Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

“பசித்த பொழுதில்”: பிச்சைப்பாத்திரத்தில் மழைத்துளிகள்



மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுதில் அக்கறை கொள்ளும் விசயங்களில் ஒன்று பாசாங்கு.
 பொதுவாக அவரது அனைத்து தொகுப்புகளிலும் ஆதாரமாக உள்ள அக்கறை இது. நவீனத்துவ இலக்கியத்தில் குறிப்பாக சிறுகதைகளில் மத்திய வாழ்வின் பாசாங்குகள் குறித்து நுட்பமாக கையாளப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன், சுஜாதா, சு.ரா ஆகியோரை உதாரணமாக சொல்லலாம். நவீனத்துவ புனைவுகளில் மனித வாழ்வின் விழுமியங்களில் போலித்தனம் பற்றிய பாசாங்குகள் பேசப்பட்டால் மனுஷ்யபுத்திரன் வேறு ஒரு தளத்தில் பாசாங்கை கையாள்கிறார்.

ஒரு மனிதனின் ஈகோ அல்லது அகங்காரம் அவனை எவ்வளவு பாசாங்காக அதன் விளைவாக கோமாளித்தனமாக அபத்தமாக நடக்க செய்கிறது என்பதை காட்டுகிறார். இதை இரண்டு விதமாக சித்தரிக்கிறார். ஒன்று மனிதன் எப்படி தன் சகமனிதர்களை கையாள்கிறான் என்பதில் உள்ள ஈகோ, அதன் அபத்தம். அடுத்து மனிதனுக்கும் அவன் வாழும் இடத்துக்குமான உறவு.

