இந்தியாவில்
கிரிக்கெட் ஒரு சிறுபகுதியினரால் தான் பார்க்கப்படுகிறது. இந்தியா விளையாட்டு பண்பாடு
கொண்ட நாடே அல்ல. ஆனாலும் சச்சினின் இறுதி ஆட்டம் மொத்த நாட்டாலும் கொண்டாடப்பட்டது.
கிரிக்கெட் நுணுக்கங்கள் அறியாதோரும் கண்ணீருடன், தாளாத வலியுடன் அவருக்கு விடையளித்தளனர்.
பிரிவுரையில் சச்சின் தான் சிறுவயதில் கிரிக்கெட் ஆடி களைத்து தூங்குகையில் சாப்பாடு
ஊட்டிய அத்தையை பற்றி குறிப்பிடுகையில், தனது முதல் மட்டையை வாங்கித் தந்த அக்காவைப்
பற்றி கூறுகையில், அம்மாவை, அப்பாவை நினைவுகூரும் போது மைதானத்தில் கூடியிருந்த, டி,வி
முன் வீற்றிருந்த எண்ணற்றோரும் கண் கலங்கினர்.
வெளிநாட்டு பாணியில் இந்திய பார்கள்
சச்சின் குறித்து விநாடிவினா நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு இலவச மது என அறிவித்தன.
சச்சின் தன் இறுதி ஆட்டத்தை துவங்கிய அந்த சில மணிநேரங்கள் பல நிறுவனங்கள் இந்தியா
முழுக்க தம் ஊழியர்களை வேலையை நிறுத்தி காண்டீன் டிவிகள் முன் குவிய அனுமதித்தன. அமீர்கான்
போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் படப்பிடிப்பை ரத்து செய்து மீண்டும் மைதானம் நோக்கி
விரைந்தனர். சச்சின் ஒரு 14 வயது பையனாக தனது சாரதா விதயாஸ்ரம் பள்ளிக்காக சதம் அடித்த
போது பள்ளி தலைமை ஆசிரியர் அதை ஒலிபெருக்கியில் அறிவித்து மொத்த பள்ளிக்கும் விடுப்பு
அளித்தார். மொத்த மாணவர்களும் சச்சினைக் காண மைதானத்துக்கு விரைந்தனர். இதோ இப்போது
சச்சின் விடைபெறும் இந்த வேளையில் ஒரு சின்ன பள்ளிக்கூடத்துக்கு பதில் மொத்த இந்தியாவுக்கும்
லீவு விட்டாயிற்று. நாமெல்லாம் அந்த மாமனிதனின் இறுதி அவதாரம் ஒன்றை தரிசிக்க வேலைகளை,
அன்றாட வாழ்க்கையின் அற்பத்தனங்களை சில நிமிடங்கள் மறந்து விட்டு மௌனமாகிறோம். அந்த
சில நிமிடங்கள் மொத்த நாடும் ஒருவிதத்தில் ஸ்தம்பித்தது. கிரிக்கெட் பார்க்காதவர்களும்
கூட ஏதோ ஒரு மகாசம்பவம் நடப்பதை உணர்ந்திருந்தனர். ஐரோப்பிய நாடொன்றில் வெற்றி வாகை
சூடி வந்த ஒரு ராணுவ தளபதிக்கான அன்பும் மரியாதையும் இது. சச்சின் அந்த இறுதி தருணங்களில்
மொத்த இந்தியாவுக்குமான சிறந்த மகனாக, தம்பியாக, கணவனாக, மாணவனாக, நம் பண்பாட்டு வளர்ச்சியின்
பிரதிநிதியாக தோன்றினார். ஒரு கிரிக்கெட் வீரருக்கு ஏன் பாரத ரத்னா எனக் கேட்கும் பலருக்கு
இது தான் புரியவில்லை. இந்திய கூட்டுமனம் சாதிக்க நினைத்த இலக்குகளை அடைந்த, வாழ நினைத்த
வாழ்க்கையை வாழ்ந்த ஒரு மனிதராக நம் முன் நின்றார் சச்சின். சச்சினுக்கும் கிரிக்கெட்டுக்கும்
என்ன சம்மந்தம்? ஒருவேளை ஒன்றுமே இல்லை எனலாம்!
