நல்ல நண்பர்கள் எதேச்சையாக வாய்க்கிறார்கள். அவர்களை
தேடிப் போக வேண்டியதில்லை. தேடிப் போய் வாஞ்சையாக பழகும் நபர்கள் சில சமயம் எதிரிகளாகியும்
விடுகிறார்கள்.
பதிமூன்று வருடங்களுக்கு
முன்பு சார்லஸ் நண்பனானான். நாங்கள் ஒத்த சிந்தனை, ஆனால் மாறுபட்ட அணுகுமுறை கொண்டவர்கள்.
அது கூட முக்கியமில்லை. எங்களுக்கு ஒருவருடன் ஒருவர் பேசுவது அவ்வளவு சுவாரஸ்யமாக இனிமையாக
இருக்கும். யோசித்துப் பார்க்க எங்களிடையே பேச்சை விட்டால் வேறொன்றும் இருந்ததில்லை.
பரஸ்பர உதவிகள், வேலை பகிர்தல் ஆகியன இருந்ததில்லை. ஆனால் இப்போதும் நான் போனில் நான்கைந்து
மணிநேரம் ஆயாசமின்றி பேசும் ஒரே நபர் அவன் தான். அவனது மொழி வழக்கு, குரல், தொனி, சொற்களை
பயன்படுத்தும் விதம் ஒவ்வொன்றையும் ரசிப்பேன். எங்களுக்குள் என்ன பேசுகிறோம் என்பதும்
முக்கியமில்லை. சும்மா சுவிட்சை தட்டி விட்டாற் போல பேசிக் கொண்டு போவோம். அதனால் பிறரிடம்
போல் சுவாரஸ்யமாக உபயோகமாக பேச முயற்சிகள் எடுப்பதில்லை. அவனுடன் பேசும் போது அது பெரிய
விடுதலை.
இதில் சுவாரஸ்யம்
அவனும் நானும் கல்லூரியில் முதுகலை படிக்கும் போது ஒரே விடுதியில் தங்கியிருந்த முதல்
ஒன்றரை வருடங்களில் பார்த்தால் புன்னகைக்குமளவு தான் பரிச்சயம் கொண்டிருந்தோம் என்பது.
எங்கள் நட்பு வட்டங்கள் வேறு. அவன் என் நண்பர்களின் பொது நண்பன். எப்போதாவது என் அறைக்கு
வருவான். அப்படி ஒருநாள் என் அறையில் உள்ள இலக்கிய நூல்கள் பார்த்து என்னிடம் புத்தகங்கள்
பற்றி பேச ஆரம்பித்தான். அவன் எழுதி ஆனந்தவிகடனில் பிரசுரமான ஒரு கதையை காட்டினான்.
நான் அவனுக்கு ஜெயமோகனின் “காடு” வாசிக்கக் கொடுத்தேன். அவன் கிறங்கிப் போய் விட்டான்.
பிறகு நாங்கள் அந்த நாவல் பற்றி பேச ஆரம்பித்தோம். எங்களுடையா ஓயாத பேச்சுக்கள் அப்படித்
தான் ஆரம்பித்தன. பிறகு சாப்பாடு காணாதவர்கள் உண்ணுவது போல நாங்கள் பார்க்கும் இடமெங்கும்
நின்றும் உட்கார்ந்தும் வேடிக்கை பார்த்தும் பேசிக் கொண்டே இருந்தோம். முக்கியமாக,
நாங்கள் அந்த நாளுக்கு பிறகு அதிகம் இலக்கியம் பேசவே இல்லை. அது எவ்வளவு நல்லதாக போயிற்று
என இப்போது புரிகிறது. இலக்கிய ரசனை விவாதங்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் நட்புக்குள்
கசப்பை உண்டு பண்ணக் கூடியவை.
