-
- சாம்ராஜ்யங்கள் அழியும். நிழலுலக தாதாக்கள்/ அரசியல் கனவான்களைப் போல
வீறுநடை போடுகிறார்கள்.
- தளவாடங்களைக் கடந்து மக்களால் இனி எப்போதும் காண முடியாது –
பெர்டோல்ட் பிரஷ்ட்
-
-
ஜெர்மானிய
அமெரிக்க தத்துவ்வியலாளர் ஹென்னா அரெண்ட் தான் “தீமையின் சகஜத்தன்மை” என்கிற
சொற்றொடரை உருவாக்கி உலகுக்கு அளித்தார். 1963இல் அவர் “எருசலேத்தில் எய்க்மேன்:
தீமையின் சகஜத்தன்மை பற்றி ஒரு அறிக்கை” என்றொரு நூலை வெளியிட்டார். யூத
அழித்தொழிப்பில் முக்கிய புள்ளியான நாஜி ராணுவ அதிகாரி அடோல்ப் எயிக்மேன் மீதான
நீதிவிசாரணை பற்றிய அவரது பதிவு தான் அந்நூல். போர்க்குற்றத்துக்காக எயிக்மேன்
தூக்கிலிடப்பட்டார். அரெண்டின் அடிப்படையான கருதுகோள் இது தான் – யூத இன
அழித்தொழிப்பு போன்ற கொடூரமான குற்றங்கள் பைத்தியங்களாலோ சாடிஸ்டுகளாலோ நட்த்தப்படுவதில்லை
– அவை ஒரு அதிகாரியின் நுணுக்கமான அக்கறையுடன் ஒரு சராசரி, சாதாரண, மனநலம் கொண்ட
ஆளால் தான் செயப்படுகின்றன.
-
நரோடாவை
சேர்ந்த எம்.எல்.ஏவான மாயா கோட்னானி தான் 2002இல் 95 பேரை குஜராத் கலவரங்களில்
கொன்ற கூட்டத்தினருக்கு வாட்களை வழங்கினார். அவருக்கு 28 வருடங்கள் சிறைத்தண்டனை
வழங்கப்பட்டது. அவர் ஒரு சிறு கிளினிக் நடத்தி வந்த மகப்பேறு மருத்துவர். பின்னர்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்கான அமைச்சராக நரேந்திர மோடியால்
நியமிக்கப்பட்டார்.
-
-
1984
சீக்கிய இனப்படுகொலைக்கு காரணமானவர்களுள் ஒருவரான ஜெக்தீஷ் டைட்லர் ஒரு சீக்கிய
தாய்க்கு பிறந்து ஒரு கிறித்துவரால் வளர்க்கப்பட்டவர். இவரது வளர்ப்பு அப்பா
தில்லி பப்ளிக் ஸ்கூல் போன்ற நிறுவனங்களை ஸ்தாபித்த முக்கியமான கல்வியாளர்.
காங்கிரஸ் தலைவரான டைட்லர் பின்னர் அமைச்சராக ஆக்கப்பட்டார். தான் செய்த
குற்றத்துக்கான தண்டனையில் இருந்து அவர் இன்னும் தப்பித்து கொண்டு தான்
இருக்கிறார். 8000 சீக்கியர்களைக் கொன்ற வழக்கில் தண்டனை வழங்கப்படுகிற சதவீதம்
எப்படியும் 1% என்பதால் டைட்லர் தன் வாழ்நாளெல்லாம் தப்பித்துக் கொண்டிருக்கலாம்.
-
ஒவ்வொரு
“ராட்சச” பாபு பஜ்ரங்கி, தாரா சிங்குகளுக்கும் சம்மாக இங்கு கோச்னானிகளும்,
டைட்லர்களுக்கு இருக்கிறார்கள். அரெண்டை பொறுத்தவரையில் தீமைக்கு அதர்க்கமான, ஒரு
ஒழுங்குமுறையான குணம் வந்ததும் அது சகஜமாகி விடும், சாதாரண மக்கள் அதில்
பங்கெடுத்தும், அதில் இருந்து விலகி நின்று, பின்னர் அதை கணக்கிலங்கா வகைகளில்
நியாயப்படுத்த துவங்கியதும் தீமை சகஜமாகி விடும். நியாயம் பற்றின குழப்பங்களோ
அருவருப்போ அதற்கு பின் தோன்றுவதில்லை. தீமை தீமையைப் போன்றே தோன்றாது, அது
முகமற்றதாகி விடும்.
