வந்து
வந்து பிரிபவர்களின்
இருப்புகள்
நமக்கான
தண்டனைகள்
ஒருவர்
கூட
இருப்பதும்
சட்டென்று
விலகுவதும்
ஒரு
முட்டை ஓட்டைப் போல்
நம்மை
நொறுக்கி
விடுகின்றன
ஒரு
கூழாங்கல் போல்
அழைப்புகளையும்
வெறுப்புகளையும்
எதிர்த்து
கிடக்கவே
விரும்புகிறோம்
ஆக
நாம்
சென்று சென்று பிரிபவர்களாக
இருக்க
உத்தேசிக்கிறோம்
நாமாக
பிரியும்
போது
நம்
குற்றவுணர்வை
சுய
பொறுப்பு வென்று விடும்
அப்போது
கணக்கு
புத்தகங்கள்
நம்
பக்கமிருந்து எழுதப்படுகின்றன
வெட்டல்கள்
திருத்தல்கள் தாராளமாய் செய்து
இழப்புகளை
மிகையாக்கி
காட்டுகிறோம்
நாம்
பிரிபவர்களாக இருக்கவே
விரும்புகிறோம்
வந்தவர்கள்
போன பின்
சொந்த
வீட்டின் நிறைகளும்
பிரிந்து
திரும்ப வந்த பின்
அதே
வீட்டின் குறைகளும்
பூதாகரமாகி
நம்மை
ஆசுவாசப்படுத்து
கின்றன
ஒரு
உடைந்த நாற்காலியில்
இருக்க
கற்ற பின்
குறைந்த
காற்றில்
சுவாசிக்க
பழகிய பின்
போதாமைகளை
அசை போட்டு புளித்த பின்
வீடுகளை
தூய்மையாக்கி
ஒவ்வொன்றாய்
தூசுக்கும்
இருளுக்கும் விட்டுச் சென்ற பின்
சிலகாலம்
யாருடனாவது
இருக்க
யாராலாவது
ஒரு காற்றுக் குமிழி போல் விழுங்கப்பட
இருக்க
முடியாத தொடர் வெளிச்சத்தில் இருக்க
பூதக்கண்ணாடிக்கு
கீழான காட்சிகளுடன் வாழ
பிரியப்படுகிறோம்
எளிதில்
நொறுங்கக் கூடிய
லகுவான
ஒன்றாய்
மாறுகிறோம்
அதன்
அபாயங்களை
பொருட்படுத்தாமல்
அழும்
குழந்தையை
பொறுப்பெடுத்துக்
கொண்டவரிடம் போல்
கைமாறி
கைமாறி போகிறோம்
கொஞ்சல்களும்
மிரட்டல்களும்
நம்மை
அழ வைக்கின்றன
மேலும்
மேலும்
இத்தனை
தேவைகள் விருப்பங்களுக்கு
மத்தியில்
தொடர்ந்து
பிரிய பாத்தியப்பட்டு இருக்கிறோம் -
ஒரு
சிறுகதையின் இறுதிப் பத்தியை போல்
மாயமாய்
மறைந்த நபரின்
ஒரே
ஒரு கவனமற்ற சொல்லை போல்
மறந்து
போன சொல்லின்
முதல்
எழுத்தைப் போல்
அது
தான்
புரிந்து
கொள்வதற்கான துவக்கமாக இருக்கிறது
அதனாலே
எப்போதும்
இரு வாசல்களையும்
திறந்து
வைத்திருக்கிறோம்
யார்
முதலில் வெளியேறுவது
என்று
போட்டி போடுகிறோம்
வெளியேறுபவரின்
பக்கமே
நியாயம்
அதிகம் கனக்கும்
அவர்களின்
பக்கம்
என்றுமே
தூய்மையானதாக இருக்கும்
அவர்கள்
கோபிக்கலாம் கடிந்து கொள்ளலாம் தீர்ப்பெழுதலாம்
இணைந்து
இருப்பதன் நியாயங்களை
சொன்னவாக்கில்
மறந்து விடலாம்
அவர்களின்
கோணலான தர்க்கங்கள்
நிமிர்ந்து
கொள்கின்றன
வரலாறு
ஒரு பக்கமாய் சாய்கிறது
நாம்
எல்லோரும்
அவசரமாய்
வியக்கிறோம்
கைகுலுக்கிய
கரங்கள்
ஏன்
கருணையற்று
கைவிடுகின்றன
என
அவர்கள்
கடந்து போகிறார்கள்
நிமிர்ந்து
பெருமிதமாய் -
விழுந்து
உடையும் கண்ணாடிப் பொருளின்
பலகீனத்தை
குற்றம் சாட்டும் ஓராயிரம் வார்த்தைகளுடன்