இன்னொரு விநோதம்
நடந்தது. அவன் வரலாறு மாணவன். நான் இலக்கியம். அவனது இறுதித் தேர்வுகள் முன்னரே முடிந்து
விட்டன. அவனுடைய வகுப்பு நண்பர்கள் விடுதியை காலி பண்ணி ஊருக்கு கிளம்பினார்கள். நாங்கள்
கல்லூரிக்குள் சந்திக்க இறுதி வாய்ப்பு அந்த மிச்சமுள்ள நாட்கள் தாம். அவன் தனியாக
பத்து நாட்கள் தன் அறையில் எனக்காக காத்திருந்தான். என் இறுதி தேர்வுக்கு பிறகு விளையாட்டுத்
திடலில் அமர்ந்து பேசலாம் என திட்டமிட்டிருந்தோம். இருவரும் அந்த உரையாடலை அவ்வளவு
ஆர்வமாக எதிர்பார்த்தோம். அவன் இதற்காகவே என பத்து நாட்கள் தனியான விடுதியில் காத்திருந்தான்.
இறுதித் தேர்வுக்கு பிறகு நாங்கள் சந்தித்துக் கொண்டு சுவையாக பேசினோம். என்ன பேசினோம்
என நினைவில்லை. அது முக்கியமும் இல்லை. பின்னர் அடிக்கடி “உன்னோடு பேசி பேசி தேர்வுக்கு
சரியாக படிக்காமல் எனக்கு மதிப்பெண் குறைந்து போச்சு” என வேடிக்கையாக புகார் சொல்லுவான்.
பிறகு அப்படி ஒரு
நட்பு அமையவில்லை. ஆளுமை சார்ந்த நட்பு ஒன்று வாய்த்தது. மனுஷ்யபுத்திரன். அவர் சிடுக்கான
மனமும் புதிரான ஆளுமையும் கொண்டவர்.
புதிதாய் பழகுபவர்களுக்கு
ஆரம்பத்தில் அவரைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட சித்திரங்கள் தான் கிடைத்தபடி இருக்கும்.
முரண்பாடுகள் தான் அவரது ஆதாரம். உணர்ச்சிகரமான மனிதர். ஆனால் வெளியே எளிதில் காட்டாமல்
இறுக்கமாக இருப்பார். பால்யகால நண்பர்களைப் போல தன் நண்பர்கள் விசுவாசமாக சதா தன்னுடன்
இருக்க எதிர்பார்ப்பார். ஏமாற்றமடையும் போது கடுமையாக கோபப்படுவார். அந்த கோபத்தை நக்கல்
அங்கதமாக வெளிப்படுத்துவார். ஒரு சிக்கல் அவர் தன்னிடம் வருகிற கிட்டத்தட்ட அனைவரிடமும்
நட்பை எதிர்பார்ப்பார். உணர்ச்சிகரமாக பழகுவார். எளிதில் கோபதாபங்கள் ஏற்படும். விளைவாக
எதிரிகள் தோன்றுவார்கள். சில பேரால் அவரது நக்கல் தாங்க முடியாமல் அவர் பால் கடுமையான
கோபம் தோன்றும். இந்த நக்கலும் ஏதோ ஒரு உணர்ச்சிகரமான பற்றுதலில் இருந்து லட்சியவாதத்தில்
இருந்து தோன்றுவது தான். ஒருவித பதின்வயது மனநிலை இது. ஆனால் அவர் வெளியே இறுக்கமாக
தோன்றுவதால் யாருக்கும் இது சட்டென்று புரியாது.
அரசியல் விவாதங்களிலும்
கட்டுரைகளிலும் மனுஷ்யபுத்திரனிடம் உள்ள இந்த முரண்பாட்டை காண முடியும். லட்சியவாதம்,
தர்க்கம் என மாறி மாறி நிலைப்பாடு எடுப்பார். லட்சியவாதத்தை சமூக அறம் என நியாயப்படுத்துவார்.
அவரது கவிதையில் தான் இந்த லட்சிய உணர்ச்சிகர – கூர் தர்க்க முரண் சரியாக இணைகிறது
எனலாம். அது அவரது வலு.