சச்சின்
தன் பங்குக்கு அந்த சில மணிநேரங்கள் இந்தியா-மே.இ தீவுகளுக்கான கிரிக்கெட்டோ அல்லது
ஒரு டெஸ்ட் போட்டியோ நடப்பதற்கானவை அல்ல என்பதை உணர்ந்து கொண்டார் – உலகம் முழுக்க
மக்கள் ஒரு மேதையின் இறுதிப் படைப்பின் வீச்சை காண்பதற்காக மட்டுமே காத்திருந்தனர்.
மொத்த உலகமும் தனக்கு மட்டுமேயான மேடை என அவர் அறிந்திருந்தார். தன் ஆகச்சிறப்பான ஆட்டங்களில்
நிரூபித்தது போல சச்சின் ஆடும் போது கிரிக்கெட்டுக்குள் மற்றொரு கிரிக்கெட் ஆடப்படுகிறது
என மீண்டும் அவர் நிகழ்த்திக் காட்டினார். அந்த எழுபது சொச்ச ஓட்டங்களை கண்ட போது
“இவரைப் போய் ஏன் ஓய்வு பெறச் சொல்கிறார்கள்?” என தர்க்கம் கடந்த வியப்பும் சின்ன கோபமும்
எழுந்தது. 40 வயதில் தனது பாதி திறமை மட்டுமே மிச்சம் கொண்ட நிலையிலும் கூட சச்சின்
விராத் கோலி, ரோஹித் ஷர்மாக்களை விட மேம்பட்டவர் தான். சச்சினின் 10% திறமையை தான்
கடவுள் கோலி போன்றவர்களுக்கு அளித்திருக்கிறார்.
“சச்சின் நீ போகத் தான் ஆக வேண்டுமா?” என நாமெல்லாம்
திரும்ப திரும்ப கேட்க நினைத்தோம். தனது திறன்கள் சோர்ந்து போன பின்னரும் தொடர்ந்து
ஆடின பல வீரர்கள் கிரிக்கெட்டில் உண்டு. தென்னாப்பிரிக்க அணித்தலைவர் ஸ்மித்தை சொல்லலாம்.
அல்லது ஆஸ்திரேலியாவுக்காக 35 வயதில் முதல் ஆட்டத்தை ஆடிய கிரிஸ் ரோஜர்ஸை சொல்லலாம்.
வேறொரு நாட்டில் வேறொரு சூழலில் சச்சின் ஐம்பது வயது வரை கூட ஆடலாம். இப்போதும் கூட
அவருக்கு விடைபெற மனமில்லை தான். ஆனால் தான் இதுவரை நிறுவியுள்ள அந்த உச்சபட்ச தரத்தை
இனி தன்னால் எட்ட முடியாது என அறிவார். அத்தரத்துக்கு கொஞ்சம் குறைவாக ஆடினாலும் ரசிகர்களின்
கடும் அதிருப்தியை சந்திக்க வேண்டி வரும் என அறிவார். தோனியோ கோலியோ ஒரு தொடர் முழுக்க
சொற்ப ஓட்டங்களில் வெளியேறினால் நாம் பொருட்படுத்த மாட்டோம். ஆனால் சச்சின் ஒரு எளிய
பந்தில் ஒவ்வொரு முறை வீழும் போது அது ரசிகனை காயப்படுத்துகிறது. இப்பந்துகளை தன் இளமையில்
சச்சின் நான்குக்கு அநாசயமாக விரட்டி இருப்பார் என அவன் அறிவான். காலம் தன் நாயகனின்
பிம்பத்தை மெல்ல மெல்ல சிதைப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது. சச்சினுக்கு என்றுமே
அவரே ஏற்படுத்திக் கொண்ட எதிர்பார்ப்பு தான் பெரும் பாரமாகவும் தடையாகவும் இருந்துள்ளது.
சச்சின் இப்போது ஆடும் தரத்தில் ரஹானே அல்லது ராயுடு ஆடலாம். ஆனால் சச்சின் அவ்வாறு
ஆடுவது நம் ரசிக மனதை காயப்படுத்துகிறது. சச்சினை தங்க வேண்டும் அதே அன்பு தான் அவரை
போகவும் சொல்லுகிறது.
