இன்றைய இலக்கிய வாசகன் ஜனரஞ்சக வாசிப்பில் இருந்து சமீபமாக தீவிர இலக்கியம் நோக்கி வந்தவன் அல்லது எந்த வாசிப்பு பயிற்சியும் அற்றவன். அவனுக்கு வாசிப்பு என்பது ஒரு அடையாள அட்டை. முன்னெப்போதையும் விட ஊடகங்களில் நேர்ந்துள்ள திறப்பு காரணமாய் அவனுக்கு எழுத்தாளர்களையும் சகவாசகர்களையும் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. அவன் இரண்டு காரியங்களை செய்கிறான். மின்னஞ்சல்கள் அனுப்பி, தொலைபேசியில் பேசி எழுத்தாளன் முன் ஒரு தாசனாக பணிகிறான். கையில் பிரசாதம் வாங்கியதும் தான் ஒரு இலக்கிய வாசகன் என்ற அங்கீகாரம் வாங்குகிறான். ஆம் அவன் எதையும் அடைவதில்லை. சிக்கனமாக எளிதாக வாங்கி பத்திரப்படுத்துகிறான்.
இன்றைய வாசகன் எழுத்தாளனுக்கு நிகராக தன்னை பாவித்துக் கொள்வதில்லை. தன் வீட்டில் உள்ள ஒரு புத்தம் புது எல்.சி.டி டீவி மட்டுமே அவனுக்கு தான் புதிதாய் அபகரித்த ஒரு முன்னணி தீவிர எழுத்தாளன். எழுத்தாளனுக்கோ இந்த புதுவாசகன் தன் இணையதள வருகைப்பட்டியலில் சேர்ந்துள்ள ஒரு உபரி எண், தன் நுண்பேசி கால் லிஸ்டில் ஒரு அநாமதேய நபர். முதிர்ச்சியின்மை, அவசரம் மற்றும் பயிற்சியின்மையால் தான் இந்த பரஸ்பர அக்கறையின்மை நேர்கிறது.
நெடுங்காலமாய் வாசகனே இல்லாமல் இருந்த தீவிர எழுத்தாளனுக்கு இன்று தன்னை நோக்கி வரும் ஒரு பத்தாயிரம் வாசகர்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள். இதே பத்தாயிரம் பேர்கள் தாம் தன் போட்டி எழுத்தாளனையும் வாசிக்க போவதாய் சற்று பதற்றம் ஏற்படுகிறது. கற்பனை பெயர்களில் கூட வாசகர்களை உருவாக்கி தமக்குத் தாமே கடிதம் எழுதி தங்கள் இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். ஒரு கதையில் “நீங்கள் ‘அம்மா’ என்று எழுதிய சொல்லை படித்து நான் நேற்று இரவெல்லாம் அழுதேன்” என்று இதே வாசகன் அசட்டுத்தனமாக சொன்னால் ஒரு தீவிர எழுத்தாளன் பத்து ஆண்டுகளுக்கு முன் அதை வறட்டுப் புன்னகையுடன் நிராகரித்திருப்பான். இன்றோ அதை பொருட்படுத்தி “உங்களைப் போல் நூற்றுக்கணக்கானோர் கடிதம் எழுதி உள்ளார்கள். அதை எல்லாம் படித்து நானும் அழுதேன்” என்று பதில் எழுதுகிறான். மற்றொரு வகை வாசகன் புத்தகத்தை விடுத்து எழுத்தாளனை நாயகனாக்கி கொண்டாடுகிறான். ஒரு எளிய சினிமா ரசிகன் போல் நடந்து கொள்கிறான். கடந்த சில ஆண்டுகளில் நமது வாசகப் பரப்பு மாறி உள்ளதற்கு இது ஒரு உதாரணம்.
மற்றொரு பரிமாணம் உள்ளது. அசலான வாசகனுக்கு தொலைபேசி மற்றும் இணையம் வழியாக புத்தகங்களை அடைவது இன்று எளிதாகி உள்ளது. Facebook மூலம் சக-ஆர்வலர்களை தொடர்பில் வைப்பதும், இலக்கிய நடப்புகளை அறிவதும், தம் கருத்துக்களை சுதந்திரமாக உடனடி பதிவு செய்வதும் லகுவாகி உள்ளது. ஆங்கிலம் அறிந்த தமிழ் வாசகனுக்கு இன்று திறந்துள்ள சாத்தியங்கள் எண்ணற்றவை. ஆனால் இத்தகைய வாசகர்கள் ஒரு சிறுபான்மையினர் மட்டுமே.
(2011 டைம்ஸ் நவ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)
(2011 டைம்ஸ் நவ் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)