மனுஷ்யபுத்திரனுக்கு
எதிரிகள் இருக்கிறார்கள். அதை விட கணிசமான நண்பர்களும் இருக்கிறார்கள். நட்பை பேணுவது
அவரது இயல்பு எனலாம். சின்ன வயதிலே தான் தொடர்ந்து நண்பர்களை உருவாக்கி அதன் மூலம்
இலக்கிய உலகில் நுழைந்தது பற்றி விகடன் கட்டுரை ஒன்றில் எழுதி இருக்கிறார். பொதுவாக
முப்பது வயதுக்கு பிறகு தொழில் சார்ந்த நண்பர்களும், நாற்பது வயதுக்கு மேல் பயன்பாட்டுகான
நண்பர்களும் தான் வாய்ப்பர். நாற்பது வயதுக்கு மேல் நண்பர்களை கடையில் வாங்கும் பொருளைப்
போல தான் பார்ப்போம். ஆனால் மனுஷ்யபுத்திரனை போன்றவர்களுக்கு நட்புறவில் இருந்து நிறைய
மகிழ்ச்சியும் புத்துணர்வும் கிடைக்கிறது. அவரது வீட்டுக்கு போனால் யாராவது நாலு பேருடன்
உட்கார்ந்து மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பதை காணலாம்.
அதிகமும் மனுஷ்யபுத்திரன்
தன் வயது ஆட்களுடன் நட்பு கொள்வதில்லை. இளைஞர்கள் தொடர்ந்து மொய்த்துக் கொண்டிருப்பார்கள்.
மெல்லிய மீசை, கொட்டாத டை அடித்த கத்தை மயிர், ஸ்போர்ட்ஸ் டி-ஷர்ட், குதூகலமான நடைச்சுவையான
பேச்சு ஆகியவற்றுடன் இளம் நண்பர்களையும் சேர்த்துப் பார்த்தால் அவர் தன் மனதின் இளமையை
இன்னும் தக்க வைத்துக் கொண்டிருப்பதன் சூத்திரம் புரியும். நிறைய இளம் எழுத்தாளர்கள்
அவரது பத்திரிகை மூலம் அறிமுக கொள்வதையும், அவரது வயதுக்காரர்கள் அவரை பூடகமாக வெறுப்பதையும்
இப்படி புரிந்து கொள்ளலாம். இளைஞர்களுடன் இருப்பது சில ஆளுமைகளுக்கு பிடித்தமான காரியம்.
அவர்களுக்கும் தம் வயதினருடன் சகஜமாக உரையாட முடிவதில்லை. வரலாற்றில் சாக்ரடீஸ் நல்ல
உதாரணம்.
நானும் மனுஷ்யபுத்திரனும்
இருவேறு அந்தஸ்து தட்டுகளில் இருப்பவர்கள். ஆரம்பத்தில் நான் கொஞ்சம் விலகலாக மரியாதையுடன்
அவரிடம் பழகவே எத்தனித்தேன். ஆனால் என்னிடம் சகஜத்தை உருவாக்க அவர் நிறைய ஆர்வம் காட்டியிருக்கிறார்.
என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவது, பிரச்சனைகளின் போது உதவுவது என
தன் நிலையில் இருந்து இறங்கி வந்து செய்திருக்கிறார். அவரிடம் சகஜமாக பேச எனக்கு நான்கு
வருடங்கள் பிடித்தன. அவரிடம் மிக ஆழமான உரையாடல்கள் சாத்தியமாகி இருக்கின்றன. தனக்கு
அந்தரங்கமான நெகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். அவரிடம் வேறெதையாவது பேச
வேண்டி செல்வேன். ஆனால் அங்கு போனதும் வேறொரு விசயத்துக்குள் போய் ஆழமாக பேசிக் கொண்டிருப்போம்.