சச்சின்
மெல்ல மெல்ல ஒருநாள் ஆட்டங்களில் இருந்து விலகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் சேவாகும்
காம்பிரும் ஒரு மிக பிரபல ஜோடியாக களமிறங்கி கவனத்தை அவரில் இருந்து திருப்ப சிறிது
காலம் உதவினர். ஆனால் சச்சினை மறப்பது அத்தனை எளிதல்ல. குறிப்பாக ஒரு ஆட்டத்தை அதன்
அழகியலுக்காக, நாடகியத்துக்காக, நுணுக்கங்களுக்காக பார்ப்பவர்களுக்கு சச்சின் இல்லாத
காலம் நிழல்கள் அடர்ந்த மாலைப் பொழுதாக தோன்றியது. சச்சினின் சிறப்பு அவர் அடித்த நூறு
சதங்களோ வென்று தந்த எண்ணற்ற ஆட்டங்களோஅல்ல. அவர் இல்லாவிட்டால் இன்னொருவர் அதை செய்திருக்க
முடியும். சொல்லப் போனால் தன் காலத்தில் சச்சினுக்கு இணையாக ஆட்டங்களை தனிப்பட்ட முறையில்
கங்குலி வென்றளித்தார். மேலும் இந்த ஓட்டங்களுக்கும், வெற்றிகளுக்கும் ஒரு கட்டத்தில்
வெறும் எண்களின் வரலாற்று முக்கியத்துவம் மட்டுமே இருக்கும்.
வித்தியாசம்
இது தான்: சச்சின் ஆடுகையில் ஒவ்வொரு ஓவரும் இன்னொரு தனி ஆட்டமாக, ஒரு ஆரம்ப மையம்
முடிவு கொண்ட கதையாக இருந்தது. காரணம் அவர் நடைமுறை பிரச்சனைகளை தன் கற்பனை மற்றும்
திறன் மூலம் எதிர் கொள்ள முடியும் என தயங்காமல் நம்பினார். உதாரணமாக, ரெய்னாவுக்கு
உயரப்பந்தை ஆடுவது பிரச்சனை என்றால் அதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி, எப்படி உயரப்பந்துக்கு
வெளியேறாமல் சமாளிப்பது என கவலைப்படுவார். ஆனால் சச்சின் நேர்மாறாக ஒரு சிக்கலான பந்தை
ஒரு வித்தியாசமான சவால் என்ற வகையில் மட்டுமே பார்ப்பார். ஷேன் வார்ன் விக்கெட்டை சுற்றி
வந்து கால்பக்கமாய் வீசிய போது அதை சச்சின் சிக்ஸ் அடிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகத்தான்
கருதினார். சச்சின் சிறுவயதில் இருந்தே கால்பக்க ஆட்டத்தில் பலவீனமானவர். அவருடைய ஆசான்
அச்சிரேக்கர் அவ்வாறுதான் பதினாலு வயது சச்சின் குறித்து ஒரு பத்திரிகையாளரிடம் தெரிவிக்கிறார்
“அவனுக்கு இன்னமும் கால்பக்கம் சரியாக பந்தை விரட்ட வராது” என்கிறார். தொண்ணூறுகளின்
ஆரம்பத்திலும் சச்சினுக்கு கால் பக்கமாய் வீசப்படும் இடதுகை சுழல்பந்து சிரமமாகத்தான்
இருந்தது. நசீர் ஹுசேன் தலைமையில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்த போது பெங்களூர்
டெஸ்டில் ஹுசேன் சச்சினுக்கு கால் பக்கம் தான் பொறி வைத்தார். ஆஷ்லி கைல்ஸைக் கொண்டு
காலுக்கு வெளியே கராறாக வீச வைத்தார். சச்சின் அன்று பொதுவாக மந்தமாக ஆடினாலும் கால்
பக்க சுழல்பந்துகளை சமாளிக்க பேடிஸ் ஸ்வீப் எனும் புதுவகை ஷாட் ஒன்றை பின்னர் அவர்
அறிமுகப்படுத்தினார். இன்றும் இந்த ஷாட்டை சச்சினளவுக்கு நுணுக்கமாக அடிக்கக் கூடியவர்கள்
மிகச் சிலர்தான் – ஜெயவர்தனே அவர்களில் ஒருவர்.
