“அட்டகத்தியில்” எனக்கு ரெண்டு விசயங்கள் பிடித்திருந்தன. ஒன்று,
இன்றைய தலைமுறையால் தீவிரமான ஆதாரமான உணர்ச்சிகளை ஏற்க முடியவில்லை என அப்படம் பேசியது.
அப்பட நாயகனின் பிரச்சனை பெரிய காதல் தோல்விகள் வரும் போதும் அவனுக்கு துக்கம் வரவில்லை,
அவன் துக்கத்திற்கு வெளியே நிற்கிறான் என்பது. காதல் தோல்வியில் இருப்பவன் போண்டா சாப்பிடலாமா
எனும் காட்சி தொண்ணூறுகளில் வந்த அத்தனை காதல் தோல்வி கண்ணீர் படங்களையும் கேலி பண்ணியது.
இது இன்றைய இளைஞனின் மனநிலை. ஆழமான உணர்ச்சிகளை அவனால் அனுபவிக்க முடியவில்லை. ஏனென்றால்
ஆழமான மனநிலைகளில் அவனுக்கு நம்பிக்கை போய் விட்டது. ஏனென்றால் லட்சியங்களும் விழுமியங்களும்
அவனுக்கு ஒரு பழைய மொபைல் போன் போல் தோன்றுகின்றன. வெறும் காதலில் அல்ல, கலாச்சார,
அரசியல் தளங்களிலும் இந்த பின்நவீனத்துவ மிதவை நிலை இன்று உள்ளது. தமிழில் ஒரு இயக்குநர்
இப்படியான ஒரு கண்டுபிடிப்பை செய்துள்ளார் என்பதே வியப்புக்குரியது. அடுத்து அரசியல்
நம்பிக்கைகள் கொண்ட ஒரே விதிவிலக்கு இயக்குநர் பா.ரஞ்சித். அவருக்கு என்று சொல்வதற்கு
விசயங்கள் உள்ளன என்று ஒரு டி.வி நிகழ்ச்சியில் அவரை சந்திக்கையில் தோன்றியது. கையில்
ஒரு சிறுபத்திரிகை வைத்திருந்தார். தனக்கு பிடித்த பத்திரிகைகள் என சிறுபத்திரிகைகளை
குறிப்பிட்டார். இப்படியானவர்களுக்கு புது தளங்களில் தொடர்ந்து படம் எடுப்பது பிரச்சனையில்லை.
அவர்களிடம் சொல்ல ஏராளமான கதைகள் இருக்கும். நான் எதிர்பார்த்தது போல அவரது இரண்டாவது
படமான “மெட்ராஸ்” முற்றிலும் புதிதான ஒரு களத்தை எடுத்திருக்கிறது. வட சென்னை மக்களின்
விளையாட்டு, பாட்டு, அரசியல், தண்ணீர் பிரச்சனை என தனித்துவமான வாழ்வியல் கூறுகளை காட்டி
இருக்கிறார். ஒரே பிரச்சனை இப்படம் நிறைய சமரசங்களை செய்வது. இந்த பிரச்சனைகளை பார்ப்போம்.
முதலில் இப்படத்தினுள் இரண்டு
விதைகள் உள்ளன. ஒன்று பண்பாட்டளவில் ஒரு தலித் குடியிருப்பு வாழ்க்கை எப்படி மாறுபட்டிருக்கிறது
என்பது. ஒரு தலித் பள்ளி, கல்லூரி, அலுவலக வேலை ஆகிய பல்வேறு கட்டங்களில் தன் அடையாளம்
பற்றி எப்படி எல்லாம் உணர்கிறான் என பேசுவது. இப்படம் சமீபமான ஒரு காலகட்டத்தில் தான்
நிகழ்கிறது. ஒரு பத்து, இருபது ஆண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தமிழக சாதிய
அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்தன. தலித்துகள் தம்மை வலிமையாக துணிச்சலாக முன்வைத்தார்கள்.
