காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் மறைவை கிட்டத்தட்ட ஒரு தமிழ்
எழுத்தாளனின் அஸ்தமனமாகவே பார்க்க வேண்டும். அந்தளவுக்கு வேறேந்த இந்திய
மொழியையும் விட அவர் தமிழை பாதித்தார். சொல்லப் போனால் வேறெந்த உலக மொழியிலும்
மார்க்வெஸின் தாக்கம் இந்தளவுக்கு உண்டா என்பது ஐயமே. குறிப்பாய் தொண்ணூறுகளில்
அமெரிக்க, பிரித்தானிய புனைவுலகை மாந்திரிக எதார்த்தம் இந்தளவுக்கு தாக்கம்
செலுத்தவில்லை. அங்கே சிதைவுற்ற பின்நவினத்துவ புனைவு மொழி தான் தொண்ணூறு,
ரெண்டாயிரங்களில் ஆட்சி செய்தது. பிரித்தானிய, இந்திய ஆங்கில புனைவுலகில் சல்மான்
ரஷ்டி மட்டுமே ஒரு தனித்த பெரும் ஆளுமையாக மார்க்வெஸின் சாயலில் நம் முன்
நிற்கிறார்.
தமிழில் மார்க்வெஸின் துணையுடன் தான் நவீனத்துவ மரபை முறியடித்து
கோணங்கி, எஸ்.ரா கூட்டணி தொண்ணூறுகள் மற்றும் ரெண்டாயிரத்தின் முதற்பகுதி வரை
நுழைந்து கோலோச்சியது. இவர்களின் வரவு ஏற்படுத்திய எரிச்சலால் சு.ரா இந்த லத்தின்
அமெரிக்க அலையை கண்டுகொள்ள மறுத்தார். அதுவரை இருவிதமான புனைவு மொழிகள் ஆதிக்கம்
செலுத்தின. ஒன்று கொஞ்சம் அன்றாட வாழ்வை அச்சடிக்கும் செண்டிமெண்டலான சோவியத் எதார்த்த
மொழி. தொ.மு.சி ரகுநாதனின் “பசியில்” இருந்து நீல.பத்மநாபனின் “தலைமுறைகள்” வரை
இது இடது பக்கமாய் சாய்ந்தும் சாயாதவர்கள் வரை இம்மரபு நீடித்தது. ஜெயகாந்தன்,
சுஜாதா போன்று ஜனரஞ்சக எதார்த்தவாதம் கூட கொஞ்சம் கிளுகிளுப்பு மற்றும்
பத்திரிகைத்தனமான, நிருபர்த்தனமான நேரடி தகவல் கூறலும் அரட்டைத்தனமும் கலந்த
மற்றொரு பாணி தான். நவீனத்துவ இலக்கிய எதார்த்தவாதம் புதுமைப்பித்தன்,
ஜி.நாகராஜன், சு.ரா துவங்கி இன்று (ஓரளவு) இமையம் வரை நீடிக்கிறது. ஆனால்
சு.ராவின் வீழ்ச்சியுடன் ஒரு இறுக்கமான கராரான நவீனத்துவ எதார்த்தவாதம் முடிந்து
போனது எனலாம். எதார்த்தவாதத்துடன் ஒப்பிடுகையில் மார்க்வெஸ் பாணி மாய எதார்த்தவாதத்துக்கு
தமிழில் ஆயுள் குறைவு என்றாலும் அது ஒரு புது வீச்சை, இளகலை, ஆசுவாசமான
மூச்சிழுப்பை தமிழ் புனைவுக்கு தந்தது எனலாம். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் பல
முக்கியமான தமிழ் சிறுகதைகள் எழுதப்பட்டன. எண்பதுகளின் இறுதியில் இருந்து தொண்ணூறுகளின்
முற்பகுதி வரை இருந்த ஒரு தேக்கம் முடிவுக்கு வந்தது. அதுவரை சுந்தர ராமசாமி போல்
எழுத முற்பட்ட இலக்கியவாதிகள் இப்போது மார்க்வெஸின் பேனா முனையை ஒரு சிற்றெறும்பு
போல் பின் தொடர்ந்தனர்.
நாம் மூன்று கேள்விகளை கேட்க வேண்டும்.
1.
மார்க்வெஸின்
தாக்கம் ஏற்படுத்திய நேர்மறையான விளைவுகள் என்ன?
2.
மார்க்வெஸ்
ஏன் வேறெந்த வெளிநாட்டு எழுத்தாளரையும் விட நம்மை அதிகமாய் ஈர்த்தார்?
3.
மார்க்வெஸை
நாம் சரியாய் புரிந்து பின்பற்றினோமா? உண்டெனில் ஏன் ரெண்டாயிரத்தின்
பிற்பகுதியில் இருந்து நாம் மீண்டும் எதார்த்தவாத்த்துக்கு திரும்பினோம்?
