யுவ புரஸ்கார் விருதை ஒட்டி உயிர் எழுத்து போனதற்குமுந்தின இதழை எனக்கு சிறப்பிதழாக கொண்டு வந்தார்கள்.அதில் என் நீண்ட பேட்டி வெளியானது. அப்பேட்டியின் ஒருபகுதி இது:
கேள்வி: இதுவரை தங்களுடைய ஐந்து நூல்கள் வந்துள்ளன. அதில் 'கால்கள்'
நாவலை விடவும் சிறப்பான படைப்பு உள்ளது எனக் கருதுகின்றீர்களா அல்லது இதுவரை வெளிவந்துள்ள
உங்களுடைய படைப்புகளில் ஆகச் சிறந்தது 'கால்கள்' நாவல்தானா?
ஆர்.அபிலாஷ்: நான் அப்படி தரம் பிரிப்பதை விரும்பவில்லை. என்னுடைய எல்லா
படைப்புகளும் - கட்டுரை, மொழியாக்கம் உள்ளிட்டு - சமூகத்துடனான உரையாடலின் ஒரு பகுதி
தான். வாசகனின் ஒரு அடிப்படைக் கவலையை அல்லது குழப்பத்தை நாம் தொட்டு விடும் போது அப்படைப்பு
வெகுவாக கவனிக்கப்படும், பாராட்டப்படும். அப்போது கூட அது சிறந்த படைப்பாவது இல்லை.
தமிழில் இப்படி ஒரு மேனியா உள்ளது. நான் எழுதுவதில் ஒரு படைப்பு உலகத்தரமானதாய் இருக்கும்
என நம்புவது, அதை ஒரு சீனியர் எழுத்தாளர் கூற வேண்டும் என எதிர்பார்ப்பது, பின்னர்
அதையே நினைத்து காலத்தை ஓட்டுவது. அல்லது இதற்காக ஏங்குவது. இது சிறுபிள்ளைத்தனமானது.
நீங்கள் ஒரு மிக நல்ல கதையை எழுதினாலும் அது நீங்கள் எழுதின அடுத்த நொடி முடிந்து விட்டது.
நீங்கள் நகர்ந்து கொண்டே இருக்கிறீர்கள். அப்படைப்பு வாசகனின் நினைவில் தங்குவதோ தங்காததோ
உங்கள் பிரச்சனை அல்ல. சிலர் காதலியின் தலைமுடி, பழைய கடிதங்களை சேர்த்து வைப்பார்கள்.
என் நண்பர் ஒருவர் வெங்காயத் தோலிகளை மாதக்கணக்காய் வெளியே வீசாமல் சேர்த்து வைப்பார்.
அது போன்றது இந்த மனப்பான்மை.
மேலும் எழுத்து நட்பு, காதல் போல் ஒரு உறவு தான். காதலில் சிறந்த தருணம்,
நாள் என உள்ளதா என்ன? இல்லை. அது ஒரு நீண்ட பயணம். நம் செண்டிமெண்ட்ஸ் காரணமாய் சில
தருணங்கள் நினைவில் தனித்து தோன்றும். அது போல் எனக்கும் சில கட்டுரைகள் அல்லது என்
நாவல் மீது ஒரு சாய்வு உள்ளது. ஆனால் அது முக்கியமல்ல. மேலும் நான் எழுதிய பல விசயங்களை
கொஞ்ச நாட்களில் மறந்து விடுகிறேன். அதை கடந்து போய் விடுகிறேன். இந்த விருது பற்றின
நினைவை கூட அப்படி கடந்து போகவே விரும்புகிறேன். கடந்த காலத்தில் தேங்கி நிற்கும் துரதிஷ்டம்
எனக்கு நேரக் கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
கேள்வி: இன்றைக்கு வெளிவந்து கொண்டிருக்கின்ற சிற்றிதழ்களை எவ்வாறு
மதிப்பிடுவீர்கள்?