பேடில்ஸ்
வீப் இன்று அறிமுகப்படுத்தப்படும் ரிவர்ஸ் ஹிட் அல்லது தில்ஸ் கூப் போல் அபாயரமானது
அல்ல. டெஸ்ட் ஆட்டத்தில் நான்காவது அல்லது ஐந்தாவது நாள் ஆடுதளம் இளகலாகி கால்பக்கம்
ஆடுவது ஆபத்தாக மாறும். அப்போது இடது கை சுழலர் கால் பக்கம் வீசுவது கூட அதிரடி முறை
தான். ஸ்வீப் செய்தால் எட்ஜ் வாங்கி லெக் ஸ்லிப்பில் பிடிபடலாம். தடுத்தாடினால் கூட
சிலவேளை தெரியாமல் ஷார்ட் லெக்குக்கு எட்ஜ் கொடுக்க வாய்ப்புண்டு. இதை முறியடிக்க சச்சின்
பந்தை தரையோடு அணைத்து அடிக்கும் வண்ணம் மட்டையை விளக்கை பொத்தும் உள்ளங்கை போல் வைத்து
ஸ்வீப் அடிப்பார். சச்சினுக்கு இந்த ஷாட் தடுப்பாட்டமாகவும் அடித்தாடலாகவும் ஒரே நேரத்தில்
அமைந்தது. இதே போன்ற இன்னொரு ஷாட் தான் அப்பர் கட். உலகக்கோப்பை போட்டிகளில் ஷோயப்
மற்றும் கேடிக்கை அப்பர் கட் செய்து கதிகலங்க வைத்தது நினைவிருக்கும். ஒரு காலத்தில்
சச்சின் off பக்கம் விழும் உயரப் பந்துகளைக் கூட புல் செய்து ஆடிக் கொண்டிருந்தார்.
ஆனால் கடையும் மத்து போல் இடுப்பை மட்டும் திருப்பி அடிக்கும் அவரது புல் ஷாட் ஸ்டைல்
காரணமாக முதுக்காயம் ஏற்பட அவருக்கு ஒரு புது ஷாட் தேவைப்பட்டது. அதுதான் அப்பர் கட்.
சச்சின்
அளவுக்கு நீண்ட காலம் ஆடியவர் மட்டுமல்ல தொடர்ந்து நல்ல ஆட்டநிலையில் நெடுங்காலம் இருந்தவர்களும்
கிட்டத்தட்ட யாரும் இல்லை எனலாம். அதற்கு முக்கிய காரணம் அவர் ஒவ்வொரு காலகட்டத்திலும்
தன் குறைபாடுகளுக்கும் மாறி வரும் சூழலுக்கும் ஏற்றபடி தன் ஆட்டத்தை தகவமைத்து வந்தது
தான். இருபது வயது சச்சின் ஆடுவதை கவனித்தால் அவர் முன்னங்கால் பின்னங்கால் ஆட்டத்துக்கு
கியர் மாற்றும் போது வெகுவாக கால்களை முன்னும் பின்னுமாய் திராவிட் போல் நகர்த்துவதை
பார்க்கலாம். இவ்வாறு வெகுவாக முன்னேயோ பின்னேயோ கால் மாற்றுவது பந்தை சந்தித்து விரட்டுவதற்கான
மைக்ரோ நொடி அவகாசத்தை கணிசமாக தின்று விடும். சரளத்தையும் பாதிக்கும். திராவிடால்
half volley பந்துகளை சரியாக விரட்ட முடியாமல் போவது இவ்வாறு அவர் ஊஞ்சலாக முன்னும்
பின்னும் போய் பந்தை சந்திப்பதனால் தான். ஆரம்பத்தில் சச்சினுக்கு அருமையான பார்வைத்திறனும்,
வேகமான உள்ளுணர்வு சார்ந்த அசைவுகளும் இருந்ததால் இது அவரை அதிகம் பாதிக்கவில்லை. ஆனால்
பிற்பாடு சச்சின் ஒரு சின்ன மாறுதல் செய்தார். அழகான மாறுதல் இது. தன் காலாட்டத்தை
குறிப்பிட்ட நிலையிலானதாக இல்லாமல் நடுநிலையாக வைத்துக் கொண்டார். பாலிஷான தரையில்
வழுக்கி விளையாடும் குழந்தைகளைப் போன்று, பந்து முன்காலில் விழும் போது சின்ன வழுக்கலுடன்
காலை முன்னே வைத்து ஆடுவது, அல்லா விட்டால் சட்டென பின்னால் வழுக்கி போய் வெட்டி ஆடுவதும்
சச்சினுக்கு அனாயசமான விளையாட்டாகியது.