முதலில் மார்க்வெஸ் எதார்த்தவாத்தின் இறுக்கத்தில் இருந்து நம்மை
விடுவித்தார். எதார்த்தவாதம் அதனளவில் உள்முரண்பாடு கொண்டது. இருக்கிற உண்மையை அப்படியே
பிரதிபலிப்பது எதார்த்தவாதத்தின் நோக்கம். அது சாத்தியமா என சமகால விமர்சன மரபுகள்
கேள்வி கேட்கின்றன. நாம் எதார்த்தத்தை பிரதியெடுக்கையில் கூட அது நமது
கண்ணோட்ட்த்தில் தான் வெளியாகிறது. ஆக அது உண்மை அல்ல. வாழ்க்கை பற்றின நமது
பார்வையின் சாயல் தான், உண்மை அல்ல, எதார்த்தவாதத்தின் போர்வை மூடி கையில் லாந்தர்
விளக்கேந்தி நம் முன் வருகிறது.
ஒரு எதார்த்தவாத எழுத்தாளன் தான் பார்க்கிற உண்மையை எந்தளவுக்கு தன்
அறிவு, அனுபவப்படி அர்த்தப்படுத்தலாம் என குழப்பமடைகிறான். எதார்த்தவாதம் அதன்
இயல்பில் எழுத்தாளனை ஒரு தன்னிலையற்ற புறவய நோக்குடன் இருக்க கோருகிறது. ஆனால் அது
சாத்தியமும் அல்ல. இதனால் எதார்த்தவாத எழுத்தாளன் தனக்குத் தானே முரண்படுகிறான்.
அதனாலே சிறந்த எதார்ததவாத எழுத்து தன்னை அறியாமலே உருவகம், குறியீடுகளை பயன்படுத்த
நேர்கிறது. பார்த்ததை எழுதும் போது பார்க்காத ஒன்றை கூற தலைப்படுகிறது. சு.ராவின்
“ரத்னாபாயின் ஆங்கிலம்” கதையை உதாரணம் காட்டலாம்.
இன்றைய சூழலில் தன்னிலை பார்வைகள் மிக அதிகமாகி வருகின்றன. எந்த
கருத்து வைக்கப்பட்டாலும் கேட்பவர்கள் தத்ததமது தன்னிலை பார்வைகளை
முன்வைக்கிறார்கள். இந்த “கருத்துக் குழப்ப” சூழலில் எதார்த்தவாத்த்தின் நிலை
இன்னும் சிக்கல். அதனால் தான் தொண்ணூறுகள், ரெண்டாயிரத்தில் மாந்திரிக எதார்த்தம் –
அதன் பன்முகத்தன்மை காரணமாய் – நமக்கு அணுக்கமான எழுத்துமுறையாக மாறுகிறது.
தமிழ் எழுத்தாளர்களில் புதியவர்கள் தாம் இம்முறையால் முதலில்
கவரப்பட்டு பல்வேறு சோதனைகளை சிறுகதை வடிவில் பண்ணிப் பார்க்கிறார்கள். இந்த
சுதந்திரம் அளப்பரியது. அதாவது நீங்கள் ஒரு தோற்றம், மையம், இறுதி கொண்ட கதையை
சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை உருவானது. இந்த நெருக்கடி இல்லாமல் ஆனதும்
யாரும் எப்படியும் கதை சொல்ல்லாம் என நம்ப துவங்கினோம். வாசகர்களையும் இந்த
புதுவகையான கதை வடிவமும் மொழியும் புத்துணர்வூட்டின. தமிழ் அதன் வறட்டுத்தனம்,
கரார்தன்மை நீங்கி மீண்டும் பிறந்த குழந்தை போல் ஆனது. மொழியின் அழகியலுக்கு
முக்கியத்துவம் அதிகமானது.
மாந்திரிக எதார்த்தம் நம்மை அதிகமாய் ஈர்த்ததற்கு நமது நீண்ட கவிதை
பாரம்பரியம் ஒரு காரணமாக இருக்கலாம். நவீன கவிஞர்களை விட சிறந்த படிமங்களை கோணங்கி
உருவாக்குகிறார் என எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு பேட்டியில் கூறுகிறார். இக்காலகட்டத்தில்
கதைகள் கதைக்காக அன்றி அவற்றின் மொழியழகு மற்றும் குறிப்புணர்த்துலகுக்காக தாம்
விரும்பி படிக்கப்பட்டன. மிகுகற்பனை (fantasy) பாணி நமது தமிழ் மொழியின் இயல்பான கவித்துவ நெகிழ்ச்சிக்கு பொருந்திப்
போயிற்று.
