வெளிநாட்டு கிரிக்கெட் நிபுணர்களுக்கு தம் அணி பற்றின பீதியுணர்வு
அதிகம். போன வருடம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 198 க்கு ஒரு விக்கெட் எனும்
நிலையில் இருந்தோம். உடனே இந்தியா வெல்லப் போவதாக கூவினார்கள் தென்னாப்பிரிக்க
வர்ணனையாளர்கள். ஸ்டெயின் அப்புறம் 6 விக்கெட் எடுக்க இந்தியா 334க்கு ஆட்டமிழந்தது.
அப்போதும் இந்தியா தான் வெல்லப் போவதாய் கூறினார்கள். ஆனால் தென்னாப்பிரிக்கா 500
அடித்து லீட் எடுத்து இந்தியாவை இரண்டாம் இன்னிங்ஸில் சுருட்டினாரகள். இந்தியா
அப்போது தோற்றதற்கான முக்கிய காரணம் 500 அடிக்காதது. வெளிநாடுகளில் இந்தியா 400-500க்குள் முதல்
இன்னிங்ஸில் அடிக்காத எல்லா டெஸ்டுகளிலும் தோற்கும். இதை எழுதி வைத்துக்
கொள்ளுங்கள்.
இது தான் இப்போது இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டிலும் நடந்து
வருகிறது. இந்தியா 295 அடித்ததும் நிபுணர்கள் இந்தியா தான் வெல்லப் போகிறது
என்றார்கள். ஆனால் எனக்கு அப்போதே இது போதாது என பட்டது. இப்போதுள்ள நிலையில் 140
சொச்ச லீடுடன் 4 விக்கெட் இழந்து இருக்கிறோம். ஆனால் 350க்கு மேல் லீட் எடுத்தால்
தான் ஏதோ ஒரு சின்ன வாய்ப்பு. 400க்கு மேல் அடித்தால் இங்கிலாந்து தடுப்பாட்ட
மனநிலைக்கு சென்று விடும். இது இந்தியாவுக்கு உதவும். இந்தியாவின் பிரச்சனை
300க்குள் ஒரு அணியை சுருட்டுவதற்கான திராணி நமக்கு இல்லை என்பது. நம்
வீச்சாளர்கள் எலியை பொறி வைத்து காத்திருப்பது போல் பந்து வீசுகிறார்கள்.
ஒவ்வொரு விக்கெட் எடுப்பதற்கு இடையிலும் நாம் 30-70 ஓட்டங்கள் இணைப்பாக கொடுக்கிறோம்.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போல் நம்மால் தொடர்ந்து பத்து பந்துகளுக்குள் 3,4
விக்கெட்டுகள் வீழ்த்த முடியாது. ஏனென்றால் நம் வீச்சாளர்கள் மட்டையாளர்கள் தவறு
செய்வதற்காக காத்திருக்கிறார்கள்.
வீழ்த்தும் வகையான பந்துகளை போட அவர்களுக்கு
திறனோ வேகமோ இல்லை. அப்படி திறனுள்ள வேகவீச்சாளர்களுக்கு தொடர்ந்து ரிஸ்க் எடுத்து
வாய்ப்புகள் கொடுத்து உருவாக்கவும் தோனி தயாராக இல்லை. இன்னும் பல காரணங்களும்
உள்ளன. அதை விடுங்கள் நம்மால் ஒரே நாளில் பத்து விக்கெட் எடுக்க வேண்டும் என்றால்
ஆடுதளம் அநியாயத்துக்கு சாதகமாக இருக்க வேண்டும். மட்டையாளர்கள் அநியாயத்துக்கு கேவலமாக அடித்தாடி அவுட்டாக வேண்டும். ஆனால் கொஞ்சம் சுமாரான ஆடுதளம்
என்றால், எதிரணியும் பொறுமையாய் தடுத்தாடினால் நம் வீச்சாளர்கள் 50 ஓவர்கள் கடந்ததுமே சோர்வாகி விடுவார்கள்.
அவர்களுக்கு உடலை வருத்தவோ தாக்கியாடவோ ஆர்வமில்லை. இப்படியான பசுமாடுகளை வைத்து
உங்களால் வெல்ல முடியாது.
இன்னொரு வழி புவனேஸ்வர் குமார் போல் மிகுந்த பொறுமையுடன் ஒரே
புள்ளியில் தொடர்ந்து பந்தை விழ வைத்து ஸ்விங் செய்வது. ஷாமி, இஷாந்துக்கு அதற்கான
பொறுமையோ தன்னம்பிக்கையோ இல்லை. மேலும் எப்போதும் ஒரே மாதிரி பந்து வீசி விக்கெட்
எடுக்க முடியாது. சிலவேளை ஸ்விங் ஆகும். சிலவேளை வேகமாய் நேராய் வீச வேண்டும்.
சிலவேளை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வேண்டும். ஆனால் ஷாமி, இஷாந்த் போன்றவர்கள் டீச்சர் சொல்வது போல் ஹோம்வொர்க் எழுதி கொடுக்கும் சமர்த்து மட்டும் கொண்ட அம்பி மாணவர்கள் போல. சூழலுக்கு தகுந்தவாறு முனைந்து விக்கெட் எடுக்கும் தன்னம்பிக்கை அவர்களுக்கு இல்லை. விக்கெட் விழவில்லை என்றால் மிஸ் என அழுது கொண்டு தோனிக்கு பின்னால் போல் நின்று கொள்வார்கள்.
