தலைப்புக் கேள்விக்கு போகும் முன் இன்னொரு கேள்வி. எழுத்தாளன் எதற்கு எழுத வேண்டும்? முதலில் இதைப் பேசுவோம். எனக்கு இரு காரணங்கள் தோன்றுகின்றன.
சுயவெளிப்பாடு அதன் மூலம் சுயநிலைப்பு.
ஒவ்வொரு எழுத்தாளனும் யாரும் சொல்லாத ஒன்றை தான் சொல்லுவதாய் நம்புகிறான். அதனாலே எழுதுகிறான்.
ஆனால் எந்த அளவு அவன் சுயமாய் எழுத முடியும் எனும் கேள்வி உள்ளது. ஒரு கட்டத்தில் எழுத
ஒன்றுமே தோன்றாது. இதை writer’s block என்கிறார்கள். நான் இரண்டு கட்டங்களையும் அனுபவித்திருக்கிறேன். வெறுமனே கவிதை, கதைகள் எழுதின
பத்து வருடங்கள் (15இல் இருந்து 27 வரை). அவ்வப்போது மட்டும் எழுதுவேன். சிலநேரம் என்ன
எழுதுவது எனத் தெரியாது. வறட்சியாக உணர்வேன். அப்போது நான் பயிற்சியில் இருப்பதற்காக
மொழிபெயர்ப்பில் ஈடுபடுவேன். அதாவது வாரத்தில் சிலநாட்களாவது எதையாவது மொழிபெயர்ப்பேன்.
எழுதுவது மிகுந்த தடங்கல் கொண்ட செயல்பாடாக இருந்தது. அடுத்த கட்டத்தில் நான் ரைட்டர்ஸ்
பிளாக்கை உணரவே இல்லை. நிறைய கட்டுரைகள் எழுதினேன். படித்தவற்றை மொழிபெயர்த்தேன். நாவல்
எழுதினேன். கடந்த ஏழு வருடங்களில் தினமும் எழுதியிருக்கிறேன். குறைந்தது ஐந்து பக்கங்கள்.
எதாவது எழுத இருந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்திற்கு ரெண்டு காரணங்கள்.
நான் எழுத்தாளன் எனும் உணர்வை
கைவிட்டேன். எழுத்தாளன் என்றால் யார் என என்னையே கேட்டுக் கொண்டேன். எழுதும் போது எழுத்தாளன்
என்றால் எழுதாத போது? எழுத்து நம் ஆளுமையை மாற்றுவது இல்லை. ஆளுமை மாற்றம் எழுத்தை
தீர்மானிக்கலாம். எழுதிய பின் முற்றிலும் வேறொரு ஆளாக இருக்கிறோம். அதனால் ஒருவன் எழுதாத
வேளையில் எழுத்தாளன் என கோரிக் கொள்ள முடியாது என நினைக்கிறேன். மேலும் எழுத்து ஒரு
நீண்ட தொடர்ச்சியான உரையாடல். நாம் பயன்படுத்தும் சொற்கள், கருத்துக்கள் ஒவ்வொன்றும்
நீண்ட காலமாய் பலரால் பதப்படுத்தி அர்த்தமூட்டப்பட்டவை. நாம் ஒரு கதை, கவிதையை எழுதும்
போது ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு மாபெரும் கதை அல்லது கவிதையில் மற்றொரு வரியை சேர்க்கிறோம்.
அவ்வளவு தான். அதில் நாம் பெருமை கொள்ளவோ வருத்தப்படவோ அஞ்சவோ ஒன்றும் இல்லை. மேலும்
ஒரு படைப்பு வளர்வதில் அர்த்தம் பெறுவதில் வாசகனுக்கு பெரும்பங்கு உள்ளது. ஒரு தகுதியான
வாசகன் இருந்தால் தான் தகுதியான எழுத்தாளன் இருக்க முடியும். வாசகன் எழுத்தாளனை தீர்மானிக்கிறான்.
உதாரணமாய் பூக்கோவின் முதல் நூல் Archaeology of Knowledge மிக சிரமமான ஒரு தத்துவ நூல்.