மேலும் கதை சொல்லுதற்கான ஒரு அடிப்படை பயிற்சி மற்றும் அக்கறை
தேவையில்லை என்றானதும் கதையாசிரியர் அல்லாத பல கவிஞர்கள் புனைவுலகை நோக்கி
நகர்ந்தனர். பிரேமின் கதைகளை உதாரணம் காட்டலாம். அவை எளிதில் கவிதையாக மாற்றப்படக்
கூடியவை தாம். நியாயமாக, ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் எதார்த்தவாதம் மறுவருகை
நிகழ்த்திய போது இந்த கவி-சிறுகதையாளர்கள் காற்றில் மறைந்து போயினர். பழைய
சிறுகதையாளர்கள் மண்வெட்டி சட்டியுடன் மீண்டும் கடினமான கதைகூறும் வேலைக்கு
திரும்பினார்கள். இது ஒரு புறம் இருக்க, மார்க்வெஸ் என்றுமே வெறும் மிகுகற்பனை
எழுத்தாளர் அல்ல என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். அவர் “கர்னலுக்கு யாரும்
கடிதம் எழுதுவதில்லை”, “முன்கூறப்பட்ட மரணத்தின் வரலாறு” போன்ற எதார்த்த பாணியிலான
புனைவுகளையும் எழுதியிருக்கிறார்.
இத்தாக்கத்தின் இன்னொரு காரணம் நம் இலக்கியவாதிகள் அடிப்படையில்
நடைமுறை எதார்த்த்தை சந்திக்கவோ எழுத்தில் அலசவோ விரும்பியதில்லை என்பது.
மாந்திரிக எதார்த்தவாதம் மூலம் நீங்கள் வரலாற்றை பகடி பண்ணலாம், அரசியலை
நக்கலடிக்கலாம். ஆனால் கராறாய் சமூக பிரச்சனையை சித்தரிக்க முடியாது. ஏனென்றால்
கராறான ஒரு பார்வையை அது மறுக்கிறது. இந்த பன்முக பார்வை பாணி இயல்பாகவே நமது
இலக்கிய எழுத்தாளர்களுக்கு உவப்பாகிறது. அறுபதுகளில் இருந்து ரெண்டாயிரம் வரை
அரசியல் எழுதுவது இலக்கியவாதி பண்ணக் கூடாத்து என்று தானே கூறி வந்தார்கள். ஆக
தமிழ் நவீனத்துவத்தின் அரசியற்ற போக்குக்கும் மாந்திரிக எதார்த்தம் பயன்பட்டது.
மார்க்வெஸ் வருவதற்கு முன்பு இங்கு ஐரோப்பிய மேதைகளான காம்யு, காப்கா
போன்றோர் முன்மாதிரிகளாக பார்க்கப்பட்டார்கள். அவர்களின் படைப்புகள் பேசிய
இருத்தலியம் ஓரளவு நம்மூர் மாயாவத்த்துடன் பொருத்தி பார்க்கப்பட்டாலும், அது பேசிய
பிளவுபடல், சமூக தனிமையையும் நமது சமூகத்துக்கு அந்நியமாகத் தான் இருந்த்து.
அதனால் தான் காப்காவை நாம் எந்தளவுக்கு ரசித்தாலும் அவர் நமக்கு நடிகை ஏமி ஜேக்சனை
போலத் தான் இருந்தார். ஆனால் மார்க்வெஸ் அப்படி அல்ல. அவரிடம் இந்தியத்தன்மை
அதிகம். ஒரு காரணம் அவரது மாந்திரிக பண்பு நமது நாட்டார் கதைகூறலில் ஏற்கனவே
இருந்தது தான். இந்திய தொன்மங்களில் ஆர்வம் கொண்டோரையும் மார்க்வெஸ் ஈர்க்க்க்
கூடியவர் தான். “நூற்றாண்டுகளின் தனிமை” நாவலுக்கும் ஜெயமோகனின்
“விஷ்ணுபுரத்துக்குமான” வடிவரீதியான தொடர்பை நாம் இவ்வாறு தான் புரிந்து கொள்ள
முடியும்.
மார்க்வெஸின் காலம் என்பது ஒரு சுழற்சி போல் செயல்பட்டு மனிதர்களை
வெறும் புனைவின் பிரதிகளாக மாற்றும் ஒரு பிரம்மாண்டமான பிரக்ஞை. மனிதன் என்பவன்
காலத்தின் கற்பனையில் விளைகிற ஒரு பாத்திரம் ஆகிறான். உடல் என்பது வெறும் ஆடை எனப்
பார்க்கிற இந்திய வைதிக வாதம் இதற்கு மிக நெருக்கமான கருத்தியல். “முன்கூறப்பட்ட
மரணத்தின் வரலாறு” நாவலைக் கூட நமது மகாபாரத அபிமன்யுவின் கதையின் இன்னொரு நவீன
இருத்தலிய வடிவமாக இந்திய மனம் பார்க்கலாம்.
