Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சச்சினும் திராவிடும் – ஒரே படகில் மேதையும் நடைமுறைவாதியும்


மேதைமையின் சிலுவை:

இரு கசப்பான சுற்றுப்பயணங்களுக்குப் பிறகு இரு பெரும் கிரிக்கெட் ஆளுமைகள் தம் மீதுள்ள சுமையை இறக்கி இருக்கிறார்கள். சச்சின் தனது நூறாவது சதத்தை ஆசியக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக அடித்து. திராவிட் எதிர்பாராத படி வழக்கமான நிதானத்துடன் தனது ஓய்வை அறிவித்து. சச்சினின் நூறாவது சதம் அவரது இதுவரையிலான எண்ணற்ற சாதனைகளில் ஒன்று மட்டும் தான். நூறாவது சதம் என்பது மீடியாவால் மிகையாக உற்பத்தி செய்யப்பட்ட எதிர்பார்ப்பு மட்டுமே என சச்சினே சொல்கிறார். உலகக்கோப்பையின் போது யாரும் நூறாவது சதத்தை எதிர்பார்க்கவில்லை. அது முடிந்த பின் இந்தியாவின் ஆட்டத்தரம் கீழிறங்க மீடியாவுக்கு இருந்த ஒரே விளம்பர வாய்ப்பாக இது மட்டுமே இருந்தது. அணியின் தொடர்ந்த தோல்விகள் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்த 34 ஆட்டங்களாக நூறாவது சதம் அடிக்க தவறிய சச்சின் மீது கோபத்தை திருப்பினார்கள். உணவக வெயிட்டர், ஓட்டுநரில் இருந்து பத்திரிகையாளர்கள் வரை திரும்பத் திரும்ப இதையே நினைவுபடுத்த சச்சின் தன்னையே நொந்து கொண்டார் “நான் 99 சதங்கள் அடித்தது ஒரு சாதனை இல்லையா?. இந்த சாதனை கூட அர்த்தமற்ற வெற்று எண் மட்டுமே என ஒரு விமர்சனம் எழுகிறது.

முதலில் இந்த நூறு சதங்களும் ஒரே வடிவில் அடித்தவை அல்ல. டெஸ்ட் சதங்கள் ஒருநாள் சதங்களுக்கு இணையல்ல. அடுத்து, சச்சின் உலகக்கோப்பை தவிர்த்து கடந்த சில வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் ஆட இல்லை. இங்கிலாந்து தொடரில் கூட ஒருநாள் போட்டிகளை தவிர்த்தார். பின்னர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்டுகளில் 100வது சதம் தவறிய போது தான் ஒரு கட்டாயம் காரணமாக அவர் ஆஸி முத்தரப்பு தொடர் மற்றும் ஆசிய கோப்பையில் ஒருநாள் துவக்கவீரராக ரஹானேவுக்கு செல்ல வேண்டிய இடத்தை பறித்து ஆடினார். இதனால் மூன்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆஸ்திரேலியா எதிர்காலத்தை உத்தேசித்து ரிக்கி பாண்டிங்கை அணியில் இருந்து விலக்கும் போது நாம் ஒரு புள்ளியியல் சாதனைக்காக ஒரு இளைஞரின் வாய்ப்பை முதிய சச்சினுக்கு அளிக்கிறோம் என கண்டனம் எழுந்தது. நட்சத்திர கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இந்தியா ஒரு அணியாக வளரவே முடியாது என இயன் சேப்பல் மறைமுகமாக கண்டித்தார். பின்னர் மஞ்சிரேக்கரும் கங்குலியும் வெவ்வேறு தொனிகளில் இதை எதிரொலித்தனர். இரண்டு, சச்சினுக்கு சாதனைகள் மீதுள்ள மிகைவிருப்பம் முன்பு விமர்சிக்கப்பட்டிருந்தாலும் இவ்வளவு வெளிப்படையாக அவரது கறைபட்ட முகம் அம்பலப்படவில்லை. மேலும் அணியின் சீரமைப்புக்காக கராறான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்த்த போது தேர்வாளர்கள் சச்சினுக்காக, அவர் மனச்சுமையை எளிதில் களைவதற்காக, ஒரு முழுதொடரை சமர்ப்பிப்பார்கள் என்பது நமது கிரிக்கெட் வாரியம் அணி நலன் மீது இரண்டாம் பட்ச அக்கறை தான் கொண்டுள்ளது என்பதை இது நிறுவியது. மூன்றாவதாக, கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக சச்சினின் தேர்வு விவாதிக்கப்படுவது, குறிப்பாய் கண்டிப்பட்டது, இதுவே முதல் முறை. இதற்கு சுயநலம் கடந்து சச்சினின் தொய்வான ஆட்டவேகமும், மெத்தன களத்தடுப்பும் காரணங்கள். ஆனால் இந்த வயதிலும் சச்சினால் இருநூறு ஸ்டிரைக் ரேட்டுடன் ஆட முடியும் என்பது உண்மையே. திறன்கள் மங்கவில்லை என்றாலும் அதிரடியாக ஆட வேண்டிய மனநிலையில் அவரில்லை.