அது பிரான்சில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றன. எப்படி? அங்கு பள்ளி பாடத்திட்டத்திலே
தத்துவம் உள்ளது. அதனால் அப்படி ஒரு நூலை அங்கு பொதுமக்கள் கூட குங்குமம் போல் படிக்க
முடியும். அங்கு தான் பூக்கோ மாதிரி ஒரு ஆள் உருவாக முடியும். பூக்கோ உருவாக அங்கு
புத்தகம் வாசிக்கிற ஒவ்வொரு சாதாரண ஆளும் காரணமாகிறான். இங்கு ஒரு பண்பாடு உள்ளது.
அதை மீறி நாம் இயங்க முடியாது. நாம் சிறப்பாய் எழுதுகிறோம் என்றால் அந்தளவுக்கு சிறப்பாய்
வாசகர்களும் நம்மை வாசிக்கிறார்கள் என்றும் பொருள். நான் எழுத்தை ஒரு நீண்ட சாலை நிர்மாணமாய்
பார்க்கிறேன். ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு வேலைகளை மக்கள் செய்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட
பகுதி சிறப்பாய் அமைந்து இன்னொரு பகுதியில் சாலை இல்லை என்றால் வீண். யாரும் அங்கு
பெருமை கோர முடியாது. தொடர்ந்து சாலை உருவாகிக் கொண்டே இருக்க வேண்டும். அதை போடுபவர்களும்
பயணிப்பவர்களும் வேண்டும். சாலையை நிர்மாணிப்பதன் ஒரே நியாயம் அது இல்லை என்றால் நாம்
இல்லை என்பது. ஒரு எழுத்தாளனும் வாசகனும் அதனால் தான் எழுத்துடன் இருக்கிறார்கள். அது
இல்லை என்றால் அவர்கள் இல்லை. அதே போல் வாசகன் இல்லாவிட்டால் எழுத்தும் எழுத்தாளனும்
இல்லை.
கீர்க்கெகாட் இதை தெளிவாக விளக்குகிறார்.
ஒரு மனிதன் வாழ்வில் “பலவிதங்களில் இருக்கிறான்”. இது அவனது இருப்பு. வாழ்வுக்கும் இதற்கும்
வேறுபாடு உண்டு. வாழ்வு என்பது ஒட்டுமொத்தமாக நம் செயல், சிந்தனை, போக்கு, கூட இருப்பவர்களின்
போக்கு, வரலாறு, விதிமுறைகள், நம்பிக்கைகள் எல்லாம் சேர்த்து உருவாகும் அடையாளம். ஆனால்
இருப்பு வேறு. இதிலிருந்து எல்லாம் துண்டித்து விட்டு நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்
என தூய்மையாய் தனித்து பார்ப்பது அது. கீர்க்கெகாட் இந்த இருப்பை ஒரு சுயபிரதிபலிப்பு
என அழகாக விளக்குகிறார். அதாவது நீங்கள் ஒரு கண்ணாடி. எதிரில் உள்ளதை பிரதிபலிக்கிறீர்கள்.
அல்லது ஒரு பிரதிபலிப்பை மீள்பிரதிபலிக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு தனித்த உண்மையான
நிலையான அடையாளம் ஒன்று இல்லை. யார் கூட இருந்து எதை செய்கிறீர்களோ அது ஆகிறீர்கள்.
இது மிக நுட்பமாக நீங்கள் உணராதபடி நிகழ்கிறது. அதனால் தான் நீங்கள் உங்களை ஒரு தனிமனிதனாக
“நானாக” கருதுகிறீர்கள்.
ஆனால் அதேவேளை நீங்கள் ஒரு அமைப்பின் அல்லது சமூகத்தின் அல்லது காலத்தின் நீட்சி, தொடர்
இயக்கம் என உணரவும் செய்கிறீர்கள். இந்த இரண்டு உணர்ச்சிகளுக்கும் இடையில் ஒரு மோதல்
நேர்கிறது. அது படைப்பூக்கமாக, அரசியல் செயல்பாடாக, கருத்தியலாக உருவாகிறது. ஆனால்
நீங்கள் எதையும் முழுக்க தனியாய் உருவாக்குவதில்லை. உங்கள் அடையாளமும் ஒரு சின்ன பிம்பம்
போல் எப்போதும் விலகக் கூடியது என்பதில் தெளிவாக இருங்கள். ஒரு எழுத்தாளன் தன்னை எழுத்தாளனாக
நிராகரிப்பது இதனால் அவசியம். அது மிகப்பெரிய சுதந்திரத்தை அவனுக்குத் தரும். இதையே
ஆசிரியனுக்கும், அரசியல்வாதிக்கும், கணவன், மனைவிக்கும் கூட பொருத்தலாம். நம்முடைய
பிரச்சனை நாம் நம் அடையாளங்களை உண்மையாக நம்புவது தான். இது துயரத்தை ஏற்படுத்துகிறது.
