”காதலா காதலாவில்” கமல் நவீன ஓவியத்தை
கிடைக்கிற சாக்கிலெல்லாம் கிண்டல் பண்ணி இருப்பார். ஆனால் அது வெளியே இருப்பவரின் ஆழமற்ற
கிண்டல்.
நவீன ஓவியங்கள் அரூபமான குறியீட்டு மொழியை பயன்படுத்துகின்றன. அது இன்று புழக்கத்தில்
உள்ள பாணி. தொடர்ந்து ஒருகாலத்தில் வெளி உலக பொருட்களை அப்படியே நகல் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அது போதாது எனப் பட அரூப ஓவியங்கள் வரைய துவங்கினார்கள். ஆனால் ஓவியங்களை வெளியே இருந்து
கவனிக்கும் நமக்கு அது ஒரு அபத்தமாக தோன்றியது. ஆனால் அரூப ஓவியங்களின் பின்னாலும்
கராறான விதிமுறைகள், மரபு உள்ளது. இதை அறிகிறவர்களுக்கு கமலின் பகடி அருவருப்பாகவே
இருக்கும்.
ஓவியம் மட்டுமல்ல எந்த கலைவடிவமும்
பொதுவில் இருந்தாலும் அது முழுக்க பொதுவில் இருப்பதில்லை. அதனால் அதன் நடப்பியல் பயன்
என்ன என்ற கேள்வியும், அது புரியவில்லை என்கிற புகாரும் எழுந்தபடியே இருக்கும். மதத்துக்கும்
இது நேரும். அப்போது கடவுளை கும்பிட்டால் நல்லது நடக்கும் என்ற எளிமைப்படுத்தல் மக்களுக்கு
ஆறுதல் தரும். ஆனால் மதத்தை நன்கு கற்றவர்கள் இந்த புரிதல் மதத்தின் தேடலுக்கு நேர்
எதிரானது என அறிவர். பல இறைஞானிகள் கடவுளிடம் இருந்து எந்த நடப்பியல் பயனும் இல்லை
என கூறி இருக்கிறார்கள். உடனே நம் மக்கள் பரவாயில்லை சாமியை கும்பிட்டால் அடுத்த ஜென்மத்திலாவது
எதாவது நடக்கும் என ஆறுதல் கொள்வார்கள். கர்த்தர் குஷ்டரோகியை சொஸ்தமாக்குவது எல்லாம்
குறியீட்டுக் கதைகள். ஆனால் இன்று கிறுத்துவ பிரச்சார மேடைகள் சொஸ்தமாக்கலை நேரடியான
மருத்துவ சிகிச்சை என்கிற நிலைக்கு எடுத்துப் போவதையும் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களை
கர்த்தரைக் கொண்டு தீர்க்கப் பார்ப்பதையும் பிரதானமாக கொண்டுள்ளதை பார்க்கலாம்.
ஒதுங்கி இருக்கும் கலைகளில் இந்த
சமரசம் நடப்பதில்லை. அதனால் அவை தொடர்ந்து தாக்கப்படுகின்றன.
இலக்கியம், தத்துவம் படித்தால்
என்ன பயன் என கேட்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். இது ஆத்மார்த்தமான கேள்வி அல்ல. ஒரு
மறுப்புக்கேள்வி. கலை இலக்கிய தேடலினால் எந்த நடப்பியல் பயனும் இல்லை. நடப்பியல் ஞானம்
தான் வாழ்க்கையை நன்றாக வசதியாக வாழ பயன் தரும். ஆக எதற்கு கலை இலக்கியம் என்பது இவர்களின்
தொடர் வாதம். இந்த கேள்வி கேட்பவர்களிடமே ஒரு உள்முரண்பாடு இருக்கிறது. கலை இலக்கியம்
உங்களுக்கு அவசியம் இல்லையென்றால் அதைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை எடுத்து பகடி செய்கிறார்கள்?
கேள்வி கேட்கிறீர்கள்?
ஆக உங்கள் பிரச்சனை கலை இலக்கியம்
ஒன்று உங்களுக்கு பிடிக்கவில்லை, அடுத்து புரியவில்லை என்பது. அதை அறிவதற்கான முயற்சி
எடுக்கவோ பயிற்சி கொள்ளவோ நீங்கள் தயாராக இல்லை. இது பாதிரியார்களும் சாமியார்களும்
சதா செக்ஸை பற்றி கவலைப்பட்டு மறுப்பதை போன்றது. ஒரு விசயம் உங்களுக்கு தேவையில்லை
என்றால் அது உங்கள் மனப்பரப்பிலே இருக்கக் கூடாது. அதை முழுக்க உதாசீனித்து நகர்ந்து
விடுவீர்கள். ஆனால் நீங்கள் கலை இலக்கிய ஆர்வலனின் இன்னொரு நாணயப்பக்கமாகவே சதா இருந்து
கொண்டிருக்கிறீர்கள். அசலான நாத்திகன் கடவுளை மறுப்பது பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்க
மாட்டான்.
உங்களிடம் மற்றொரு கேள்வி கேட்கிறேன்.
ஏதோ ஒரு அழகியல் வேட்கை, பாட்டு கேட்பது, சினிமா பார்ப்பது, பெண்ணை ரசிப்பது என உங்கள்
வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கிறது. இதனால் எல்லாம் என்ன நடப்பியல் பயன் அல்லது
ஞானம் கிடைக்கப் போகிறது? ஏதும் இல்லை. ஒரு மகிழ்ச்சி, நிம்மதியை தவிர. ஏன் ஐந்து வருடம்
பத்து வருடம் போராடி ஒரு பெண்ணை காதலித்து மணக்கிறார்கள்? அதை விட எளிதும் வசதியானதும்
சொந்த சாதியில் அப்பா அம்மா பார்த்து கட்டி வைக்கிற அழகான பணக்கார பெண்ணுடன் வாழ்வது
தானே? ஆக வாழ்க்கை நடப்பியல் மட்டும் அல்ல. அதைக் கடந்து ஒரு தேடல், அது தரும் நிம்மதி
எல்லாருக்கும் வேண்டி இருக்கிறது. வெவ்வேறு நிலைகளில்.
உங்களுக்கு பிடிக்காத காரியங்கள்
மீது சேற்றை வாரி அடிக்காதீர்கள். அதில் ஈடுபட ஒரு சிறுபான்மையினர் எல்லா காலத்திலும்
இருந்து கொண்டிருப்பார்கள்.
கலை இலக்கியம் ஒரு சமூக அந்தஸ்தாக
மாறுவது வேறு விசயம் .அப்போது நீங்கள் அதை பகடி செய்யலாம். அல்லது உங்களையே கூட கலை
இலக்கியவாதிகளாக காட்டிக் கொள்ளலாம்.
