வெளியே அங்குமிங்கும் நடந்தபடி அதைப் பற்றி யோசித்தேன். கிடைத்ததிலேயே
ஆக நீளமானது அக்கடிதம். பொதுவாக இத்தகைய கடிதங்கள் “மன்னிக்கவும் இது எங்கள்
தரத்தில் இல்லை” என்றோ “மன்னிக்கவும் இதை பயன்படுத்த முடியவில்லை” என்றோ
இருக்கும். அல்லது பெரும்பாலும் வழக்கமான அச்சிட்ட நிராகரிப்பு கடிதம் தான்.
ஆனால் இது தான் மிக நீளமானது, கிடைத்ததிலேயே ஆக நீளமானது. ”ஐம்பது
தங்கும் விடுதிகளில் என் சாகசங்கள்” என்கிற என் கதைக்கானது அது. ஒரு விளக்குக்கம்பத்தின்
கீழ் போய் நின்று அந்த சிறு கடிதத்தை எடுத்து திரும்ப வாசித்தேன் –
அன்புக்குரிய திரு.புக்காவஸ்கி:
ஏற்கனவே பிற கதைகளுக்கு சொன்னது போல் இக்கதையிலும் இருக்கிறது. மிக
அற்புதமான விசயங்களுடன், மிகைப்படுத்தி வழிபடப்படும் விபச்சாரிகள், தூங்கி எழுதும்
வாந்தி எடுக்கிற காட்சிகள், மானுட வெறுப்பு, தற்கொலை சிலாகிப்பு ஆகிய எந்த
வாசகப்பரப்பு கொண்ட பத்திரிகைக்கும் ஒவ்வாத பிற விசயங்களும் சேர்ந்த கலவையாக
உள்ளது. மேலும் இது ஒரு குறிப்பிட்ட வகையான ஆள் குறித்த ஒரு வாழ்க்கை வரலாறு
மட்டும் தான்; இதை படைப்பாக மாற்ற நீங்கள் போதுமான முயற்சி எடுக்கவில்லை. ஒருவேளை
என்றாவது இதை நாங்கள் பிரசுரிக்கலாம், ஆனால் எப்போது என்று கூற முடியாது. அது
உங்களைப் பொறுத்து உள்ளது.
அன்புடன்
விட் பர்னெட்
ஆமா எனக்குத் தெரியும் இந்த கையெழுத்தை: அந்த ’வ’ ‘இ’யோடு வளைந்து,
‘ப’ பக்கத்திற்கு கீழே தொங்கும் விதமாய் இழுக்கப்பட்டு எழுதப்பட்ட விதம்.
கடிதத்தை பாக்கெட்டில் இட்டு விட்டு தெருவில் இறங்கி நடந்தேன். சந்தோஷமாக
உணர்ந்தேன்,
நான் ரெண்டு வருடங்களாகத் தான் எழுதுகிறேன். ரெண்டே வருடங்கள்.
ஹெமிங்வேக்கு பத்து வருடங்கள் பிடித்தது. ஷேர்வுட் ஆண்டர்சனுக்கு படைப்புகள்
பிரசுரம் ஆக ஆரம்பித்த போது வயது நாற்பது.
நான் குடியையும், விபச்சாரிகளையும் கைவிட வேண்டியது தான் போல. விஸ்கி
கிடைப்பது எப்படியும் சிரமமாகத் தான் இருந்த்து; வைன் குடித்தால் வயிறு வலித்தது.
ஆனால் மில்லி – ஆம் மில்லியை கைவிடுவது இதையெல்லாம் விட சிரமம், ரொம்ப சிரமம்.
...ஆனால் மில்லி, மில்லி நாம் கலையை நினைத்துப் பார்க்க வேண்டும்
அல்லவா. தஸ்தாவஸ்கி, கார்க்கி ரஷ்யாவுக்கு; இப்போது அமெரிக்காவுக்கு ஒரு கிழக்கு
ஐரோப்பியனை தேவையுள்ளது. பிரவுன்களாலும், ஸ்மித்துகளாலும் அமெரிக்கா களைத்து விட்டது.
பிரௌன்களும் ஸ்மித்துகளும் நல்ல எழுத்தாளர்கள் தாம், ஆனால் அவர்களைப் போல் ஏராளம்
பேர் உள்ளார்கள்; எல்லோரும் ஒரே போன்று எழுதுகிறார்கள். ஒரு கிழக்கு ஐரோப்பியனின் குழப்பமான
இருண்மையும், நடைமுறைக்கு ஒவ்வாத மனசஞ்சாரங்களும், அடக்கி வைக்கப்பட்ட இச்சைகளும்
அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது.