ஒடுக்குமுறையை எதிர்த்தார்கள். சாதிய மரணங்கள் நிகழ்ந்தன. விடுதலை சிறுத்தைகள் கட்சி
தோன்றி வளர்ந்து திராவிட கட்சிகளுடன் இணைந்து அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற்றன. ஆனால்
இப்படம் இரு திராவிட கட்சிகளின் சார்பில் இயங்கும் தலித்களை பற்றி பேசுகிறது. விடுதலைச்
சிறுத்தைகளைப் பற்றி பேச இயக்குநர் ஏன் தயங்குகிறார்? கார்த்தியின் பாத்திரமான காளி
ஓரிடத்தில் கேட்கிறான் தமிழ் தமிழ் என கூச்சலிட்டு நாம் என்னதான் சாதித்து விட்டோம்
என. இதன் பொருள் திராவிட கட்சிகள் மையசாதி அரசியலை மட்டுமே முன்னெடுத்து, தலித்துகளை
கைவிட்டது என்பது. தமிழ் தேசியம் ஒரு திராவிட அரசியல் தந்திரம் என்பது. இவ்விமர்சனத்தை
தமிழ் தேசியவாதிகள் மீதும், திராவிட கட்சிகள் மீதும் தலித் சிந்தனையாளர்கள் தொடர்ந்து
முன்வைத்து வருகிறார்கள். ஆனால் “மெட்ராஸ்” இவ்விமர்சனங்களை தீவிரமாக வைக்க மிகவும்
தயங்குகிறது.
ஆனால் படத்தின் மையமே திராவிட
கட்சிகள் எப்படி தலித்துகளை பிரித்து ஆள்கிறது என்பது. அதற்கு தான் சுவரை படத்தில்
திரும்ப திரும்ப காட்டுகிறார்கள். சுவர் ஒரு உருவகமாக வெளிப்படையாக இருக்கிறது. ஆனால்
தலித்துகள் எப்படி திராவிட கட்சிகளின் ஆட்சியில் எப்படி மைய, உயர் மைய சாதிகளின் ஒடுக்குமுறைக்கும்
ஆதிக்கத்துக்கும் ஆளானார்கள் என்பதை சொல்ல மறுக்கிறார். சுவரை வைத்து செய்த அந்த அரசியல்
என்ன, அதன் பல பரிமாணங்கள் என்ன என்பதைத் தான் “சாதி இன்று” எனும் நூல் பேசுகிறது.
ஆனால் சாதி பற்றி பேசாமலே சாதி அரசியலை வெறுமே தொட்டுக் காட்டி விட்டு பூடகமாய் திராவிட
கட்சிகளை சாட முயற்சிக்கிறார். எனக்கு No one Killed Jessica எனும் இந்திப்படம் நினைவு
வருகிறது. அப்படத்தில் ஜெஸிக்கா எனும் பெண்ணை ஒரு பணக்கார இளைஞன் ஒரு பாரில் வைத்து
பலர் முன்னிலையில் சுட்டுக் கொல்வான். ஆனால் போலீஸ் சாட்சியே இல்லை என பொய் கூறும்.
யார் கொன்றார்கள் எனத் தெரியவில்லை என நீதிமன்றத்தில் சொல்லும். அப்போது ஜெஸிக்காவின்
தங்கை சொல்வாள் “ஜெஸிக்கா செத்து விட்டாள். ஆனால் அவளை யாரும் கொல்லவில்லை. அவளாகவே
துப்பாக்கியை எடுத்து தன்னை சுட்டுக் கொண்டு விட்டாள்”. “மெட்ராஸ்” சொல்லும் சேதி இது
போல் தான் இருக்கிறது: “தலித்களை திராவிட கட்சிகள் ஏமாற்றி அரசியல் பண்ணுகின்றன. ஆனால்
அதற்கு மைய சாதிகள் யாரும் காரணமல்ல. அதில் சாதியமே இல்லை. தமிழகத்தில் சாதியோ தலித்துகளோ
இல்லை. அம்பேத்கர் மட்டும் இருக்கிறார்”.