பேராசிரியர் ஆனந்தராஜ் தமிழ் மாந்திரிக எதார்த்தம் பற்றி முனைவர் பட்ட
ஆய்வு செய்துள்ளார். அவரது முடிவு நாம் வழக்கமாய் நினைப்பது போல் கோணங்கி,
எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உண்மையான மாந்திரிக எதார்த்தவாதிகள் அல்ல என்பது.
இவர்கள் மார்க்வெஸ், போர்ஹெஸ் போன்றோரை அப்படியே இந்திய சூழலில் திணித்து
கதையெழுதுவதாக அவர் கருதுகிறார். மாறாக மனோஜ், முஜீப் ரஹ்மான் போன்றோரை அவர் இன்னும்
இயல்பான மாந்திரிக எதார்த்தவாத எழுத்தாளர்களாக பார்க்கிறார். எஸ்.ராவும்
கோணங்கியும் மாந்திரிக எதார்த்தத்தை வாழ்க்கையாக அன்றி வெறும் தொழில்நுட்பமாக
பார்த்தனர் என்பதே அவரது பிரதான புகார். இந்த பிரச்சனையை நாம் எஸ்.ரா vs மனோஜ் என பார்ப்பது மிகுந்த குழப்பத்துக்கு இட்டு செல்லும். அதற்கு
பதில் எஸ்.ரா, கோணங்கி அல்லது ரமேஷ் போன்றோரின் ஏதாவது ஒரு மாந்திரிக எதார்த்த
கதையை எடுத்து அலசி இக்கருத்தை பரிசீலித்து பார்க்கலாம்.
இந்திய மனம் அடிப்படையில் மார்க்வெஸ் பாணி மிகு-எதார்த்தத்துக்கு
தோதானது. நாம் உண்மையை கராறான ஒரு புற விசயமாய் பார்ப்பவர்கள் அல்ல.
ஐரோப்பியர்களைப் போல நாம் உண்மையை அளந்து ஒரு ஜாடியில் வடிகட்டி வைக்கலாம் என
நம்புவது இல்லை. விளைவாக, நமது உண்மை குறித்த நிலைப்பாடு மிக இளகியதாக கட்டற்றதாக
உள்ளது. உண்மையை நிரூபிக்க வேண்டியதில்லை. அது தர்க்கத்துக்கு புறம்பானதாய்
இருக்கலாம் என நினைக்கிறோம். ஒரு ஊரில் ஒரு ஜவுளிக்கடைக்காரரிடம் நிறைய சிவப்பு
நிற சேலைகள் மீந்து விடுகின்றன என வைப்போம். கணவன் மனைவிக்கு அந்த மாதத்தில்
சிவப்பு சேலை எடுத்து தந்தால் அவரது ஆயுள் கூடும் என ஒரு கதையை அவர் பரப்பினால்
உடனே அது வேகவேகமாய் பரவி மக்கள் சிவப்புசேலைக்காய் ஆலாய் பறப்பார்கள். இதை
செய்பவர்கள் முட்டாள்கள் அல்ல. இது மூடநம்பிக்கையும் அல்ல. அரசியலில், கலையில், மதத்தில்
எங்கும் நாம் தர்க்கம், நிரூபணங்களை விட புனைவுகளை அதிகம் நம்ப விரும்புகிறோம்.
நம் மன அமைப்பு அப்படி. அதனால் தான் இங்கு வரலாறுகள் கராறாய் எழுதப்படுவதில்லை.
அதனால் தான் இங்கு தலைவர்கள் தம்மைப் பற்றி வாழ்க்கைக்கதைகள் எழுதப்படுவதை
ஏற்பதில்லை. பிள்ளையாருக்கு பால் பிடிக்குமோ இல்லையோ அவருக்கு பால் பிடிக்கும்
என்பது நமக்கு அவ்வளவு கிளர்ச்சியாக இருக்கிறது. நம் முன் நிகழும் புனைவுகளை அப்படி
ரசிக்க தலைப்படுகிறோம்.
என்.டி ராஜ்குமார் கவிதைகளில் மாய-எதார்த்தம் ஒரு முக்கிய பண்பு. மனிதன்
மரமாக மாறுவதை அதில் இருந்து அவன் உயிர் ஒரு பறவையாய் உருப்பெறுவது நிகழ்ந்தபடியே
இருக்கிறது. இதை வெறுமனே அவரது கவிதை பாணி என நினைத்திருந்தேன். எங்கள் பல்கலைக்கழகத்தின்
வெளிச்சுவரை ஒட்டி ஒரு தள்ளுவண்டி டீக்கடைக்கார்ர் இருந்தார். கடைக்கு வலது பக்கம்
மதிலை ஒட்டி ஒரு மரம் தழைத்திருக்கும். ஒருநாள் அவரது மனைவி நோய் வாய்ப்பட்டு
அங்கு வந்திருந்தார். அங்கு மரத்தடியில் அமர்ந்து இறந்து விட்டார். அடுத்து
அம்மனிதர் மரத்தின் மீது சந்தனம் குங்குமம் பூசி மாலை சாத்தி வழிபட துவங்கினார்.
