முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறந்த பதிவருக்கான முதல் சுஜாதா விருது லேகாவுக்கு

இணையபதிவருக்கான சுஜாதா விருதுக்கு லேகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது இணையதளம் yalisai.blogspot.com. தேர்ந்தெடுத்துள்ளவர் எஸ்.ராமகிருஷ்ணன். லேகா இந்த விருதுக்கு தகுதியானவரா? இயல்பாகவே எந்தவொரு விருதின் போதும் எழுப்பப்படும் இந்த கேள்வி எப்போதும் போலவே இங்கும் அனாவசியமானதே. தீர்ப்பை விமர்சிப்பதை விட நாம் லேகாவின் தளத்தை ஆய்ந்து விமர்சிக்கலாம்.



எஸ்.ராவுக்கு தமிழ்ப்பதிவர்களின் எழுத்து உத்தேசம் குறித்து என்றுமே ஒரு எதிர்மறை விமர்சனம் உண்டு என்று ஊகிக்கிறேன். அவருக்கு இப்போட்டியில் பங்குபெறுவதற்காக அனுப்பப்பட்ட வலைப்பக்கங்கள் பெரும்பாலானவை வழக்கமான ஜனரஞ்சக பத்திரிகைகளை ஈ அடித்த கேளிக்கை எழுத்துக்களாகவே இருந்திருக்கும். இதுவும் ஊகமே. (நான் பங்குபெற இல்லை. விருதை விட பெரிய அங்கீகாரம் உயிர்மையில் எழுதுவது தான்). இந்த போட்டியாளர்களில் மாற்று சினிமா மற்றும் தீவிர இலக்கியம் பற்றி நிறையவே எழுதி உள்ள லேகாவை தேர்ந்தெடுத்ததன் மூலம் எஸ்.ரா பதிவர் உலகத்துக்கு ஒரு சேதி விடுக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

லேகாவின் யாழிசை தளம் எனக்கு முன்பாகவே பரிச்சயம் உண்டு. எஸ்.ரா சொலவது போல் லேகாவின் வாசிப்பு விரிவு வியப்பளிப்பது. இணைய வாசகர்களுக்கு லேகாவின் எழுத்துக்கள் தீவிர இலக்கிய நூல்களுக்கான சிறந்த சுட்டிகள்.

தீவிர இலக்கிய வாசிப்பும், அத்தகைய நூல்களை எழுத்துவழி அறிமுகப்படுத்தும் தொடர்ச்சியான அக்கறையும் கொண்ட ஒருவர் இவ்விருதை பெறப்போவதில் பளிச்சென்ற மகிழ்ச்சியே. தொடர்ந்தும் தீவிரர்களே இவ்விருதை பெறட்டும்!

கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
என் பார்வையில் இது மிகக் சரியான தேர்வே.
சுஜாதா பெரும்பாலும் வாசிப்பையே விரும்புவார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தாலும், எழுதுவதை காட்டிலும் வாசிப்பதில் தான் சுஜாதாவிற்கு அதிக ஆர்வம், ஆசை பிரியம்.

சுஜாதா போலவே லேகா வும், அதிகம் வாசிப்பார், தன வாசிப்பு அனுபவங்களை மற்றவரும் பெற வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை உடையவர் லேகா.

தமிழ் இணையத்தில் சுஜாதா மற்றும் எஸ் ராமகிறிஷ்ணனின் பங்கு மிக சிறப்பானது, அம்பலம் இணைய இதழில் எஸ் ரா மிக முக்கிய பங்கு ஆற்றி உள்ளார். எனவே எஸ் ரா விற்கு இணைய எழுத்து பற்றி மிக விரிவாக தெரியும்.

ஒரு சிறந்த இனிய எழுத்தாளர் ஒரு சிறந்த வாசிப்பு சார்ந்த பதிவரை தேர்ந்து எடுத்து உள்ளது மிக சிறப்பாக படுகிறது எனக்கு.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கும் உங்களுடன் உடன்பாடே!
மரா இவ்வாறு கூறியுள்ளார்…
நான் உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தளத்தை வாசித்திருக்கிறேன்.புத்தக அட்டை புகைப்படமும் ஒரு சிறுகுறிப்புமே இருக்குமே ஒழிய தான் அப்படைப்பின் வழியே என்ன கண்டார் என்பது எங்கும் இருக்காது....இதில் நிறைய அரசியல் இருக்குமென்பது என் ஊகம்.உங்களுக்கு புரிய வாய்ப்பிருக்கிறது.நன்றி.
butterfly Surya இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துகள் லேகா.

