ஒரு காலையை
சகஎழுத்தாளனை
தூஷித்துக் கொண்டு
துவங்குகிறேன்
என் நாய்க் குட்டி
தன் பீப்பீ பொம்மையை
பகல் முழுக்க
வேலை செய்து கொண்டே
இருக்கிறேன்
நாய்க் குட்டி நன்றாக
தூங்கிப் போகிறது
பலமுறை
சிறுசிறு சத்தங்கள்
அசைவுகள் வாசனைகளுக்கு
உடனடி விழித்து
சுற்றிப் பார்க்கிறது
கதவருகே ஓடிக்
குலைக்கிறது
பதிலில்லாவிட்டால்
தனக்கு எட்டாத
ஒவ்வொரு ஜன்னல்
பக்கமாய்
நின்று வினவுகிறது
பின் ஏதும் நடக்காதது
போல்
தூங்கப் போகிறது
சிறுபெருமூச்சுடன்
மாலை வந்ததும்
எதற்கு வேலை
செய்கிறோம்
என்று குழம்பி
எரிச்சலடைந்து
எழுகிறேன்
நாய்க்குட்டி சிறு
கொட்டாவி விட்டு
அடுத்து என்னை
கவனித்தபடி
பெரிய கொட்டாவியை
விடுகிறது
ஓடுகிறது
வாலாட்டி உணவு
கேட்கிறது
மூத்திரம் போக இடம்
பார்க்கிறது
மொட்டைமாடிக்கு
போகிறோம்
சுற்றிலுள்ள
அடுக்குமாடி மொட்டைமாடிகளில்
சுற்றுச் சுவரில்
பிடித்தபடி நின்று
ரயிலில் இருந்து
பார்ப்பது போல்
வேடிக்கைப்
பார்க்கும் பலரில்
யாரோ ஒருவர்
கீழே குதிக்கப்
போகிறார்
என சட்டென்று
நினைத்துப் பார்க்கிறேன்
மொட்டைமாடியில்
நடைபயிற்சி
தியானம்
யோகா
தண்டால் எடுப்பது
புத்தகம் படிப்பது
தொலைதூரத்தில்
யாருடனாவது சைகையில் பேசிப் பார்ப்பது
எங்கோ மங்கலாய்
புலப்படும் ஒருவர்
நேரில் காண
எப்படியிருப்பார்
என கற்பனை பண்ணுவது
என எல்லாமே
அதற்கான முன்
தயாரிப்பு தான்
என்று நினைக்கிறேன்
நாய்க்குட்டி ஒரு
தவளையை
துரத்திக் கொண்டு
ஓடுகிறது
தவளை இடுக்குகளில்
ஒட்டிக் கொண்டு
சற்று நேரம்
ஆசுவசிக்க
நாய்க்குட்டி அதனை
சுரண்டி
வீழ்த்துகிறது
இறுதியில் என்
கால்களுக்குப் பின்னால்
ஒளிகிறது
நாய்க்குட்டி
பரவசமாகி
மாடியை சுற்றி
சிலமுறை
ஓடி வருகிறது
வெப்பக்காற்று
வீசுகிறது
தூசுப்படலம் ஒரு
சல்லாத்துணி போல் எழ
சருகுகள் சுழல்கின்றன
சலிப்பாகி
கால்களைத் தூக்கி
தவளையை
விடுவிக்கிறேன்
நாய்க்குட்டி அதனை
முகர்கிறது
நக்கி சுவைக்கிறது
சில நொடிகள் வியந்து
விட்டு
வாயில்
மிருதுவாய்
கவ்விக் கொள்கிறது
நான் அதன் பின்னே
செல்கிறேன்
என்னிடம் தருகிறது
உருவழிந்த ரப்பர்
பொம்மை போல்
தானற்று தெரிகிறது
கீழே வைத்து
பார்க்கிறேன்
நிமிண்டுகிறேன்
சின்ன குச்சியால்
தட்டுகிறேன்
ஒரு காகிதத்தில்
சுற்றி
குப்பைத்தொட்டியில் இடுகிறேன்
திரும்பப் போகையில்
சலசலப்பு கேட்கிறது
மீண்டும் போய்ப்
பார்க்கிறேன்
குப்பைத்
தொட்டிக்குள்
பல பொருட்கள் அசைகின்றன.