இதே போன்று
தான் ஆரம்பத்தில் சச்சினின் மட்டையாட்ட நிலையமைதியும். ஆரம்பத்தில் அது சேவாக்கை போன்று
திறந்ததாக இருந்தது. இது off பக்கம் பிரமாதமாக பந்தை நுட்பமான இடைவெளிகளில் எல்லாம்
விரட்ட உதவியது. ஆனால் சேவாக்கை போலவே இது சச்சினை உள்வரும் வேகப்பந்துக்கு எளிதில்
இரையாக்கியது. தொண்ணூறுகளில் சச்சின் திடீரென சிலரது பந்துகளுக்கு பவுல்டாவார். குறிப்பாக
பாகிஸ்தானின் அப்துல் ரசாக் அவரை சிலமுறை தொடர்ந்து இவ்வாறு வீழ்த்தினார். தொண்ணூற்று
எட்டில் மே.தீவுகளில் முதல் டெஸ்ட் ஆடிய போது கோர்ட்னி வால்ஷ் off பக்கம் சில களத்
தடுப்பாளர்களை விலக்கி வெற்றிடத்தை உருவாக்கினார். பின்னர் தொடர்ந்து off குச்சிக்கு
வெளியே வீசி சச்சினை கவர் பகுதியில் அடிக்கத் தூண்டினார். சச்சின் ஒரு நான்கு அடித்து
அடுத்த பந்து உள்வர பவுல்டானார். இதே போலத் தான் சச்சினின் மட்டையை உயரமாய் தூக்கிப்
பிடித்த பாணி. சச்சினின் தாக்கத்தில் பின்னர் கணிசமான மும்பை அணி மட்டையாளர்கள் இப்படியாய்
உயரமாய் மட்டையை தூக்கிப் பிடித்திருப்பார்கள். வினாயக் மானே, வாசிம்ஜாபர், ரகானேவில்
இருந்து ரோஹித் ஷர்மா வரை. உயரத்தில் இருந்து வளைவாக கீழ் வரும் மட்டை பந்தை சரியான
மைக்ரோ நொடியில் சந்திக்கையில் அபாரமான டைமிங்கும் வலுவும் கிடைக்கும். இந்த பாணியின்
ஒரு குறை பந்து தாழ்வாக வரும் போது அல்லது சட்டென்று எதிர்பாராமல் வேகம் குறைகிற போது
சமநிலை குலைந்து ஷாட் தவறாகும் என்பது. இன்று கூட சச்சின் தாழ்வாக வரும் பந்தை எதிர்கொள்ள
தவறும் போது சமநிலை குலைந்து ஆடுதளத்திலேயே தவளை அமர்வது போல் விழுந்து விடுவதை பார்க்கலாம்.
மெத்தனமான ஆடுதளங்களில் சச்சினை விட கங்குலி நன்றாக ஆடக் கூடியவராக இருந்தார். அதற்கு
கங்குலியின் தாழ்வாக மட்டையை பிடிக்கும் பாணி ஒரு காரணம். இன்றும் ரோஹித் ஷர்மா மற்றும்
யுவ்ராஜ் சிங் இத்தகைய உயரப் பிடிக்கும் பாணி காரணமாய் சுழல்பந்து வீச்சுக்கும் மெதுவாக
வரும் பந்துகளுக்கும் சமநிலை இழந்து தடுமாறுவதை பார்க்கலாம். ஆனால் சச்சின் ரெண்டாயிரத்தின்
பிற்பகுதியில் இந்த இரண்டு குறைகளையும் களையும் வண்ணம் திறந்த பாணியை கைவிட்டு இன்னும்
நேராக குச்சிகளுக்கு சமமாக நிற்கத் துவங்கினார். இதே போல் மட்டையையும் கொஞ்சம் தளர்வாக
இடுப்புயரத்துக்கு மட்டும் தூக்கிப் பிடிக்கத் துவங்கினார். இதற்கு முன்னர் அவர் இடுப்புக்கு
மேலேயே மட்டையை கதை போல் தூக்கி நிற்பதை பழைய ஆட்டங்களில் பார்க்கலாம். இந்த சிறுமாற்றங்களால்
அவரால் முன்பு போல் off பக்க களத்தடுப்பை அப்பளமாக நொறுக்கி சிறுஇடைவெளிகளில் எல்லாம்
பந்தை விரட்ட முடியாமல் போனது. ஆனால் மாறாக இன்னும் நேராக V வடிவில் அடிக்க ஆரம்பித்தார்.