இப்படி சச்சினின் நூறாவது சதம் எனும் பிரம்மாண்ட சாதனை ஒரு மிகத்தவறான காலகட்டத்தில் நடந்தது. இந்த சதத்துக்காக இரு வடிவங்களிலும் அவர் காத்திருக்க நேர்ந்த நாற்பதுக்கு மேற்பட்ட ஆட்டங்கள் தனது வாழ்வின் மிக கடினமான கட்டம் என சச்சினே தெரிவித்தார். உலகக்கோப்பை தொடர்கள், தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு, தந்தையின் மரணம், தோள்பட்டை, முதுகுக் காயங்கள், சேப்பல் மஞ்சிரேக்கரின் கடும் விமர்சனங்கள், ஆத்ம நண்பன் காம்பிளியின் குற்றச்சாட்டுகள் என தனது வாழ்வின் ஆக சோதனையான வேளைகளில் கூட அவர் அதிகம் நிதானம் தவறவில்லை. ஆடுகளத்தில் அதிருப்தி காட்டியதில்லை. பேட்டிகளில் புகார் சொன்னதில்லை. சச்சின் ஒரு அதிதிறமையாளர் என்பது போக அவர் இந்தியாவின் ஆகப்பெரும் மத்தியவர்க்க வழிபாட்டு பிம்பம் ஆனதற்கு அவரது மேற்சொன்ன பொறுப்பான நிதானமான நடத்தையும் ஒரு காரணம். சச்சின் நமக்கு என்றுமே குழந்தைமையும் களங்கமின்மையும் பொறுப்பும் மிகுந்த மனிதராகவே மனதில் பதிந்திருந்தார். ஆனால் சதத்துக்காக காத்திருந்த இந்த சில மாதங்களில் நாம் பார்த்த சச்சின் முற்றிலும் வேறொருவர்.

இங்கிலாந்தில் அவர் ஆர்வமிழந்து பதற்றமாக காணப்பட்டார். வீச்சாளர்களை முன்காலில் எதிர்கொள்ள தயங்கி அதனாலே தொடர்ந்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவில் அவர் அரைசதத்துக்கு முன் வேட்டையாளியாகவும் அரைசதம் கடந்து சதத்தின் நினைவு வந்ததும் வேட்டையில் துரத்தப்படும் பிராணியாகவும் மாறினார். உண்மையில் சச்சினின் முன் சுண்டப்படும் துப்பாக்கி அவரது பிரக்ஞை மனம் மட்டும் தான். ஒரு பாதிரியாரின் அங்கிக்குள் நுழைந்து தேவாலயத்தில் மாட்டிக் கொண்ட கர்த்தரைப் போன்று தோன்றினார் சச்சின். அவர் இதுவரை எடுத்த லட்சக்கணக்கான ஓட்டங்கள் ஒரு சிலுவையாக அவரை அழுத்தியது. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. இதை விட அதிமுக்கியமான சாதனைகளை நிகழ்த்திய போது சச்சின் இயல்பாகத் தானே ஆடினார். பைடு பைப்பரின் பின் எலிகள் போல் சாதனைகள் சச்சினை பின் தொடர்வதாகவே தெரிந்தது. அவர் சாதாரணமாக ஒரு ஓட்டம் எடுத்து விட்டு பிரம்மாண்டத் திரையை, தொடர்ந்து ஆர்ப்பரிக்கும் பார்வையாளக் கூட்டத்தை நோக்கினால் ஒரு புதுசாதனையை எட்டியுள்ளது அவருக்கு புரிய வந்தது. இதுவரை இப்படித் தான் இருந்தது ஆனால் அவர் தனது கடந்த நாற்பது சொச்சம் ஆட்டங்களில் மீடியா அழுத்தத்தில் கண்கூடாகவே உருக்குலைந்தார். வாழ்வில் முதல்முறையாக நடுவர் தரும் தீர்ப்புக்கு எதிராக வலுவாக பலமுறைகள் அதிருப்தி தெரிவித்தார். ஆஸ்திரேலியா முத்தரப்பு போட்டி ஒன்றில் சச்சினை ஒரு பந்தில் முறியடித்த பிரட் லீ அவரை நோக்கி கேலி சிரிப்பு சிரித்தார். பொதுவாக பந்துவீச்சாளர்கள் சச்சினை சீண்ட மாட்டார்கள். அவர் மேலும் சிறப்பாக ஆட அது தூண்டும் என்பதே காரணம். சச்சின் தான் பந்துவீச்சாளரை தூண்டுவார். உதாரணமாக 2004 உலகக்கோப்பை ஆட்டம் ஒன்றில் ஆப் குச்சிக்கு வெளியே வீசும் மெல்ராத்தை நோக்கி “தைரியமிருந்தால் நேராக வீசிப் பாரேன் என சீண்டினார். பந்துவீச்சாளர்கள் அவதூறு பேசினால் சச்சின் பொதுவாக பார்வையை திருப்பிக் கொண்டு ஒரு குட்டிநடை போய் விட்டு களத்துக்கு திரும்புவார். ஆனால் மேற்சொன்ன சம்பவத்தின் போது சச்சின் விசித்திரமாக தன்னை சீண்டும் பிரட்லீயின் கண்களைப் பார்த்தார். ஒரு வறட்டுபுன்னகை செய்தார். சச்சினின் சமீபத்திய மனநிலையை வெளிக்காட்டும் மிக முக்கிய நிகழ்வு இது. தோல்விபயமும் சுய-அதிருப்தியும் கொண்டவர்கள் தாம் எதிரியை திரும்பிப் பார்ப்பார்கள். இந்த இரு பண்புகளும் நாம் சச்சினிடம் சற்றும் எதிர்பாராதவை.

