நவீன பெண்களைப் போலவே நவீன கவிதைகளும் உள்ளடக்கத்தில் குழப்புவனவாகவும் ஏமாற்றம் தருபவையாகவும் இருப்பது நமக்கு பரிச்சயமானது தான். பத்திரிகைகளில் கவிதைப் பக்கங்களை எங்கே சுட்டு விடுமோ என்ற அச்சத்தில் புரட்ட நேரிடுவது கவிஞனுக்கும் வாசகனுக்கும் இன்று ஒருசேர ஆபத்து தான். இந்த நெருக்கடி வாசிப்பு நிலையில் சில கவிதைகள் வண்ணமடித்த கோழிக் குஞ்சுகளாக தெரிகின்றன. ஒன்று செல்மா ப்ரியதர்சனின் “பூனையிடம் மன்றாடும் ஆசிரியர்”. மிக அரிதான ஒரு நவீன நகைச்சுவை கவிதை. மொழியில் புதுமையும் கூர்மையும் உள்ளது. வகுப்பறையில் நடக்கும் ஒரு வன்முறையை நுட்பமாக அலட்டாமல் சொல்கிறது. பிப்ரவரி மாத தீராநதியில் 32வது பக்கத்தில் உள்ளது. வன்முறை நகைச்சுவை எனும் இரு எதிர் துருவங்களில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்கலாம்
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்