இந்திய மற்றும் இலங்கை தேர்வாளர்களிடையே முக்கிய வித்தியாசம் என்ன?
வேறென்ன தெளிவான திட்டவரைவும் அதை நிறைவேற்றும் துணிவும். இந்திய தேர்வுகளில் எப்போதும் குறுகிய கால தேவையும், குழப்பமும் வெளிப்படையாக தெரியும்; அதோடு ஒவ்வொரு தேர்வுக் குழுவின் நாற்காலி பருவத்திலும் நம்பிக்கையூட்டும் இளம் வீரர்கள் மாறுபடுவார்கள்.
இலங்கை தேர்வாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வீரர்கள் பற்றின மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதில்லை. 33 சராசரி இருந்தும் உபுல் தரங்கா மீது ஐந்து வருடங்களாக நம்பிக்கை வைத்து அதன் பயனை தற்போது அனுபவிக்கிறார்கள். ஜெயசூரியாவையே தயக்கமின்றி கைகுலுக்கி வீட்டுக்கு அனுப்ப முடிகிற அளவுக்கு தரங்காவின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. இதை விட முக்கியமாக அவர்கள் களத்தடுப்பு மற்றும் உடல் தகுதிக்கு தருகிற முக்கியத்துவம் பாராட்டத்தக்கது. இந்த இரு தகுதிகளின் அடிப்படையில் இந்தியாவில் யாராவது அணியில் இருந்து இதுவரை விலக்கப்பட்டுள்ளனரா? இலங்கையில் அது நடக்கிறது. மிகச்சமீபத்திய உதாரணம் கண்டாம்பி.
கண்டாம்பி கடந்த ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மிகச்சிறப்பாக மட்டையாடினார். ஆனால் அவரது களத்தடுப்பு மட்டமாக இருந்தது. இது மற்ற வீரர்களின் தீவிரத்தை பாதித்தது. இந்தியாவுக்கு எதிராக மிகச்சிறந்த மட்டையாட்ட ஆட்டவரலாற்றை கண்டாம்பி கொண்டிருந்த போதும் அவரது ரணதுங்க தொப்பை மற்றும் சொதப்பலான களத்தடுப்பை கருதி நடக்கப் போகும் முத்தரப்பு தொடருக்கான அணியில் அவரை தேர்வாளர்கள் சேர்க்கவில்லை. இக்காரணத்தை வெளிப்படையாக அவர்கள் அறிவிக்க விட்டாலும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த ஒருவரை நீக்குவதற்கு வேறெந்த காரணமும் இருக்க முடியாது. இப்படியான தீர்க்கமான முடிவுகள் இந்தியாவில் எதிர்காலத்தில் கூட எடுக்கப்பட மாட்டாது என்பது உறுதி. களத்தடுப்பு நமக்கு ஒரு இறுதியான தகுதி மட்டுமே. உதாரணமாக அஷ்வினின் தேர்வை சொல்லலாம். ஆசியக் கோப்பைத் தொடரில் உடல்தகுதி மற்றும் ஆட்டநிலை காரணமாக யுவ்ராஜ் நீக்கப்பட்டு இந்த தொடரில் மீண்டும் வரவேற்கப்படுகிறார். இடையிலான காலத்தில் அவரால் தனது டெஸ்டு இடத்தை கூட கையகப்படுத்த முடியவில்லை. உடல் தகுதியிலும் பெரிய மாற்றமில்லை. ஒரு தொடரில் நீக்கப்பட்டது தேர்வாளர்களின் மொழியில் தண்டனையென்று பொருள்பட்டாலும் நிஜத்தில் யுவ்ராஜுக்கு ஒப்பான மற்றொருவர் கைவசம் இல்லை என்பதை மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் ஒரு நடவடிக்கை தான் அவரது மறுதேர்வு.
இந்திய தேர்வாளர்களுக்கு விதூஷக வேடம் பொருந்திப் போகிறது என்பது உண்மைதான் என்றாலும் ஒரே நாடகத்தை எத்தனைக் காலம் தான் மேடை ஏற்றப் போகிறார்கள்?