100வது சதம் நிறைவு செய்தவுடன் பேட்டியில் தன்னை விமர்சித்தவர்களை இப்படி அங்கதம் செய்தார் “என்னை விமர்சிப்பவர்கள் இதுபோன்ற ஒரு சந்தர்பத்தை வாழ்நாளிலே அனுபவித்திராதவர்கள். அதாவது தனது சாதனைகளில் கால்வாசி கூட செய்திராதவர்களுக்கு தன்னை விமர்சிக்க தகுதியில்லை என்கிறார். இது பாமரத்தனமான பதில். விமர்சிப்பதை ஒருவர் நிகழ்த்திக் காட்டவோ அதை அனுபவித்திருக்கவோ அவசியம் இல்லை. விமர்சகன் சில விழுமியங்களின் பிரதிநிதி. அவனை ஒருக்காலும் நிராகரிக்க முடியாது. சச்சின் ஏன் இவ்வளவு எரிச்சல் மிக்கவரானார்? 99 சதங்கள் ஏற்படுத்தாத நெருக்கடியை 100வது ஏன் தந்தது?

இதற்கு ஒரு பதில் சச்சினுக்கு முன்பு தன்னை முன்னெடுக்கும் வேறு பல லட்சியங்கள் கனவுகள் இருந்திருக்கலாம். அவை அவரது கவனத்தை சாதனை புள்ளிவிவரங்களில் இருந்து தற்காலிகமாக திருப்ப உதவியிருக்கலாம் என்பது. ஆனால் இப்போது சச்சின் ஒரு ஓய்ந்து விட்ட பந்தைப் போல் இருக்கிறார். தன்னை செலுத்தும் கனவுகளின் ஆற்றல் இல்லாமல் அவர் ஒரு அர்த்தத்தில் பலவீனமாகி விட்டார். மீடியாவும் ரசிகர்களும் உதைத்த இடங்களுக்கெல்லாம் ஓடுகிறார். அதற்காக தன்னையே அலுத்துக் கொள்கிறார். தான் இருப்பது கானகத்தில் அல்ல, கூண்டுக்குள் என சட்டென அறிய நேர்ந்த புலியைப் போல் குழப்பமடைகிறார். இந்த புள்ளிவிவரங்களின் கூண்டில் இருந்து தப்பித்து போக அவருக்குள் மீண்டும் வனமிருகத்தின் கற்பனையும் வேட்டை இச்சையும் குடிகொள்ள வேண்டும். வெறுமனே கிரிக்கெட் ஆடும் ஆர்வம் மட்டும் போதாது.

