கடந்த பத்து
வருடங்களில் தமிழ் சினிமா பாடல்களில் உள்ள குறிப்பிடத்தக்க விசயம் அதில்
குறிப்பிடத்தக்கதாய் எதுவுமோ இல்லை என்பது. வைரமுத்து, மு.மேத்தா, நா.காமராசன் ஆகியோருக்கு
பிறகு ஆளுமை கொண்ட பாடலாசிரியர்கள் இங்கு உருவாகவில்லை. தமிழ் தேசிய-கம்யூனிச
கொள்கைப் பிடிப்பு, சங்க இலக்கிய ஈர்ப்பு மற்றும் கலீல் கிப்ரான், இக்பால் போன்ற
கற்பனாவாத கவிஞர் மரபுடனான தொடர்ச்சி வானம்பாடிகளுக்கு ஒரு முக்கிய அனுகூலமாக
இருந்தது. அவர்களுக்கு ஒவ்வொரு பாடலிலும் தமது பின்புலம் சார்ந்து சொல்ல ஏதாவது
இருந்தது. ஒரு காதல் பாடல் எழுதினால் காதல் குறித்த நம்பிக்கைகள், கொள்கைகள்
மற்றும் லட்சியங்களை முழங்கினார்கள். இயற்கை, சமூகம் அனைத்திற்கும் இதுவே. கொண்டாட,
வழிபட, புரட்சி செய்ய சதா தலைப்பட்ட இவர்கள் 90கள் வரை தமிழ் திரையிசைக்கு ஒரு
திசையை அளித்தார்கள், வண்ணத்தையும் தனி வாசனையையும் கொடுத்தார்கள்.
அடுத்து வந்தவர்கள்
இவர்களின் திசையில் கொஞ்ச தூரம் சென்றார்கள். பின்னர் வெகுஜன கவிதைகளில் ஒரு
வீழ்ச்சி வந்தது. வானம்பாடிகளுக்கு பிறகு அங்கு ஒரு இயக்கமே நிகழவில்லை. தலித்
மற்றும் நாட்டார் மரபு சார்ந்து அது உருவாக வேண்டிய வாய்ப்பும் களமும் வெகுஜன
பத்திரிகைகளில் அமையவில்லை. அதனால் ஏற்பட்ட வெற்றிடம் சினிமா பாடல் உலகிலும்
பரவியது. தொண்ணூறுகளின் இறுதியில் தோன்றிய பாடலாசிரியர்களில் சிலர் அப்போது
வளர்ந்து விட்ட நவீன கவிதை பரிச்சயம் கொண்டவர்கள், ஆனால் சற்றே வானம்பாடி
கடப்பாடும் கொண்டவர்கள். தாமரை மட்டுமே இவர்களில் மிக தனித்துவமானவராக உயர்ந்து
வந்தார். சுவாரஸ்யமாக இந்த பாடலாசிரியர்களுக்கு இவர்களுக்கு பின்னால் ஒரு
அறிவுப்புலமோ லட்சிய செறிவோ இல்லை. தாமரை இவர்களில் தப்பி வந்தவர்.
இந்த வறண்ட
காலகட்டத்தின் பிரதிநிதி நா.முத்துக்குமார். இவரது “பறவையே எங்கு இருக்கிறாய்?” பாடலை “எங்கே எனது கவிதை?” அல்லது “என்மேல் விழுந்த மழைத்துளியே“ போன்ற வானம்பாடி
கிளாசிக்குகளுடன் ஒப்பிடும் போது ஒன்று தெரிகிறது. நா.முத்துக்குமாருக்கு காதல்
உட்பட்டு எதன் மீதும் ஒரு வலுவான நம்பிக்கை பிடிப்பு இல்லை, அவரால் ஒரு பூ, பறவை
அல்லது பெண் பற்றி மெல்லிய சிலாகிப்புடன் பேச முடியும் அவ்வளவு தான். அவரிடம்
கிளையில் இருந்து பிரிந்த இலைகள் பற்றின ஒரு படிமம் மீண்டும் மீண்டும் வரும். இந்த
நவீனத்துவ ஏக்கத்தை கூட அவரால் ஒரு உச்சத்துக்கு போக முடியாது. இவருக்கு பின்
வந்தவர்கள் எழுதிய பாடல்களில் அநேகமாய் எதுவும் நம் மனதில் தங்கவில்லை.