முதல் வகைக்கு “என் தாத்தா இப்படித்தான் இறந்து போனார் கவிதையை பார்க்கலாம். ஒரு கூர்மையான சித்தரிப்பு கவிதை. தீவிர சிகிச்சை பிரிவும் மரணத்தை முகர்ந்து கிடக்கும் கவிதைசொல்லிக்கு தனது தாத்தாவின் நினைவு வருகிறது. அவரது இறுதி தருணங்களை விசாரித்து அறிகிறான். அவர் நாடியை பிடித்து பார்த்த வைத்தியர் அவருக்கு இன்னும் மூன்று மணிநேரங்கள் தான் என்று சொல்லி விடுகிறார். தாத்தா அதிரவோ, கண்ணீர் உதிர்க்கவோ இல்லை. அவர் அணுகி வரும் மரணத்தை இவ்வாறு புரிந்து கொள்கிறார். இது நாள் வரை என்னை சுற்றிய மனிதர்களை கராறாக கட்டுப்படுத்தி வாழ்க்கையை துளி பிசகாமல் நடத்தி விட்டேன். இனி அதை செய்வதற்கு எனக்கு மூன்று மணிநேரங்களே உள்ளன. அதனால் ஒரு நொடியை கூட வீணடிக்க கூடாது. ஆகையால் அவர் எழுந்து அமர்ந்து தன் இழவு ஏற்பாட்டுக்கான உத்தரவுகளை ஒவ்வொன்றாக அதிகார தோரணையுடன் பிறப்பிக்கிறார். இந்த அபத்தம் போதாதென்று பண்ணையாளை அழைத்து அவனது வேலை தொடர்பாக கண்டிக்கிறார். கணக்குப்பிள்ளையிடன் கடன்கள் பற்றி விசாரிகிறார். இத்தனை ஆணைகளையும் ஒரு நாடகத்தின் பாத்திரம் போல் பிறரும் மறுக்காமல் செய்கிறார்கள். மரணத்தை மீறுவது பற்றி வீராப்பாக பேசிவரும் ஒரு கம்பீரமான ரயில் பயணி பொட்டென்று பயணத்திலேயே போய் விடுகிற தி.ஜாவின் ஒரு அழகான கதை உண்டு. ம.புவின் கவிதை இதில் இருந்து எப்படி வேறுபடுகிறதென்றால் அது வாழ்வின் நிலையாமை பற்றி விசாரம் செய்யாமல் வேறு ஒன்றை சொல்கிறது. மனிதன் தன்னை சுற்றி உள்ளவர்களை கட்டுப்படுத்தும் ஒரு அதிகார ஆட்டத்தை மிகுந்த அக்கறையுடன் ஒவ்வொரு நொடியும் செய்கிறான். இதற்கு அவனை சுற்றி உள்ளவர்களும் மிக சீரியஸாக உடன்படுகிறார்கள். இருவருக்கும் இவ்விளையாட்டில் சம பங்கு. இதில் துயரம் என்னவென்றால் தாத்தா தனது அதிகார ஆட்டத்தின் போது ஒரு கடிகாரம் போல் நின்று போனாரே அன்றி அவர் நிஜமாகவே இறக்கவில்லை என்பதே. அதனாலே “தாத்தா இப்படித்தான் இறந்து போனார் எனும் தலைப்பு. ம.புவின் கவிதை மரணம் வாழ்வை எப்படி சூன்யமாக்குகிறது என்பதை பற்றியதல்ல, நாம் எப்படி இறக்க தெரியாதவர்களாக இருக்கிறோம் என்பதை பற்றியது. சரியாக இறக்க ஒரு சரியாக வாழ கற்க வேண்டும். வாழ்வின் ஒரு பகுதி தான் என அறிய வேண்டும். பார்வையாளனாக இருக்க வேண்டும். நாடக பாத்திரமாக அல்ல.
மனிதனுக்கும் இடத்துக்குமான உறவுக்கு உதாரணமாக “நடைபயிற்சி 5 கவிதையை பார்ப்போம். அவரது வெற்றிகரமான வடிவம் ஒன்று இக்கவிதையில் உள்ளது. அதாவது உலர்வான தகவல் அறிக்கை பாணி. கடற்கரை. அங்கு இப்போதெல்லாம் நடப்பவர்களை விட வேறுவகையான ஆட்களே வருகிறார்கள் என்கிறார். அருகம்புல் குடிக்க, ஓடும் அழகான பெண்களின் அங்கலாவண்யங்களை வேடிக்கை பார்க்க பலர் வருகிறார்கள். கடற்கரை ஒரு பேஷன் ஷோ அரங்கு போல் மாறி விட்டது. வணிகமும் நடக்கிறது. மேல்தட்டினர் கடற்கரையில் ஆர்கானிக் காய்கறி வியாபாரம் செய்வது நமக்கு தெரியும். அதை “மாருதி காரில் ஒருவர் கீரைகளை கொண்டு வந்து விற்கிறார் என்று சொல்கிறார். இதற்கு அடுத்து ஒரு முக்கியமான பாத்திரம் வருகிறான். சைக்கிளில் ஒருவன் தினமும் வருகிறான். அவன் வெகுநேரமாக ஒரு காலை கீழே ஊன்றி நின்று காத்திருந்து சூரியன் உதித்து மேல்வானை தொடும் வரை காத்திருக்கிறான். பிறகு விர்ரென்று சென்று விடுகிறான். ஒரு கற்பனாவாத கவிதையில் இவனது இயற்கை வழிபாடு லட்சியப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் ம.பு சொல்கிறார். கடற்கரையை ஒரு ஜிம்மாக மாற்றுபவர்களும், பேஷன் ஷோ அரங்காக மாற்றுபவர்களும், அங்காடியாக மாற்றுபவர்களும் அதனை ஒரு இயற்கை வழிபாட்டு தலமாக நினைப்பவனும் ஒன்று தான். இவர்கள் ஒவ்வொருவரும் கடற்கரையை தங்களது இடமாக மாற்றுகிறார்கள். ஒரு அலுவலக மேஜை போல், அலமாரி போல் அதை மாற்றி அமைக்கிறார்கள். இது மனிதனின் ஆதார குணம். ஒரு பிரச்சனையான குணம். அவனுக்கு தான் இருக்கும் எந்த இடமும் தனதாகி விடுகிறது. அந்த இடத்தில் தான் இருக்கிறோம் என்று அவன் யோசிக்கவே மாட்டான். அதனாலே மற்றொரு கவிதையில் எறும்பு, பூச்சி பறவைகள் மிருகங்கள் போல் நாம் இப்பூமியையே ஏன் ஒரு மாபெரும் வீடாக காண மறுக்கிறோம் என்று வியக்கிறார்.