இந்த மாபெரும் நாயகனிடம் இருக்கும் மற்றொரு சச்சின், பலவீனமான எளிதில் நொறுங்கிடும் சச்சின், மெல்ல மெல்ல வெளிவருகிறார். வெற்றிகளும் புகழும் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியை மட்டும் அல்ல, தனது பலவீனங்களை மூடி மறைக்கும் அபாரமான ஆற்றலையும் அளிக்கின்றன. சுயகட்டுப்பாடு, தன்னம்பிக்கை போன்ற சொற்கள் எல்லாம் இயலாமையை மறைக்கும் இந்த ஆற்றலைத் தான் சுட்டுகின்றன. நாம் இந்த சச்சினை பார்க்க விரும்பவில்லை என்பதாலே அவரை நோக்கி குரசாவோவின் “மாடடேயோ படத்தின் வயதான ஆசிரியரான நாயகனை நோக்கி அவரது நலம் விரும்பிகள் மீண்டும் மீண்டும் கேட்பது போல் “இன்னும் எத்தனை நாள் முதியவரே என ஒருமித்து கேட்கிறோம். “எனக்கு விருப்பமுள்ளவரை என்கிறார் சச்சின். அந்த படத்தில் வயதான ஆசிரியர் புன்னகையோடு “இன்னும் எனக்கு வேளை வரவில்லையே என்பார். நாம் இந்தியர்களுக்கு அதுவே இணக்கமான பதிலாக இருக்கும்.

நடைமுறைவாதத்தின் நாயகன்:


நவீன மட்டையாளர்களில் ஒரு வகையினர் “பாக்கியவான்கள். அவர்கள் எவ்வளவு சாதித்தாலும் அது அதிகமாகவோ குறைவாகவோ தெரியாது. அவர்கள் எத்தனை ஆட்டங்களை வென்று தந்தாலும் அது அவர்களால் மட்டும் தான் நேர்ந்ததா என்ற சந்தேகம் துருத்தி நிற்கும். அவர்கள் தொண்ணூற்று ஒன்பதில் வெளியேறினாலும் சரி நூறை அடைந்தாலும் சரி அது அதிர்ஷடமாக உழைப்பின் கூலியாக கருதப்படும். அவர்களால் சர்ச்சைகளை ஏற்படுத்தவே முடியாது. அப்படி ஏற்படுத்தினாலும் அதன் பெருமையை மேலும் ஆர்ப்பாட்டமான ஒரு நபர் தட்டிப் போய் விடுவார். அவர்களை வீரத்துக்காகவும் மனதிடத்துக்காகவும் கடப்பாட்டுக்காகவும் மெச்சுவோம்; ஒரு போதும் திறமைக்காக அல்ல. ஸ்டீ வாஹ் என்றதும் உங்களை நினைவுக்கு வருகிற காட்சி என்ன? ஒரு அழகான கவர் டிரைவோ கம்பீரமான புல் ஷாட்டோ அல்ல, அவர் உலகக்கோப்பையை உயரத்தூக்கிய நிமிடங்கள் கூட அல்ல. நாம் நினைத்துப் பார்ப்பது மே.இ தீவுகளில் ஆம்புரோஸின் அதிவேக உயரப்பந்துகளை நெஞ்சிலும் தோளிலுமாக தொடர்ந்து வாங்கி காயங்களை கடுமையான வலியை பொறுத்து தொடர் அவமானங்களை கடந்து தன் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றிய காட்சி. கிரிக்கெட்டில் இப்படியான வகைமாதிரிக்குள் மாட்டிக் கொண்ட மேலும் பலர் உண்டு மட்டையாளர்களில் ஸ்டுராஸ், காலிஸ், காலிங் வுட், ஆண்டி பிளவர், சந்தர்பால்; பந்துவீச்சாளர்களில் வெட்டோரி, சமிந்தா வாஸ், கும்பிளே, பிரேசர், பிளமிங், ஆண்டி பிக்கல் என பலர். தற்போது ஓய்வு பெற்றுள்ள ராகுல் திராவிட் இந்த வரிசையில் மிக சமீபமாக சேர்ந்தவர். அவரைப் பற்றி, அவரது மனைவி உட்பட, பலரது கூறுவது அவர் தனக்கு அளிக்கப்பட்ட திறமைக்கு முழுமையாக நியாயம் செய்த கடும் உழைப்பாளி என்பது. இந்த விவரணை ஒருவிதத்தில் ராகுலுக்கு பெரும் அநியாயம் செய்கிறது.