பகிர்விற்கு நன்றி அபிலாஷ்.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சூர்யா
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
மயில்ராவணனுக்கு
எஸ்.ரா சம்மந்தப்பட்ட எந்த தேர்விலும் அரசியல் புகாது என்பது என் நம்பிக்கை. அவர்தன் மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட மாட்டார். லேகாவின் நல்ல முயற்சிக்கு இது ஒரு ஊக்கியாக அமையட்டும்.
மரா இவ்வாறு கூறியுள்ளார்…
சரிங்க........நீங்க சொன்னா. என் எண்ணத்தை மாத்திகிறேன்.லேகாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
விருபா - Viruba இவ்வாறு கூறியுள்ளார்…
இன்றுதான் இப்பதிவைப் பார்வையிட்டேன்.

1. சிறந்த பதிவரைத் தேர்தெடுக்கும் போட்டியல்ல இது. சிறந்த இணையம் அல்லது வலைப்பதிவு என்றவாறே அறிவிக்கப்பட்டிருந்தது.
http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=2565 இல் குறிப்பிட்டபடி \\ தேர்வு முறை குறித்த தகவல்கள் பகிரங்கமாக வெளியிடப்படும்.\\ என்பதை உண்மை என்று நம்பி www.viruba.com ஐயும் யான் போட்டிக்கு அனுப்பியிருந்தேன்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் லேகாவின் வலைப்பதிவைப் பார்த்தேன். அதில் பல இடங்களில் எஸ்.ரா படத்தையும், மனுச புத்திரன் படத்தையும் போட்டு பதிவுகள் எழுதியிருந்தார். கூடுதலாக அவர் விரும்பி வாசிப்பவை!! பட்டியலில் எஸ்.ரா முதலிடத்தில் இருந்தார், காலச்சுவடு கடைசி இடத்தில் இருந்தது. இப்பவும் அப்படியே. லேகா பெரிதும் எஸ்.ராவை வாசிப்பவர். இவை எஸ்.ராவுக்கும், மனுச புத்திரனக்கும் போதுமான காரணங்கள்.

2. \\ தேர்வு முறை குறித்த தகவல்கள் பகிரங்கமாக வெளியிடப்படும்.\\ என்பதற்கமைய போட்டியில் கலந்துகொண்ட இணையங்களின் பட்டியலை வெளியிடமுடியுமா என்று மனுச புத்திரன், எஸ்.ரா இருவருக்கும் மின்-அஞ்சல் அனுப்பினேன். அதற்கு இன்றுவரை உரிய பதில் அவர்களிடமிருந்து வரவில்லை.

பின்னர் உயிரோசையில் ஒருவர் \\ தமிழ்நாட்டில் பெரும்பாலான இலக்கிய விருதுகள் அதிகாரத்தரகர்களால் கையகப் படுத்தப்பட்டுவிட்டதாக \\ எழுதியிருந்தார்.

அவ்வாறே நடந்துள்ளது.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
விருபா, எந்த விருதின் நேர்மையை சந்தேகிப்பதனாலும் பயனில்லை. விருதுகள் சின்ன ஊக்குவிப்புகள். அவை இல்லாமலும் நம் பயணம் தொடரும். சொல்லப்போனால் விருதுகளை நாடும் போது அதைப் பற்றியே சர்ச்சிக்கும் போது நாம் பலவீனமாக இருக்கிறோம் என்று பொருள். அதனாலே தானோ என்னவோ பொதுவாக முதியவர்களுக்கே விருதுகள் வழங்கப்படுகின்றன. பதிவர்கள் பொதுவாக இளைஞர்கள். அதனால் இவ்விசயத்தில் சின்ன விதிவிலக்கு என்று நினைக்கிறேன் :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...