வா.மணிகண்டன் தனது சமீபத்திய வலைப்பதிவு ஒன்றில்
(மனுஷ்யபுத்திரனும் இறங்கும் இடிகளும்) மனுஷ்யபுத்திரனின் “சீரழிவு” குறித்த
சித்திரம் ஒன்றை வரைந்திருக்கிறார். அதன் மூலம் தன்னை புனிதமானவராகவும் கட்டமைத்திருக்கிறார்.
இப்பதிவு ஒரு அடிப்படை அபத்தத்தின் மீது நிற்கிறது.
மனுஷ்யபுத்திரினை தான் சந்தித்த
போது அவர் தூயவராக இருந்ததாகவும் பின்னர் அவர் இவரை பிரிந்த வேளையில் அவர் களங்கம்
கொண்டு சுயநலமியாகவும் அதிகார வேட்கை பிடித்தவராகவும் மாறியதாக கூறுகிறார். இது ஒரு
அசட்டு புரிதல்.
மனிதர்கள் யாரும் ஐந்து வருடம்
பத்து வருட திட்டத்தின் கீழில் தம்மை மாற்றிக் கொள்வதில்லை. நானும் நீங்களும் நினைவு
தெரிந்ததில் இருந்தே ஒரே மாதிரி தான் இருந்து வருகிறேன். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு
நாம் எதிர்வினை செய்வது மட்டும் தான் மாறுகிறது. மனிதனின் ஆளுமையோ மன அமைப்போ சினிமாவில்
வருவது போல் இடைவேளைக்கு பிறகு அதிரடி மாற்றம் கொள்வது அல்ல. அது நம் கற்பனை. வயது
ஆக ஆக நமது புத்திசாலித்தனம் அதிகரிக்கும் (ஏற்கனவே அது இருக்கும் பட்சத்தில்), முதிர்ச்சி
கிடைக்கும். சாமர்த்தியமும் கூட சேரும். அவ்வளவு தான். யாரும் நல்லவராகவோ கெட்டவராகவோ
மாறுவதில்லை. இந்த அடிப்படை உளவியல் கூட தெரியாமல் மணிகண்டன் மேற்சொன்ன கதாபாத்திர
அலசலை செய்திருக்கிறார்.
எனக்குத் தெரிந்து மனுஷ்யபுத்திரனின்
களங்கமானவரும் அல்ல தூய்மையானவரும் அல்ல. சிலுவையில் நடுவிலோ இரண்டு புறங்களிலோ அவருக்கு
இடமில்லை. அவரது சீரழிவின் உதாரணமாக அவர் அதிக பிரபலமாகி விட்டதையும் டி.வியில் அடிக்கடி
தோன்றுவதையும் கூறுகிறார். அப்படி என்றால் டி.வியில் தினமும் தோன்றும் செய்தி வாசிப்பாளர்கள்
தாம் ஆகப்பெரும் குற்றவாளிகளாக இருக்க முடியும். அடுத்து கலைஞரின் பிறந்த நாளை வாழ்த்தி
பேசியது. அது அவரது விருப்பம். ஈழத்தமிழர்களும் ஆதரவாளர்களும் கலைஞர் மீதான கோபத்தை
தமக்கு அணுக்கமாக இருக்கும் மனுஷ்யபுத்திரன் மீது பிரயோகிக்கிறார்கள். மனுஷ்யபுத்திரன்
அவர்களுக்கு ஒரு punching bag. அவ்வளவு தான்.
வாழ்த்தி பேசியதனால் அவர் தனது
அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதாக நினைக்க வேண்டியதில்லை. அவர் அதனால் தனிப்பட்ட
லாபங்களை அடையப் போகிறாரா? பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஒரு நண்பனாக மனுஷ்யபுத்திரன்
சமூக ஏணியில் எவ்வளவு உயரம் ஏறினாலும் நான் மகிழ்ச்சியோடு தான் பார்ப்பேன். இப்போதைக்கு
எனக்கு தெரிந்த அளவில் மனுஷ்யபுத்திரன் அரசியல் அறுவடைகள் கொய்து பெரும் செல்வந்தர்
ஆகி விடவில்லை. பத்திரிகைகளில் கலைஞர் அருகில் கூட்டத்தோடு அவர் படமும் வந்திருக்கலாம்.
ஆனால் இப்போதும் அதே பழைய வீட்டில் ஒரு இடுங்கின அறையில் புத்தகங்கள் கலைந்து கிடக்கும்
படுக்கையில் லேப்டாப்பில் தட்டிக் கொண்டிருப்பார். இல்லது அதை விட குப்பையான தனது அலுவலக
அறையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். நான் நேற்று சந்தித்த ஒரு நண்பர் கூட கலைஞரின்
பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதனால் மனுஷ்யபுத்திரனின் அதிகாரமும் புகழும் வானைக்
கிழித்துக் கொண்டு போய் விட்டது என்றும் அதை பயன்படுத்தி அவர் தன் புத்தகங்களை லட்சக்கணக்கில்
விற்பனையாக்க போகிறார் என்றும் கூறினார். ஆனால் டி.வி புகழ் உயிர்மை விற்பனையை பலமடங்காக்கியதாக
என் பார்வையில் படவில்லை. அதே கூட்டம் தான் ஒவ்வொரு வருட புத்தகக் கண்காட்சியிலும்
வருகிறது. இவ்வருடம் குறைவாகவே இருந்தது. கோபிநாத் ஒரு கூட்டத்தில் 60,000 ரூபாய் வாங்குகிறார்.
கூட விமான கட்டணம் மற்றும் உயர்தர கார். ஆனால் மனுஷ்யபுத்திரன் இன்றும் இலவசமாக தான்
ஒவ்வொரு இடமாய் போய் பேசி வருகிறார். சில இடங்களில் விடுதி அறை முன்பதிவு செய்ய சொல்கிறார்.