திறமை என்பது அட்டகாசமாக தனது மன எழுச்சியை வெளிப்படுத்துவது மட்டும் அல்ல. திறமை ஒரு மனிதனின் ஆளுமையின் ஒரு பரிமாணம். அது பல்வேறு திறன்களின் கூட்டிணைவு. நாம் எதிர்பாராத சின்ன சின்ன திறன்கள், பண்புகள் ஒன்றிணைந்து ஒருவரது திறமையை தீர்மானிக்கிறது. தேவை மற்றும் சந்தர்ப்பம் பொறுத்து சிலர் திடீரென பெரும் உச்சத்தை அடைவதற்கு அவர்களது சில குறிப்பிட்ட திறன்கள் அச்சூழலுக்கு ஏற்றதாக அமைவதே காரணம். திறமையை ஒரு குறுகின விளக்கத்துக்குள் அடைப்பவர்கள் இந்த திறமை வெளிப்பாட்டை வெறும் அதிர்ஷ்டம் என்று நிராகரிப்பார்கள். அதனாலே பல சமயங்களில் நமது விருப்பம் பொறுத்து சிலரை பிரபலமாக மாற்றி கொண்டாடி பிறகு தேவை முடிந்ததும் கடலில் கரைக்கிறோம். திறமையாளர்கள் பற்றின நமது அனுமானங்கள் குழப்பமானவையாக இருப்பதற்கு இது ஒரு காரணம். உதாரணமாக தொண்ணூறுகளின் போது சச்சின் டெஸ்டை விட ஒருநாள் ஆட்ட வடிவில் தான் சிறந்த மட்டையாளராக இருந்தார். டெஸ்டில் அவசரப்பட்டு விக்கெட்டை உதறும் முதிர்ச்சியற்றவராக அவர் தோன்றினார். திராவிட் அப்போது ஒரு முழுமையான டெஸ்ட் மட்டையாளராக விளங்கினார். சச்சினை விட மேலானவராக திகழ்ந்தார். ஆனால் அது ஒருநாள் ஆட்டத்தின் காலகட்டம் என்பதால் சச்சினின் ஒருநாள் புகழ் ஒளி அவரது இந்த முக்கிய குறையை மறைத்தது.

அடுத்ததாய் சச்சினால் நெருக்கடியின் போது ஆட முடியாது என்று ஒரு குற்றச்சாட்டு இரண்டாயிரத்தின் பாதி வரை வலுவாக வைக்கப்பட்டது. இந்த பத்து வருடங்களில் மேற்சொன்ன இரு பண்புகளும் உபரியாக பெற்ற ஒருவராக ராகுல் திராவிட் திகழ்ந்தார். அதனாலே வெளிநாட்டு பயணங்களின் போது இந்தியா அவரை பெருமளவில் சார்ந்திருந்தது. இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா சென்றால் சச்சினை விட திராவிட் தான் நமக்கு அதிமுக்கியமானவராக திகழ்ந்தார். திராவிடை விட நேர்த்தியான தொழில்நுட்பமும் பந்தை சந்திக்கும் திறமையை கொண்டவராக இருந்தும் சச்சினால் அநேகமான வெளிநாட்டு தொடர்களில் நிலைத்து ஓட்டங்கள் குவிக்க முடிந்ததில்லை. 32 வயதான பின்னர் சென்னையில் தான் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நெருக்கடியான டெஸ்ட் ஆட்டத்தின் போதான தனது முதல் சதத்தை அடித்தார். ஆனால் ஒருநாள் ஆட்டத்தை பொறுத்தவரையில் நெருக்கடி நிலைமையில் சச்சின் நிலைத்து இன்றுவரை ஒருமுறை கூட ஆடியதே இல்லை. அழுத்தம் மிக்க வேளைகளில் மெல்ல நடுங்கும் ஒரு நீர்க்குமிழியை ஒத்தது சச்சினின் மனம். சச்சினால் தனது மனக்கொந்தளிப்பை நிலைப்படுத்த முடிந்ததில்லை. வாழ்நாள் முழுக்க அவர் தன்னுடன் மோதியபடியே இருக்கிறார். தன்னை அமைதிப்படுத்துவதே அவரது ஆகபெரும் போராட்டம். இந்த அகப்போராட்டத்தின் முற்றுப்புள்ளி மட்டுமே சச்சின் ஒரு சதம் அடிப்பது.

ஆனால் திராவிட்டுக்கு மனதை அமைதிப்படுத்துவது, எந்த கடுமையான சூழலிலும் நிச்சலமான சிந்தனையுடன் இலக்கை நோக்கி தன்னை செலுத்துவது மிக ஆரம்பத்தில் இருந்தே எளிதாக கைவந்த ஆற்றல். சச்சின் தன் கத்தியை எக்கணமும் தன் வயிற்றை நோக்கி செலுத்தக்கூடிய சாமுராய் வீரர், ஆனால் திராவிட் கத்தியை ஏந்துவது கை அல்ல மனம் என்றறிந்த ஒரு ஜென் துறவி. திராவிட்டின் ஜென் மனம் சச்சினுக்கு வாய்த்திருந்தால் அவர் மேலும் 20 சதங்கள் அடித்திருக்கலாம். இப்படி ஏன் நாம் யோசிக்கக் கூடாது? கவசகுண்டலங்களுடன் இரு சாபங்களும் பெற்று வந்தவர் சச்சின். ஒன்று, தேவையான நேரத்தில் அடிக்க வேண்டிய ஷாட்கள் செயல்படாது. இரண்டு அவசியமுள்ள போது கூட இருப்பவர்கள் கைவிடுவார்கள், கூடவே அப்போது மொத்த நிலைமையும் அவருக்கு விரோதமாக மாறும்.