பெரும்பாலான பாடல்கள் மெட்டுக்காகவும் தாளத்துக்காகவும் தான் கொண்டாடப்பட்டன. நாட்டார்
மரபில் இருந்து தோன்றிய சில பாடல்கள் மட்டும் விதிவிலக்கு. திரையிசைப்பாடல்களின்
இந்த வறட்டுத்தன்மைக்கு காரணம் லட்சியப் பிடிப்பின்மையும் எந்த ஒரு இலக்கியப்
பள்ளியை சாராமல் இருப்பது தான். பலசமயங்களில் வரிகள் அனர்த்தமாக இருக்கின்றன.
இந்த பாடல் வரியை
பாருங்கள்:
“பிகரு ஷுகரு மாதிரி
பசங்க உடம்ப உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசி
தான் உடைஞ்ச மனச தேத்திடும்”
நீரிழிவுக்கு எங்கு
தடுப்பூசி கண்டுபிடித்திருக்கிறார்கள்? அப்படி தடுப்பூசி இருந்தாலும் அதன் நோக்கம்
உடலை தேற்றுவது அல்ல. இப்படி குறைந்தபட்ச தர்க்கம் கூட இல்லாமல் நீங்கள் கற்பனையே
பண்ண முடியாதபடி “கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்” என்று எழுதுவது (கடல் மௌனிக்கலாம், முணுமுணுக்கலாம்,
ஆர்ப்பரிக்கலாம், ஆனால் எப்படி அழும்?) ஒருவித அஜீரணத்தை கேட்பவருக்கு
ஏற்படுத்துகிறது.
“உன் பெயரே தெரியாது” பாடலில் காதலன் பெயர் என்னவாக இருக்கும் என பட்டியல்
வருகிறது: ”ஓ சில்லென்ற பேரும் அதுதான்,
நதி என்று நீயும்
நினைத்தால் அது இல்லையே”
எந்த ஊரில்
ஆண்களுக்கு நதி என்று பெயர் இருக்கிறது?
“முன் அந்தி சாரல் நீ” எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு கற்பனையற்ற கவிஞர்
நா.முத்துக்குமார் என்பதற்கு அப்பாடல் போதும். அது மட்டுமல்ல, அவரிடம் ஒரு
பிரச்சனை முன்பு பல முறை புழங்கி உள்ள உவமை மற்றும் உருவகங்களை பயன்படுத்துகிறார்
என்பது மட்டுமல்ல ஒரு விகாரமான வகையில் அவற்றை திரும்ப எழுதக்கூடியவர் என்பதும்
தான். உதாரணம் “தினம் தினம் அந்தரத்தின் மேலே என்னைத் தங்க வைத்தாய் காதல்
சொல்லாமல்”. பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கூர்மையான
ஈட்டி மீது பிருஷ்டத்தை அமர வைத்து கொல்லும் ஒரு வதை முறை இருந்தது. இவ்வரி
கேட்டதும் நினைவு வருவது காதல் அவஸ்தை அல்ல அந்தரத்தில் தொங்குபவர் விழுந்து
விடுவாரோ என்கிற அச்சம் தான்.
இப்படி சினிமா
பாடலாசிரியர்கள் காலிக் குடங்களாக இருப்பதற்கு சமகால தீவிர கவிஞர்களின் நிலையுடன்
ஒரு தொடர்புள்ளது. தமிழ் நவீனத்துவ கவிஞர்களில் இருவகை. முதலில் பிரமிள், நகுலன்,
ஆதமாநாம் போன்று தனித்த ஆளுமையும் பிரம்மாண்ட திறமையும் கொண்டவர்கள். தம்மளவில்
இவர்களுக்கு ஒரு தத்துவ பின்புலமும் இருந்தது. இரண்டாது இந்த பின்புலம் இல்லாத பிற
நவீனத்துவ கவிஞர்கள். இவர்கள் எளிய சித்தரிப்புகள், தனிப்பட்ட சஞ்சலங்களை மட்டும் எழுதினார்கள்.
இவர்கள் இன்று எளிதில் காலாவதி ஆகி விட்டார்கள். இவர்களின் தொடர்ச்சியை இன்றும்
தமிழ்க்கவிதையில் காண முடியும். எந்த ஒரு அறிவு, பண்பாடு அல்லது தத்துவத் தளம்
சார்ந்த பின்புலமும் இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிய தருணங்களை நேரடியாகவோ
மறைமுகமாகவோ எழுதுவார்கள். எந்த ஒரு விரிவான வாசிப்பும் அக்கறையும் அற்றவர்களாக
இருப்பார்கள். இந்த கவிஞர்கள் எழுதுவதற்காக எழுதுகிறார்கள், சொல்வதற்கு அல்ல. இந்த
பொருளில், இவர்களுக்கும் இன்றைய சினிமா பாடலாசிரியர்களுக்கும் ஒரு மாமா-மச்சான்
உறவு இருப்பது முழுக்க தற்செயல் அல்ல.