மூன்றாவதாக தனது சுயத்துடனான உறவு. இது மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் மிக முக்கியமானது. அவரது “எனது படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்களில் இருந்து இந்த தொகுப்பு வரை பல தளங்களில் இந்த பிரச்சனையை பேசியிருக்கிறார். தன்னை “தரிசிப்பதன் வதைகள் தாம் இக்கவிதைகளின் கரு. ஒரு மனிதன் தன் தீமையை, சீரழிவை, தோல்வியை பார்ப்பதில் அல்ல துவண்டு போவது; அது அவன் தன்னை தானே முழுமையாய், எந்த பிரமைகளும், சித்தாந்தங்களும், அதிகார பாதுகாப்பும், தன்னை தக்க வைக்கும் விளையாட்டுகளும், அன்பு, வெறுப்பு போன்ற எதிரிடைகளும் இன்றி, தன்னை நேரடியாக பார்க்கும் போது நேர்கிறது. ஒரு நவீன மனிதன் தன்னை சந்திக்கும் ஒவ்வொரு கணமும் தனக்கு மோட்சமே இல்லையா என்று மனம் பேதலிக்கிறான். அக்குரல் தான் இக்கவிதைகளில் திரும்ப திரும்ப ஒலிக்கிறது.

“இன்னொரு இரவு என்றொரு உருவகக் கவிதை. யுலைசஸில் இருந்து ராபர்ட் பிராஸ்டில் இருந்து அக்குதிரை ஒரு நீண்ட நெடிய மானுட பயணத்தின் இறுதிச் சுற்றுக்கு வருகிறது. குதிரைக்கு களைப்போ தாகமோ பசியோ இல்லை, தூரம் பற்றின கவலைகள் இல்லை. ஆனால் அப்போது ஒரு துயரம் நிகழ்கிறது. மலையடிவாரத்தில் நிற்கும் குதிரை அஸ்தமன சூரியன் சாய்வதை ஒரு கணம் கண்டு விடுகிறது. ஒரு முடிவு எப்படி எளிதானது, யாரும் பொருட்படுத்தாதது, எதிர்பாராதது, அதே வேளையும் அதிகம்பீரமானது என்பதை அறிந்து கொள்கிறது. நீண்ட நெடும் பகலின் பயணத்தின் உண்மையான நோக்கம் அஸ்தமனப் படுகுழியில் அடங்கத் தான் என அந்தரங்கமாக அறிகிறது. அது சோர்ந்து போகிறது. அதன் கண்களில் இரவு வந்து நிறைகிறது. சொற்களில் விளக்க முடியாத மற்றொரு ரகசிய சேதியும் குதிரையின் இந்த அஸ்தமன கணத்தில், அப்போது அது என்ன நினைக்கிறது என்பதில் உள்ளது. ஆனாலும் இங்கே மற்றொரு முக்கியமான விசயம் குதிரை நிலையாமை பற்றி ஏமாற்றமடையவே இல்லை என்பது. ஏனெனில் அது நவீனக் குதிரை. சூரியனையே தன்னில் காணும் அதன் பிரச்சனை அது மட்டும் தான்.
நீர் வாத்துகளில் கவிதைசொல்லி குழந்தைகளுடன் நீச்சலடித்து இரு நீர்வாத்துகளை பின் தொடர்ந்து (துரத்தி அல்ல!) செல்கிறார். வாத்துகள் எழுப்பும் சிற்றலைகள் மட்டுமே தான் என்று அறிகிறார். இது மேற்சொன்னதன் சற்று உற்சாகமான “தரிசனம்.