இவ்வகையான ஷாட்டுகளின் பல்வேறு வகை திரிபுகளை அவர் பயன்படுத்தியதால் எவ்வகையிலும் அவரது
ஆட்டம் குறைபட்டதாகவோ மாறி விட்டதாகவோ தோன்றவில்லை. ஆனால் திராவிட் முப்பது வயதான பின்
தனது புல் மற்றும் கால் பக்க விரட்டும் ஷாட்களை கத்தரித்த பின் அவரது ஆட்டம் பெருமளவில்
ஊனமாகிப் போனதை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். வயதாக வயதாக திராவிட் போன்றவர்கள்
தம் ஷாட்களை குறைத்து கொண்டு போனார்கள். ஆஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க்
முதுகுக் காயம் காரணமாக புல் ஷாட் ஆட முடியாத நிலையில் இன்று தொடர்ந்து உயரப்பந்துக்கு
அவமானகரமாய் ஷார்ட் லெக்குக்கு காட்ச் கொடுத்து வெளியேறுவதை பார்க்கிறோம். ஆனால் சச்சின்
தன்னால் ஒரு ஷாட் ஆட முடியாமல் போகையில் அந்த இடத்தில் ஒரு புது ஷாட்டை கொண்டு வருவார்.
எந்த குறைபாடும் அவரை இன்னொரு விதத்தில் மேம்படுத்தியது. சூழலுக்கும் உடல்நிலைக்கும்
ஏற்ற அவரது தகவமைவுகள் சீர்கேடாக அன்றி பட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மாறும் பரிணாமம்
போல் இருந்தன.
சச்சின்
அளவுக்கு புதுப்புது கட்டுப்பாடுகள் தன் முன் வரும் போதெல்லாம் மேலும் மேலும் சுதந்திரமாய்
ஆட முடிந்த இன்னொரு மட்டையாளர் இல்லை. அச்ரேக்கர் கணித்தது போல் சச்சின் தன் ஆட்டவரலாற்றின்
ஆரம்பத்தில் கால் பக்கம் பந்தை விரட்டுகையில் சமநிலை இழந்து காற்றில் அடித்தார் அல்லது
தவற விட்டு எல்.பி.டபிள்யு ஆனார். லெக் டிரைவ் ஆடும் கணிசமான மட்டையாளர்களை கவனியுங்கள்.
பந்து வந்து சேரும் முன்னே முன்னங்கால் கால்குச்சிக்கும் பின்னங்கால் நடுக்குச்சிக்கும்
போயிருக்கும். பந்தை தவற விட்டால் பெரும்பாலானோர் எல்.பி.டபிள்யோ தான். விதிவிலக்காய்
லஷ்மண், அசருதீன் போன்று ரப்பர் மணிக்கட்டு கொண்டவர்கள் தாம் குச்சிகளுக்கு வெளியே
நின்றபடியே சுலபமாக தம் மணிக்கட்டையை சுழற்றியே பந்தை off பக்கம் இருந்து கால் பக்கம்
எளிதாய் விரட்டக் கூடியவர்கள். சச்சின் பின்னர் இந்த ஷாட்டையும் மெருகேற்றினார். சச்சினின்
ஆன்டிரைவ் கிரிக்கெட்டின் ஒரு அற்புதம். கணித நேர்த்தியும் எதிர்பாராத நொடியில் பந்தை
சந்திக்கும் அழகியலும் இணைந்த இந்த ஷாட்டையும் சச்சின் தனக்கே உரிய முறையில் ஆடுகிறார்.
இந்த ஷாட்டுக்காக அவர் பிறரைப் போல் குச்சிகளுக்கு குறுக்கே போவதில்லை. சிறிதளவு மட்டுமே
முன்னங்கால் கால்குச்சி நோக்கி உள்செல்ல ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டையை திருப்பி
பந்தை மிட் விக்கெட் அல்லது மிட் ஆனுக்கு செலுத்துவார்.