இரண்டாயிரத்துக்கு
பிறகு இந்த தனியாவர்த்தன கச்சேரிக்காரர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றியது தலித்,
பெண்ணிய கவிஞர்களும் புனைவெழுத்தாளர்களும் தான். அவர்கள் ஒரு புது மொழியை மட்டுமல்ல
சொல்லப்படாத புது வாழ்வு அனுபவங்களையும், நிலவியல் சித்தரிப்புகளையும்,
மறைக்கப்பட்ட வரலாற்றையும் தமிழுக்கு கொண்டு வந்தார்கள். பெருங்கவனம் பெற்றார்கள்.
முக்கியமாக அவர்கள் தாம் அவசியமாக சொல்ல வேண்டியதை தம்மால் மட்டும் சொல்ல கூடியதை
சொல்ல எழுத வந்தார்கள்; நவீனத்துவாதிகளை போலன்றி அவர்களுக்கு வானம்பாடிகளை போல
சொல்ல ஏராளம் இருந்தது, அதன் மீது பெரும் கடப்பாடும் நம்பிக்கையும் இருந்தது. ஒரு
ஊமைக்கு திடீரென்று வாய் வந்தது போன்றது அது. துரதிஷ்டவசமாக சினிமா பாடல்களில்
வானம்பாடி காலகட்டத்தில் நிகழ்ந்தது போல் இந்த பாய்ச்சல் உடனடியாக நிகழவில்லை. ஒரு
பத்து வருடம் தாமதித்து “மதுபானக்கடை” படம் மூலம் இந்த மாற்றம் நிகழ்கிறது.
இதுவரை நாம்
கேட்டிராத சொற்பிரயோகங்கள், படிமங்கள், பல நாட்டார் கதைப்பாடல் குறிப்புகள்
இப்பாடல்களில் வருகின்றன. ஒரு துள்ளல் இசை கொண்ட”கண்ணதாசன் காரக்குடி” வகையிலான மதுபானக் கூட பாடல். ஆனால் அதை விட மிக
உக்கிரமான வரிகள் கொண்ட பாடல் நம் சமூகத்தின் மறைக்கப்பட்ட மாற்று வரலாற்றை பேசும்
பாடல் இது.
“கள்ளுக் குளம்
வெட்டி ராமன் குளிச்சதும்
ஆதிக் குடியில தான்”.
நமக்குத் தெரிந்த
ராமர் சத்திரியர், ஆனால் அவர் சிக்கன், மட்டன், பன்றிக் கறி புசிப்பவராக எங்காவது
படித்திருக்கிறோமா? அவர் மட்டுமில்லை வைணவமாக்கப்பட்ட எந்த சத்திரியக் கடவுளும்
விநோதமாக காட்டில் வாழ்ந்தாலும் பழம் காய் பொறுக்கி உண்பவர்களாக (கம்பராமாயணத்தில்
சீதை விருந்தினர்க்கு படைக்கக் கூடிய உணவு பற்றின ஒரு பாடல் ஒரு சைவ சமையல்
குறிப்பே தருகிறது) மீசையற்றவர்களாகவே நம் மரபான நினைவில் இருக்கிறார்கள். இது
இப்படி இருக்க விதிமுறைகளை மீறாத கொள்கைவாதியாக சுயகட்டுப்பாடு கொண்டவராக ராமாயணம்
காட்டும் ராமன் இப்பாடல் சொல்வது போல தண்ணி அடித்தாரா? கணியர் சமூகத்தினரின்
மித்துகளில் ராமன் ஒரு குளம் தோண்டி அதை கள்ளால் நிறைத்தது மட்டுமின்றி அதில்
குளிக்கவும் செய்திருக்கிறார். குமரிமாவட்ட வழக்கில் மதுவில் குளிப்பது என்றால்
மொடக்குடி குடிப்பது – இதன் உருவக
வெளிப்பாடு தான் “கள்ளுக்குளம் வெட்டி ராமன் குளித்தது ஆதிகுடியில தான்” என்பது. இப்பாடலில் ராமன் ஆதிகுடியை சேந்தவன் என்பதும்
முக்கியமானது. தெய்வங்கள் குடித்தனரா என்பதை விட ஒரு சமூகத்தின் பண்பாட்டுக்
கூறுகள் தான் தெய்வங்களை உருவாக்கின என்பது முக்கியம். அதனால் நமக்கு ஒரு
சமத்துவத்துக்கு பால் குடிக்கும் ராமனுடன் கள்ளடிக்கும் ராமனும் வேண்டும்.