சில நாள் நல்ல மூடில் இருக்கும் போது கண்ணீர் வரும் வரை சிரிக்க வைப்பார். இன்னும்
சில நாள் மன அழுத்தத்துடன் இருப்பார். அவரிடம் பேசி வெளியே வந்த பின் நானும் கொஞ்சம்
உஷ்ணமாக உணர்வேன். மழை, வெயில் என மாறி மாறி அடிக்கும் பருவநிலை போன்றது அவரது மனம்.
அவருக்கும் வேறு
சில எழுத்தாளர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இது. யார் கிடைத்தாலும் இலக்கிய மூளைச்
சலவை செய்ய மாட்டார். சில எழுத்தாளர்களிடம் பத்து வருடங்கள் பழகினாலும் வெறும் ரசிகன்
என்கிற நிலையில் தான் வைத்திருப்பார்கள். மனுஷ்யபுத்திரன் தனக்கு பிடித்தமான வாசகர்களை
நட்பு நிலை நோக்கி நகர்த்திக் கொண்டே இருப்பார். அவருக்கு இலக்கிய ஓட்டுகளை விட ஆரோக்கியமான
உறவு தான் முக்கியம். அவ்விதத்தில் அவர் சுந்தர ராமசாமியை போன்றவர்.
மனுஷ்புத்திரனின்
தோழிகளில் சிலர் எனக்கும் அன்பான தோழிகளாகி இருக்கிறார்கள். மோகன காயத்ரியை குறிப்பிட
வேண்டும். எனக்கு முதலில் வாசகியாகி கடிதங்கள் போட்டார். ஆனால் அந்நிலையில் தான் அது
நின்றது. பிறகு ஒரு புத்தாண்டின் போது இரவு பன்னிரெண்டுக்கு அவர் காயத்ரிக்கு போன்
செய்து வாழ்த்து சொல்லி என்னையும் பேச வைத்தார். என்னிடம் காயத்ரி மனம் திறந்து லகுவாக
பேச ஆரம்பித்தது அந்த நொடியில் இருந்து தான். மோகன காயத்ரி உணர்ச்சிகரமான மனமும் நுட்பமான
அறிவும் வாசிப்புத் திறனும் மிக்க பெண். நான் சந்தித்த பிற பெண்களில் இருந்து ஒரு அடி
மேலே தான் எப்போதும் நிற்பார். அவர் உயிர்மையில் வேலை செய்த மாதங்களில் அங்கு போக எனக்கு
மேலும் உற்சாகமாக இருக்கும். நான் மட்டுமல்ல அங்கு போன எழுத்தாளர்கள் அடுத்து உயிர்மையை
பற்றி எழுதினால் மோகன காயத்ரியை பற்றி ஒரு குறிப்பாவது எழுதாமல் இருக்க மாட்டார்கள்.
அப்படி ஒரு ஆகர்சம். என்னுடைய நாவலின் முதல் பிரதியையும் வாசித்தவர் அவர் தான். என்னுடைய
முதல் நூலான இன்றிரவு நிலவின் கீழை அவர் புத்தக சந்தையின் போது புது வாசகர்களிடம் அறிமுகப்படுத்தி
வாங்க வைத்தது இன்றும் நினைவில் நிற்கிறது. பிறகு ஒரு நாள் எங்கள் அனைவரிடன் தொடர்பையும்
துண்டித்து விட்டு காணாமல் மறைந்து போனார். அந்த கோபத்தில் அவரை மறந்து விட எண்ணினேன்.
ஆனால் டிசம்பர் புத்தக சீஸன் வந்த போது அவரது நினைவுகள் ஆக்கிரமித்து கொண்டது உயிர்மை
ஸ்டாலில் அவரை மிஸ் பண்ண ஆரம்பித்தேன். மனுஷிடம் குறிப்பட்ட போது “நினைவுகள் பருவநிலை
சார்ந்தது தானே” என்றார் கசப்பான புன்னகையுடன்.
சமீபமாக என்.அசோகனை
பிரசரம் சார்ந்து தொடர்பு கொண்டேன். அவருடைய உற்சாகமான குரலும் பேச்சும் உறவில் வெளிப்படுத்தும்
அறமும் ஒரு ஆசிரியர் என்கிற நிலை கடந்து தனிமனிதராக பிடித்திருக்கிறது.