இந்த டெஸ்ட் கண்டிப்பாய் டிரா ஆகாது.
இந்தியா வெல்ல வேண்டுமென்றால் இங்கிலாந்து மிக அசட்டையாக ஆடி மோசமான ஷாட்கள்
அடித்து வெளியேற வேண்டும். ஒருவர் கூட கவனம் செலுத்த கூடாது. அவர்களாக விக்கெட்களை
வாரி வழங்க வேண்டும். அப்படியென்றால் ஜெயிப்போம்.
எதிரணிக்கு 400க்கு மேல் இலக்கு நிறுவதற்காக நீண்ட நேரம் மட்டையாடும்
பொறுமையும் கவனமும் நம் மட்டையாளர்களுக்கு இல்லை. நம் மட்டையாளர்களும் பந்து வீச்சாளர்களைப்
போல 50-80 பந்துகளை சந்தித்ததும் மனதளவில் களைத்து கவனம் இழக்கிறார்கள். 300-400
பந்துகள் ஆடி பொறுமையாய் சதமடித்து அணியை காப்பாற்ற ஒருவர் கூட இந்த அணியில்
இல்லை. இங்கிலாந்தின் ஜோ ரூட் போன்றவர்களால் முடியும். புஜாராவால் முடியும்
என்கிறார்கள். ஆனால் நான் கவனித்தது வரை அவருக்கு பொறுமை இருக்கிறது, ஆனால் மனதை
நீண்ட நேரம் குவிக்க முடிவதில்லை. மனதளவில் களைத்து தவறு செய்து விடுகிறார். இதற்கு
இரு காரணங்கள்.
ஒன்று புஜாரா கூட டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டாக அறிமுகமானாலும் அவரது பிரதான
கவலை தன்னால் ஒருநாள் போட்டிகளில் ஆட முடியவில்லை என்பது. இங்கே ஐ.பி.எல்லில் 20
பந்தில் 50 அடித்தால் தான் நீங்கள் நட்சத்திரம். விளம்பரங்கள், கோடி பணம் எல்லாம்
கிடைக்கும். இந்த அழுத்தத்தினால் பூஜாராவின் மட்டையாட்ட நிலையமைதி சற்றே மாறி உள்ளது. அடித்தாடும் பிற
மட்டையாளர்களின் பாணியில் அவர் லெக் ஸ்டம்பில் நின்று பந்து ஆப் பக்கம் பந்தை விரட்ட
பார்க்கிறார். அவரது காலாட்டமும் மெத்தனமாகி உள்ளது. இதனால் சட்டென பந்து உள்ளே வர
பவுல்டாகி விடுகிறார்.
மாறாக முரளி விஜய்யை எடுங்கள். அவர் தன்னை ஒருநாள் வடிவில் ஆட வைக்க
மாட்டார்கள் என ஒருவாறு சமானாதமாகி விட்டார். அதனால் டெஸ்ட் போட்டிகளில் கவனம்
செலுத்தி அதற்கேற்றாற் போல் தன் மட்டையாட்டத்தை செதுக்கி இருக்கிறார். மற்றபடி
இந்த அணியில் தவான், தோனி, ஜடேஜா, பின்னி எல்லாரும் பிரதானமாய் ஒருநாள் வீரர்கள்.
அவர்களுக்கு டெஸ்டுக்கான தொழில்நுட்பமோ பொறுமையோ இல்லை. இங்கிலாந்தில் அது போல்
ஒரு மட்டையாளர் இல்லை. ஒவ்வொருவரும் ரன் எடுக்கிறாரக்ளோ இல்லையோ பொறுமையாய்
கவனமாய் உழைக்கிறார்கள். நீங்கள் அவர்களை நன்றாக வீசி வீழ்த்த வேண்டும். தோனி,
ஜடேஜா, தவான் போல் ஒருநாள் ஷாட் அடித்து அவர்களாகவே விக்கெட்டை பரிசளிக்க மாட்டார்கள்.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை போன்ற நாடுகள் டெஸ்ட் அணியை தனியாய் பார்த்து
அதற்கேற்ற தேர்வுகளை செய்கிறார்கள். ஒருநாள் மட்டையாளர்களை ஆட்டோமெட்டிக்காக டெஸ்டில்
தேர்வு செய்கிற அபத்தத்தை செய்ய மாட்டார்கள். உண்மையை சொல்வதானால் நம் டெஸ்ட்
அணிக்கு ஐந்து நாள் ஆடுவது போரடிக்கிறது.
நம்முடையது டெஸ்ட் அணி அல்ல. ஒருநாள் அணியை டிங்கரிங் பண்ணி டெஸ்ட் ஆட
அனுப்பி இருக்கிறார்கள். தனியாய் ஒரு டெஸ்ட் அணியை உருவாக்கி அதற்கென உடல் வலு
உள்ள வேகவீச்சாளர்களை உருவாக்கி புது அணித்தலைவரையும் நியமிக்காதவரை இந்த அணி
வெறும் சொப்பு அணியாக தான் இருக்கும்.