-
தற்போதைய
தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்து வரும் ஒரு கொடூரமான ஆர்வமூட்டும் பணி
என்னவென்றால் குஜராத் இனப்படுகொலையை சாதாரணப்படுத்தி, இயல்பானதாக மாற்றிக் காட்டி,
முன்னேற்றத்தின் நாயகனின் பட்டாபிஷேகத்துக்கு பாதை அமைப்பது. நரேந்திர மோடி
பிரதமர் ஆவது குறித்து அறச்சீற்றமோ பயங்கர உணர்வோ மக்களுக்கு சிறிதாவது சமீப காலம்
வரை இருந்த்தென்றாலும் அது தேர்தல் கணிப்புகள், ஊடக விமர்சனங்கள், அறிவுஜீவி
கருத்துக்கள், அரசியல் ஆதரவு மாற்றங்கள், அப்புறம் இது பற்றி அமெரிக்கர்கள் என்ன
நினைக்கிறார்களோ என்கிற வியப்பு ஆகியவற்றின் பேரலை அடிப்பில் கரைந்து போய்
விட்டது. இவையெல்லாம் பின்னிப்பிணைந்து மோடி அதிகாரத்துக்கு வர வேண்டும் எனும்
இவர்களின் கூட்டு விருப்பத்துக்கு அடிகோலுகிறது.
-
-
பெரும்
மானிட குற்றங்கள் வெறும் எண்களாக மாற்றப்படுகையில் தான் தீமை சகஜமாகிறது. ஆக, அறிவுஜீவிகளான
ஜெகதீஷ் பகவதி மற்றும் அரவிந்த பனக்ரியா மோடி குறித்து The Economist பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை பற்றி இவ்வாறு ஒரு கடிதம்
எழுதுகின்றனர்: “குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது நடந்த இனப்படுகொலைக்கு
அவர் பரிகாரம் தேடத் தயாரில்லை என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள்
இனப்படுகொலை எனக் கூறுவது உண்மையில் 2002இல் நடந்த ஒரு மதக்கலவரம். ஏனென்றால்
அதில் இறந்தவர்களில் கால்வாசி பேர் இந்துக்கள் தாம்.” ஆக இவர்களைப் பொறுத்தவரை
குற்றத்தின் பெயரை மாற்றினால் குற்றத்தன்மை குறைந்து விடும், மானிட அழிவின் அளவு
குறைந்ததாகி விடும்!
-
-
இந்த
அறிவுஜீவி சொல்லாடல் எளிய மக்களிடமும் பிரதிபலிக்கிறது. அவர்கள் குஜராத்
இனப்படுகொலை பழியை யார் மீதும் குறிப்பாய் சுமத்த முடியாது என சுற்றி வளைத்து
நியாயப்படுத்துகிறார்கள். குறிப்பாய் குற்ற இடத்தில் இல்லாத முதலமைச்சரை குற்றம்
சாட்டுவது நியாயமல்ல எனக் கூறுகிறார்கள். “சட்டரீதியாய் ஏற்றுக் கொள்ளத்தக்க
ஆதாரம்” தான் நம் அற உலகை கட்டமைக்கிறது. குற்றமற்றவர் என்றால் அவர் சட்டத்தின்
முன் குற்றமற்றவராக இருந்தால் மட்டும் போதும் தான். ஆனால் 1984 மற்றும் 2002இல் நடந்த
படுகொலைகளில் நாம் பார்த்தது என்ன -– சக்தி மிக்க அரசு, அதிகார, சட்ட எந்திரங்கள்
முழுமையாய் ஆதாரங்களை தமக்கு சாதகமாய் மாற்ற, உருவாக்க மற்றும் அழிக்க முடுக்கி
விடப்படுவதைத் தானே!
-
-
சகஜமாக்கலின்
இன்னொரு சூழ்ச்சி என்னவென்றால் 2002இல் இறந்தவரின் எண்ணிக்கை 1984இல் இறந்தவரின்
எண்ணிக்கையோடு ஒப்பிடுவது (பகவதி மற்றும் பனகிரியா 1984 “நடந்தது தான்
இனப்படுகொலை” என கோருகிறார்கள்). கோத்ரா வன்முறைக்கு பின் மோடி கூறிய மோசமான
வகையில் பிரபலமான அந்த வாக்கியம் தன் அம்மாவின் படுகொலைக்கு பின் ராஜீவ் காந்தி
கூறிய அதே அளவு கேவலமான வாக்கியத்துக்கு சமமாக வைத்து நியாயப்படுத்தப்படுகிறது.
