ஒரு இரவில் என் மனைவியுடனான உரையாடலின் போது நான் கோமா நிலையின் இருந்த போது எப்படி நடந்து கொண்டேன் என்பது பற்றி விசாரித்தேன். மெல்ல மெல்ல நினைவுபடுத்தி சொன்னாள். கோமாவில் இருந்து பாதி மீண்ட நிலையில் என்னால் மயக்க நிலையில் கண் திறவாமல் பேச மட்டுமே முடிந்தது. அவள் என்னை பார்க்க வந்த போது நான் “எனக்கு ஜீனோவை பார்க்க வேண்டும், கொண்டு வா” என்றிருக்கிறேன். ஜீனோ எங்கள் நாய்க் குட்டி. நான் என் நண்பர்களையோ உறவினர்களை குறிப்பிடவில்லை!
பிறகு நான் கண் திறந்த பின் அவள் என்னிடம் மார்க்வெஸின் “One Hundred Year’s of Solitude” நாவலை காட்டி “இது என்ன” என்றிருக்கிறாள். நான் புத்தகத்தின் பெயரை சரியாக சொல்லி விட்டு “இதை நான் மொழியாக்கம் செய்து வருகிறேன்” என்று மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறேன். அது தவறு. நான் மொழிபெயர்த்து வருவது மார்க்வெஸின் சுயசரிதையான “Living to Tell a Tale”. இதை மனைவி குறிப்பிட்ட போது எனக்கு தலைப்பு குழம்பிப் போனது பொருட்டாகப் படவில்லை. மொழிபெயர்ப்பை ஏன் மீள மீள அழுத்தி சொன்னேன் என்பதே வியப்பாக இருந்தது. ஏனெனில் உயிரோசையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்த பின் மார்க்வெஸ் மொழிபெயர்ப்பில் இருந்து என் க்வனம் திரும்பி இருக்கிறது. மொழிபெயர்ப்பை விட உரை எழுதுவதை, புதிய தளங்களை அதன் மூலம் கண்டடைவதை மேலும் முக்கியமானதாக கருதி வந்திருக்கிறேன். பாதி கோமாவில் என் பிரக்ஞை அல்ல பேசியது; அபோத மனம். அபோத மனதில் மொழிபெயர்ப்பு பணி ஏன் பிரதானமாக இருந்தது?
ஒரு நாள் கழித்து மாலையில் ஒரு படம் பார்த்து முடித்த போது சட்டென்று தோன்றியது. அந்த மொழியாக்கத்தை சிறிது காலமாய் தூசு படிய விட்டதற்கு என்னுள் ஒரு குற்றவுணர்வு உள்ளது. அபோத நிலையில் மனம் திரையை திறந்து அக்குற்றவுணர்வை வெளிக்கொணர்ந்தது.
அடுத்து அவள் சொன்னது தான் இருப்பதிலேயே சுவாரஸ்யமானது. நான் கோமாவில் இருந்து பாதி விழித்து கண் திறக்க முடிந்த போது அவள் வந்து என் முன்னால் நிற்கிறாள். என்னிடம் கேட்கிறாள் “நான் யார் தெரிகிறதா?”. முதலில் அவளிடம் நான் சொன்னது என்ன? “you are my sweet wife”. என் வாழ்வில் முழு பிரக்ஞையுடன் இருந்த எந்த வேளையிலும் நான் இப்படி ஒரு வாக்கியத்தை அவளிடம் சொன்னதில்லை.