ஆர்.அபிலாஷ்: இன்று அசலான சிறுபத்திரிகைகள் இல்லை என நம்புகிறேன். ஆனால்
சிறுபத்திரிகை அடையாளத்துடன் வெளிவரும் பத்திரிகைகள் புது எழுத்தாளர்கள் வளர்வதற்கான
ஒரு முக்கிய களமாக உள்ளது. இவை மிகவும் பாராட்டத்தக்கவை. அதேவேளை ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்கு
அந்தஸ்தை ஸ்தாபிப்பதற்காக பத்திரிகை நடத்துபவர்கள் இருக்கிறார்கள். இப்பத்திரிகைகள்
எந்த இலக்குமில்லாமல் மின்னஞ்சலில் வரும் படைப்புகளை தொகுத்து பிரசுரிப்பவை. இவற்றை
தொகுப்புகள் என கூறவே விரும்புவேன். நானும் என் நண்பர்களும் சேர்ந்து ”புறநடை” என்றொரு
பத்திரிகை ஆரம்பித்தோம். அது ஒரே ஒரு இதழுடன் நின்று போனது. அப்போது எனக்கு ஒன்று புரிந்தது.
ஒரு பத்திரிகையை பணத்தை போட்டு அச்சடித்து விடலாம். ஆனால் பிரதிகளை வாசகனுக்கு கொண்டு
சேர்ப்பது மிக சிரமமான காரியம். அப்பத்திரிகையின் நூற்றுக்கணக்கான பிரதிகள் இன்றும்
அங்கங்கே நண்பர்களின் வீட்டில் தூசு படிந்து தூங்குகின்றன. முன்னூறு அல்லது ஐநூறு வாசகர்களை
அடைய எதற்கு இவ்வளவு சிரமப்பட வேண்டும் என தோன்றியது. நீங்கள் ஒரு இணைய இதழ் நடத்தினால்
குறைந்தது ரெண்டாயிரம் மூவாயிரம் வாசகர்களையாவது சென்றடையலாம். அதில் தீவிரமாய் வாசிக்கிற
இதே ஐநூறு பேர் இருப்பார்கள். (ஆனால் இணையம் பயன்படுத்தாதவர்களை சென்றடைய முடியாது
தான்.)
ஆனால் இங்கு அச்சு மீது மக்களுக்கு ஒரு மிகையான மதிப்பு உள்ளது. அச்சில்
வருவது உயர்ந்த மதிப்புள்ளது, நிரந்தரமானது என எழுத்தாளர்கள் இன்னும் நினைக்கிறார்கள்.
அதற்காகவே கூட பல இதழ்கள் வருகின்றன. ஏன் ஆண்கள் இப்படி பெண்களின் பெரிய மார்புகள்
பார்த்து சல்லாபித்து அதற்காக அங்கலாய்க்கிறார்கள் என சில பெண்களுக்கு தோன்றும். அச்சு
மீதான fetish பார்த்து எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது.
நான் நண்பர்களுடன் சேர்ந்து “பனிமுலை” என்றொரு இணைய இதழ் நடத்தினேன்.
அதில் போன வருடம் யுவ புரஸ்கார் வென்ற கதிர்பாரதி எழுதியிருக்கிறார் என பின்னர் அவர்
ஒரு பத்திரிகையில் குறிப்பிட்ட போது தான் அறிந்தேன். இப்போது நண்பர் சர்வோத்தமனுடன்
சேர்ந்து கவிதைக்காக “இன்மை” என்று ஒரு இணைய இதழ் நட்த்தி வருகிறேன். நாங்கள் மின்னஞ்சலில்
வருகிற எல்லா கவிதைகளையும் பிரசுரிப்பதில்லை. கராறாக தேர்வு செய்கிறோம். கவிதை குறித்து
எங்களுக்கு உள்ள நம்பிக்கைகளுக்கு உட்பட்டு தான் பிரசுரிக்கிறோம். செயல்படுகிறோம்.
இது தான் சிறுபத்திரிகை பண்பாடு என நம்புகிறேன். ஒரு அர்த்தத்தில், இன்று இணையம் தான்
நவீன சிறுபத்திரிகை உலகம். இனி, ஒருவர் பத்திரிகை நடத்துவதற்காக பணத்தை இழந்து ஏழையானேன்
எனக் கூறினால் நம்பாதீர்கள். பணம் இருந்தால் அச்சு பத்திரிகை நடத்தி தைரியமாய் நஷ்டப்படலாம்.