கணித சமநிலையின் இந்த விளையாட்டுகளில் கவனிக்கப்படாமல் விடப்படுபவை உண்மையான
மனிதர்களும் அவர்களின் அவலங்களும்.
குற்றபரிகாரம் என்பது வெறும் மன்னிப்புக்கான கோரலாக மட்டுமே
சுருக்கப்படும் போது தான் தீமையின் சகஜமாக்கல் நிகழ்கிறது. அந்த அர்த்தமற்ற
மன்னிப்பு கேட்கப்படும் போது கூட, சமரசம் இனி எந்தளவுக்கு சாத்தியம் என வியப்பு
மேலிடுகிறது.
இந்த சகஜமாக்கலின் முக்கிய கருவி வளர்ச்சி. தினம் தினம் நன்றாய்
படித்த, மிகக்கண்ணியமாய் தோன்றுகிறது, பிற விசயங்களில் சிவில் மனப்பான்மையுடன்
இயங்கும் மக்கள் குஜராத் கலவரங்கள் மற்றும் மோடியை இயல்பானதாய் சித்தரிப்பதை
பார்க்கிறோம் – ஏனென்றால் அவர் “வளர்ச்சிக்கான நாயகனாம்”. “ஆமா, அவர் தான்
கலவரங்களுக்கு உண்மையில் பொறுப்பாக இருக்கலாம், அதற்கென்ன குஜராத்தில் உள்ள
சாலைகளைப் பாருங்கள்!” என்கிறார்கள். இந்த விநோதமான அற உலகில் சாலைகளும் ஸகியா
ஜாப்ரி மற்றும் பிற பாதிக்கப்பட்டவர்களின் வலியும் ஒரே மதிப்பு பெறுகின்றன.
தீமையுடன் சேர்த்து வளர்ச்சியும் சகஜத்தன்மை பெறுவது மற்றொரு
நகைமுரண். வளர்ச்சி என்பது பொத்தலானதாக, வெறும் பொருளாதார வளர்ச்சி என்கிற அளவில்
சுருக்கப்படுகிறது. இ.எப் ஷுமாக்கரின் சிறியதே அழகு என்கிற பிரபல நூலில்
கொஞ்சம் குறைவாய் பிரபலமான ஒரு உபதலைப்பு உண்டு: ஜனங்களும் முக்கியமே எனும் பொருளாதாரம்
குறித்த ஆய்வு. ஆனால் வளர்ச்சி சகஜத்தன்மை பெறும் போது மக்கள்
முக்கியமற்றவர்கள் ஆகிறார்கள். சுற்றுச்சூழலும் தான். வளர்ச்சிக்கான பாதையில்
நீங்கள் எந்த அற விழுமியங்களையும் பலி கொடுக்கலாம். பா.ஜ.கவின் தேசிய ஆட்சி
அதிகாரம் நோக்கிய பாய்ச்சலின் முதல் முகமூடி வாஜ்பாய் என்றால் மோடி தலைமையிலான
தற்போதைய முயற்சிக்கு முகமூடி என்பது வளர்ச்சி; இது இனப்படுகொலைக்கு அரிதாரமாகவும்
இருக்கிறது.
ஆனால் மக்களின் கற்பனையை இப்படியான வளர்ச்சி பற்றின ஒரு
சகஜமாக்கப்பட்ட புரிதல் எப்படி கைப்பற்றியது என்பது தான் வியப்பு. குஜராத்
மாதிரியின் கவனம் கவரும் பண்பு என்பது அதன் வளரும் பொருளாதாரமும் வீழும் மனித
வளர்ச்சி சுட்டெண்ணும் தான் (Human
Development Index). உதாரணமாய்
யு.என்.டி.பியின் சமநிலையின்மைக்கு ஏற்றவாறு மதிப்பிடப்பட்ட மனித வளர்ச்சி
சுட்டெண்ணில் (2011) குஜராத் கல்வியில் ஒன்பதாம் இட்த்திலும், உடல்நலத்தில்
பத்தாவது இடத்தில் (19 பிரதான மாநிலங்கள் இடையே) உள்ளது. இந்த சுட்டெண்ணில் அடைந்த
மதிப்பெண்களில் (1999-2008) குஜராத் 23 நாடுகளில் 18வது இட்த்தில் உள்ளது.
