இன்மை ஆறாவது இதழ் வெளியாகிறது. அதில் முகப்பு சித்திரமாக ராஜனின்
ஓவியம் மனுஷ்யபுத்திரன் பேட்டி நான்காம் பாகம், ஆத்மார்த்தி, இரா.சீனிவாசன்
ஆகியோரின் கட்டுரைத் தொடர்கள், லஷ்மி சரவணகுமாரின் “மோக்லியை தொலைத்த சிறுத்தை”
தொகுப்புக்கான விமர்சனம், மாயா ஏஞ்சலூ, அன்புசிவன் ஆகியோருக்கு அஞ்சலி
குறிப்புகள், மனுஷ்யபுத்திரன், கலாப்பிரியா, சுதீர் செந்தில், போகன் சங்கர்,
பொன்.வாசுதேவன், சக்தி ஜோதி, கோசின்ரா, சர்வோத்தமன், நாகப்பிரகாஷ்,
பா.வேல்முருகன், ஷான், பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி, மணிபாரதி, ஆர்.செந்தில்குமார்,
ஈழக்கவி ஆகியோரின் கவிதைகள், மாயா ஏஞ்சலூ, லாரன்ஸ் பெர்லிங்கட்டி,
ஆர்.பார்த்தசாரதி, ரூ போர்சன், சார்லஸ் ஹென்ரி போர்டு ஆகியோரின் மொழியாக்கங்கள் மற்றும் டி.ஆர்.நாகராஜ்
கருத்தரங்கு பற்றின அறிவிப்பு ஆகியன இடம் பெறுகின்றன. வாசகர்களின் கருத்துக்கள்
அன்புடன் வரவேற்கப்படுகின்றன.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கருத்துகள்