கவிதைகளிலும் தெய்வங்களின் வரலாற்றை அவர்களை நிராகரிப்பதற்கு அல்ல ஒரு தலித்
வெளிக்குள் சுவீகரிப்பதற்கு பயன்படுத்துபவர் என்.டி ராஜ்குமார். சினிமா பாடலிலும்
அதையே செய்கிறார். மேலும் சங்ககாலக் குடிப் பண்பாட்டையும் நினைவுபடுத்துகிறார். இதுவரை
வைரமுத்து போன்ற மேற்தட்டு தமிழ்ப்பற்றாளர்கள் காட்டின சங்க காலம் இதற்கு
முற்றிலும் மாறுபட்டது. மேலும் கள்ளு இறக்குவது தடை செய்யப்பட்டதன் பின்னுள்ள
அதிகார வர்க்க நோக்கங்களை குறிப்பிடுகிறார். விளிம்புநிலை மக்கள் டாஸ்மாக்
மதுபானம் மூலம் சுரண்படுவதை விமர்சிக்கிறார்.
“அப்பனும் மவனும்
கோயிலில் சாமியும் சேர்ந்து குடிச்சோமடா
ஒழுக்கங்கெட்டவன்னு
நம்மாளச் சொன்னது மேட்டுக் குடிகளடா” என்ற வரி
இன்றைய மத்தியவர்க்க கலாச்சார வன்முறையை பேசுகிறது. இப்படி வேறெந்த பாடலும் இதற்கு
முன் “குடியரசியல்” பேசினதில்லை. இதுவரை வந்த “தண்ணீர்த் தொட்டி” பாடல்களெல்லாம் எல்லாம் குடியை தனிப்பட்ட சீரழிவாக
பார்க்கும் பார்ப்பனிய மனநிலை வெளிப்பாடு மட்டுமே. மேலும் இந்த பாடலை அட்டகாசமாக
என்.டி ராஜ்குமாரே பாடியிருக்கிறார். பொதுவாக துள்ளல் பாடல்களில் சின்ன சின்ன
வார்த்தைகளைப் போடுவார்கள். ஆனால் என்.டி நீண்ட சொற்களை உடைத்து
பயன்படுத்துகிறார். இது அவரது கவிதைகளில் நாம் உணரும் திம் திம் எனும் தாளக்கட்டை
நினைவுபடுத்துகிறது.
“சமரசம் உலாவும் இடமே” எனும் ஒரு பாதி ரீமேக் பாடல் வருகிறது.
“குடியின்றி அமையாது
உலகடா
அதில் நீந்தும்
குதிரை நாமடா”
பாயும் குதிரை, பறக்கும்
குதிரை பார்த்திருக்கிறோம். “நீந்தும் குதிரை”? இது ஒரு புது சர்ரியலிஸ கற்பனை. யோசிக்க யோசிக்க நம்
கற்பனையை மிகுதியாக தூண்டி கிளர்ச்சி தரும் சொல்லாடல் இது. மதுவின் கட்டுக்குள்
நின்றபடி பெரும் பாய்ச்சல்கள் செய்யும் ஒரு மனத்தை சொல்வதாக கொள்ளலாம். இப்பாடலில்
மற்றொன்று சொல்கிறார். போதையில் என்னென்னமோ மறக்கிறோம், நம் சாதி நிலையைத் தவிர
என. மிக கூர்மையான அவதானிப்பு இது. சேர்ந்து குடிக்கும் போது குடும்பம்,
பிரச்சனைகளை மறந்து ஆனால் மிகுந்த சாதி பிரக்ஞையுடன் இருப்பவர்களை
பார்த்திருக்கிறேன். இந்திய மனம் மிக விசித்திரமானது.