“ஒரு கதாபாத்திரத்தின் வருகை இந்த சிக்கலை பேசும் ஒரு முக்கியமான கவிதை. பயமற்ற வாழ்வில் தன்னை கொசு, எறும்பு, மின்மினி, சில்வண்டுகளுடன் ஒப்பிட்டு “எவ்வளவுக்கு எவ்வளவு சிறிதாக இருக்கிறோமோ அவ்வளவுக்கு பயமில்லாமல் இருக்கலாம் என்கிறார். இங்கு உடலை அல்ல மனித இருப்பை பேசுகிறார். பிரச்சனை நாம் பெரிதாக இருக்கிறோம் என்பதல்ல, நம் இருப்பை மேலும் மேலும் பெரிதாக்கிக் கொள்ள, அப்படி பாவிக்க முயன்று கொண்டே இருக்கிறோம் என்பது. மீடியா, நுகர்வுக்கலாச்சாரம், நிறைய செய்ய வேண்டி இருக்கிறது என்கிற பொதுவான வாழ்வு பற்றின மனநிலை இந்த பிரச்சனையை சமகாலத்தில் பிரம்மாண்டமாக்கி இருக்கிறது. மனிதன் தன்னை இன்று கடைசி டைனோசர் ஆக மாற்றியிருக்கிறான்.
சொல்லப்போனால் பறவைகள், பூச்சிகள், பூனை, குதிரை போன்ற மிருகங்கள் வரும் அநேகமான கவிதைகளை இவ்வகைக்குள் சேர்க்கலாம். மனிதனை பற்றி பேசுவதற்கு மனிதர் அல்லாதவற்றை பயன்படுத்துவதில் ஒரு சௌகரியம் உள்ளது.

காமம் நம்மை எப்படி ஆட்கொள்கிறது?

“முதலில் நிற்குமிடத்தில் நிலம் நடுங்குகிறது
பிறகு காற்றில் ஒரே ஒரு இலை மட்டும் நடுங்குகிறது...
இப்படித்தான் காமம் உன்னை ஆட்கொள்கிறது

இச்சையின் ஆவேசம் தணிகிறது என்பதல்ல இக்கவிதை சொல்வது. முதலில் இச்சை அதன் ஆதிவடிவில் ஒரு “இடியோசை போல் வருகிறது. நம்மை ஆட்கொள்கிறது. பிறகு அந்த உருவம் தேவை இல்லை. மனம் ஒரு பிரதி எடுத்துக் கொள்கிறது. பிறகு அந்த பிரதியின் நிழல் பார்த்தாலே நாம் ஆட்கொள்ளப்படுகிறோம். அதனாலே “பிறகுஅது “ஒரு டம்ளர் கீழே விழும் ஓசையாகினால் போதுமாகிறது. அதாவது முதலில் KFC சிக்கன் சாப்பிடுகிறீர்கள். பிறகு நீங்கள் தொடர்ந்து KFC பிராண்டை மட்டும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். அது பிடிக்கிறது பிடிக்கவில்லை என்ற கேள்வியே எழுதுவதில்லை. காமம் எனும் ஆதி இச்சையும் இப்படி பின்னர் ஒரு எளிய குறியீடாகி விடுகிறது. வாழ்வில் ஒவ்வொன்றிலும் இது நிகழ்கிறது. இந்த பிரதியாக்கலை பேசும் பல கவிதைகளை இத்தொகுப்பில் பார்க்க முடியும். சு.ரா வண்ணதாசன் பற்றி சொன்னதை மறைமுகமாக நினைவுபடுத்தும் “பிறிதொரு நாளில் கவிதையும் உள்ளிட்டு.