அல்லது இணைய இதழ் நடத்தலாம். இன்று அப்படி ஒரு மாற்று உள்ளது.
விகடன், குங்குமம், குமுதம் போல் குப்பையை பிரசுப்பதற்காய் லட்சக்கணக்கான
பிரதிகளை அச்சிட்டு மரங்களை அழிக்காமல் அழுத்தமான ஆழமான படைப்புகளை தாங்கி வரும் சிறுபத்திரிகைகள்
ஆயிரம் மடங்கு மேலானவை.
கேள்வி: தமிழக, இந்திய அளவில் உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யார்,
ஏன்?
ஆர்.அபிலாஷ்: தமிழில் என்னை கவர்ந்த எழுத்தாளர்களில் பலரை இப்பேட்டியில்
ஏற்கனவே குறிப்பிட்டு விட்டேன். தமிழ் நவீன கவிஞர்களில் பலரை நான் கிட்டத்தட்ட வழிபடுவேன்.
ஆத்மாநாம், பிரமிள், நகுலன், பசுவய்யா துவங்கி இன்றுள்ள தேவதேவன், தேவதச்சன், யூமாவாசுகி,
குட்டிரேவதி, மனுஷ்யபுத்திரன், என்.டி ராஜ்குமார் போன்றவர்கள் உலகத்தரமானவர்கள். நம்
கவிஞர்களோடு ஒப்பிடுகையில் நம் புனைகதையாளர்கள் சற்று மாற்று குறைவு தான். நான் இதை
அசோகமித்திரனிடம் குறிப்பிட்ட போது அவர் உடனடியாய் ஒப்புக் கொண்டார். தற்போது எழுதி
வரும் கவிஞர்களில் முகுந்த நாகராஜன், இசை, போகன் சங்கர் போன்றவர்களுக்கு அடுத்தபடியாய்
சபரிநாதன், கோசின்ரா, ஏ.ஏ பைசால், மனுஷி போன்றோரை குறிப்பிட விரும்புகிறேன். மேலும்
இன்மை இதழில் எழுதி வருபவர்களில் ஆ.செந்தில் குமார், பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி, பா.சரவணன்,
மணிபாரதி, அன்புச்செல்வன் ஆகியோருக்கு கவிதையில் நல்ல எதிர்காலம் இருக்கும் என நம்புகிறேன்.
கிரிஜா ஹரிஹரனின் கவிதை உலகம் ஜேன் ஆஸ்டினை நினைவுபடுத்துகிறது. நம் அடுத்த தலைமுறை
பெண் கவிஞர்களில் அவர் வித்தியாசமானவராக வர வாய்ப்புண்டு. நம் கவிதை மண் மிக வளமானது.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இங்கு மலர்ந்த மாந்திரிக எதார்த்த எழுத்து
என்னைப் பொறுத்தவரையில் முக்கியமான நிகழ்வு. கோணங்கி, எஸ்.ரா போன்றோரின் “தாவரங்களின்
உரையாடல்”, “நட்சத்திரங்கள் உறங்கும் மூன்றாம் ஜாமம்” போன்ற தொகுப்புகள் எனக்கு மிகவும்
நெருக்கமான ஒரு கதையுலகை காட்டின. நான் எழுத்தை நோக்கி ஈர்க்கப்பட்டது இவர்கள் இருவராலும்
தான். ரெண்டாயிரத்தின் துவக்கம் வரை நான் ஜெயமோகனை விடாது படித்து வந்தேன்.
மலையாளத்தில் பஷீரும் கவிதைகளில் பவித்திரன் தீக்குன்னியும் கவர்ந்தவர்கள்.
இந்திய ஆங்கில இலக்கியத்தில் ஜும்பா லஹரி, தருண் தேஜ்பால், ரோஹிண்டன் மிஸ்டிரி ஆகியோரைப்
பிடிக்கும். இந்திய ஆங்கில கவிஞர்களில் சுஜாதா பட், ஆர்.பார்த்தசாரதி ஆகியோரை சொல்லலாம்.