எளிதாக சொல்வதானால் திராவிடுடன் ஒப்பிடுகையில் சச்சின் சற்று குறைபட்ட திறமை தான். இப்படியே நாம் ஒப்பிட்டபடி சென்றால் எல்லா ஆளுமையிலும் ஓட்டை தெரியும்.
ஆக திராவிடை நாம் அவரிடம் இருந்து மாறுபட்டவர்களுடன் ஒப்படுவதை விட அவர் அளவிலே புரிந்து கொள்ள முயல வேண்டும். சரியான பந்துகளை வெளியே அனுப்பி, மேலும் சரியான பந்துகளை கச்சிதமாக தடுத்து, ஆகச்சரியான பந்தை அடிக்க தேர்ந்திடும் திறன், ஒவ்வொரு பந்திலும் உறைய உதவும் வைக்கும் மனக்க்குவிப்பு, அபாரமான நிதானம், கடைசி வரை தோல்வியை ஒப்புக்கொள்ளாத விடாப்பிடித்தனம், கிரிக்கெட் எனும் ஒரு கலையை நடைமுறைவாத மனநிலையுடன் அணுகி அதையே தன்னை மறந்து ரசிக்கவும் முடிதல் ஆகிய “திராவிடிய திறன்கள் வேறு எந்த ஆசிய மட்டையாளரிடமும் கடந்த இருபது வருடங்களில் நாம் காணவில்லை. இவை எளிதில் சாதாரணர்களிடம் காணக் கிடைப்பதல்ல என்றால் திராவிட் அவருக்கான அர்த்தத்தில் அசாதாரணமானவர் தானே. ஒருவேளை இன்னும் ஐந்து வருடங்களில் இந்தியர்கள் அவரது வெற்றிடத்தை உற்று நோக்கி இந்த உண்மையை மேலும் அழுத்தமாக உணரவும் இசையவும் கூடும்.

திராவிட் ஆடிய போதைப் போன்றே அவர் விடைபெறும் போதும் நாம் கண்கலங்கப் போவதில்லை. பெருமூச்சு விடவோ நிலைமறந்து துள்ளி எழவோ போவதில்லை. இலக்கியத்தில் இயல்புவாத எழுத்தாளர்களான நீலபத்மநாபன், ஆ.மாதவன் போன்றவர் அவர். எளிய அன்றாட விசயங்களின் மீதான ஆபாரமான அக்கறை மற்றும் கவனம் கொண்டு பெரும் படைப்புகளை உருவாக்க முடியும் என்று காட்டியவர்கள் அவர்கள். திராவிட் அளவுக்கு கிரிக்கெட்டை எளிமைப்படுத்தியவர்கள், அதை கலை என்ற இடத்தில் இருந்து நகர்த்தி ஒரு அறிவியலாக மாற்றிய வேறு ஒருவர் நம் கிரிக்கெட் பண்பாட்டில் இல்லை எனலாம். ஒருநாள் மற்றும் T20 ஆட்டங்களின் காலகட்டத்தில் ஒருவர் எந்த பதற்றமும் இல்லாமல் இதை செய்து கொண்டிருந்தார் என்பது கவாஸ்கரை விட அவரை மேலும் தனித்து காட்டுகிறது. சொல்லப்போனால் திராவிட் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் மனப்பான்மை கொண்டவர். அங்கு தோன்றியிருந்தால் ஹட்சன், கிர்ஸ்டன், காலிஸ் வரிசையில் அவர் முதலிடத்தில் இருந்திருப்பார். ஒருவேளை ஜீனியஸ் என்று கொண்டாடப்பட்டிருப்பார். இங்கு அவர் சச்சினின் நிழலில் ஒளிமங்கினார் என்பதை விட தனிமனித வழிபாட்டின் மிகையில் நட்சத்திர நெரிசலில் காணாமல் போனார் என்பதே சரி.