டி.எஸ் எலியட்டின் பிரபலமான புருப்ரோக் கவிதையில் ஒரு அந்தியை மயக்கமருந்து கொடுக்கப்பட்டு அறுவைசிகிச்சை மேஜையில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் மனிதன் உடலுடன் ஒப்பிடுவார். மனுஷ்யபுத்திரனின் “ஒருநாள் முடியும் போது கவிதையின் முதல் வரியை பாருங்கள்.

“ஒருநாள் முடியும் போது
ஒரு காஃப்பி கோப்பையில் விழும்
ஈயைப் போல்
நான் இந்த மதுக்கோப்பையில்
விழுகிறேன்

மதுக்கோப்பை காலியாக இல்லை தான். ஆனால் வரப் போகும் இரவு, ஒரு நாளின் முடிவு, காபி கோப்பை போல் காலியாக உள்ளது. எலியட்டின் ஒப்பீட்டை பாருங்கள். ஒரு மாலைவேளை அறுவைசிகிச்சைக்கான துவக்கம் என்கிறார். பகல் என்பது ஒருவனின் சுயத்தின் பிரதிபலிப்புகள் நிரம்பியது. அங்கு அவன் எங்கும் பதுங்கிக் கொள்ளலாம். ஆனால் இரவு அப்படி இல்லை. அங்கு அவனுக்கு பதுங்க இடமே இல்லை. அசலான தன்னுடன் இருப்பது எப்படி என்று அவனுக்கு தெரியவில்லை.

இயற்கையை நேசிப்பது, வழிபடுவது, அதனுடன் வாழ்வது, பாதுகாப்பது பற்றி வெர்ட்ஸ்வொர்த், தோரொ, வானம்பாடிகளில் இருந்து இன்றைய சூழலியல்வாதிகள் வரை ஏராளமாய் பேசி விட்டோம். இதில் எல்லாம் ஒரு பிரச்சனை உள்ளது என்கிறது ஜென் தத்துவம். அது நாம் இயற்கையை தான் எனும் மனித ஈகோவின் கறுப்புக் கண்ணாடி வழி சதா பார்க்கிறோம் என்பது. இயற்கையை அறிய நாம் முதலில் இயற்கை நமது ஒரு பகுதி என்று அறிய வேண்டும். அப்போது நாம் இயற்கையை “பார்க்கவோ அதனிடம் பேசவோ, அதனோடு வாழவோ முடியாது. அப்படி செய்வது நகுலன் தன் மனம் தனியே இயங்குவதை காணும் செயலாகி விடும். ஆக நாம் இயற்கையை அறிவதை, அதைப் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும். உண்மையில் நாம் இன்று நம்மாலே ஆக்கிரமிக்கப்பட்டு ஒரு பித்துநிலையில் தான் இருக்கிறோம். நாம் எப்படி நம்மையே கவனிக்காமல் அமைதியாய் இருப்பது? இந்த பிரச்சனையை மனுஷ்யபுத்திரன் இத்தொகுப்பில் தொடர்ந்து பேசுகிறார்.

மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து சராசரி வாழ்வின் சமாச்சாரங்களை எளிமையான மொழியில் சுவாரஸ்யமான வகையில் எழுதுவதால் ஒருபுறம் கவிதையை நுட்பமாய் வாசித்தறியாத வாசகர்கள் கூட அவரை ஆர்வமாய், ஆனால் தவறாய், வாசிக்கிறார்கள். அன்றாட உறவுகள், பிரச்சனைகள் பற்றின கவிதைகள் இவர்களால் சிலாகிக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் அவர் காதல் போன்ற சராசரி உறவுகளை பற்றி எழுதுகிறவரல்ல, இது சராசரி வாசகர்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பம். தொடர்ந்து ஒருவர் பெண்கள், முத்தம் மற்றும் இட்லி மாவை பற்றி எழுதினால் அவர் அவற்றை பற்றி பேசுகிறார் என்று பொருளில்லை. கலாப்ரியா, பழமலய் போல் அவர் சராசரி வாழ்வின் கவிஞரல்ல. அவரிடம் உள்ள உளவியல், ஆன்மீக தளங்கள் அவரை அலமாரியில் மேலடுக்கிலேயே கொண்டு வைக்கின்றன. சுஜாதா “இடமும் இருப்பும் முன்னுரையில் இதைத் தான் குறிப்பிடுகிறார். உதாரணமாக “மழையில் துலங்கும் முகம்.