எழுத்தாளன் என்று ஒருவன் தன்னை
கோரக் கூடாது என்பதற்கு இன்னொரு காரணம் சொல்கிறேன். எந்த நொடி நீங்கள் உங்களை எழுத்தாளன்
என நினைக்கிறீர்களோ அப்போது உங்கள் எழுத்து வீழ்ச்சிடையயும். செயற்கையாகும். சின்ன
வயதில் நான் கொஞ்ச காலம் சங்கீதம் படிக்க சென்றேன். என் ஆசிரியர் கள்ளத் தொண்டையில்
பாடாதே என எச்சரிப்பார். கள்ளத்தொண்டை என்றால் பாடுகிறோம் எனும் பிரக்ஞையுடன் பாடுவது
தான். அதே போல் கராத்தே கற்க போன போதும் ஆசான் ஒன்று சொல்வார். குத்துகிறோம் என்றால்
முதலில் கைகளை லகுவாக வைத்திருக்க வேண்டும். முறுக்க கூடாது. குத்தும் அந்த இறுதி நொடி
தான் நம் தசைகள் முறுக வேண்டும். இலக்கில் முஷ்டி படும் போது தான் முழு ஆற்றலும் வெளிப்பட
வேண்டும். அதுவரை சூழலை கவனித்து அமைதியாக இருக்க வேண்டும். ஒருவரை அடிக்கும் போதும்
நாம் அடிக்கிறோம் என்றே நினைக்க கூடாது. மனம் காலியாக இருக்க வேண்டும். எழுத்துக்கும்
இது பொருந்தும் என நினைக்கிறேன். நன்றாக எழுத முதலில் நாம் ஒன்றை நன்றாக எழுதுவதாய்
அல்லது எழுத வேண்டும் என நினைக்க கூடாது.
எழுத்து ஒரு உணர்வை அல்லது கருத்தை
கடத்துவதற்கான கருவி. அவ்வளவு தான். கத்தி போல. கத்தியை எடுத்து வீசும் போது தான் அதற்கு
மதிப்பு. வெட்டிய பின் அதற்கு மதிப்பில்லை. எப்படி வெளிப்படுத்துகிறோம் என கவலைப்படக்
கூடாது. சொல்ல வந்ததை எளிதாக நேரடியாக கூர்மையாக சொல்ல வேண்டும். அதைத் தாண்டி கவலைப்படக்
கூடாது. எழுதுகிற அந்த நேரத்தில் மட்டுமே நீங்கள் எழுத்தாளனாய் சுடர்கிறீர்கள். மிச்ச
நேரத்தில் அதில் இருந்து விடுபட வேண்டும். பலவித பாவனைகள், குழு அரசியல்களில் அப்போது
மாட்டாமல் இருப்போம்.
நான் என் எழுத்தின் இரண்டாம் கட்டத்தில்
அடுத்துவர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என கவலைப்படுவதை நிறுத்தினேன். அதற்கான
அவசியம் இல்லை. வாசகனுடன் உரையாடுகிறோம். அவன் தான் முக்கியம். நாம் எழுதுவது தரமானதா
என ஒரு சீனியரோ விமர்சகனோ சொலவது அல்ல. வாசகனுக்கு புரிகிறது, அவனுக்கு முக்கியம் என
படுகிறது என்றால் நம் பணி முடிந்தது.
வாசகனுக்கு எது முக்கியம் என தேடி
எழுதவும் வேண்டியதும் இல்லை. நமக்கு முக்கியமானது வாசகனுக்கும் முக்கியமானதே. அல்லது
அப்படி முக்கியமாக நினைப்பவன் மட்டுமே நம் வாசகன். நான் இப்படித் தான் ஒவ்வொன்றையும்
குறைத்து குறைத்து ஒரு கணித பயிற்சியில் விடை காட ஒவ்வொரு சூத்திரமாக வெட்டிக் கொண்டு
போவது போல் செய்கிறேன். நான் எதை யாரை நோக்கி சொல்கிறேன் என்பதைக் கடந்து எதுவும் முக்கியமில்லை.