திராவிடுக்கு ஒரு வழித்தோன்றல் உண்டென்றால் அது தோனி மட்டுமே. தோனியும் தென்னாப்பிரிக்கத் தனமான சற்று வறட்டுத்தனமான மட்டையாளர் தான். திராவிடின் அதே அணுகுமுறை கொண்ட ஆனால் சம்பிரதாயமற்ற தொழில்நுட்பம் கொண்டவர் தோனி. திராவிடை போன்றே இந்தியாவின் மிக நிலையான ஒருநாள் மட்டையாளராக ஒரு உயர்ந்த 51.16 ஒருநாள் சராசரி கொண்டவர். “நான் ஆடும் ஒவ்வொரு டெஸ்டிலும் 30 ஓவர்களேனும் குறைந்தது ஆட விரும்புவேன். அதை சாதிக்காவிட்டாலும் மிகவும் ஏமாற்றமடைவேன் என்று கூறுகிறார் திராவிட். தோனியும் இதே இலக்கை கொண்டவர் தான். என்ன ஒருநாள் ஆட்டங்களில். தற்போதைக்கு ஒருநாள் வடிவில் இத்தகைய அணுகுமுறை கொண்ட மற்றொரு வீரர் உலக கிரிக்கெட்டில் தோனியைத் தவிர இல்லை எனலாம். கடைசி பத்து ஓவர்களில் நூறு ஓட்டங்கள் தேவைப்படும் நிலையிலும் சில பந்துகளை தடுத்தாட சிலவற்றை ஒற்றை இரட்டை ஓட்டங்களுக்கு விரட்டி ஓட தோனி தயங்குவதில்லை. 4, 6 அடிப்பதற்கு பின்னரும் திராவிடை போன்று மிகுந்த திட்டமிடல்கள் தேர்வுகளும் கொண்டவர் தோனி. சச்சினின் ஆக்ரோஷமும், அவரிடம் இல்லாத திராவிடிய மனப்பண்புகளும் இணைந்தவர் தோனி. ஒருவேளை திராவிடின் வெற்றிடத்தை மற்றொரு இடத்தில் வடிவில் நிறைவேற்றுபவர் அவராக இருக்கலாம்.

பொதுவான இந்தியர்களைப் போன்று கிரிக்கெட் தனக்கு அருளப்பட்ட ஒரு சித்தியாக நினைத்தவர் அல்ல திராவிட். ஒரு பேட்டியில் சதகோபன் ரமேஷிடம் வழக்கம் போல் “நீங்கள் ஏன் எதிர்பார்த்தது போல் இந்தியாவுக்காக தொடர்ந்து ஆட இல்லை. உங்களை தடுத்தது எது?என்று கேட்கப்பட்டது. அதற்கு ரமேஷ் “எனக்கு திராவிடின் மன ஒழுக்கம் இல்லையோ என்னவோ என்றார். கலைஞர்கள் வெளிப்படையாக ஒத்துக் கொள்ளாவிடினும் நீடித்த பெரும் சாதனை வாழ்வுகளுக்கு பின் இருப்பது வறட்டுத்தனமான எளிய நடைமுறை வாதம் தான். நமது தலைமுறையின் மிக ஸ்டைலான மட்டையாளர்களில் ஆக சலிப்பானவர் திராவிட் தான். ஆனால் அவர் அப்படியும் கிரிக்கெட் ஆடி 16 வருடங்களுக்கு மேல் நிலைத்து 12,000 ஓட்டங்களுக்கு மேல் சேகரித்து மாபெரும் சாதனைகளில் ஒருவரின் கூடப்பிறந்த மேதைமை தூண்டுதலின் பங்கு 1% தான் என நிரூபித்தார். 