மழையில் நனையாமல் ஒரு பெண் நிற்கிறாள். தண்ணீர் சூழ்ந்த பெண் என்பது மிக கிளர்ச்சியூட்டும் ஒரு ஆதிமன பிம்பம். அவளைச் சுற்றி மரங்கள் குளித்து பசுமையாகின்றன, வீடு, கட்டிடங்கள் உயிர்க்கின்றன, சாலை, மைதானங்கள் குளிர்மையை வாங்கிக் கொள்கின்றன, பறவைகள் நனைந்தபடி புது நிறம் பெறுகின்றன. ஆனால் அந்த பெண் குடைக்கு கீழ் அல்லது வீட்டுக் கூரைக்கு கீழ் நிற்கிறாள். ஜன்னலுக்கு வெளியே கை கூட நீட்டாமல் வேடிக்கை பார்க்கிறாள். இச்சித்திரத்தை நாம் வழமையாக ஒரு இச்சையின் உருவகமாக மாற்றுவோம்; நமக்கு முந்தினவர்கள் “மழை கவிதை கொண்டு வருது, யாரும் கதவடைக்க வேண்டாம் என்பார்கள். ஆனால் இக்கவிதையோ அப்பெண்ணின் முகம் மழையில் நனையும் “வேறெதையும் விட .. பளிச்சிட்டு துலங்குவதாய் சொல்கிறது. எப்படி? மழையில் நனையும் போதும், வாழ்வில் அதன் ஒவ்வொரு நிகழ்விலும் பங்கெடுக்க முயல்கையிலும் நாம் அதன் மூலம் வேறு ஒன்றை ஈட்டி விட முடியும் என்று ஏங்குகிறோம். மழை என்பது கவிதை, அமிழ்தம் என்றெல்லாம் சுயஏமாற்று செய்கிறோம்.

சாக்ரடீஸுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முன் அவருக்கு துய்ப்பதற்காக சுவையான உணவு, மது, பெண்கள் வேண்டுமா என்று கேட்கிறார்கள். மறுக்கிறார். வேண்டுமானால் சாவை நாளை காலை வரை தள்ளிப் போடுவோமா என்று கேட்கிறார்கள். அதையும் மறுக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் துய்ப்பதன் வழியோ, தள்ளிப் போடுவதன் வழியோ ஒருவர் காலத்தை குறைக்கவோ கூட்டவோ முடியாது என்பது. ஏனென்றால் நாம் காலத்துக்குள் தாம் இருக்கிறோம் என்பதை அவர் நன்கறிந்திருந்தார். இக்கவிதையில் வரும் பெண்ணுக்கு மழை வெளியே அல்ல உள்ளே பெய்கிறது. அதனால் தான் நனையாமலே அவள் சுத்தமாக துலங்குகிறாள். அவள் மழையில் இருந்து ஒதுங்கவோ மழையை நாடி சென்று நனையவோ அவசியமில்லை. மழை என்பது அவளது வாழ்வை ஒத்த ஒரு இருப்பு. அவளது வாழ்வை போலவே மழையும் இயற்கையின் ஒரு பகுதி. அவளிடம் இருப்பது உள்ளார்ந்து வாழ்வை அறியும் ஒரு குழந்தையின் மனம். மழை என்பதை மகிழ்ச்சியின் குறியீடாக மேலும் விரித்து வாசித்தால் மற்றொரு தளம் திறக்கும்.