மூன்று வாரங்களுக்கு
முன் பேருந்தில் திருச்சி போகும் போது மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு பௌத்த துறவி என் இருக்கையை
பகிர்ந்து கொண்டார். பெயர் பந்தெ ரத்ன போதி. மொட்டைத் தலை, வலுவான தாடை, அகன்ற தோள்,
குறும்பான கண்கள், மாநிறம் என திடகாத்திரமாக இருந்தார். கையில் லேட்டஸ்டு சாம்சங் ஸ்மார்ட்
மொபைல் வைத்திருந்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் கருத்தரங்கில் கலந்து கொள்ள
வந்திருப்பதாக சொன்னார். கையில் தபலா போல ஒன்று வைத்திருந்தார். பாடும் போது கூட அதை
இசைப்பாராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். மதியம் பன்னிரெண்டான போது அதை கீழே எடுத்தார்.
பிறகு மெல்ல திறந்தால் அது ஒரு பெட்டி. அதற்குள் தின்பண்டம் வைத்திருந்தார். வறுத்த
முந்திரி பருப்புகள். இந்த துறவியை விட அறிவு நிலையில் மேலாக இருக்கும், சமூகத்துக்கு
தொடர்ந்து பங்களிக்கும் ஒரு எழுத்தாளனுக்கு மட்டும் இது போல் சொகுசான நிலையான வாழ்க்கை
ஏன் அமைவதில்லை என ஆற்றாமை கொண்டேன். ஒருவேளை எழுத்தாளன் அமைப்புகளுக்கு வெளியே இருப்பதும்
விதிமுறைகளை உடைக்க எண்ணுவது காரணமோ என மனசுக்குள் அலசத் தொடங்கினேன்.
நானும் அவரும்
பேருந்து நகர்ந்ததில் இருந்தே பேசிக் கொண்டிருந்தோம். முதலில் “நீங்கள் சிங்களவரா?”
என்று அன்றிருந்த கோபத்தில் முட்டாள்தனமாக கேட்டு விட்டேன். அவர் “இந்தியனை ஒரு இந்தியனே
அடையாளம் காணக் கூடாதா” என்று வருத்தமாக கேட்டார். எனக்கு சங்கடமாகி விட்டது. பிறகு
சமரசமாகி தொடர்ந்து பேசினோம். அவருக்கு ஆங்கிலம் சுமாராகத் தான் பேச வந்தது. எனக்கும்
இந்தி வராது. ஆனாலும் அவரிடம் ஜென் பௌத்தம், தமிழக பௌத்த வரலாறு, ஜப்பானிய மரண கவிதைகள்
என தொடர்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தேன். என்னிடம் குடும்பம் பற்றி விசாரித்தார்.
நான் அவரது முந்தைய குடும்பம் பற்றி கேட்டேன். “அதெல்லாம் போன ஜன்மம் போல முடிந்து
போன வாழ்க்கை, எதற்கு நினைவுபடுத்த வேண்டும் விடுங்கள்” என்றார். இந்து மதம் பற்றி
எனக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. ஒரு இந்துவாகவே நான் என்னை நினைப்பதில்லை. அன்று
இந்து மதம் பற்றி விவாதம் வந்த போது அவர் கடுமையான கேலியுடன் அம்மதத்தை புறக்கணித்தார்.
எனக்கு சுரீர் என்றது. இதற்கு முன் இந்து நண்பர்கள் அம்மதத்தை விமர்சித்திருக்கிறார்கள்.
எனக்கு ஏற்பு இருந்திருக்கிறது. ஆனால் அன்று அவர் இந்து மதத்தை கேலி பண்ணிய போது ஏற்பட்ட
சின்ன அதிர்ச்சியால் நான் எங்கோ ஓரமாக இம்மதத்தை என் அடையாளமாக கருதிக் கொண்டிருக்கிறேனோ
என ஐயம் ஏற்பட்டது. மனிதனுக்கு தன்னுடைய சமூக அடையாளத்தை உதறுவது எவ்வளவு சிரமம் பாருங்கள்!