இந்தியாவின் முதல் பசி சுட்டெண்ணில் (2009), குஜராத் 17 மாநிலங்கள் இடையே 13வது இடத்தில்
உள்ளது (குஜராத்துக்கு பின்னே சட்டீஸ்கர்ஹ், பீஹார், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம்
ஆகிய மாநிலங்கள் தாம் உள்ளன)
- இருந்தும் பிரபல பொருளாதார நிபுணர்களான பகவதி போன்றோர் அதிர்ச்சியூட்டும்
விதமாக குஜராத் மாதிரியை பெருமைப்படுத்தி சகஜமாக்கலில் ஈடுபடுகிறார்கள்.
குஜராத்தின் மோசமான சாதனை வரலாறு பற்றி கேட்டால் அது “ஏற்கனவே இருந்த தாழ்ந்த
அளவிலான சமூக சுட்டிகளால்” என்கிறார்கள். ஆக நாம் “இந்த சுட்டிகளில் உள்ள
மாற்றத்தில்” கவனம் செலுத்த வேண்டும். இதில் “பாராட்டத்தக்க முன்னேற்றம்” உள்ளதாய்
சொல்கிறார். அப்படி என்றால் இதே போன்ற தாழ்ந்த அளவுகளுடன் ஆரம்பித்த வேறு
மாநிலங்கள் குஜராத்தை விட மேம்பாடுகளை இதே போன்ற பொருளாதார வளர்ச்சி இல்லாமலே
அடைந்தது எப்படி?
அடிப்படை வசதியின்மை குறித்த இது போன்ற புள்ளி விபரங்கள்
பொதுப்பரப்பில் ரொம்ப காலமாய் இருந்து கொண்டு தான் இருக்கின்றன, ஆனால் ஆச்சரியமாய்
தேர்தல் விவாதங்களில் இவை முக்கியமாய் கருதப்படுவதில்லை. அவ்வாறு எடுத்துக்
கொள்ளப்பட்டாலும் “வளர்ச்சியின் நாயகன்” எனும் பிம்பத்தை தகர்க்க இவை போதுமாக
இல்லை. சகஜமாக்கலின் தாக்கம் எந்தளவுக்கு என்றால் உண்மைக்கும்
புள்ளிவிபரங்களுக்கும் ஒப்பீட்டே இருப்பதில்லை.
கட்டுக்கடங்காத பொருளாதார முன்னேற்றத்திற்கான நகர்மய, தொழில்சார்
வளர்ச்சி மாதிரிகளின் மிகப்பெரும் அபாயங்களை இன்று வளர்ந்த நாடுகளே உணர்ந்து வரும்
நிலையில் (அமெரிக்காவில் அடுத்த 15 வருடங்களில் புற்றுநோய் பாதிப்புகள் 45%
அதிகமாக உள்ளன) நாமோ, நகைமுரணாக, தெரிந்த நரகத்தின் படுபாதாளத்தை நோக்கி சீறிப்
பாய்ந்து கொண்டிருக்கிறோம் – உலகார்ந்த சூழலியல் செயல்பாட்டு சுட்டெண்ணில் நாம் 32
படிகள் இறங்கி இன்று 155இல் இருக்கிறோம்; உலகில் இவ்வருடம் ஆக அதிகமாய்
மாசுபடுத்தப்பட்ட மாநகரமாய் தில்லி மாறி உள்ளது. கார்ப்பரேட் குஜராத் மாதிரி
இன்னும் படோபமான ஒரு தொழில்மய கற்பனை லட்சிய நகரத்தின் நியாயம் என்பது அங்குள்ள
சதுப்புநில காடுகள் மற்றும் மேய்ச்சல் வெளிகள் தாறுமாறாய் சீரழிக்கப்பட்டுள்ளது
தான்.
சமீபத்தில் வெளியான ஒரு தேர்தல் கணிப்பில் பஞ்சாப் வாக்காளர்களால்
மூன்று முக்கிய பிரச்சனைகள் முன்னிலைப்படுத்தப்பட்டன – போதை மருந்து பழக்கம்
(70%), பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் புற்றுநோய் (17%) மற்றும் மதுவுக்கு
அடிமையாதல் (9%). இது அதிர்ச்சியூட்டுவது, முன்னேற்படாதது; பஞ்சாபின்
கிராமத்தினரில் 67% பேரில் வீட்டிற்கு ஒருவராவது போதை மருந்துக்கு அடிமையாக
உள்ளார்கள். இருந்தும் வளர்ச்சி எனும் ரதம் அதன் பாட்டிற்கு தடதடத்து முன்னே
ஓடுகிறது.