காலம் பற்றின மேற்சொன்ன பார்வை தொடர்ந்து இத்தொகுப்பில் அந்தி, அஸ்தமனம் போன்ற படிமங்கள் வரும் இடங்களில், பயணக்குறியீடு தோன்றும் கவிதைகளில் வலுப்பெறுகிறது. உதாரணமாய் “அந்தி என்பது இங்கும் ஒரு நாளின் முடிவு அல்ல, அது மற்றுமொரு துவக்கம். ஒரு சுழற்சியின் வர்ணப் புள்ளி.

“இந்த வெளிச்சம்
இப்படித்தான் கொஞ்ச கொஞ்சமாக
மங்கி அழியும் எனில்
இந்த அந்தியில் உன் அருகிலிருப்பதை
நான் ஒருபோதும் விரும்பவில்லை (அருகிலிருப்பதன் துயரம்)

நாம் மிக நேசிக்கும் மனிதர்களும் மிருகங்களும் கூட நமது அணுக்கத்தை பல சமயங்களில் விரும்புவதில்லை, நமது அருகாமை பிற மனிதர்களுக்கு சதா ஒரு தொந்தரவு தான் எனும் இக்கவிதை சுயம் மனித உறவுகளில் எப்படி குறுக்கிடுகிறது என்பதை மட்டுமல்ல வேறொன்றையும் சொல்கிறது. வாழ்வு என்பது அழிவை நோக்கி செல்வது. அதனாலேயே அது “கொஞ்ச கொஞ்சமாக மங்கி அழியும் ஒன்று. வாழ்வை தனது அழிவை நோக்கிய பயணம் என்று அறியும் மனிதன் அத்தருணத்தில் தான் யாருடனும் இல்லை என்று அறிகிறான். யாருடனும் இல்லை என்பது தான் அவனது இருப்பு. இதில் உள்ள அந்தி, நிலவொளிரும் இரவு வரும் பல கவிதைகள் மிக உருக்கமானவை மட்டுமல்ல நம்மை மிகுந்த கவித்துவ எழுச்சிக்கு உள்ளாக்குபவை. இந்த மனஎழுச்சி மேற்சொன்ன ஆன்மீக தனிமையால் ஏற்படுவது. ஒரு மனிதன் தான் தனியாக இருப்பதாக உணரும் தருணம் தான் மிக உக்கிரமானது. அதுவே மிக இயல்பானதும் கூட.

“எனினும்
போதுமானதாகத் தான் இருக்கிறது
இன்றைக்கு அனுமதிக்கப்படிருக்கும்
இந்த கடைசிக்கோப்பை தேநீரில்
எஞ்சியிருக்கும் மீதிச்சுவை (போதுமானதாகத்தான் இருக்கிறது)
என்று முடியும் மற்றொரு கவிதை ஜென்மனநிலையை கைப்பற்றும் மற்றொரு அருமையான கவிதை.

பசியைத் தவிர எதுவும் இல்லை இந்நூலில் உள்ள சிறந்த கவிதைகளில் ஒன்று. அம்மு, அப்பு எனும் அவரது பிரபலமான கவிதை பாத்திரங்களில் அப்பு தோன்றும் கவிதை இது. அப்புவுக்கு ஒரு பிரச்சனை, அவனிடம் “சரியான நேரத்தில் சொல்ல சரியான வார்த்தைகள் இருக்கின்றன, பசியைத் தவிர என்பது. பசிக்கும் போது அவனுக்கு அச்சொல் மறந்து போகிறது. வெறுமனே கண்ணீர் சிந்துகிறான். கவிதைசொல்லி அவனிடம் நீ பசியை சொல்ல கற்றுத் தான் ஆக வேண்டும் என்கிறார். ஒருவர் பசியில் இருக்கிறார் என்பதை உலகம் புரிந்து கொள்ள வேறு வழியே இல்லை. இப்படி ஆரம்பிக்கும் கவிதை பாதியில் ஒரு சின்ன திருப்பம் எடுக்கிறது:
“பசியை வேறு எந்த உணர்ச்சியாகவும்
நம்பி நாம் ஏமாந்து விடக் கூடாது
இத்தொகுப்பின் ஆதார தத்துவம் இச்சொற்றொடரில் அடங்கி உள்ளது எனலாம். பசி என்கிற இந்த உணர்வு மனிதனின் மிக இயல்பான ஒரு எளிய பண்பாக இருந்தும் அவனால் அதை எளிய சொற்களில் நேரடியாக சொல்ல முடிவதில்லை. ஏனெனில் இது வெறும் உணவுப் பசி அல்ல. உடலின், ஆன்மாவின் இச்சை. உலகை புசிப்பதற்கான ஆவேசம், அதிமனிதனை அடைவதற்கான அகதூண்டுதல், ஒரு சண்டைக்காளையின் கண்களை  ஹெமிங்வேயின் பார்வை சந்திக்கையில் தோன்றும் பரஸ்பர ஆட்கொள்ளல் விழைவு, காமத்தின், வன்மத்தின் போது மனிதன் அடையும் தூயமிருக நிலை.
இந்த பசியை
“வேறு எந்த உணர்ச்சியாகவும்
நம்பி நாம் ஏமாந்துவிடக் கூடாது என்கிறார்.