அவர்களை நான் மொழியாக்கி இருக்கிறேன். பள்ளி வயதில் நிஸிம் எஸக்கியலும் கவர்ந்தார்.
கேள்வி: ஆண் பெண் உறவில் ஏற்படும் அகவய சிக்கலை ஆராயும் உங்கள் சிறுகதைகள்
பெண் சார்பாக இருக்க விரும்பும் உங்கள் கருத்துகளால் தடுமாறுகின்றது. இது உங்கள் மீது
படிந்து இருக்கும் தத்துவ பாதிப்பா இல்லை இயல்பிலேயே அப்படித்தானா? அதாவது பெண்களுக்கு
சார்பான மனநிலையைப் பற்றி கேட்கின்றேன்.
ஆர்.அபிலாஷ்: என்னிடம் பெண் சார்பு உள்ளதாய் நினைக்கவில்லை. இந்திய
பெண்கள் மிகவும் சிக்கலானவர்கள். அவர்கள் இன்றைய ஆண்களை மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்கள்.
நான் இதைப் பற்றி ஆண்களின் கண்ணோட்டத்தில் தான் இருந்து நிறைய எழுதி உள்ளதாய் நினைக்கிறேன்.
என் புனைவில் எப்படி இருக்கிறது என தெரியவில்லை. வெளியில் இருந்து பார்க்கிறவர்கள்
தான் சரியாக கூற முடியும். “கால்கள்” நாவல் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் பிடித்திருக்கிறது.
காரணம் அதில் ஒரு தீவிரமான பெண்ணுலகம் வியாபித்துள்ளது தான். உங்கள் கேள்விக்கான பதிலை
ஒரு விமர்சகர் தான் சரியாக கூற முடியும்.
கேள்வி: இன்றைக்கு நிறைய 'கோஸ்ட்' எழுத்தாளர்களும் போலி படைப்பாளிகளும்
பெருகிவிட்டதை எப்படி உங்களைப் போன்ற அசல் எழுத்தாளர்கள் எதிர்கொள்வது?
ஆர்.அபிலாஷ்: இது ஒரு முக்கியமான கேள்வி. இதைப் பற்றி நான் இங்கு பேசுவது
மட்டும் அல்ல, நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாய் விவாதிக்க வேண்டும். இன்று சந்தைப்படுத்தல்,
பண பலம், செல்வாக்கு மூலம் ஒருவர் எதையும் முக்கியமாய் எழுதாமலே எழுத்தாளனாய் அறியப்பட
முடியும் எனும் நிலை தோன்றி உள்ளது. உதாரணமாய் வெறும் பேஸ்புக் நிலைத்தகவல்களை தொகுத்து
நாவல் எனக் கூறுவது, அதை சாரு போன்றவர்களை பின்நவீனத்துவ படைப்பு என நாற்பது பக்க முன்னுரை
எழுதி பாராட்டுவது போன்ற விசயங்கள் அபத்தத்தின் உச்சம். இதன் நோக்கம் எழுத்தாளன் எனும்
போர்வையில் சமூக அந்தஸ்தை அடைவது தான். இது அற்பமானது.
யாரும் எழுத்தாளன் ஆகலாம். ஆனால் குறைந்த பட்சமாய் இலக்கியம், சமூகம்
மீது ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்க வேண்டும். புத்தகங்களை வாசித்து அது குறித்து உரையாட
வேண்டும். பல்வேறு சமூக விசயங்களை கவனிக்க வேண்டும். அறிவுத்துறைகளை பரிச்சயம் கொண்டு
அது குறித்து வாசகனுடன் உரையாட வேண்டும். எழுத்தாளன் வாசகனுக்கு ஒரு நல்ல ஆசானாக இருக்க
வேண்டும். அதற்காக அவன் எந்த சன்மானமும் எதிர்பார்க்க கூடாது. இதையெல்லாம் செய்யாதவன்
என்னைப் பொறுத்தவரையில் போலி எழுத்தாளன். எழுதுவது தொடர்ந்த கடப்பாட்டை கோரும் பணி.