இன்னொரு பக்கம் அவர் தலித் கட்சியின் தோற்றம்,
அதன் சமரசங்கள், வீழ்ச்சிகளின் உள்ளடக்கிய வரலாற்றையும் இருட்டடிக்கிறார். படத்தின்
இறுதிக் காட்சியில் காளி குழந்தைகளுக்கு தலித்திய மேற்கோள்களுடன் பாடம் எடுக்கிறான்.
அம்பேத்கர் சிந்தனைகள் தான் தலித்துகளுக்கு விடுதலை தரும் என்கிறார். சரி, ஆனால் தமிழகத்தில்
யாருமே அதை செய்யவில்லையா? அம்பேத்கர் சிந்தனைகளைக் கொண்டு கட்சியே தோன்றி இயங்கி அது
பின்னர் தி.மு.கவுடன் சமரசம் செய்து கொண்டு அடங்கிப் போகவில்லையா? ஏதோ விடுதலைச் சிறுத்தைகளே
இனி தான் உருவாக வேண்டும் என்பது போல் பா.ரஞ்சித் காட்டுகிறார். முன்னும் பின்னும்
வெட்டின ஒரு வரலாற்றை நமக்குத் தருகிறார்.
நுணுக்கமான கலாச்சார, உளவியல்
ஒடுக்குமுறையை சந்திக்காமல் இங்கு ஒரு தலித் இளைஞன் தன் இருபதுகளை வந்து அடைய முடியுமா?
மதுரையிலும் தருமபுரியிலும் நடப்பதன் எந்த தாக்கமும் இன்றி ஒரு வடசென்னை தலித் வளர
முடியுமா? இந்த படத்தின் சமரசங்களுக்கு முக்கிய காரணம் படம் பார்க்கும் கணிசமான பார்வையாளர்கள் மைய,
மேல் மத்திய சாதிகள் என்பது. உண்மையான வாழ்க்கை நிலையை, வரலாற்றை பேசினால் கணிசமான
பார்வையாளர்கள் முகம் சுளிக்க நேரிடும். அதனால் தான் “என்னுயிர் தோழனுக்கும்” “மெட்ராஸுக்கும்”
பெரிய வேறுபாடுகள் இல்லாமல் போய் விடுகிறது. கட்சிகள் எப்படி மக்களின் உணர்ச்சிகளை
வைத்து விளையாடுகிறார்கள் என்பதை தான் இப்படம் பிரதானமாய் பேசுகிறது. தலித்தியம் ஊறுகாய்
போல் வருகிறது. படத்தின் பிற்பகுதி “நான் மகான் அல்ல” போல் இருக்கிறது. இந்த பழிவாங்கும்
கட்டம் பலவீனமாக இருக்கிறது.
அது மட்டுமல்ல பல காட்சிகளின் அமைப்பில் பிரச்சனை உள்ளது. இருவகையான காட்சிகள் இப்படத்தில் உள்ளன. ஒன்று, கலாச்சார வாழ்வை பதிவு செய்யும் காட்சிகள். அவை நன்றாக வந்துள்ளன. இன்னொன்று கதையை நகர்த்தும், நாடகீயமான மைய காட்சிகள். அவற்றை ரஞ்சித்தால் உயிர்ப்பாக உருவாக்க முடியவில்லை. ஒரு காட்சி இயல்பாக வளர வேண்டும். புதிதாக ஒன்றை நடுவிலோ இறுதியிலோ காட்ட வேண்டும். இப்படத்தின் காதல் மற்றும் நட்பு காட்சிகள் ஏதோ புகைப்படம் போல் உறைந்து நிற்கின்றன. கலையரசி காளியை தவிக்க விடும் காட்சிகள் நுணுக்கமாக உள்ளன. அவர்களின் காதல் பற்றி ஊரார் அறிந்ததும் அவள் அவனை வெறுப்பதாய் நடிக்கிறாள். அது போல் காளி அவளை விட தன் நண்பனையே அதிகம் நேசிப்பதாய் அறியும் போதும் அவள் அவனை வெறுப்பதாய் நடித்து அலைய விடுகிறாள். ஆனால் அவள் அவனை ஆரம்பத்தில் தொடர்ந்து சந்திக்கும் காட்சிகள் மாறுதல்கள் இன்றி தட்டையாக உள்ளன. அவள் அவனை