தன் பிள்ளைகளை அழைத்து வந்து மரத்தை காட்டி “இது உங்க அம்மா, வணங்கிக்கோ” என்றார்.
இந்த மாந்திரிக எதார்த்தம் அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் ஒரு அன்றாட நிகழ்வாக
இருக்கிறது. தமிழ் மாய எதார்த்தவாதத்தில் இந்த நாட்டார் வழக்காற்று எதார்தத்த்தை
உள்வாங்க தவறி விட்டனர் என்பது தான் ஆனந்தராஜ் போன்றோர் எஸ்.ரா, கோணங்கி மீது
வைக்கிற குற்றச்சாட்டு என நினைக்கிறேன். அவர்கள் உருவாக்குகிற மாய எதார்த்தவாதம்
கொஞ்சம் மீமெய்யியல் சார்ந்ததாகவும் (metaphysical) இருப்பது இன்னொரு பிரச்சனை.
உதாரணமாய் போர்ஹெஸ்ஸின் கதை மற்றும் கவிதைகளில் ஒரு பிரதான குறியீடு
புதிர் வட்டப்பாதை. இது மனிதனின் வாழ்க்கையில் சில சந்தர்பங்கள் அவனை ஒரு
மீட்சியற்ற நிலையில் தள்ளி விடுவதை காட்டுகிறது. அதாவது என்னதான் முயன்றாலும் பிரச்சனைகள்
ஒன்றன் மேல் ஒன்றாக வந்து நம் வழியை மூடிக் கொள்ளும். நம்மால் தப்பிக்கவே
முடியாது. கடவுளிடம் வேண்டலாம் தான், ஆனால் இருத்தலிய காலத்தில் ஐரோப்பியர்களுக்கு
கடவுள் கிடையாதே! ஆக கடவுளிடமும் போக முடியாது. புதிர்வட்டப் பாதையை ஒரு இருத்தலிய
உருவகம் எனலாம்.
வானத்தின் கீழ் மனிதன் அத்தனை சுதந்திரமாக இருக்கிறான். அவனுக்கு
எதையும் செய்யும் சுதந்திரம் உள்ளது. ஆனால் இந்த கட்டற்ற சுதந்திரம் அவனை
சாத்தியங்களின் சிறைக்குள் பூட்டி வைக்கிறது. இதை செய்யவா அதை செய்யவா, இதன்
விளைவுக்கு நான் தான் பொறுப்பாக வேண்டுமா என அவன் குழம்பி நெருக்கடிக்கு
உள்ளாகிறான். இது ஒரு உளவியல் புதிர்வட்டப் பாதை. இந்த புதிர்வட்டப் பாதையானது ஐரோப்பியர்களின்
பாரம்பரிய தொன்மமும் தான். கிரேக்க கதைகள் பலவும் புதிர்வட்ட பாதை பற்றி, அதனுள்
மனிதர்களும் கடவுளர்களும் சிறை வைக்கப்படுவது பற்றி பேசுகின்றன. எஸ்.ரா இதை
தமிழுக்கு அப்படியே கொண்டு வந்துள்ளார். “வழி” கதையில் ஒரு குமாஸ்தா சைக்கிளில்
தான் வழக்கம் போல் பயணிக்கும் தெருக்கள் வழி செல்கிறார். ஆனால் விசித்திரமாக ஒரு
தெரு முடிந்து புது தெரு தோன்றும் இடத்தில் பழைய தெருவே மீண்டும் ஆரம்பிக்கிறது. எவ்வளவு
முயன்றும் அவர் ஒரே தெருவுக்குள்ளே சுற்றிக் கொண்டிருக்கிறார். இப்படி போகிறது
அவரது ஒரு சிறுகதை. இது ஒரு மீபொருண்மை பிரச்சனையை பேசும் கதை. வாசகனுக்கு ஒரு
அறிவார்ந்த கிளர்ச்சி தந்தாலும் இக்கதை போர்ஹெஸை படியெடுத்தது தான். ஏனென்றால்
இந்தியன் இது போன்ற “புதிர் வட்டப்பாதைக்குள்” தத்துவார்த்த குழப்பத்துள் மாட்டிக்
கொண்டால் ஏன் என யோசிக்க மாட்டான்; “எல்லாம் நம்ம விதி வேறென்ன?” என நகர்ந்து
விடுவான். அல்லது சர்வசாதாரணமாய் அந்த தெருவின் ஒரு மூலையில் குடிசை போட்டு
குடித்தனம் ஆரம்பித்து விடுவான். வெளியே போய் தான் என்னவாகப் போகிறது என
யோசிப்பான். எல்லாம் ஒரேமாதிரி தெரு தானே, எழவு இங்கேயே கிடப்போம் என உட்கார்ந்து
விடுவான். இன்னொரு புறம் இக்கதையை நாம் ஒரு மத்தியதர ஆள் சராசரித்தனங்களின் மீள
முடியா பொறிக்குள், கவலைகள், அழுத்தங்களுக்குள் மாட்டிக் கொண்டதை உணரும்
கதையாகவும் பார்க்கலாம். ஆனால் அப்போது இக்கதை இன்னும் தட்டையாகி சப்பணம் போட்டு
உட்கார்ந்து விடும்.