பேஸ்புக்கில் ஒரு ஆபாச வரியை எழுதி ஆயிரம் லைக் வாங்கி விடலாம். ஆனால் தொகுத்து அதையே
ஆயிரம் பிரதிகள் பிரசுரித்தால் நீங்கள் எழுத்தாளன் ஆகி விட முடியாது.
கேள்வி: உங்களுடைய குடும்பத்தினர் எந்த அளவுக்கு எழுத்துப் பணிகளுக்கு
துணையாக உள்ளனர்?
என்னுடைய மனைவி நல்ல வாசிப்பு பழக்கம் உள்ளவர். பல நல்ல புத்தகங்களை
எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். மிகுந்த புரிந்துணர்வு கொண்ட வாழ்க்கைத் துணை
அவள். நான் மணிக்கணக்காய் எழுத்தில் மூழ்கும் போது அவள் இயல்பாக தனிமையாய் உணர்கிறாள்.
இது குறித்த குற்றவுணர்வு எனக்கு உண்டு. ஒருவிதத்தில் அவள் ஒரு எழுத்தாளனாய் எனக்கு
லட்சிய மனைவி. அதிகமாய் சம்பாதிக்கும்படி என்னை வற்புறுத்தியது இல்லை. நான் படிக்கிற
எந்த நூலைப் பற்றியும் அவளிடம் பேச முடியும். அது போல் புத்தகங்கள் தவிர அவளது பிற
அக்கறைகளான புகைப்படம், சினிமா போன்றவை எனக்கு ஒரு புதிய உலகை திறந்து விட்டன. “கால்களில்”
பெண்ணுலகு பற்றின பல நுணுக்கமான தகவல்களை நான் அவளை அணுக்கமாய் கவனித்து எழுதியவை.
குறிப்பாய் மதுவுக்கு மாதவிடாய் வரும் இடத்தை சொல்லலாம்.
கேள்வி: பத்திரிகைகளும் பதிப்பகங்களும் ஒரு படைப்பாளிக்கு இன்றியமையாதது,
இதை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்.
ஆர்.அபிலாஷ்: எழுத்தாளனாய் துவக்க காலத்தில் சில பத்திரிகைகளிடம் இருந்து
கசப்பான அனுபவங்களை பெற்றிருக்கிறேன். அதனால் தான் பிற்பாடு உயிர்மையுடனான என் உறவு
வலுவானதாக மாறியது. “உயிர்மையில்” எழுதுவது குறித்து எனக்கு மிகுந்த தயக்கம் என்றும்
உண்டு. மிக தரமான படைப்பாளிகள் எழுதும் பத்திரிகை அது. இன்று தமிழில் இயங்கும் பல முக்கிய
எழுத்தாளர்கள் அதன் ஆளுமையின் பகுதியாக இருந்திருக்கிறார்கள். அதனால் அப்பத்திரிகையில்
எழுதும் போது நமக்கு இரட்டிப்பு கவனமும் மதிப்பும் ஏற்படும். ஒரு பெரும் வெளிச்சத்தின்
பகுதியாக இருப்பது போன்றது இது. பல முக்கியமான அரசியல் சமூக நிகழ்வுகளை பற்றின விமர்சனங்களை
உயிர்மை பிரசுரிக்கிறது. இது முக்கியமான சமூக செயல்பாடு. ஆங்கிலத்தில் calling என்றொரு
சொல் உண்டு. உயிர்மையில் எழுதுவதை என் calling ஆக நினைக்கிறேன்.
அமிர்தாவும் எனக்கு முக்கியமான பத்திரிகை. எங்கு சுற்றினாலும் நமக்கு
திரும்பி போக சொந்த வீடு ஒன்று இருக்குமே - அது போன்ற ஒரு இடம் அமிர்தா. அது எனக்கு
சொந்த பத்திரிகை போல. என்னுடைய கவனம் பெற்ற படைப்புகள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
பத்திரிகை எடிட்டர்களுக்கு என்று ஒரு நுண்ணுணர்வு உண்டு. அது எழுத்தாளனுக்கு
மிகவும் பயன்படும். ஒரு எடிட்டராக மனுஷ்யபுத்திரன் தந்துள்ள அறிவுரைகள் என்னை செழுமைப்படுத்தின.