பிறகு கவிதை மெல்ல உச்சம் கொள்கிறது
“நம்மை திசைமாற்ற
ஏராளமான வழிமுறைகள் இருக்கின்றன
ஒரு மதபோதகனோ
அல்லது லட்சியவாதியோ
அதில் தன்னுடைய வண்ணத்தை பூசி விடாமல்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இங்கு கவிதை நிச்சயமாக வேறு ஒரு பாதையை எடுக்கிறது. மதமும் லட்சியவாதமும் மனிதனை பசியற்றவனாக சித்தரிக்க அல்லது அவனது பசியை மறைக்க முற்படுகின்றன. மதம், ஒழுக்கம் போன்ற இத்தகைய நிறுவனங்களை நீட்சே மூர்க்கமாக நிராகரித்ததற்கும் இதுவே காரணம். மனிதன் தன்னை அறிவதற்கு ஆதி இயற்கையின் மொழியை பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
கவிதையின் மிகச்சிறப்பான பகுதி இது:
“அப்பு நீ தனிமைப்படும் போது சொல்
பசிக்கிறது என்று
நீ தோல்வியடையும் போது சொல்
பசிக்கிறது என்று
நீ அவமதிக்கப்பட்டு வெளியேறும் போது சொல்
பசிக்கிறது என்று
ஒரு பெண் உன்னைக் கைவிடும்போது சொல்
பசிக்கிறது என்று

ஏனென்றால் பசி தணிக்க வேண்டியதல்ல, அது அனுபவிக்க வேண்டியது. தனிமையும், தோல்வியும், அவமானமும், நிராகரிப்பும் பசியின் வாயில்கள்.

மனுஷ்யபுத்திரனின் இதுவரையிலான தொகுப்புகளின் முகப்பு அட்டைகளிலேயே இத்தொகுப்பின் முகப்பை சிறப்பானது எனலாம். இக்கவிதைகளின் ஆழமான ஒரு தத்துவப் பகுதியை யிங்-யாங்கை தரிசிக்கும் பூனையின் ஓவியம் குறிக்கிறது. இரு எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரனை ஆண்டாள், நம்மாழ்வார் பாணியில் ஒரு இந்து பக்தி கவிஞனாக பச்சைகுத்தியுள்ளார்கள். ஒரு விமர்சகர் அவர் ஒரு முகலாய காதல் கவிஞன் என்றார். ஆனால் இம்முகப்பு ஓவியம் மூலம் மனுஷ்யபுத்திரன் வேறு ஒரு சேதி விடுக்கிறார். தனது ஆன்மீக மரபு வேறு ஒரு தோற்றுவாய் கொண்டது என்கிறார். இந்த மறைமுக அரசியலுக்காகவும் இம்முகப்பு படம் பேசத்தக்கது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...