எஸ்.ராவின் “தாவரங்களின் உரையாடல்” காலனிய ஆதிக்க வரலாற்றை குறியீட்டு
ரீதியாய் சித்தரிக்கும் ஒரு அழகான கவித்துவமான கதை. போர்ஹெஸ் மற்றும் மார்க்வெஸ்
இது போல் வரலாற்றை மீள்புனைவாக்கும் பல கதைகளை எழுதியிருக்கிறார்கள். அவர்களின்
புனைவுலகில் வரலாறு ஒரு கதாபாத்திரமாகவே ஆகிறது. ஆனால் இந்தியர்களுக்கு தான்
வரலாற்றுணர்வே இல்லையே. நமக்கு இச்சிறுகதை வெறும் மிகுபுனைவாக மட்டுமே படும்.
ஏனெனில் இது ஒரு இந்தியத்தனமான கதை அல்ல. ஒருவேளை எஸ்.ரா இக்கதையை ஆங்கிலத்தில்
எழுதியிருந்தால் வெளிநாட்டு இந்தியர்களிடையே பெரும் வரவேற்பு பெறலாம். அவர்களுக்கு
காலனிய இந்திய வரலாற்றில் ஆர்வம் உண்டு. அது குறித்து தொடர்ந்து எழுதுகிறார்கள்.
அவர்கள் ஹைபிரிட் இந்தியர்கள். நாம் அப்படி அல்லவே.
மார்க்வெஸின் மிக பிரபலமான சிறுகதை “களங்கமற்ற எரிண்டிராவும் அவளது
கருணையற்ற பாட்டியும்”. இதில் வரும் பாட்டி ஒரு பெரும் மாளிகையில் வசதியாக
இருக்கிறார். அவரை 14 வயதான பேத்தி எரண்டிரா தனியாக பார்த்துக் கொள்கிறாள். ஒரு
நாள் எரண்டிரா கவனமின்றி இருக்கையில் புயலடிக்க ஒரு மெழுகவர்த்தி ஜன்னல் திரைமீது
சரிந்து விழ தீப்பற்றுகிறது. எரண்டிரா விழித்தபடியே தூங்குபவள். வீடு எரிந்து
நாசமாவதை அவள் கவனிக்கவில்லை. தனது வீடும் சொத்து அழிந்தத்தற்கு எரண்டிராவை
குற்றம் சாட்டும் பாட்டி அவள் தான் ஈடு செய்ய வேண்டும் என்கிறாள். இழந்த பணத்தை
மீண்டும் ஈட்ட எரண்டிராவின் உடலை முதலீடாக்கி விபச்சாரத்தில் அவளை வற்புறுத்தி
ஈடுபடுத்துகிறாள். தினமும் நூற்றுக்கணக்கானோர் எரண்டிராவை வதைக்க பாட்டி
இரக்கமற்று வெளியே அமர்ந்து காசை எண்ணியபடி இருக்கிறாள். இதுவரை சொன்ன கதையை
பாருங்கள். அது விசித்திரமானது. எந்த பாட்டியும் இப்படி செய்ய மாட்டாள், அதை ஒரு
பெண் கேள்வியின்றி பொறுக்கவும் மாட்டாள் என நீங்கள் நினைக்கலாம். சரிதான்.
பாட்டியை குறியீடாக பார்த்தால் மட்டுமே இக்கதை நம்பத்தகுந்ததாகும். எதன் குறியீடு?
காலம் அல்லது கடவுளின் குறியீடு.
இருத்தலியம் காலத்தை ஒரு இரக்கமற்ற எந்திரமாக
பார்க்கிறது. இந்த எந்திரம் மனிதனை ஒரு நசுக்குகிறது. எந்த காரணமும் நியாயமும்
அற்று அவனை அது சிதைக்கிறது. அவன் முடிவற்ற ஒரு நம்பிக்கை இழப்பில், கசப்பில் போய்
விழுகிறான். எரந்திராவை இருத்தலிய காலத்தால் வேசையாக்கப்படும் ஒரு தனிமனிதனாக
பார்க்கலாம். மார்க்வெஸின் புனைவுகளில் இருத்தலியம் தீவிர தாக்கம் செலுத்துவதால்
இந்த புரிதல் மிக அவசியமானது.
