
என் சிறிய வாழ்வில் நான் மிகவும் வெறுக்கும் தினங்களில் ஒன்றாக இன்றைய நாளும் இருக்கும். ஜெயமோகனின் அவதூறுக்கு எழுதிய பதில் கட்டுரையை சாருவின் இணையதளம் மற்றும் உயிரோசை வழியாக ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டிருப்பார்கள்; படித்திருப்பார்கள். அவர்களில் ஒரு சிலர் பரிகாச பின்னூட்டங்கள் வழியாக என்னை சீண்டினார்கள். கடந்த ஒருவாரமாக கடுமையான அலுவலக பணி. காலை எட்டு மணிக்கு சென்று பத்து மணிக்கு தான் வீடு திரும்பினேன். அங்கு துறைத்தலைவரும், உபதலைவரும் தந்த அவமானங்களும், காயங்களும் ஏராளம். என்ன செய்தாலும் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தேன். பிறகு ஜெயமோகன் நான் சற்றும் எதிர்பாராமல் தனிப்ட்ட என் குறையை சுட்டிக் காட்டி தாக்கினார். அவர் என்னை கண்டிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எழுத்தில் கீழ்மைப்படுத்துவார் என்று நினைக்கவில்லை. ஏனென்றால் பதின்பருவத்தில் இருந்தே அவர் அளவுக்கு நான் நேசித்த, மரியாதை செலுத்தின, ஆராதித்த ஒரு ஆளுமை வேறில்லை.
ஜெயமோகனின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவதை ஆரம்பத்தில் தவிர்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் என்னைப் பற்றின பல தனிப்பட்ட தகவல்களை திரித்து எழுதினதால் பதில் எழுதுவது தவிர்க்க முடியாமல் போனது. அன்றாட வாழ்வில் நம்மைப் பற்றி சிறுதகவல் மாற்றி கூறப்பட்டாலும் உடனே திருத்தவே முயல்வோம். நீங்கள் பத்து மணிக்கு தாமதமாக அலுவலகம் சென்றிருக்கலாம். ஆனால் மேலாளரோ பிறரோ பதினொரு மணி என்றால் பொறுப்பீர்களா? உடனே திருத்த மாட்டீர்கள்? என்னதான் தாமதம் என்றாலும் அந்த அரைமணி நேரத்தை விட்டுத்தர நாம் சம்மதிப்பதில்லை. அது போலத் தான், என்ன தான் நான் நொண்டி என்றாலும் ஜெயமோகன் எனக்கு ரெண்டு காலும் விளங்காது என்றால் நான் ஏற்றுக் கொள்ள முடியாது அல்லவா. முழு நொண்டிக்கு அரை நொண்டி பரவாயில்லையே! என் அம்மாவை வேறு தவறாக பேசுகிறார். அவர் வாசித்தால் மனம் எப்படி புண்பட்டிருக்கும். காரணம் ஜெ.மோ மீது அவருக்கும் அபார மரியாதை உண்டு. நான் அவருக்கு அறிமுகப்படுத்திய ஒரே தமிழ் எழுத்தாளர் அவர் தான். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் இங்கு பின்னூட்டம் இட்ட சிலர் நான் ஜெ.மோ சாருவுக்கு இடையே புகுந்து மகுடி வாசிப்பதாக சித்தரித்தனர். கொத்துபடாமல் விலகிப் போ என்றனர். அல்லது சில்லறை புகழுக்கு ஆசைப்பட்டு ஜெயமோகனுக்கு எதிர்வினையாற்றியதாக் சிலர் சொன்னார்கள். ஜெயமோகனின் கருத்தில் உள்ள மனித உரிமை மீறலை அவர்கள் கவனியாதது ஏன்? எனக்கு புரியவில்லை.
என் உற்ற நண்பர்கள் நடத்தும் அமைப்பு சார்ந்தும் ஒரு சிறு கருத்து வேறுபாடு நேற்று ஏற்பட்டது. எனது மன நெருக்கடி காரணமாக அது என் நண்பர்களின் கருத்துக்கள் பெரும் அவமானமாக பட்டன. அவர்களிடமும் கோபித்துக் கொண்டேன். சிறுக சிறுக பதற்றத்தில் மூழ்கி நான் முழுக்கவே நிதானத்தை இழந்தேன். எந்த வேலையும் செய்யாமல் எனக்கு பின்னோட்டம் இடுபவர்களுக்கு பைத்தியம் சுவரில் கிறுக்குவது போல் பதிலிட்டு அக்கப்போர் செய்து கொண்டிருந்தேன். இப்போது இரவில் காலம் அசைவுகள் அடங்கி ஓயும் வேளையில் முடிந்து போன நாளின் அத்தனை அபத்தங்களும் விளங்குகின்றன.

நண்பர்களே! நீங்கள் என்னை புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒரு தனிநபர் உரிமைதான். என் மீது குரூரத்தை காட்டுவதோ புறக்கணிப்பதோ கேலிசெய்வதோ கூடத் தான். ஏராளமானோர் மேற்சொன்ன கட்டுரையை படித்து விட்டு மௌனமாக சென்றதும் கூட அவர்கள் உரிமைதான். உங்களிடம் இருந்து எதையாவது எதிர்பார்த்து ஏமாந்ததனாலே நான் நிதானம் இழந்தேன், எரிச்சலடைந்தேன், கீழ்த்தரமான மொழியில் பதிலளித்தேன். நான் பலவீனமாக இருந்தேன். ஜெயமோகனால் இரண்டாவது காலும் ஊனமாக்கப்பட்ட ஒரு மனிதனின் ஒரு நாள் பலவீனத்தை, அதன் விளைவான அசட்டுத்தனங்களை மன்னித்து விடுங்கள். குறிப்பாக கிரி மற்றும் மதிக்கு!