“இன்மை” இதழ் 10 வெளியாகியுள்ளது.
இவ்விதழில் கவிதை குறித்த ஏழு கட்டுரைகள் இடம் பெறுகின்றன: போகன் சங்கர் பற்றின கலாப்ரியாவின்
கட்டுரை, இசையின் கவிதைகள், அரவிந்தனின் கவிதைத் தொகுப்பு மற்றும் மனுஷ்யபுத்திரனின்
“நீராலானது” பற்றி ஆர்.அபிலாஷ் கட்டுரைகள், என்.டி.ராஜ்குமார் கவிதைகள் பற்றின நாகபிரகாஷின்
மதிப்புரை, ஆத்மார்த்தியின் “ஓயாப் பெருநடனம்” தொடர், மற்றும் முனைவர் அன்பு சிவாவின்
சங்க இலக்கியத்தில் உழவு வாழ்க்கை பற்றின கட்டுரை ஆகியன. ஷேக்ஸ்பியரின் ஓரினக் காதல்
கவிதைகள், புக்காவஸ்கி, எமிலி வெப், டேவிட் ஷெபிரோ ஆகிய மொழியாக்க கவிதைகளும் நவீன
அமெரிக்க ஹைக்கூ மொழியாக்கமும் இடம் பெறுகின்றன. இத்துடன் பா.சரவணன், பா.வேல்முருகன்,
நாகபிரகாஷ், குமரகுரு, எ.கிருஷ்ணகுமார், ப.திலீபன், விஷால் ராஜா, கிரிஜா ஹரிஹரன், சுப்ரா,
மணிபாரதி, கோசின்ரா ஆகியோரின் கவிதைகளும் இவ்விதழை நிறைவாக்குகின்றன. இவ்விதழில் பங்கேற்ற
படைப்பாளிகளுக்கும் வாசிக்கப் போகும் வாசகர்களுக்கும் எங்கள் நன்றியும் அன்பும்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்