நேற்று லயோலா கல்லூரியில் மனித வளம் தொடர்பான ஒரு துறை ஏற்பாடு செய்த சந்திப்பில் மாணவர்களிடம் மனம் மற்றும் மூன்று
நிலையிலான உறவுகள் பற்றியும் பேசினேன்.
ஒரு அழகான அரங்கு. முன்னூறு முதலாமாண்டு
மாணவர்கள். கவனமாக கேட்டு நல்ல கேள்விகளை பிற்பாடு எழுப்பினார்கள். அன்பாக வந்து
கை கொடுத்தார்கள். நான் முன்பு கல்வி நிலையில் வெகுவாக கீழே உள்ள மாணவர்களுக்கு
தான் அதிகம் நான்கு வருடங்களில் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அவர்களுக்கு சிக்கலான
விசயங்களை புரிய வைப்பது சிரமம். புரிந்தாலும் வகுப்பில் விவாதிக்க முன்வர
மாட்டார்கள். அவர்களை கட்டுக்கோப்பாய் வைப்பதிலேயே நம் கவனம் பாதி சென்று விடும்.
அதனால் லயோலாவில் உள்ளது போன்ற முதிர்ச்சியும் திறமையும் கொண்ட மாணவர்களிடம்
உரையாடுவது என் சகவயதினரிடம் உரையாடுவது போல் தோன்றுகிறது. இப்படியான மாணவர்களை
தினமும் சந்திக்கும் ஆசிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள். தன்னம்பிக்கையாக முன்வந்து
மைக்கில் பேசுகிறார்கள். ஒரு மாணவன் ஆந்தனி ராபின்ஸின் நூல் ஒன்றை படித்ததாய்
கூறினான். மகிழ்ச்சியாக இருந்தது.
ஆசிரியர்களின் staff room நவீனமாய் வெளிச்சமாய் அழகாய் உள்ளது. attendance register வைக்கும் ஸ்டாப் வெயிட்டிங் அறை சோபா
போட்டு நளினமாய் உள்ளது. இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் நான் வேலை பார்த்த
கல்லூரியில் ஆசிரியர் அறையில் குழல் விளக்கு பெரும்பாலும் வேலை செய்யாது. அப்படி
வேலை செய்தாலும் ஏதோ பார் போல் அரை இருட்டாகவே இருக்கும். இன்னொரு கல்லூரியில்
ஒன்றுக்கு போக அரைமைல் நடக்க வேண்டும். இங்கே ஆசிரியர்களின் அறைக்குள்ளேயே சுத்தமான கழிப்பறை. லயோலாவின் ஆசிரியர்கள் கொடுத்த வைத்தவர்கள்.
நான் கவனித்ததில் மிகவும் கவர்ந்த இன்னொரு விசயம் கண் தெரியாத மாணவர்களை ஒரு
பேட்டரி காரில் கொண்டு போய் வகுப்பறையில் விடுகிறார்கள்.