அது போல் பத்திரிகைகள் தரும் அழுத்தமும் நம்மை நிறைய எழுத வைக்கும். தொடர்ந்து ஆதரிக்கும்
பத்திரிகைகள் இல்லாமல் நிறைய எழுத தொடர்ந்து இயங்க எழுத்தாளனுக்கு ஆற்றல் இருக்காது.
எழுத்தாளனுக்கும் பத்திரிகைக்குமான உறவு மிக முக்கியமானது.
கேள்வி: உங்களுடைய எதிர்கால திட்டம் என்னவாக உள்ளது?
ஆர்.அபிலாஷ்: சில புத்தகங்கள் பற்றி திட்டம் உள்ளது. ஆனால் இலக்கு என
எதுவும் இல்லை. இன்னும் இருபது முப்பது வருடம் வாழ வேண்டும் என நினைத்தால் உண்மையில்
அலுப்பாக இருக்கிறது. அதற்காக உடனடியாக இறக்க முடியாது. ஒரு நொடியில் அடுத்த முப்பது
வருடங்களும் கடந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் என சில நேரம் யோசிப்பேன்.
கேள்வி: உங்கள் சிந்தனைப் போக்குகளுக்கும் வளர்ச்சிக்கும் உதவிய நண்பர்களைப்
பற்றி சொல்லுங்கள்.
ஆர்.அபிலாஷ்: ஏற்கனவே இதே பேட்டியில் எழுத்தாளனாய் என் உருவாக்கத்திற்கு
பங்காற்றியவர்கள் குறித்து சொல்லி விட்டேன். சிந்தனையாளர்களில் ரஸல், கீர்க்க்காட்,
சார்த்தர், நீட்சே போன்றவர்கள் என் சிந்தனையை வெகுவாக பாதித்தவர்கள். நான் தொடர்ந்து
பின் தொடர முயல்வது இவர்களின் எழுத்தை தான். அவர்கள் தான் ஒருவிதத்தில் என் ஆத்ம நண்பர்கள்.
நடைமுறை வாழ்வில் எனக்கு பல நல்ல நண்பர்கள் வாய்த்திருக்கிறார்கள்.
நான் மிகவும் அந்தரங்கமாய் லயித்து பேசும் நண்பன் சார்லஸ் தற்போது கொடைக்கானலில் இருக்கிறான்.
அவன் ஒரு பள்ளி வரலாற்று ஆசிரியன். அது போல் தற்போது என் நெருக்கமான நண்பராக இருக்கும் சர்வோத்தமனும்
எனக்கு முக்கியமானவர். மோகன காயத்ரி என்ற தோழியை குறிப்பிடலாம். அவர் சற்று காலம் உயிர்மையில்
பணியாற்றிய போது என் எழுத்துக்கு பெரிய ஊக்கமாக இருந்தார். மிக நல்ல வாசகர் அவர். திருவண்ணாமலையில்
உள்ள தோழி இந்திரா என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். எனக்கு நலமில்லாமல் இருந்த போது
மிகவும் சிரமப்பட்டு என்னை பார்க்க சென்னை வரை வந்தது நினைவுள்ளது. தமிழ்நதியை நான்
அதுவரை நேரில் சந்தித்ததில்லை. அவர் அன்று கனடா திரும்ப இருந்தார். நான் தீவிர சிகிச்சை
பிரிவில் இருந்தது அறிந்து உடனடியாய் என்னை பார்க்க வந்தது நினைவுள்ளது. அவர் என்னிடம்
சொன்னார் “தோழர் இலக்கியத்துக்காக உயிரை விட்டு விடாதீர்கள். எழுத்தை விட வாழ்க்கை
தான் முக்கியம்”. வாழ்வின் வலியை அறிந்த ஒருவரால் தான் அதைக் கூற முடியும். என் பதினாலு
வயது முதல் இன்று வரை என் மீது மிகவும் அக்கறை கொண்டவர் ஹமீம் முஸ்தபா. என் ஆசிரியர்களில்
ஜனார்த்தனன், நிர்மல் செல்வமணி ஆகியோரின் வகுப்புகளும் உறவும் பலவகைகளில் உதவி உள்ளன.