சச்சினை
உண்மையில் எவ்வளவு மிஸ் பண்ணுகிறேன் என்பதை உணர்ந்தது சேவாக் மற்றும் கம்பீரின் தொய்வு
மற்றும் வெளியேற்றத்தின் பின் ரஹானேவும் பார்த்திவும் இங்கிலாந்தில் துவக்க ஆட்டக்காரர்களாக
ஆடிய போது தான். இருவரும் பின்னங்காலில் அபாரமாக ஆடினர். ஆனால் பந்தை முழுநீளத்தில்
வீசிய போது முன்னங்காலுக்கு வர தயங்கினர். உலகில் கிட்டத்தட்ட எல்லா மட்டையாளர்களுக்கும்
இப்படியான ஏதாவது ஒரு குறைபாடு உண்டு. கெவின் பீட்டர்ஸனே கூட உயரப்பந்தை முன்னங்காலில்
சந்தித்து நேர்த்தியின்றி உரிமையாளரை இழுத்துக் கொண்டு ஓடும் நாயைப் போலத் தான் ஆடுவார்.
லாராவுக்கு அதிவேகப்பந்து ஆட வராது. ஆனால் குறையே இல்லாத கிரிக்கெட்டின் விவிலியம்
போல் தோன்றின ஒருவரை பார்த்து பார்த்து பழகி இந்தியர்களுக்கு ரஹானேவை திடீரென பார்க்கையில்
திடீரென ஒருநாள் ஆண்மைக்குறைவை சந்தித்த ஒருவனது மனநிலை ஏற்படுகிறது. அவனிடம் உனக்கு
வயதாகி விட்டது, இனிமேல் அப்படித் தான் என நீங்கள் ஆற்றுப்படுத்த முடியாது. 20 வருடங்களாய்
அவன் அப்பழுக்கற்ற ஒரு ஆட்டத்தை ஏதோ சாதாரணமான அன்றாட செயல் போல் பார்த்து பழகி விட்டான்.
சச்சினின்
இறுதிநாளில் Fakenews இணையதளம் இப்படி எழுதியது: “உங்கள் பிறந்தநாள் தேதி பற்றின தகவலை
வலைதொடர்பு தளங்களில் இருந்து மறைத்து விடுங்கள். சச்சினின் ஓய்வோடு உங்களுக்கு சட்டென்று
வயதாகி விட்டது”. அதோடு ஏழையும் ஆகி விட்டோம் எனலாம். இந்திய அணியில் சச்சினை விட சிறப்பாக
சுயேச்சையாய் ஒரு ஆட்டத்தை வெல்லக்கூடிய கோலி, தோனிகள் இருக்கலாம். ஆனால் ஆடவே முடியாத
பந்துகளையும், மீளவே முடியாத ஓவர்களையும் தன்னந்தனியாய் ஒருவர் சமாளித்து வெல்வதை,
ஆட்டநிலை மற்றும் பிற புள்ளிவிபரங்களை தாண்டி ஒரு ஆட்டத்துக்குள் மற்றொரு சம்மந்தமில்லாத
ஆட்டத்தை நிகழ்த்திக் காட்டுவதை இனி நம்மால் பார்க்க முடியாது. ஒரு ஹாஷிம் ஆம்லா அல்லது
பீட்டர்ஸன் சற்றுநேரம் நடைமுறை கட்டுப்பாடுகளை, விதிமுறைகளை மீறி கிரிக்கெட்டை ஒரு
தேவதைத் கதை போல நிகழ்த்திக் காட்டலாம். ஒருவர் எல்லா அற்புதங்களும் சற்றுநேரம் தான்
நிகழ முடியும். ஆனால் ஒருவர் பௌதிக விதிகளை தொடர்ந்து மீறுவதை ஒரு வாடிக்கையாக இரண்டு
மூன்று தலைமுறைகளுக்கு காட்டுவதை வெறும் குழந்தை விளையாட்டு என வியப்பாக எல்லாவற்றையும்
மறந்து பார்த்திருப்பது இனியும் சாத்தியப்படாது!