எரந்திராவும் அவளது பாட்டியும் ஒரு பாலைவனத்தில்
முகாமிட்டிருக்கிறார்கள். எரந்திராவை பார்க்க வரும் அவள் காதலனான யுலைசஸ்
சொல்கிறான். “என் அம்மா சொல்லுவாள் பாலைவனத்தில் இறப்பவர்கள் சொர்க்கத்துக்கு போக
முடியாது; அவர்களின் ஆன்மா கடலுக்கு செல்லும்”. இது ஒரு முக்கியமான வாக்கியம்.
கடவுளற்ற இருத்தலிய உலகில் மனிதர்கள் கடவுளையோ சொர்க்கத்தையோ நம்பவில்லை. காலத்தை
மட்டுமே நம்பினார்கள். அதனாலே சுந்தர ராமசாமியின் கவிதைகளில் அவர் கடவுளை
குறிக்கும் இடங்களில் “காலமே” என்பார். இங்கு கடல் தான் காலத்தின் குறியீடு. ஒரு
மனிதன் இறந்த பிற்பாடும் காலத்தில் மாட்டிக் கொண்டு மீண்டும் மீண்டும் இங்கேயே
சுற்றுகிறான் என்கிறார் மார்க்வெஸ். நம்பிக்கையற்ற அவனுக்கு மீட்சியே இல்லை. இது
தான் எரந்திராவின் துர்விதி. அவள் காலம் எனும் புதிர் வட்டப்பாதையில் மாட்டிக்
கொண்டிருக்கிறாள்.
இவ்வாறு மார்க்வெஸின் விசித்திர வாக்கியங்களின் பின்னே ஒரு
செறிவான நீண்ட பாரம்பரியமுள்ள தத்துவ கட்டமைப்பு உள்ளது. அதை தமிழில் அப்படியே
மறுசித்தரிப்பு செய்தால் சாரமற்று போகும். மாய எதார்த்தத்தை நாம் இந்திய புனைவு
மொழியில் மீள்கண்டுபிடிக்க வேண்டும். இங்குள்ள தத்துவ, தொன்ம கட்டமைப்புகள் அதற்கு
அடித்தளமாக வேண்டும். பேராசிரியர் ஆனந்தராஜ் சொல்வது போல் புதுமைப்பித்தனில்
அதற்கான சில கூறுகள் தென்பட்டாலும் முழுமையாக தமிழ்புனைவில் அது இதுவரையில்
நிகழவில்லை.
மார்க்வெஸின் கதைகளில் உள்ள குறியீடு, உருவகங்கள் தமிழில் வெறும்
அலங்காரங்களாய் பார்க்கப்பட்டன. மாந்திரிக உலகின் வண்ண விளக்குகளாய் அவை தொங்க
விடப்பட்டன. விளைவாய் அவரை அடியொற்றி எழுதப்பட்ட படைப்புகளும் ஒரு ஊரில் நில்லாமல்
வருடக் கணக்கில் மழை பெய்வது மாடியில், இருந்து குதிக்கிற மனிதன் விழாமல் பஞ்சு
போல் மிதப்பது போன்ற செயல்களை அழகான விசித்திரங்களாக காட்ட மட்டுமே தலைப்பட்டன. எஸ்.ரா
தனது சில கதைகளில் குறியீடுகளை அக்கறையுடன் பயன்படுத்தியிருந்தாலும் அவை அவரது
கதையுலகில் அந்நியப்பட்டு நிற்கின்றன.
எஸ்.ராவின் “குதிரைகள் பேச மறுக்கின்றன”
சிறுகதையில் ஒரு பெரியவர் நடைபழக அழைத்து போகும் நாய் குதிரையாக மாறுகிறது. இது
ஒரு குறியீடு. இக்கதைக்கு வலு சேர்ப்பது இது தரும் அர்த்த மடிப்புகள் தாம்
என்பதில் மறுப்பில்லை. ஆனாலும் மார்க்வெஸில் வருவது போல் விசித்திர குறியீடுகள்
இயல்பாக இங்கு இல்லை என்பதை கவனிக்க வேண்டும். மார்க்வெஸின் “பெரிய சிறகுகள் கொண்ட
மிக வயதானவர்” கதை கிறித்துவ மத நிறுவனத்தை பகடி செய்யும் நோக்கில் எழுதப்பட்டது.
அது ஒரு வயதான தேவன் கடற்கரையில் விழுந்து காயப்படுகிறான். அவனை கண்டெடுப்பவர்கள்
ஒரு கண்காட்சி பொருளாக பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள். இக்கதையில் மாய
திருப்பங்கள் சுவாரஸ்யம் அளித்தாலும் இன்னொரு புறம் அவை சமூக அரசியல்
விமர்சனத்தையும் சாத்தியப்படுத்துகின்றன. தமிழ் மாய எதார்த்த கதைகளில்
விசித்திரத்தின் சுவாரஸ்யம் மட்டும் முக்கியமாய் பார்க்கப்படுகிறது. அதைக் கடந்த
ஒரு தளம் இங்கில்லை.