விடிகாலையில் தண்ணீர் பிடிக்கும் பம்ப் அருகே பார்க்கிறாள். இருவரும் பார்த்து கொள்கிறார்கள். பிரிகிறார்கள். பிறகு மீண்டும் அதே இடத்தில் சந்திக்கிறார்கள். இப்படியே ஏதோ சிவாஜி படத்து முதலிரவு காட்சிகள் போல உள்ளன. அது போல் காளியை அழைத்து அவளாகவே காதல் சொல்லும் காட்சியும் அதற்கு மேல் ஒன்றும் புதிதாய் சொல்வதில்லை. காளிக்கும் அன்புக்குமான நட்பு கூட அவர்கள் மிக நெருக்கமானவர்கள் எனும் ஒரு முன் அனுமானத்துடனே காட்டப்படுகிறது. அந்த நட்பு ஏன் நெருக்கமானது என அக்காட்சிகள் காட்டுவதில்லை. பதிலுக்கு “பார் அவங்க எவ்வளவு நெருக்கம்” என யாராவது வெளியில் இருந்து சொல்கிறார்கள். அல்லது காளியே தன் நண்பனை நோக்கி “பார் நம் நட்பு மிக சிறந்தது” என சொல்வது போல் உள்ளது. இப்படி வசனங்கள் மூலமே ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜ் போல் நட்பை பறைசாற்றுகிறார்கள். அதை காட்டுவதில்லை. “பிதாமகனில்” விக்ரம் மற்றும் சூர்யாவுக்கு இடையிலான அன்பை, நெருக்கத்தை காட்ட சில நெகிழ்ச்சியான காட்சிகளை வைத்திருப்பார். சிறையில் பரஸ்பரம் உதவுவது, பச்சை குத்திக் கொள்வது, குளிப்பாட்டுவது, சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுப்பது, கோயிலில் காதலியை சூர்யா சந்திக்கையில் விக்ரம் பொறாமைப்படுவது என. இதனாலே இறுதியில் சூர்யா கொல்லப்படும் போல் நமக்கு உருவாகும் துக்கம் “மெட்றாஸில்” அன்பு கொல்லப்படும் போது நமக்கு ஏற்படுவதில்லை. காரணம் நட்பு காட்சிகளில் அவர்கள் நண்பர்கள் எனும் அனுமானம் மட்டுமே உள்ளது. உயிர் இல்லை. தான் ஏன் காளியின் காதலை ஏற்றாள் என ஒரு இடத்தில் கலையரசி சொல்கிறாள். காளியின் காதலை அவள் மறுத்ததும் அவன் மனம் வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறான். அப்போது அவனது அம்மா கலையரசியிடம் சென்று அவன் அவளுக்காக எப்படி ஏங்குகிறான், அவன் எந்தளவுக்கு நல்லவன் எனக் கூறுகிறாள். இது கலையரசி சொல்லும் வசனமாக வராமல் ஒரு காட்சியாகவே அமைக்கப்பட்டிருந்தால் இன்னும் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும். “அட்டகத்தியின்” துவக்க காட்சியில் நாயகன் தன் ஜட்டியை தேடுகிறான். அம்மா அதை கரித்துணியாக தெரியாமல் பயன்படுத்துகிறாள். அவன் கோபப்பட அவள் அப்பாவின் ஜட்டியை எடுத்து அணியச் சொல்கிறாள். இது போல் ஒரு கீழ்மத்திய வாழ்வை எதார்த்தமாய் பிரதிபலிக்கும் காட்சி தமிழில் முன்பு வந்ததில்லை. இதன் சிறப்பே வாழ்வில் இருந்து நேரடியாக வருகிறது என்பது தான். ஒரே காட்சியில் அந்த அப்பாவும் அம்மாவும் உயிர் பெற்று விடுகிறார்கள். அது போல் ராத்திரி