மில்லி, என் மில்லி, உன் வடிவழகு போதுமானபடி கச்சிதமானது. உன் இடையை
அடைந்ததும் மொத்த உன் உடலும் இறுக்கமான வடிவு பெறுகிறது. பூஜ்யத்துக்கு கீழ்
குளிர் செல்லும் சீதோஷ்ண நிலையில் கையுறை அணிவதை போல் எளிதானது உன்னுடன் கூடுவது.
உன் அறை எப்போது வெதுவெதுப்பாய் உற்சாகமாய் இருக்கும்; எனக்குப் பிடித்தமான
இசைத்தட்டுகளும், சீஸ் சாண்ட்விச்சுகளும் இருக்கும். அதோடு மில்லி, உன் பூனை,
நினைவுள்ளதா? அது குட்டியாய் இருக்கையில் நினைவுள்ளதா? நான் அதற்கு கை
குலுக்கவும், உருளவும் சொல்லித் தர முயன்றேன்; அது பூனை, நாயல்ல, அதனால் கற்றுக்
கொள்ள முடியாது என நீ சொன்னாய்; ஆனால் பாரேன் நான் கற்றுக் கொடுத்தேனே, இல்லையா
மில்லி? பூனை இப்போது வளர்ந்து விட்ட்து; குட்டி போட்டு தாயாகி விட்ட்து. ரொம்ப
நாளாய் நாம் நண்பர்கள். ஆனால் நம் உறவை துண்டித்தாக வேண்டும் மில்லி; பூனைகள்,
கட்டழகான உடல்கள், ஷைகோவஸ்கியின் ஆறாவது சிம்பனி. அமெரிக்காவுக்கு ஒரு கிழக்கு
ஐரோப்பியனை...
அந்நேரம் என் தங்கும் விடுதியின் வாசலை அடைந்து விட்டிருந்தேன்; உள்ளே
போக எத்தனித்த போது ஜன்னலில் வெளிச்சம் பார்த்தேன்: கார்சன் மற்றும் ஷிப்கி என்
மேஜை முன் எனக்கு பரிச்சமில்லாத யாருடனோ அமர்ந்திருக்கிறார்கள்.
சீட்டாடுகிறார்கள்; மேஜை நடுவே ஒரு பெரிய குடுவை நிறைய வைன். ஓவியர்களான அந்த
கார்சன் மற்றும் ஷிப்கி சல்வதார் டாலி போலா அல்லது ராக்வெல் போலா ஓவியம் தீட்ட என
முடிவு செய்ய முடியாமல் இருந்தார்கள். அதனால் முடிவு செய்யும் வரையிலான
இடைவெளியில் அவர்கள் கப்பல் துறைமுகங்களில் வேலை செய்தார்கள்.
பிறகு நான் ஒரு மனிதன் என் படுக்கையின் விளிம்பில் மிக அமைதியாய்
அமர்ந்திருப்பதை பார்த்தேன். அவருக்கு மீசையும், குறுந்தாடியும் இருந்த்து. எங்கோ
பார்த்த்து போலிருந்தார். புத்தகத்திலா, பத்திரிகையிலா, சினிமாவிலோ
பார்த்துள்ளேனா? அப்புறம் நினைவு வந்த்து.
நினைவு வந்த போது உள்ளே போகவா வேண்டாமா என குழப்பம் ஏற்பட்டது.
போனாலும், என்ன சொல்ல? எப்படி நடந்து கொள்ள? அப்படிப்பட்ட ஒருவரிடம் என்ன சொல்ல என
தீர்மானிப்பது எளிதல்ல. தவறான வார்த்தைகளை சொல்லாமல் இருக்கும்படி கவனமாக இருக்க
வேண்டும், எல்லாவற்றை பற்றியும் கவனமாக இருக்க வேண்டும்.
குடியிருப்பு பகுதியை சுற்றி ஒரு நடை போய் வர முடிவு செய்தேன்.
பதற்றமாய் இருக்கையில் அது உதவும் என எங்கோ படித்திருந்தேன். நாம் கிளம்புகையில்
ஷிப்கீ கோபத்தில் இரைவதையும், யாரோ டம்ளரை கீழே போடுவதையும் கேட்டேன். இது
சரிப்படாது.
முன்பே பேச வேண்டியதை திட்டமிட முடிவு செய்தேன். ”நான் நன்றாக் பேசக்
கூடியவன் அல்ல. நான் கூச்சபாவம் மிக்க, பதற்றமான ஆள். சொல்ல வேண்டியதை எல்லாம்
சேர்த்து எழுத்தில் வடிப்பேன். என் விசயத்தில் ஏமாற்றம் கொண்டிருப்பீர்கள் என
அறிவேன், ஆனால் நான் எப்போதுமே இப்படித் தான்”
அது போதும் என நினைத்தேன்; குடியிருப்பு பகுதியை ஒரு சுற்று முடித்ததும்
என் அறைக்கு நேரே போனேன்.
கார்சனும் ஷிப்கியும் போதையில் இருந்ததை கண்டேன்; அவர்களால் எந்த
உதவியும் இருக்காது. அவர்கள் அழைத்து வந்திருந்த சீட்டு விளையாடும் குள்ளனும்
மோசமான நிலையில் இருந்தான், எல்லா பணமும் அவன் பக்கமாய் குவித்து
வைக்கப்படிருந்த்து என்பது தவிர.
குறுந்தாடி நபர் படுக்கையில் இருந்து எழுந்தார். ”எப்படி இருக்கீங்க
சார்?”, அவர் கேட்டார்.
”நல்லா இருக்கேன், நீங்க?” அவருடன் கைகுலுக்கினேன். “நீங்க ரொம்ப
நேரமா ஒண்ணும் காத்திருக்க வில்லையே?”, நான் கேட்டேன்.
“அட இல்லை”
“அப்பிடியா”, நான் சொன்னேன், “எனக்கு அவ்வளவாக பேச வராது”
“குடிக்காத வரை தான், அப்புறம் அவன் மரை கழன்ற மாதிரி கத்த
ஆரம்பிச்சிருவான். சில நேரம் சதுக்கத்துக்கு போய் பிரசங்கம் செய்வான்; யாருக்கு
கேட்காட்டி பறவைகளிடம் பேசுவான்”, ஷிப்கி சொன்னான்.
குறுந்தாடிக்கார்ர் இளித்தார். அவருடையது ஒரு பதற்றமான இளிப்பு.
பார்த்தாலே தெரிகிறது, புரிதல் உள்ள மனிதர் தான்.
மிச்ச இருவரும் சீட்டாட்டம் தொடர்ந்தார்கள், ஆனால் ஷிப்கி நாற்காலியை திருப்பிப்
போட்டு எங்களை வேடிக்கை பார்த்தான்.
“நான் கூச்சமானவன், ரொம்ப டென்ஸனும் உண்டு” நான் தொடர்ந்தேன்,
“அதோடு...”
“டென்ஸன்னா பாஸ்ட் டென்ஸா இல்ல சர்க்கஸ் டெண்டா?”, ஷிப்கி கத்தினான்.
அது ரொம்ப கேவலமாய் இருந்தது, ஆனாலும் குறுந்தாடிக்காரர் மீண்டும்
புன்னகைத்தார்; எனக்கு நிம்மதியானது.
“நான் அதையெல்லாம் சேர்த்து சொற்களாய் வடிப்பேன், அதோடு”
“னைன் டென்தா அல்லது ப்ரிடென்ஸா?” ஷ்ப்கி கத்தினான்.
“அதோடு நீங்கள் என்னிடம் ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்பதை உறுதியாக
அறிவேன், ஆனால் நான் எப்பவுமே அப்படித் தான்”
“கேளுங்க ஐயா”, தன் நாற்காலியில் ஆடியபடி ஷிப்கி கத்தினான் “கேளுடா
குறுந்தாடி வச்சவனே”
“என்ன?”
“கேளு, நான் ஆறடி உயரம், எனக்கு சுருள் முடி, ஒரு கண் கண்ணாடியில்
ஆனது, என்னிடம் ஒரு ஜோடி சிவப்பு பகடைகள் உண்டு”
அவர் சிரித்தார்.
“நம்ப மாட்டியா அப்போ? என் கிட்ட சிவப்பு பகடைகள் இருக்குன்னு நம்ப
மாட்டே?”
ஷிப்கி நல்ல போதையில் இருக்கும் போது ஏனோ தன்னுடைய கண் ஒன்று
கண்ணாடிக் கண் என மக்களை நம்ப வைக்க முயல்வான். ஏதோ ஒரு கண்ணை காட்டி அது கண்ணாடி
கண் என அடம்பிடிப்பான். அக்கண்ணாடிக் கண்ணை செய்த்து அவன் அப்பா என்றும், அவர்
உலகிலேயே சிறந்த கண்ணாடி நிபுணர் என்றும், சீனாவில் அவரை ஒரு புலி கொன்று
விட்ட்தாகவும் கோருவான்.
தீடீரென கார்ஸன் கத்த ஆரம்பித்தான், “அந்த சீட்டை நீ எடுப்பதை
பார்த்தேன்! எங்கே இருந்தே எடுத்தே? இங்கே கொடு, இங்கே! அடையாளம்
குறிக்கப்பட்டிருக்கிறது, அடையாளம்! நான் நினைத்தேன்! நீ வேறு எப்பிடி
இவ்வளவு நேரம் ஜெயிக்க முடியும்? ஓ அப்போ அப்பிடியா!”
கார்ஸன் எழுந்து அந்த சீட்டு விளையாடும் குள்ளனை அவரது டையால் பற்றி
தூக்கினான். கார்ஸனின் முகம் கோபத்தில் நீலம் பாரித்திருந்த்து; டை இழுக்கப்பட
குள்ளனின் முகம் சிவப்பானது.
“என்னாச்சுப்பா,ஏய் ஏய் நிறுத்துப்பா, என்ன நடக்குது?”, ஷிப்கி
கத்தினான். “நான் பாக்குறேன், அட? அந்த கஞ்சாவை கொஞ்சம் கொடு”
கார்ஸன் முழுக்க நீலமாகி இருந்தான்; அவனால் பேசவே முடியவில்லை. ஒரு கை
டையில் பிடித்திருக்க, அவன் உதட்டில் இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு உஸ் உஸ்ஸென்று
வார்த்தைகளை விட்டான். குள்ளன் கரைசேர்ந்த ஒரு பெரும் அக்டொபஸ் போல் கைகளை தொங்க
விட்டான்.
“இவன் நம்மை ஏமாத்தீட்டான்!” கார்ஸன் சீறினான். “ஏமாத்தீட்டான்.
கள்ளச்சீட்டு வச்சு விளையாடினான், கடவுள் மேல் ஆணை, இவன் துரோகி”
ஷிப்கி குள்ளனுக்கு பின்புறமாய் நடந்து போய், தலைமயிரைப் பிடித்து
தலையை முன்னும் பின்னுமாய் இழுத்தான். கார்ஸன் டையை விடவில்லை.
“சொல்லு ஏமாத்தினியா? சொல்லு? வாயைத் திறடா!”, ஷ்பிகி முடியை
இழுத்துக் கொண்டே கத்தினான்.
அந்த குள்ளன் பேசவில்லை. கைகளை தொங்கப் போட்டபடி வியர்க்க
துவங்கினான்.
“வாங்க நாம் போய் எங்காவது பீரும் சாப்பாடும் சாப்பிடலாம்”, நான்
குறுந்தாடிக்கார்ரிடம் சொன்னேன்.
“இல்ல அது அவசியம் இருக்காது”, குறுந்தாடிக்கார்ர் சொன்னார்.
“நாயே!, பண்ணி!, எருமை மாடு!”
“இல்ல எனக்காக வாங்க”
“கண்ணாடிக் கண் உள்ளவன் கிட்ட இருந்து திருடப் பாக்கிறியா? உன்னை என்ன
பண்றேன் பாருடா நாயே!”
“நீங்க ரொம்ப கனிவானவர், எனக்கும் கொஞ்சம் பசிக்குது தான், நன்றி”,
குறுந்தாடிக்கார்ர் சொன்னார்.
“பேசுடா! பேசு! பண்ணி! ரெண்டே நிமிஷத்துக்குள்ள நீ பேசலண்ணா, ரெண்டே
நிமிஷம் தான், உன் சங்கை அறுத்துப் போடுவேன்”
“நாம உடனடியா போயிடலாம்”, நான் சொன்னேன்.
”சரி” என குறுந்தாடிக்கார்ர் சொன்னார்.
இரவில் அவ்வேளையில் உணவகங்கள் எல்லாம் மூடிப் போயிருந்தன;
அச்சிறுநகரத்துக்குள் போய் சேரவே ரொம்ப நேரம் பிடித்தது. அதனால் அவரை திரும்ப
அறைக்கு அழைத்து போக முடியவில்லை. மில்லியிடம் அழைத்து போவதை தவிர வேறு வழியில்லை.
அவளிடம் எப்போதும் நிறைய சாப்பாடு இருக்கும். குறைந்தது, அவளிடம் எப்போதும் சீஸ்
இருக்கும்.
நான் நினைத்தது சரி தான். அவள் எங்களுக்கு சீஸ் சாண்ட்விச்சும்
காப்பியும் தந்தாள். பூனை என்னை கண்டு கொண்டு மடியில் தாவி ஏறியது.
பூனையை தரையில் விட்டேன்.
“பாருங்க திரு.பர்னெட்”, என்றபடி நான் பூனையிடம் சொன்னேன் “கை
குலுக்கு!, கை குலுக்கு!”
பூனை அப்படியே இருந்த்து.
“தமாஷாக இருக்கிறது இல்லையா, அது எப்பவுமே நான் சொன்னா கேட்கும்”,
நான் சொன்னேன் “கை குலுக்கு!”
நான் பறவைகளிடம் பேசுவேன் என ஷிப்கி திரு.பர்னெட்டிடம் சொன்னது எனக்கு
நினைவு வந்தது.
“வா வா கை குலுக்கு!”
ஒரு முட்டாளைப் போல் உணர்ந்தேன்.
““வா வா கை குலுக்கு!”
பூனையின் கழுத்துக் கீழே கையை வைத்து என் மொத்த ஆற்றலையும்
பிரயோகித்து கேட்டேன் ““குலுக்கு!”
பூனை அப்படியே இருந்த்து,
நான் திரும்ப என் நாற்காலிக்கு சென்று சீஸ் சாண்ட்விச்சை தின்றேன்.
“பூனைகள் விநோதமானவை திரு.பர்னெட். நீங்க அது எப்போ எது பண்ணுமுன்னு
சொல்ல முடியாது. மில்லி, ஷைகோவஸ்கியின் 6வது சிம்பனியை திரு.பர்னெட்டுக்காக போடு”
இசை கேட்டோம், மில்லி வந்து என் மடியில் அமர்ந்தாள். சல்லடையான குட்டி
கவுன் ஒன்று மட்டும் அணிந்திருந்தாள். என் மீது சாய்ந்து விழுந்தாள். என்
சாண்ட்விச்சை பக்கத்தில் வைத்தேன்.
“இந்த சிம்பனியில் வரும் அணிவகுப்பு பகுதியை நீங்கள் கவனித்து
கேளுங்கள்”, நான் திரு.பர்னெட்டிடம் சொன்னேன், “நான் கேட்டுள்ளதிலேயே ஆகச்சிறந்த
இசைப் பகுதி அது. அதன் அழகு மற்றும் ஆற்றல் போக அதன் வடிவமைப்பும் கச்சிதம். என்ன
ஒரு புத்திசாலித்தனமான படைப்பு என நீங்கள் உணர முடியும்”.
குறுந்தாடி வைத்தவரின் மடியில் பூனை துள்ளி ஏறியது. மில்லி கன்னத்தோடு
கன்னம் ஒட்டினாள், கையை என் மார்பு மீது வைத்தாள். “எங்க போயிட்ட நீ செல்ல பையா?
மில்லி உன்ன ரொம்ப மிஸ் பண்ணினா தெரியுமா”
இசைத்தட்டு முடிந்த்து. குறுந்தாடிக்காரர் பூனையை கீழே இறக்கி விட்டு
எழுந்து இசைத்தட்டை திருப்பி போட்டார். அதற்கு பதில் அவர் ஆல்பத்தில் இருந்து
இரண்டாவது இசைத்தட்டை எடுத்து போட்டிருக்கலாம். திருப்பி போட்ட்தனால் இப்போது
இசையில் கிளைமேக்ஸ் சீக்கிரம் வந்து விடும். ஆனால் நான் ஒன்றும் சொல்லவில்லை;
இறுதி வரை கேட்டேன்.
“பிடிச்சிருந்துதா?”, நான் கேட்டேன்.
“அருமை, அருமை!”
பூனை தரையில் இருந்த்து.
“கை குலுக்கு! கை குலுக்கு!”, அவர் பூனையிடம் சொன்னார்.
பூனையை அவரிடம் கை கொடுத்த்து
“பாரேன்”, அவர் சொன்னார் “நான் சொன்னால் பூனை கை குலுக்குகிறது”
“கை குலுக்கு!”
பூனை உருண்டு காட்டியது.
“இல்லை, கை குலுக்கு! கை குலுக்கு!”
பூனை அப்படியே இருந்த்து.
அவர் தன் கையை அதன் கழுத்துக்கு கீழே கொண்டு சென்று அதன் காதில் பேசினார்,
“கை குலுக்கு!”
பூனை அவரது குறுந்தாடிக்குள் சரியாக கையை நுழைத்து நீட்டியது.
“பாத்தியா? நான் சொன்னதும் அது கை குலுக்கியது”, திரு. பர்னெட்
திருப்தி அடைந்த்தாய் தோன்றியது.
மில்லி என்னை இறுக்கினாள். “உம்மா கொடுடா செல்லம்”, அவள் சொன்னாள்
“உம்மா உம்மா”
“இல்லை”
“அடக் கடவுளே, உனக்கு என்ன பைத்தியமா, செல்லக் குட்டி? என்ன துக்கம்
உனக்கு? என்னவோ உன் மனசை அரிக்குது? மில்லி கிட்ட சொல்லும்மா! மில்லி உனக்காக
என்னவும் பண்ணுவா, செல்லம், உனக்கு அது தெரியுமில்லியா. என்னாச்சும்மா, உம்?”
“நான் இப்போ பூனையை உருள வைக்கப் போறேன்”, திரு.பர்னெட் சொன்னார்.
மில்லி என்னை இறுக்கி அணைத்து, என் மேல் விழிக்குள் உற்றுப்
பார்த்தாள். அவள் ரொம்ப சோகமாய், தாய்மையாக தெரிந்தாள், சீஸ் வாசனை அவளிடம்
அடித்த்து.
“உனக்கு என்ன பிரச்சனைன்னு மில்லிகிட்ட சொல்லும்மா”
“உருளு”, திரு.பெர்னெட் பூனையிடம் சொன்னார்.
பூனை அப்படியே இருந்த்து.
“கேளு”, நான் மில்லியிடம் சொன்னேன், “அதோ அங்க இருக்கிறாரு இல்ல அவர
பார்த்தியா?”
“ஆமா”
“சரி, அவரு தான் திரு.பர்னெட்”
“யாருப்பா அவரு?”
“பத்திரிகை ஆசிரியர். அவருக்கு தான் என் கதைகளை அனுப்புவேன்”
“ஓ உனக்கு சின்ன துண்டு கடுதாசி போடுவாரே அவரா?”
“நிராகரிப்பு கடிதங்கள்,
மில்லி”
“இருக்கட்டும். கேவலமான ஆளு அவன். அவனை எனக்கு பிடிக்காது”
“உருளு”. திரு.பர்னெட் பூனையிடம் சொன்னார். பூனை உருண்ட்து.
“பார்த்தியா”, அவர் கத்தினார். “நான் பூனையை உருள வைத்தேன்! இந்த பூனையை வாங்க
ஆசையாக இருக்கிறது! அற்புதமான பூனை!”
மில்லி என்னை இன்னும் இறுக்கி அணைத்தாள்; கண்களுக்குள் உற்றுப்
பார்த்தாள். அனாதரவாய் உணர்ந்தேன். வெள்ளிக்கிழமை காலை மீன்கடைக்காரரின் கவுண்டர்
பக்கமாய் ஐஸ் கட்டி மேல் கிடக்கும் உயிருள்ள மீனைப் போல உணர்ந்தேன்.
“கேளு”, அவள் சொன்னாள், “நான் நினைச்சா அவனை உன் கதையை போட வைக்க
முடியும். அத்தனை கதைகளையும் போட வைக்கட்டுமா நான்”
“நான் சொன்னா பூனை உருளுது பாரேன்!”, பர்னெட் சொன்னார்.
“இல்ல வேணாம் மில்லி, உனக்கு புரியல, பத்திரிகை ஆசிரியர்கள் களைத்து
போன வணிகர்களை மாதிரி அல்ல. பத்திரிகை ஆசிரியர்களுக்கு மனசாட்சி உண்டு”
“மனசாட்சியா?”
“ஆம் மனசாட்சி”
“உருளு!”, திரு.பர்னெட் சொன்னார்.
பூனை அப்படியே இருந்த்து.
“எனக்கு மனசாட்சி பத்தி எல்லாம் தெரியும்! நீ மனசாட்சி பத்தி
கவலைப்படாதே செல்லம், உன் எல்லா கதைகளையும் அவர போட வைக்கிறேன்”
“உருளு!”, திரு.பர்னெட் பூனையிடம் சொன்னார். ஆனால் ஒன்றும்
நடக்கவில்லை.
“இல்ல மில்லி, அது வேண்டாம்”
அவள் என்னை சுற்றி பற்றி இருந்தாள். மூச்சு விட சிரம்மாய் இருந்த்து; அவள்
எந்தளவுக்கு பருமன் என்றால் என் கால்கள் மரத்து போயின. மில்லி கன்னம் மேல்
கன்னத்தை தேய்த்தாள், என் மார்பின் மேல் கீழாய் தன் கையை தேய்த்தாள். “செல்லக்
குட்டி ஏதாவது சொல்லுடா!”
திரு.பர்னட் பூனை அருகே குனிந்து அதன் காதில் சொன்னார், “உருளு!”
பூனை தன் கையை அவரது குறுந்தாடிக்குள் நுழைத்து நீட்டியது.
“இந்த பூனைக்கு பசிக்கிறது என நினைக்கிறேன்”, என்றார் அவர்.
அப்படி சொன்னதோடு அவர் மீண்டும் தன் நாற்காலிக்கு திரும்பினார்.
மில்லி சென்று அவர் மடியில் அமர்ந்தாள்.
“எப்பிடி இந்த குறுந்தாடி இவ்வளவு க்யூட்டா இருக்கு”, அவள் கேட்டாள்.
“மன்னிக்க வேண்டும்”, நான் சொன்னேன், ”நான் கொஞ்சம் தண்ணீர் குடித்து
விட்டு வருகிறேன்”
நான் சென்று காலையுணவு மேஜைக்கு சென்று அதில் உள்ள பூ வேலைப்பாடுகளை
பார்த்தேன். என் நகங்களால் அவற்றை சுரண்ட முயன்றேன். மில்லியின் காதலை பகிர்ந்து
கொள்வது சீஸ் விற்பனை பிரதிநிதி, வெல்டர் போன்றவர்களுக்கே சிரம்ம், இவர் பாடு என்ன
ஆகப் போகிறதோ! இடை வரை சதை பிதுங்கும் மில்லி. நாசம், நாசம்.
அங்கேயே ரொம்ப நேரம் உட்கார்ந்து அந்த நிராகரிப்பு கடிதத்தை வெளியே
எடுத்து மீண்டும் படித்தேன். மடித்த இடங்களில் அழுக்கு சேர்ந்தும் இற்றும் அது
பழுப்பு நிறம் பெற்று வந்த்து. அதை இப்படி பார்ப்பதை விடுத்து உலர்ந்த ரோஜா போல்
புத்தகத்துள் வைக்க வேண்டியது தான்.
அதில் உள்ள விசயத்தைப் பற்றி யோசித்தேன். எப்பவுமே இதே பிரச்சனை தான்.
கல்லூரியில் கூட இந்த குழப்பமான இருண்மை பால் நான் கவரப்பட்டேன். சிறுகதை ஆசிரியை
என்னை ஒரு நாள் இரவுணவுக்கு அழைத்து சென்று வாழ்வின் அழகுகள் குறித்து என்னிடம்
உரையாற்றினார். நான் அவருக்கு அளித்த கதையில் பிரதான பாத்திரமான நான் ஒரு நாள்
இரவில் கடற்கரைக்கு சென்று கர்த்தரின் அர்த்தம், மரணத்தின் பொருள் பற்றி, எல்லா
விசயங்களிலும் உள்ள அர்த்தம், முழுமை, தாளலயம் பற்றி விசாரம் மேற்கொண்டிருந்தேன்.
இந்த விசாரங்களுக்கு நடுவே கண்கள் களைத்த ஒரு நடைபாதைவாசி என் கண்களில் மணலை அள்ளி
அடித்தபடி நடந்து வருகிறான். அவனிடம் பேசுகிறேன், ஒரு புட்டி மது வாங்கி
அருந்துகிறோம். தலை சுற்றுகிறது. அதன் பிறகு ஒரு விபச்சார விடுதிக்கு போகிறோம்.
இரவுணவுக்கு பிறகு, சிறுகதை ஆசிரியை தன் கைப்பையை திறந்து அந்த
கடற்கரை பற்றின கதையை வெளியே எடுத்தார். கர்த்தரின் அர்த்தம் பற்றின, அந்த
நடைபாதைவாசி வருகிற இட்த்தில் திறந்தார்.
“இதுவரை”, அவர் சொன்னார், “இது வரை ரொம்ப நன்றாக இருந்த்து, சொல்லப்
போனால் பிரமாதமாய் இருந்த்து”. பிறகு அவள் புதுப் பணக்காரரான கலை சார்ந்த
புத்திசாலித்தனம் கொண்டவருக்கு மட்டுமே உரித்தான அந்த முறைப்பை முறைத்தார்.
“மன்னியுங்கள், இதை சொல்வதற்கு என்னை மன்னியுங்கள்”, அவர் கதையின் கீழ்ப்பாதியை
தட்டி சொன்னார் “இந்த மேட்டர் இங்கே என்ன பண்ணுது?”.
ரொம்ப நேரம் என்னால் தனியாய் காத்திருக்க முடியவில்லை. நான் எழுந்து
முன்னறைக்கு சென்றேன்.
மில்லி அவரைச் சுற்றி இறுக்க படர்ந்திருந்தாள்; அவர் கண்களுக்குள்
பார்த்துக் கொண்டு இருந்தாள். அவர் பனிக்கட்டியில் மீன் போல் இருந்தார்.
நான் பிரசுர விசயம் பற்றி அவரிடம் பேச விருப்பப்படுவதாக அவள்
நினைத்திருக்க வேண்டும்.
“மன்னிக்கவும் நான் தலை கோத வேண்டும்” என்று விட்டு அறையில் இருந்து
வெளியேறினாள்.
“நல்ல பெண் இல்லியா திரு.பர்னெட்?”, நான் கேட்டேன்.
அவர் திரும்ப தன் பழைய நிலைக்கு உடம்பை திருப்பிக் கொண்டு தன் டையை
சரி செய்தார். “மன்னிக்கவும்”, அவர் சொன்னார், “என்னை ஏன் எப்பவும் திரு.பர்னெட்
என அழைக்கிறீர்கள்?”
“நீங்க தானே அது?”
“என் பெயட் ஹோப்மேன். ஜோசப் ஹோப்மேன். குர்டிஸ் லைப் இன்சுரன்ஸ்
கம்பெனியில் இருந்து வருகிறேன். உங்க தபால் அட்டை பார்த்து தான் வந்தேன்.”
“ஆனால் நான் தபால் போடவே இல்லியே.”
“எங்களுக்கு தபால் வந்ததே”
“நான் அனுப்பவே இல்லியே”
“நீங்க தானே ஆண்டுரூ ஸ்பிக்விச்?”
“யாரு?”
“ஸ்பிக்விச், ஆண்டுரூ ஸ்பிக்விச், 3831 டெய்லர் தெரு.”
மில்லி திரும்பி வந்து ஜோசப் ஹோப்மேனை சுற்றி இறுக்கி படர்ந்தாள்.
அவளிடம் சொல்வதற்கு எனக்கு மனம் வரவில்லை.
கதவை மிக மெல்ல சாத்திவிட்டு படிகளில் இறங்கி தெருவை அடைந்தேன். அந்த
குடியிருப்பு வளாகத்தில் இருந்து பாதி தூரம் நடந்ததும் திரும்பிப் பார்த்தால் அவள்
வீட்டு விளக்குகள் அணைந்தன.
பைத்தியம் போல் என் அறை நோக்கி ஓடினேன். மேஜையில் உள்ள அந்த பெரும்
குடுவையில் கொஞ்சமாவது வைன் மீதமிருக்கும் என எதிர்பார்த்தபடி ஓடினேன்.
அந்தளவுக்கு நான் அதிர்ஷடம் கொண்டவன் என நம்பிக்கையெல்லாம் கிடையாது; என்னவானாலும்
நான் குழப்பம், இருண்மை, நடைமுறைக்கு ஒவ்வாத விசாரங்கள், அடக்கப்பட்ட இச்சைக
இவற்றின் முடிச்சான ஒருவகை மனிதன் தானே!