இந்த தீமையின் சகஜமாக்கலை கேள்விக்கு உட்படுத்துவதன் சாத்தியம்
நாளுக்கு நாள் மங்கி வருவது கவலை கொள்ள செய்கிறது. புது அரசியல் அதிகாரத்தின்
பட்டாபிஷேகத்துக்கு தயாராகி வரும் ஊடக நிறுவனங்கள் சுயதணிக்கை செய்து வருவது பற்றி
ஏற்கனவே அறிக்கைகள் வெளியாகி வருகின்றன. சிறப்பு புலனாய்வு அணியின் மோடி மீதான
விசாரணை குறித்து கேள்விகள் எழுப்பும் ஒரு புத்தகம் ஊடக கவனத்தை கிஞ்சித்தும்
பெறுவதில்லை; மாறாக அது பா.ஜ.கவுக்கு எதிரான பிரச்சாரமாக புறக்கணிக்கப்படுகிறது.
இதே எழுத்தாளர் காங்கிரஸின் சீக்கிய படுகொலைகள் பற்றியும் முன்னர் இதே
கரார்தன்மையுடன் எழுதியுள்ளார் என்பதை இந்த ஊடகங்கள் பொருட்படுத்துவதில்லை. இந்து
மதம் பற்றின நூல் ஒன்றை அதன் பதிப்பாளரே அழித்து கூழாக்கிய சம்பவம் இந்நாட்டின் பேச்சு
சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் ஆபத்தான போக்குக்கு ஆதாரமாய்
உள்ளது.
ஊடகங்கள் தேர்தல்
பற்றி உருவாக்கும் சொல்லாடல்கள் வளர்ச்சியின் சகஜமாக்கலை எதிர்கொள்ளும் முயற்சிகளை
அர்த்தமற்றதாக்குகின்றன. இந்த தேசத்தின் மனசாட்சி காப்பாளர் ராகுல் காந்தியை
எடுத்த அந்த பிரலமான பேட்டி உதாரணமாய் கொள்ளலாம். அந்த 90-நிமிட பேட்டியில்
அர்னாப் கோஸ்வாமி பொருளாதாரம் பற்றி ஒரே ஒரு கேள்வி – விலைவாசி உயர்வு பற்றி –
கேட்கிறார். இது இலங்கை, நேப்பாளம், வங்கதேசம் போன்ற அண்டைநாடுகளை விட சில சமூக
அலகுகளில் வெகுகீழே இந்தியாவில் நிகழ்கிறது. ஊடகங்களைப் பொறுத்தமட்டில் தேர்தல்
என்பது மனித நலவாழ்வு, சூழியல் சீரழிவு, அறம் ஆகிய பிரதானமான பிரச்சனைகள் பற்றியவை
அல்ல – அது ஆளுமை மோதல்களின் ஒரு மேலோட்ட நாடகமாக சுருக்கப்படுகிறது.
வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் இருந்து, அறம் மற்றும் மனித நன்மை
குறித்த பரந்துபட்ட கருதுகோள், சிறுபான்மையினர் மீதான வன்முறை ஆகியவை
துண்டாக்கப்பட்டு பார்க்கப்படும் போது பாஸிசம் அங்கே வேர்பிடிக்கிறது எனப் பொருள்.
அறம் பற்றின நமது தேர்வுகள் எப்போதும் கறுப்பு வெள்ளையாக இருப்பதில்லை தான்,
ஆனாலும் சில தேர்வுகளை நாம் செய்தாக வேண்டி உள்ளது. இந்த தேர்தலை பொறுத்தமட்டில்
ஒரு அறம் சார்ந்த குழப்ப நிலையில் இந்நாடு இருக்கிறதென்றால், புத்தர், காந்தியின்
தேசத்தின் மனசாட்சி சீரழிவின் விளிம்பில் இருக்கிறது.
இந்த எழுத்தாளர் கனடாவின் டல்ஹௌசி பல்கலையில் பணி செய்கிறார். அவரது
மின்ன்ஞ்சல் nmannathukkaren@dal.ca
ஆங்கில
மூலம் வெளியானது ஆங்கில ஹிந்து, 24-3-14
நன்றி: ஏப்ரல் உயிர்மை 2014