குடித்து விட்டு அலம்புகிற, பாட்டுப் பாடுகிற, வீச்சருவா தூக்கிக் கொண்டு பந்தா பண்ணுகிற காட்சிகளில் அவர் பாத்திரத்துக்கு ஒரு தனி ஆழம் வந்து விடுகிறது. இன்னொரு காட்சியில் நாயகன் நகரத்தில் போய் முடிவெட்ட அது கேவலமாக வந்து விடுகிறது. அவன் வெறுத்துப் போக அவனது தாத்தா அவனுக்கு இன்னும் நேர்த்தியாக முடிவெட்டி விடுகிறார். இக்காட்சியே ஒரு தனி கதை போல் இருக்கும். அதிலுள்ள அன்பும் நெருக்கமும் ஒரு சாதிய பின்புலமும் தாத்தாவை மற்றொரு நாயகனாக மாற்றுகிறது. ஆனால் ”மெட்ராஸில்” பாத்திரங்கள் உண்மையான அட்டைக்கத்திகளாக இருக்கிறார்கள். அவர்கள் பேசும் பொம்மைகள் போல் தோன்றுகிறார்கள். “அட்டைக்கத்தியோடு” ஒப்பிடுகையில் அப்பா பாத்திரத்திற்கு ஆழமில்லை. அம்மா பாத்திரம் ஓரளவு நன்றாக உயிர்ப்புடன் வந்துள்ளது.

மாரியின் பாத்திரம் முக்கியமானது.
ஒரு தலித் அரசியல்வாதி இன்றைய சூழலில் எப்படியான குழப்பங்களை சந்திக்கிறான் என அப்பாத்திரம்
காட்ட முடியும். ரவிக்குமார் ஒருமுறை தான் மைய அரசியலுக்கு வந்த பின் என்ன மாதிரியான
சிக்கல்களை சந்தித்தார் என எழுதினார். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒரு எதிர்மனநிலையுடன்
இருக்கிறார்கள். பல அடுக்குகளில் சமூகம் சாதிய விடுதலைக்கு எதிராக இருக்கிறது. அவருக்கு
இருட்டான அறைக்குள் நடந்து சுவர்களில் மாறி மாறி முட்டிக் கொள்வது போல் இருக்கிறது.
இப்படத்தில் மாரியின் கட்சி பின்னணி தெளிவாக இல்லையென்றாலும் அவன் வெறுமனே அதிகாரத்துக்காக
ஏங்கும் ஒரு தட்டையான பாத்திரமாக மட்டுமே இருக்கிறான். ஒரு கோட்பாட்டை நம்பும் அரசியல்வாதி
நடைமுறையில் எப்படியான சிக்கல்களுக்கு உள்ளாகலாம் என காட்டி இருந்தால் மாரி பாத்திரத்துக்கு
இன்னும் ஆழம் கிடைத்திருக்கும். ஏனென்றால் தலித் அரசியல் என்றால் வெறுமனே அம்பேத்கர்
பற்றி பாடம் எடுப்பது மட்டுமல்ல.
அது நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு தடைகளைக் கடந்து
வெற்றி பெறுவதும் தான். அது ஒரு எம்.எல்.ஏ சீட்டுக்காக தனக்கு விசுவாசமான ஒருவனை எதிரிக்காக
கொல்வது என்கிற அளவில் தட்டையான எளிதான ஒன்றல்ல. ராமதாஸும் திருமாவளவனும் ஏன் ஒரே மேடையில்
சேர்ந்து அமர நேர்ந்தது, ஒரு காலத்தில் மைய சமூக அரசியலின் அதிகாரம் பற்றி விமர்சித்து
நிறைய எழுதிய ரவிக்குமார் ஏன் கலைஞர் முன் கைக்கட்டி நின்றார் என்பது போன்ற கேள்விகள்
வெறுமனே பேராசை, அதிகார மோகம் என எளிய பதில்களுக்குள் அடங்குவன அல்ல. அன்பைப்
போல் மாரி ஹீரோவும் அல்ல, எதிர்க்கட்சி தலைவனான கண்ணனின் அப்பாவைப் போல் வில்லனும் அல்ல.