போகும் போது என் எண் வாங்கிக் கொண்டார். பிறகு அவரை மறந்து விட்டேன். நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை.
நேற்று திடீரென்று துறவி போன் செய்து விசாரித்தார். “கோடை விடுமுறையில் ஊருக்கு வா, ஆசிரமத்தில் என்னோடு தங்கலாம்”
என்று அழைத்தார். நான் எழுத்து வேலையை சொன்னேன். “ஆமாம் நீ எழுத்தாளனாச்சே, வீட்டை
விட்டு வெளியே வர மாட்டாயே” என்றார் நக்கலாக. அன்றைய பயணத்தில்“எழுத்தாளன் என்றால்
நிறைய ஊர் சுற்ற வேண்டும்” என்று அவர் அறிவுரை சொன்னது நினைவு வந்தது. நான் அவரிடம்
சொன்னேன் “எங்களூர் எழுத்தாளர்கள் எந்த ஊரும் சுற்றாமலே ஊர் சுற்றுவதை பற்றி நூற்றுக்கணக்கான
பக்கங்கள் எழுதுவார்கள்”.
சின்ன வயதில் ருத்ரன்
உறவுகள் பற்றி எழுதின சின்ன நூல் ஒன்றை படித்திருக்கிறேன். அதில் நட்பு வேறு பரிச்சயம்
வேறு என தெளிவாக வகைப்படுத்தி இருப்பார். நட்பில் மட்டும் தான் நடைமுறை பயன், நினைவேக்கம்,
நிர்பந்தம் தவிர்த்த ஒரு ரசனையும் மகிழ்ச்சியும் இருக்கும். அது அரிதானது. சாக்ரடீஸ்
அதனால் தான் ஒருவருக்கு ஒன்று அல்லது ரெண்டுக்கு மேற்பட்ட நண்பர்கள் இருக்க முடியாது
என்கிறார். ஆனால் பரிச்சயங்கள் வேறு. அவர்களை தேவைக்காக சகித்துக் கொள்கிறோம். வேலையின்,
அரட்டையின் ஒரு பகுதியான உறவுகள்.
நண்பர்களுக்கு
ஆளுமை தான் பிரதானம். அதன் மீது நமக்கு ஒரு ஈர்ப்பும் மரியாதையும் இருக்க வேண்டும்.
ஆளுமை இல்லாமல் நட்பு இல்லை. மாறுபட்ட ஆளுமையாக இருக்கலாம். தவறில்லை. ஆனால் நண்பனின்
ஆளுமையை சிலாகிக்காமல் நண்பனை நேசிக்க முடியாது. எனக்கு பள்ளி வயதில் மூன்று நண்பர்கள்
நெருக்கமாக இருந்தார்கள். வீடுகளில் தொடர்ந்து சந்திப்போம், வெளியே சேர்ந்து பயணிப்போம்.
ஆனால் வளர்ந்த பின் ஒரு கட்டத்தில் அவர்களது ஆளுமை எனக்கு உவப்பாக இல்லை. உதாரணமாக
அவர்களின் சாதீயமும் வலதுசாரி அணுகுமுறையும். வேறுவழியின்றி அவர்களோடு பேசுவதை குறைத்துக்
கொண்டேன். இன்றும் அவர்களுடன் என்னால் ஆர்வமாக உரையாட முடியும். ஆனால் அவர்கள் மீது
என மரியாதை இருக்காது. அது இன்றி உறவு போலியாக பொத்தலாகத் தான் இருக்கும்.
முகநூலில் இணையத்தில்
இத்தனை ஆயிரம் பேரோடு தினமும் உரையாடிக் கொண்டு இருக்கிறோம். இவ்வளவு பேரோடு இருக்கும்
போது தான் நமக்கு நண்பர்கள் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பது உறைக்கிறது.