இந்திய
கிரிக்கெட்டின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு டி.வி ஒளிபரப்பு ஒரு முக்கிய காரணமே. ஆனால்
டி.வியில் நாம் சச்சினின் முழுமையான விஸ்வரூபத்தை ஒருக்காலும் தரிசிக்க முடியாது. ஒரு
செஸ் பலகையின் காய்களைப் போல் சச்சின் ஆடுகளத்தில் எதிரணியின் களத் தடுப்பாளர்களை நகர்த்தி
விளையாடுவதை பார்க்க நாம் மைதானத்துக்கு தான் போக வேண்டும். டி.வியின் சதுர வெளி சச்சினுக்கு
அநீதி இழைக்கிறது எனத் தான் கூற வேண்டும். அதில் நாம் சச்சின் பந்தை சந்தித்து ஆடுவதை
மட்டுமே பார்க்கிறோம். ஆனால் ஒரு பந்தை சந்திக்க அவர் எவ்வளவு எளிதில் தயாராகிறார்
என்பதை, ஒரே பந்தை அவரால் எந்த கள அமைப்புக்கும் ஏற்றபடி விரட்ட முடிகிற அநாயசத்தை
நாம் டி.வியில் கவனிக்க முடியாது. உதாரணமாய் ஒரு off குச்சி நோக்கி முழுநீள பந்தை சச்சின்
மிட் off நோக்கி அடிக்கலாம். அங்கு ஒரு களத்தடுப்பாளர் அனுப்பப்படுவார். அதே பந்தை
சச்சின் அடுத்து கவருக்கு தான் என்றல்ல நேராக கூட அடிப்பார். மனநிலை தோதாக இருந்தால்
கால் பக்கம் கூட சுலபமாக விரட்டுவார். சச்சினுக்கு களத்தடுப்பு அமைத்து அவரை தம் விருப்பப்படி
ஒரே பகுதிக்கு அடிக்க வைப்பது எந்த எதிரணி தலைவருக்கும் சாத்தியமில்லாதது. ஆனால் கோலியை
எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு வெட்டி ஆடும் ஷாட் வராது. குறைநீளத்தில் off பக்கம்
கொஞ்சம் உயரமாய் வைடாய் வீசினால் திரும்பத் திரும்ப பந்தை ஷார்ட் கவர் பகுதியில் களத்தடுப்பாளர்
நோக்கியே அடித்துக் கொண்டிருப்பார். இப்படி அவரை கட்டுப்படுத்த முடியும். கணிசமான மட்டையாளர்கள்
இது போல் தம்மால் அடிக்க முடியாத பந்துகளுக்கு தயாராகவே இருப்பார்கள். அடிக்கக் கூடிய
பந்துக்காக காத்திருப்பார்கள். சச்சின் தான் அடிக்க வேண்டிய நேரத்துக்காக மட்டுமே காத்திருப்பார்.
பந்து, நீளம், திசை, வேகம், சுழல் இவையெல்லாம் பொருட்டே அல்ல. சச்சின் சுயநலமானவர்
என நமக்கு அடிக்கடி ஐயம் ஏற்பட இந்த அதிசாமர்த்தியம் ஒரு காரணமாக இருக்கலாம். கிரிக்கெட்டின்
பெரும்பாலான பௌதிக விதிமுறைகள் அவரை கட்டுப்படுத்தாது என்பதால் அவர் தனக்கான வேகத்தில்,
திட்டத்தின் படி ஆடுவார். சில வேளை அவர் ஷாட்களை ஆடுகிற முறையும் தருணமும் நமக்கு பொறுப்பற்றதாக
தோன்றலாம். குறிப்பாக சொதப்பும் போது. அன்றாட வாழ்வின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு
தெரிகிறவர்களை பொதுவாக சுயநலவாதிகள், துரோகிகள் என்று தானே அழைப்போம்! சச்சின் என்ன
விதிவிலக்கா? தம்மை மீறிய எதையும் சந்தேகிப்பது தானே மானிட குணம்!
சச்சினின்
ஓய்வுடன் கிரிக்கெட் வெறும் எண்களும் குறிப்புகளும் உள்ள நாட்காட்டியை போல் ஆகி விட்டது.
“இவ்வளவு தான் செய்ய முடியும்” என யாராவது சொன்னால் இனி மறுயோசனை இன்றி ஏற்கத் தான்
வேண்டும். இனி யாரும் கிரிக்கெட் மைதானத்துக்குள் பதாகைகளில் கடவுளின் பெயரை குறிப்பிட
மாட்டார்கள். கடவுள் இல்லாத உலகம் சரியானதாகவும், அதேவேளை சோர்வானதாகவும் இருக்கும்.
நன்றி: உயிர்மை, நவம்பர், 2013