அவன் இடைப்பட்டவன். அவனது பாத்திரம் தான் இங்குள்ள ஒவ்வொரு அரசியல்வாதியும் பாத்திரமும்.
ஆனால் மாரி பாத்திரம் ஒரு தேய்வழக்கில் போய் மாட்டிக் கொள்கிறது.
“அட்டகத்தி” போல் மிக தனித்துவமான,
வித்தியாசமான படத்தை எடுத்த இயக்குநர் இது போன்று நாயகன் பத்து பேரை தனியாய் அடித்துப்
போட்டு வில்லனை பழிவாங்குவது போன்ற தேய்வழக்குகளுக்குள் போய் மாட்டுவது ஒரு வீழ்ச்சி
தான். அதுவும் இது அறியாமல் சறுக்கியது அல்ல. தெரிந்தே காலை கண்ணிவெடி மீது வைத்திருக்கிறார்.
இனி அதில் இருந்து எளிதில் காலை எடுக்க முடியாது. இது ரஞ்சித்தின் தவறு மட்டும் அல்ல.
சினிமாவில் மாற்று இயக்குநர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் கணிசமானது. ஒரு படம் வெற்றி
பெற்றால் மட்டும் போதாது காலையில் டாஸ்மாக்கில் இருந்து வெளியே வருகிறவனிடம் படத்தின்
பெயரைச் சொன்னால் உடனே அவன் நினைவு கூற வேண்டும். அட்லி, சுந்தர்.சியின் படங்களை அவன்
உடனே நினைவு கூர்வான். அப்படி செய்தால் அந்த இயக்குநர்களுக்கு சம்பளம் பத்து கோடியாக
இருக்கும். ”அட்டகத்தி”, “சூது கவ்வும்” போன்ற படங்கள் வெற்றி அடைந்தாலும் வழமையான
படம் அல்ல என்பதால் விஜய், அஜித் ரசிகர்களின் மனதை தொட்டிருக்காது. “சூது கவ்வுமைக்”
கூட “காசு பணம்” பாட்டுக்காக தான் நினைவு வைத்திருக்கிறார்கள். மிஷ்கினின் படத்தின் பல முக்கிய காட்சிகளை விட மக்களுக்கு அவரது குத்துப்பாடல்கள்
தான் நினைவிருக்கும். இது இயல்பு தான். ஆனால் இதைக் காட்டி தயாரிப்பாளர்கள் இயக்குநர்களின்
சம்பளத்தை குறைப்பார்கள். பத்து கோடியா ஒரு கோடியா என்பது தான் கேள்வி. “காசு பணம்
துட்டு மணி மணி” என நம் மாற்று இயக்குநர்கள் குதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களையும்
நாம் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் மட்டும் ஏனிந்த சீரழிந்த சமூகத்தில் தியாகிகளாக
இருக்க வேண்டும்?
”மெராஸில்” பாராட்ட வேண்டிய சில
விசயங்கள் உள்ளன தாம். ஆனால் அட்டைக்கத்திக்கு பின் அந்த வாழ்வியல் பதிவுகளை நாம் பா.ரஞ்சித்திடம்
எதிர்பார்க்க தொடங்கி விடுகிறோம். இன்னொரு புதிய களத்தை அவர் கையில் எடுக்கையில் அடுத்த
கட்டத்திற்கு போகிறாரா என்றால் ஒரு அடி பின்னால் எடுத்து வைத்திருக்கிறார். ஒருவேளை
சூர்யாவின் பினாமி நிறுவனத்தில் போய் மாட்டிக் கொண்டது ஒரு காரணமாக இருக்கலாம். ஒருவேளை
அடுத்த படத்தில் ரஞ்சித் இன்னும் சுதந்திரமாக இயங்குவாராக இருக்கலாம். மிகுந்த படைப்பூக்கமும்
அரசியல் தெளிவும் கொண்ட இயக்குநர் அவர். “மெட்ராஸை” விட உண்மையான துணிச்சலான படங்களை
அவர் எதிர்காலத்தில் கொடுப்பார் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது.