முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்மை ஆசிரியர் பக்கம் 1




கவிதைகள் நீர்த்துப் போய் விட்டன என்று தற்கால தமிழ்க் கவிதை குறித்த ஒரு புகார் நிலவியது. ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் கவிதையில் புது பாணிகளோ கருத்தாக்கங்களோ உருவாகவில்லை. மொழிபெயர்ப்பு வழி முன்பு நிகழ்ந்தது போல் அயல்நாட்டு கவிஞர்கள் முழுவீச்சில் இங்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. தொண்ணூறுகளில் உச்சத்தில் இருந்த கவிஞர்கள் பலர் இப்போது மெல்ல சமதளத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். முக்கியமான கவிஞர்கள் உரைநடையில் ஆர்வம் செலுத்தினர். இளம் கவிஞர்களுக்கு முன்மாதிரிகள் இல்லாமல் ஆயினர். ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் முகுந்த நாகராஜனைத் தவிர குறிப்பிடத் தகுந்த அறிமுகங்கள் நிகழவில்லை என்ற விமர்சகர்கள் இது கவிதையின் ஒரு இறங்குமுக காலம் என்றனர்.
இன்னொரு புறம் கவிதைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியது. அதே வேளை பத்திரிகைகள் கவிதைகளுக்கான கதவுகளை மூடின. கவிதை நூல்கள் விற்காது என்று கூறி பதிப்பகங்கள் கவிஞர்களை வாசலிலே வைத்து திருப்பி அனுப்பினர். காகித விலை உயர்வும், நாவலுக்கு ஏற்பட்ட அபரித மதிப்பும் கவிதையை எதிர்மறையாய் பாதித்தது. கவிஞர்களின் விமர்சனக் கூட்டங்கள் நக்சலைட் ரகசிய சந்திப்புகளைப் போல் ஆயின. கவிதை மீது ஒரு ஏளனம் பொதுவாக உருவாகியது. தமிழ்க் கவிதை மெல்ல மெல்ல தன் திசையை இழந்தது.
ஆனால் கடந்த இரு வருடங்களில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பல இளம் கவிஞர்கள் முதல் தொகுப்பிலேயே வாசகனை கவர்ந்தார்கள். சபரிநாதன், நீலகண்ட, கோசின்ரா, ஏ.ஏ.பைசால், மனுஷி போன்றவர்களை குறிப்பிடலாம். இந்த பட்டியலில் விடுபடுகிற மேலும் பல முக்கிய அறிமுகங்களும் இருக்கலாம். கதிர் பாரதி தன் முதல் தொகுப்பான “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” தொகுப்புக்காக சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றார். இன்மையின் இந்த முதல் இதழிலேயே சில இளங்கவிஞர்களின் படைப்புகள் நல்ல தரத்துடன் உள்ளதை கவனிக்கலாம். பைசால் போன்ற இலங்கையை சேர்ந்த புது கவிஞர்கள் ஈழக் கவிதைகளின் ரொமாண்டிக்கான ”போராளி” மரபை விடுத்து ஆத்மாநாம், பிரமிள், தேவதச்சனின் பாணிக்கு நகர்ந்துள்ளதும் உற்சாகமளிக்கும் போக்கு.
இனி நாம் செய்ய வேண்டியது இப்போக்கை தக்க வைப்பதும், வளப்படுத்துவதும். புரோமோஷன் வகை கூட்டங்களை விடுத்து கவிதை குறித்த ஆழமான விவாதக் கூட்டங்களை நடத்த வேண்டும். தொண்ணூறுகளில் தமிழவன் எழுதியது போன்று கவிதைக் கோட்பாட்டு கட்டுரைகளை நிறைய எழுத வேண்டும். அதேவேளை கவிதை பற்றின கட்டுரைகளை பூடகமான அரூபமான மொழியில் அல்லாமல் நெகிழ்ச்சியான எளிய மொழியில் புது வாசகர்களுக்கு புரியும் படியாய் எழுத வேண்டும். முன்பு போல் கணிசமான மொழிபெயர்ப்புகள் வெளிவர வேண்டும். ரெண்டாயிரம் வருட ஆழம் கொண்ட தமிழ்க் கவிதையின் ஆணி வேர் வலுவானது. நாம் செய்ய வேண்டியது புது வேர்கள் பட்டுப் போகாமல் காப்பது தான்.
-    ஆர்.அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.