இக்குதிரை மீண்டும்
“பொல்லாத குதிரை ஏறி மோகம் தீர்க்கும் காதல்காரி” எனும் பாடலில் வருகிறது. இப்பாடலில் “மனமிரண்டும்
பாம்பாகி பிணைந்தேறும் வாசம் வீசுதே” எனும் வரி
குமரி மாவட்டத்து மக்களிடையே பாம்பின் புணர்ச்சி வாசம் காற்றில் வரும் என்ற
நம்பிக்கையில் இருந்து உருவானது. காதலில் கூட இது போன்ற பல நம்பிக்கைகள்
உலவுகின்றன. தமிழிலுள்ள எண்ணற்ற தமிழ்ச்செல்வன்களில் ஒருவரான என் நண்பரான ஒருவர்
தனது ஒரு கவிதையில் புணரும் பெண்ணின் அல்குல் வாசனையை சொல்லுகையில் ஒருவகை பழத்தை
குறிப்பிட்டு அதன் வாசனையை ஒத்தது என்பார்.
”பொல்லாத குதிரை” பாடலில் சில அற்புதமான உவமைகள் வருகின்றன. நவீன
கவிஞர்கள் பலர் நினைவில் வந்து போகிறார்கள்.
”சின்ன வெயிலாக
தோள் மீது
சாய்கின்றாய்” (கல்யாண்ஜி)
”அதிரும் உடலுக்குள் புதிராக வருகின்றாய்
சிதறும் வண்ணத்தில்
பூனை போல் அலைகின்றாய் ”
(குட்டிரேவதி)
”மூளைக்குள்ளே நீ பேயாக திரிகின்றாய்” (இது என்.டியே தான்)
”கோடிக்கால் பூதமடா” பாடலில் தொழிலாளிகள் “முகமே இல்லாத மெழுகுபொம்மை” என்கிறார். யோசிக்க யோசிக்க பல அர்த்தங்கள்
கிளர்த்தும் உவமை இது. இன்று எளிய பாட்டாளி முதல் பி.பி.ஓ ஊழியன் வரை எளிதில் உருக்கி
மற்றொன்றாய் மாற்றி விடக் கூடிய மெழுகுபொம்மை தான். இன்றைய assembly line உற்பத்தியில் தொழிலாளி முதலில் தன் தனிமனித
அடையாளத்தை தான் இழக்கிறான்.
”மஞ்சள் நிற போதையிலே” பாடலில் ஒரு குடி விளக்கம் வருகிறது. அது
சுவாரஸ்யமானது:
”குடித்து குடலழுகி ரெண்டு நாளில்
செத்துப் போவாய்
என்று சொன்ன மருத்துவன்
நேற்றே இறந்து போனான்
சாவுக்கு பயமில்லை,
சாத்திரங்கள் ஏதுமில்லை
இன்றிருப்போர்
நாளையில்லை என்றே குடிக்கிறோம்”
இவ்வரிகள்
இப்பாடலுக்கு ஒரு முழுமை அளிக்கிறது. அத்தோடு இவ்வரிகள் நம் கறுப்புவெள்ளை
சினிமாவின் ஒரு மாபெரும் பாடலாசிரியனையும் சட்டென நினைவுக்கு கொண்டு வருகின்றன.
அவன் மட்டுமே எளிய நிகழ்வுக்கு உன்னத தத்துவங்கள் சொன்னவன்.
மற்றும் சில அழகான
வரிகள்:
“காகங்களே என்னைச்
சுற்றி ஆர்ப்பரித்துப் பாடுது
மனிதனின் எச்சில்
மட்டும் குற்றங்களை சொல்லுது”
என்.டி ராஜ்குமார்
தலித் நுண்ணுணர்வையும் வரலாற்றையும் மட்டுமல்ல தான் இதுவரை செரித்துள்ள நவீன
கவிஞர்கள் உருவாக்கிய உன்னத தருணங்களையும் தனதான மொழியில் இப்பாடல்களில் கொண்டு
வருகிறார். மேற்சொன்ன “சிதறும் வண்ணங்களில் அலையும் பூனை” போன்றொரு படிமத்தை தமிழ் சினிமா பாடல் வரலாற்றில்
யாரும் இதுவரை எழுதியதில்லை. தமிழ் சினிமா பாடல் உலகம் நவீன காலகட்டத்தில் எடுத்து
வைக்கும் முதல் அடி என ”மதுபானக்கடை” பாடல்களை சொல்லலாம். வைரமுத்துவுக்கு பிறகு மிகுந்த
கற்பனை செறிவும், தனித்துவமும் ஆளுமையும் கொண்டு வந்துள்ள அடுத்த கவிஞன் என்.டி
ராஜ்குமார் தான். அவர் தொடர்ந்து இயங்குவார் என எதிர்பார்க்கலாம். அவரைக் கொண்டு
வந்த இயக்குநர் கமலக்கண்ணனுக்கு வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்.