இந்தியாவின் உச்சபட்ச மேதையான சச்சின் டெண்டுல்கர் தனது 32 வயதுக்கு மேல் இந்த அணுகுமுறையை தான் வரித்தார். அப்போது பலரும் சச்சின் காயம் மற்றும் வயது காரணமாய் மெத்தனமாகி விட்டதாய் குற்றம் சாட்டினர். அவர் ஓய்வு பெற வேண்டும் என்று மஞ்சுரேக்கரின் சேப்பலும் வலியுறுத்தினார். ஆனால் ஒரு திராவிடிய ஆட்டமுறைக்குள் நுழைந்த பின்னரே சச்சின் தனது மிகச்சிறந்த டெஸ்ட் ஆட்டங்களை ஆடினார். கடந்த ஐந்து வருடங்கள் தான் சச்சினின் ஆட்டவரலாற்றின் மிக உன்னதமான காலங்கள் என பல நிபுணர்களும் கருத்துக் கூறினர். திராவிடை விட மிகுந்த கலை சுதந்திரம் கொண்டவர் சச்சின். ஆனால் 96இல் திராவிட் இருந்த இடத்தை வந்தடையவே சச்சின் 2006 வரை முயன்றார். தனது தொழில்நுட்பத்தை, பந்தை சந்திக்கும் பாங்கை, காலாட்டத்தை தொடர்ந்து மாற்றி மெருகேற்றியபடியே இருந்தார். திராவிட் சச்சினின் கால்வாசி திறமை கொண்டவர் என்றால் ஏன் அவர் திராவிடை நோக்கி பூமியின் திசையில் சீறி வரும் ஒரு எரிகல்லை போல் நகர்ந்து கொண்டே இருந்து கொண்டிருக்க வேண்டும்? சச்சின் லாராவை விட இரட்டிப்பு சாதனை செய்ததற்கு இந்தியாவில் அவருக்கு தூண்டுதலாக ஒரு நடைமுறை வழிகாட்டியாக திராவிட் இருந்தது காரணம். இளமையில் சச்சின் தன்னை நோக்கி வரும் பந்தை தான் விரும்பும் திசைகளில் எல்லாம் அடிக்க முயன்றார். அவரது வெற்றிக்கும் தோல்விக்கும் அப்போது இந்த சாகச மனோபாவம் காரணமாக இருந்தது. பின்னர் அவர் கிரிக்கெட் என்பது பந்தை விருப்பப்படி விரட்டும் வேலை அல்ல, அங்கு ஓட்டங்கள் இறுதியில் ஒருவரது இடத்தை நிலைப்பை வெற்றியை தீர்மானிக்கின்றன என்பதை புரிந்து கொண்டார். நான்கே ஷாட்டுகளை கொண்டு எளிதில் ஐம்பது ரன்கள் எடுக்க முடியும் என்றால் அதையே அபாயகரமான பத்து ஷாட்கள் ஆடி அடைய வேண்டும் என்பது தேவையில்லை என்ற தெளிவை அடைந்தார். இதனால் அவரது ஆட்டகவர்ச்சி சற்று குறைந்தாலும் சச்சினின் ஆட்டம் முழுமை பெற்றது. இந்த முழுமையை அடையாததனாலேயே நம் நினைவுகளில் சச்சினை விட மகத்துவமான திறமையாளனாக இருக்கும் லாரா குறுகின காலத்தில் ஓய்வு பெற்று தன் விருப்பப்படி வாழ்ந்து பின்னர் மீண்டும் கிரிக்கெட் மோகம் பெற்று தாமதமாக மீள்வருககை நிகழ்த்த முயன்று தோல்வியுற்றார். உலகமே தன்னை மறந்து விட்டிருந்ததை அறிந்தார். இறுதியாக ஐ.பி.எல்லில் கலந்து கொள்ள இந்தியா வந்து பின் நிராகரிக்கப்பட்டு உச்சபட்ச கசப்புடன் ஊர் திரும்பினார். அதே காரணத்தாலேயே சச்சினுடன் அதே பிரகாசத்துடன் அரங்கில் தோன்றி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய காம்பிளி ஒரு சிறுபுள்ளியாய் கரைந்து போனார். கிரிக்கெட் எனும் ஆட்டம் ஒரு நாளின் முடிவில் வியர்வைத்துளிகளும் புள்ளியல் எண்களுமாகத் தான் எஞ்சும்.

நம் நினைவுகளில் மிஞ்சும் அற்புதமான ஷாட்டுகளும் ஆவேசமான சாகசங்களும் மெல்ல மெல்ல ஒரு கட்டத்தில் மங்கிப் போகும். வெறும் திறமையாளர்கள் ஒரு தலைமுறை பார்வையாளர்கள் மறையும் போது வெறும் பெயராக மட்டும் எஞ்சுவர். அடுத்து வரும் தலைமுறையினர் எண்களின் நாயகர்களை கண்டு தான் வியப்பர். வரலாறு அவர்களுக்கு தான் பிரதான இடம் அளிக்கும். அதனாலே லாரா இன்றும் தனது 400 ஸ்கோருக்காக நினைக்கப்படுகிறார். அந்த ஸ்கோரையும் எதிர்காலத்தில் ஒருவர் எட்டி விட்டார் என்றால் லாரா பின் சச்சினுடன் ஒப்பிடப்பட்ட ஒருவராக மட்டும் வரலாற்றில் மாறுவார்.

சச்சின் பத்து வருடங்களுக்கு மேலாக திராவிட் ஆக முயன்றது இந்த புரிதலினால் தான். அது ஒருவிதத்தில் திராவிடின் வறட்டு நடைமுறைவாதத்தின் வெற்றி தான்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...