அதுவும் அவ்வளவு தயக்கமாக கேட்கிறார். சொல்லப் போனால் மனுஷ்யபுத்திரனுக்கு சாமர்த்தியம்
போதாது.
நான் அவரிடம் நேரடியாகவே கேட்டேன்
அவர் இவ்வளவு கூட்டங்கள் பேசுவது தொடர்ந்து டி.வியில் தோன்றுவதால் நடப்பியல் பயன் என்ன
என்று. சொல்லப்போனால் ஒன்றும் இல்லை. கொஞ்ச நாள் அவர் போகாமல் இருந்தால் அவர் இடத்தில்
இன்னொருவரை அமர்த்துவார்கள். டி.வி புகழின் அநிச்சயம், அதிலுள்ள சுரண்டல் குறித்து
அவரே என்னிடம் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். அவருக்கு திரைத்துறையில் சில நண்பர்கள்
இருக்கிறார்கள். கொஞ்சம் கூச்சப்படாமல் முயன்றால் அவர் சில படங்களுக்கு பாட்டெழுதி
இருக்கலாம். இந்த கூட்டங்கள், டி.வி நிகழ்ச்சிகள், பத்திரிகை பத்திகளுக்கு செலுத்தும்
உழைப்பை சினிமாவில் செலுத்தினால் அதிலுள்ள வெற்றி அவருக்கு இன்னும் பொருளாதார ரீதியாக
உபயோகமாக இருந்திருக்கும். ஆனால் யாரிடமும் இறங்கி வந்து வாய்ப்பு கேட்க கூச்சம். அதைத்
தான் ஆரம்பத்தில் சொன்னேன் தனது அடுத்த தலைமுறையினருக்கு உள்ள சாமர்த்தியம் அவருக்கு
இல்லை. கமல் ஒரு அருமையான வாய்ப்பை நல்கினார். அடுத்த மாதமே கமலை கடுமையாக விமர்சித்து
எழுதப்பட்ட சாருவின் கட்டுரையை உயிர்மையில் பிரசுரித்து அந்த உறவை கெடுத்துக் கொண்டார்.
எனக்குத் தெரிந்த மனுஷ்யபுத்திரன் இது தான்.
மனுஷ்யபுத்திரன் கலைஞரை பாராட்டியதை
துரோகமாக பார்க்கிறார்கள். ஒற்றை வரியில் இது தான் அத்தனை கண்டனங்களுக்கும் காரணம்.
அவர் மட்டுமல்ல சந்திரா போன்ற இன்னும் சிலரும் வசைபாடப்ப படுகிறார்கள். ஆனால் சல்மாவை
யாரும் சீண்டவில்லை. அவர் கட்சி ஆள். ஏற்கனவே கலைஞர் ஆதரவாளர்கள், பா.ஜ.க ஆதரவாளர்கள்
என கட்சி அபிமானிகள் தீவிர இலக்கியத்துக்குள்ளேயே இருக்கிறார்கள். நாளை மனுஷ்யபுத்திரன்
அதிகார பூர்வமாக கட்சியில் சேர்ந்தால் அவரையும் விட்டு விடுவார்கள். இப்போதைக்கு இது
துரோகம் நாணயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை. உணர்ச்சிகரமான முள்பொதிந்த பிரச்சனை. இது தானே
ஆற வேண்டும்.
மனுஷ்யபுத்திரன் இன்னும் அதே நபர்
தான் என்பது என் அவதானிப்பு. அவர் தன் நிலைப்பாட்டை முழுக்க மாற்றிக் கொண்டதாக எந்த
அரசியல் தோரணைகளையோ பதிவுகளையோ அவர் முன்வைக்கவில்லை. அவரது அடுத்த காலடி எத்திசையில்
என நமக்குத் தெரியாது. பொறுமை காப்போம். ஒரு சின்ன வாழ்த்துப் பேச்சை வைத்து நாம் போர்
முழக்கம் செய்ய வேண்டியதில்லை. நாளை அவர் உண்மைக்கு மாறாக எழுதினால் அப்போது அவரை மறுத்து
பேசுவோம். அதுவரை அவரை உங்களது அனுமானங்களின் அடிப்படையில் தாக்குகிறீர்கள். அது அத்தனை
நியாயமானதல்ல.
கலைஞரின் ஈழம் சார்ந்த பெருந்தவறை
மனுஷ்யபுத்திரன் இதுவரை மறைத்ததோ கண்டிக்க மறுத்ததோ இல்லை. இப்போது கலைஞரின் குற்றத்துக்கான
சவுக்கடியை ஏன் அவரை வாழ்த்திய இன்னொரு மனிதன் மீது வீசுகிறீர்கள். இந்த ஆவேசமான ஒழுக்கவாதம்
ஆபத்தானது.
இது ஒரு பக்கம் இருக்க தனிப்பட்ட
முறையில், மனுஷ்யபுத்திரன் அரசியலில் பிரவேசித்தாலோ அல்லது அதிகாரபூர்வமான பதவிகளை
அடைந்தாலோ நான் மகிழ்ச்சி அடைவேன். நாம் ரொம்ப காலமாக இதைத் தானே வேண்டி வந்திருக்கிறோம்.
ஒரு அறிவார்ந்த நல்லவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று. இதோ ஒருவர் உங்கள் முன் அந்த
இலக்கை நோக்கி வரும் போது ஏன் கற்களை பொறுக்க துவங்குகிறீர்கள். வரலாற்றில் எப்போதும்
நம்மை நேசிக்கிறவர்களை நாம் வெறுக்கத் தான் வேண்டுமா?