“இந்த நகரில் திருடர்கள் இல்லை” போன்ற கதைகளில் மார்க்வெஸ் விசித்திர
சம்பவங்கள் இன்றியே ஒரு மாந்திரிகத்தை நிகழ்த்துகிறார். இக்கதையில் டமாஸோ எனும்
இளைஞன் முதன்முதலில் ஒரு விளையாட்டு அரங்குக்கு திருடப் போகிறான். அங்கு ஒன்றுமே
கிடைக்காமல் போக பில்லியர்ட்ஸ் விளையாட்டு பந்துகளை எடுத்து வருகிறான். அவனால்
பின்னர் அவற்றை விற்க முடியாமல் போகிறது. பந்துகள் கிடைக்காமல் அவற்றை அதிக விலை
கொடுத்து மீண்டும் வாங்கவும் முடியாமல் விளையாட்டு அரங்கின் முதலாளி
துன்பப்டுகிறார். இப்படி இந்த பந்து டமாஸோவுக்கும் உதவாமல் கடை நடத்துபவருக்கும்
பிரச்சனை தர தன் திருட்டின் அபத்தம் அவனை பெரிதும் மன உளைச்சலில் தள்ளுகிறது. அவன்
பின்னர் பந்துகளை திரும்ப வைக்க போகையில் பிடிபடுகிறான். இப்படியான எதேச்சையாய்
நிகழும் அபத்தங்கள் அவர் கதைகளில் அன்றாட வாழ்வில் உள்ள எதார்த்தத்தை பிளவுபட
வைக்கிறது. மனிதர்கள் தமக்குத் தாமே அந்நியமாகிறார்கள். வாழ்க்கை இயல்பாகவே
விசித்திரமாகிறது. இப்படி பறக்கும் கம்பளங்களும் சூனியக்காரிகளும் இன்றியே கூட ஒரு
நுண்ணிய மாய எதார்த்தவாதத்தை மார்க்வெஸால் சித்தரிக்க முடிகிறது. தமிழில் நாம் இதை
உள்வாங்கவில்லை.
ஒரு சின்ன சம்பவத்தை தொடர்ந்து நடக்கும் ஏராளமான சிறுசிறு நிகழ்வுகள்
குறித்த எண்ணற்ற தகவல்களை கொண்டும் மார்க்வெஸ் மாய எதார்த்தத்தை உண்டு
பண்ணுகிறார். உதாரணமாய் “Big
Mama’s Funeral”. உதாரணமாய் ஒரு கிராமத்தில் எம்.ஜி.ஆர் வருகிறார் என்று வைப்போம். அதை
ஒட்டி தொண்டர்கள் என்னென்ன எற்பாடுகளை செய்கிறார்கள்,பெண்கள் எப்படி எல்லாம்
தயாராகிறார்கள், சின்ன சின்ன கடைகளில் என்னென்ன விற்கப்படுகின்றன, எவ்வளவு பேர்
எவ்வளவு நீளமான கூட்டங்களில் அணிவகுத்து நிற்கிறார்கள் என்பன குறித்த பத்தி
பத்தியான அபரிதமான தகவல்களை குவித்து விடுவார் மார்க்வெஸ். தகவல்கள்
மிகுதியாகையில் எதார்த்தமும் விநோதத்தன்மை பெறுகிறது. இன்று டி.வியில் உள்ள
மிகையான கட்சி பிரச்சார ஒளிபரப்புகளில் இயல்பாக ஒரு மாய எதார்த்தவாதம் உருவாவதை
பார்க்கலாம். ஆனால் தமிழில் மாயஎதார்த்தத்தை வெறுமனே அந்தரத்தில் ஒரு மலர்
பூப்பது, வானில் ஒருவர் பறப்பது என மட்டுமே ஒற்றைபட்டையாய் புரிந்து
வைத்திருக்கிறோம்.
தொப்பிக்குள் இருந்து முயலை வெளித் தூக்கும் பி.சி சர்க்காராக,
விநோதங்களை அழகான மொழியில் சித்தரிக்கும் ஒரு தொழில்நுட்ப வித்தகனாக மட்டுமே
மார்க்வெஸை பார்த்ததே ரெண்டாயிரத்துக்கு பிறகு மாய எதார்த்தவாதம் பொலிவிழந்து ஈமு
பறவைகள் போல் திடீரென ஒருநாள் அநாதையாய் போனதற்கு காரணம். ஈமு பறவையை இனி என்ன
செய்வது என்பதை விட அது ஏன் இங்கே கொண்டு வரப்பட்டது என்பதே இனி கேட்க வேண்டிய
கேள்வி.
நன்றி: தாமரை, ஜூன் 2014
நன்றி: தாமரை, ஜூன் 2014
