந்து வயது. பதினோரு பிரசவங்களையும் சேர்த்து, அவள் பத்து வருடங்கள் கர்ப்பமாகவும், குறைந்த பட்சம் பத்து வருடங்கள் குழந்தைகளை வளர்க்கவும் செலவிட்டுள்ளாள். வயதாகும் முன்னே தலை நரைத்து விட்டது. முதன்முதலாய் அணிந்துள்ள கண்ணாடிக்கு பின்னே கண்கள் பெரிதாகவும், அதிர்ச்சியுற்றும் காணப்பட்டன. அவள் அம்மாவின் மரணத்தை அனுசரிப்பதற்கு கண்டிப்பாக அவள் கறுப்பு ஆடையே அணிந்த போதும், இறுதிக் கால கம்பீீரத்துடன், தன் திருமண புகைப்படத்தில் கொண்டிருந்த ரோமாபுரி அழகை அப்போதும் தக்க வைத்திருந்தாள். எல்லாவற்றிற்கும் முன்னே, என்னை கட்டி அணைப்பதற்கும் கூட முன்பே, தனது வழக்கமான சம்பிரதாய முறையில் சொன்னாள்:
"தயவு செஞ்சு வீட்டை விக்கிறதுக்கு எங்கூட வான்னு உன்ன கூப்பிட வந்தேன்"
அவள் என்னிடம் எந்த வீடென்றோ, எங்குள்ளதென்றோ சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் எங்களுக்கு இப்பூமியில் ஒரே ஒரு வீடுதான் உள்ளது: நான் பிறக்கும் அதிர்ஷ்டம் பெற்ற, எட்டு வயதிற்கு மேல் நான் வாழ்ந்திராத அரகடகாவிலுள்ள என் தாத்தா பாட்டியின் பழைய வீடு. ஆறு கல்வி அரையாண்டுகளை கையில் கிடத்ததையெல்லாம் படிப்பதற்கு அர்ப்பணித்தும், ஸ்பானிய பொற்காலத்தின் மறுஆக்கம் செய்ய முடியா கவிதைகளை நினைவிலிருந்து ஒப்புவித்தும் விட்டு, அப்போது தான் நான் சட்டப்படிப்பை விட்டு வெளியேறி இருந்தேன். நான் ஏற்கனவே நாவல் எழுதும் கலையை பயில்வதற்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் மொழிபெயர்ப்பிலும், கடன் வாங்கியும் படித்திருந்தேன்; தினசரி இணைப்புகளில் ஆறு கதைகள் பிரசுரித்து, நண்பர்களின் பேராதரவையும், சில விமர்சகர்களின் கவனத்தையும் பெற்றிருந்தேன். வரும் மாதத்தில் எனக்கு வயது இருபத்து மூன்றாகும் போது, ராணுவ சேவைக்கான வயதைத் தாண்டியிருப்பேன்; மேலும், கொனூறியா நோயின் இரு தாக்குதல்களை தாக்குப் பிடித்து விட்டேன். தினமும், எதிர்காலம் பற்றிய கவலை இன்றி, மிக மட்டமான புகையிலையிலிருந்து தயாரிக்கப்பட்ட அறுபது சிகரெட்டுகளை புகைத்து வந்தேன். பாரன்குவில்லாவிலும், கொலொம்பியாவின் கரீபிய கடற்கரை பகுதியிலுள்ள கார்டகீனாடெ இண்டியாஸிலுமாய் என் ஓய்வு நேரத்தை பிரித்து, எல் ஹெரால்டோ எனும் செய்தித்தாளுக்கு தினசரி உரை எழுதுவதில் கிடைக்கும் ஒன்றுக்கும் உதவாத வருமானத்தில் முடிசூடா மன்னன் போல் வாழ்ந்தும், எங்கு இரவில் தங்க நேர்கிறதோ அங்கு க்ிடைக்கும் ஏற்ற துணையுடன் படுத்தும் கழித்து வந்தேன். என்னவோ, என் பேராவல்களின் நிச்சயமின்மையும், வாழ்வின் குழப்பமும் போதாது என்பது போல், என் நண்பர்கள் குழுவும் நானும் இணைந்து, மூன்று வருடங்களாய் பூயன் மேயர் பிரசுரிக்க முயன்று வரும் தீரமிக்க பத்திரிக்கை ஒன்றை நிதியேதும் இன்றி துவங்க முயன்று வந்தோம். வேறென்ன வேண்டும்?
ரசனையால் அன்றி வறுமை காரணமாகவே, இருபது வருடங்களுக்கு பிறகான மோஸ்தரை அப்போதே கொண்டிருந்தேன்: கட்டற்று வளர்ந்த தாடி, கலைந்த தலைமயிர், ஜீன்ஸ், பூப்போட்ட சட்டை மற்றும் யாத்திரிகனின் செருப்புகள். இருண்ட திரையரங்கு ஒன்றில் எனக்கு பரிச்சயமான பெண் ஒருத்தி, நான் அருகிலிருப்பது தெரியாமல், சொன்னாள், "பாவம் கெபிட்டோ, வெளங்காம போயிட்டான்". இதனால் இப்போது பொருள்படுவது என்னவென்றால் என் அம்மா வீட்டை விற்க அவளோடு செல்ல என்னை அழைத்த போது, அதை மறுப்பதற்கு என்னிடம் எந்த காரணமும் இல்லை என்பதே. அவளிடம் போதிய பணம் இல்லை என்றாள்; சுயகௌரவம் காரணமாய் என் செலவுகளை நானே ஏற்றுக் கொள்வதாய் சொல்லி விட்டேன்.