என் முனைவர் பட்ட ஆய்வின் நெறியாளர் அழகரசன் ஒரு எழுத்தாளர். அவர் எனக்கு அறிமுகப்படுத்திய
புத்தகங்களின் தாக்கம் என் எழுத்தில் வலுவாக உள்ளது. பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பில்
எனக்கு ஒரு கணித ஆசிரியர் இருந்தார். மிகவும் அட்டகாசமான ஆளுமை அவர். மாணவர்களிடையே
மிகவும் பிரபலம். ஒருநாள் விளையாட்டு வகுப்பின் போது வகுப்பில் நான் மட்டும் தனியாய்
உட்கார்ந்திருந்தேன். அவர் என்னருகே வந்து அமர்ந்து தோளில் கையிட்டு நீண்ட நேரம் அன்பாய்
பேசிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் ஒரு விபத்தில் இறந்து போனார். ஒரு ஆசிரியராக ஆன
பின் அவரே என் முன்மாதிரி. ஒரு ஆசிரியன் நல்ல மனிதனாக, அடுத்தவர் மேல் அக்கறை கொண்டவனாக
இருக்க வேண்டும் என கற்பித்தவர் அவர். கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாய் நான் கல்லூரியில்
கற்பித்துள்ள மாணவர்கள் அத்தனை பேரும் எனக்கு பிறக்காத பிள்ளைகள். என் எழுத்துக்கு
நிகராக அவர்களை நேசிக்கிறேன்.
கேள்வி: நீங்களே இளம் படைப்பாளிதான். உங்களையும் விட இளையவர்களுக்கு
என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஆர்.அபிலாஷ்: சமரசம் செய்யாதீர்கள். உங்களுக்குள் முடங்கி போகாதீர்கள்.
நிறைய ஆங்கிலத்தில் வாசியுங்கள். யார் பேச்சையும் கேட்காமல் உங்கள் போக்கில் வாசியுங்கள்.
பரவலாய் புனைவு, அபுனைவு, கவிதை, அரசியல், கோட்பாடு, வரலாறு என எதையும் விட்டு வைக்காதீர்கள்.
உங்களுக்கு சரி என படுகிறதை, தர்க்கரீதியாய் நம்ப முடிகிற, ஆத்மார்த்தமாய் உணர்கிறதை
மட்டும் நம்புங்கள். யாரும் உங்களை அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.
எழுத்துக்கு அங்கீகாரம் அவசியமில்லை. வாசகன் தான் உங்கள் இலக்கு. விமர்சகனோ, மூத்த
எழுத்தாளனோ, சினிமா வாய்ப்போ அல்ல. நிறைய வாசகர்களை எந்த சமரசமும் பண்ணாமல் அடையுங்கள்.
யாரையும் பின்பற்றாதீர்கள். எந்த குழுவிலும் சேராதீர்கள். எந்த எழுத்தாளனையும் கண்மூடி
குருவாக, தலைவனாக ஏற்காதீர்கள். எல்லாரையும் எல்லாவற்றையும் கேள்வி கேளுங்கள். எழுத்தாள
ரசிகர் மன்றங்கள் அமைக்காதீர்கள், அதில் சேராதீர்கள். நினைப்பதை தயங்காமல் செய்யும்
போது தான் உங்களுக்கான ஆளுமை உருவாகும். எழுதுவதோடு நிற்காமல் நீங்கள் நம்புகிறவை குறித்து
எல்லா வழிகளிலும் சமூகத்துடன் உரையாடுங்கள். மொழியாக்கம், விமர்சனம் ஆகியவற்றையும்
செய்யுங்கள். இறுதியாக, இந்த சமூகத்துக்கு நாம் செய்யும் பங்களிப்பு தான் எழுத்து என
நம்புங்கள். நாம் நமக்காக மட்டும் எழுதவில்லை. வெளியே தெரிகிறதோ இல்லையோ நம்மால் இந்த
பண்பாடு ஒரு பக்கம் மேம்படுகிறது. அது தான் காலம் நமக்கு அளித்துள்ள பணி.