அதனால் தான் நான் தயங்காமல் எனது சீனியர் எழுத்தாளர்களை விமர்சித்திருக்கிறேன். அவர்களது
குருபீடங்களில் சேர்வதை தவிர்த்திருக்கிறேன். எனக்கு எழுத்து என்பது ஒரு வேலை. அதை
செய்ய யாரது அங்கீகாரமும் தேவையில்லை. எனக்கு என்று ஒரு இடமோ அடையாளமோ இல்லை. காற்றைப்
போல் இருக்கிறோம். அப்போது நாம் யாரையும் தாக்கலாம், ஆதரிக்கலாம்.
ஒரு ஜென் கதை உண்டு. ஒரு மடாலயம்.
கடுமையான பனி பொழியும் இரவு. மடாலயத்தில் அத்தனை பேரும் நடுங்கிக் கொண்டு தியானம் செய்ய
முயல்கிறார்கள். அப்போது ஒரு இளம் துறவி சில புத்த சிலைகளை உடைத்துப் போட்டு கொளுத்தீ
தீ காய்கிறார். சட்டென அவருக்கு ஞானம் கிடைக்கிறது. எழுத்திலும் நாம் இது போல் சிலைகளை
பற்ற வைத்து தீ காய வேண்டும். அது தான் விடுபட வேண்டிய முதல் தளை. குறிப்பாக இரு சிலைகள்.
ஒன்று முக்கியமான ஆட்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் எனும் சிந்தனை. அடுத்து நாம் எழுத்தில் என்னவாக இருக்கிறோம் எனும் கவலை.
இரண்டையும் எரிக்க வேண்டும்.
உள்நோக்கி குவியும் எழுத்து வெளிநோக்கியும் பாய வேண்டும். இரண்டுக்கும்
ஒரு சந்திப்பு புள்ளி உள்ளது. அங்கே தான் சிறந்த எழுத்து தோன்றுகிறது. எழுத்தாளன் தன்னை
முன்னிலைப்படுத்த இயங்கினால் அது புண்ணை சொறிவது போல் ஆகும். ஆரம்பத்தில் சின்னதாய்
ஒரு சுகம். போகப் போக அரிக்கும் இடம் புண்ணாகும். சீழ் கட்டும். அப்புறமும் சொறிந்தால்
புண் உடையும்.
தொடர்ந்து தனக்காக உழைத்து மேடை அமைத்து விழாக்கள் நடத்தி விமர்சனங்கள்
வரவழைத்து சுயமுன்னேற்ற பணிகளில் மட்டும் ஈடுபடும் சிலரை எனக்குத் தெரியும். அவர்கள்
உண்மையில் மகிழ்ச்சியாக இல்லை. மனதின் ஒரு பக்கம் அவஸ்தையாக கசப்பாக பதற்றமாக இருக்கும்.
தினமும் தன்னை யாராவது பாராட்ட மாட்டார்களா என ஏங்குவார்கள். அது அவர்கள் தம் சுயத்தை
வெறுப்பதனால் ஏற்படுவது. நாம் நம்மை வெறுக்க தேவையில்லை. எழுத்து ஒரு சுயம் அல்ல. அது
ஒழுகிப் போகும் நதி. நாம் அதில் அணை கட்டி நம்மை உருவாக்க பார்க்க கூடாது.
யார் பாராட்டினாலும்
இல்லாவிட்டாலும், பணம் தந்தாலும் இல்லாவிட்டாலும் எழுதுவது நம் கடமை. அதன் மூலம் நம்
பண்பாட்டுக்கு சமூகத்துக்கு முக்கிய பங்களிக்கிறோம். எழுதுவதன் வழி நாம் காலத்தின்
ஒரு பகுதியாக இருக்கிறோம். அது பெரிய பேறு. மேலும் அது தான் நம் இருப்பு. எழுதாவிட்டால்
ஒரு எந்திரத்தில் இருந்து கழன்று தெறித்த திருகாணி போல் ஆகி விடுவோம்.
எழுத்தாளன் மகிழ்ச்சியாக இருக்க
வேண்டும் என்றால் முதலில் எழுத்தின் மூலம் எதையாவது அடைய நினைக்க கூடாது. எழுத்தை கொண்டு
தன்னை மதிப்பிடக் கூடாது. இந்த உலகம் நமக்கு ஏராளம் தந்திருக்கிறது. நாம் எழுத்தின்
வழி கொஞ்சம் திருப்பி அளிக்கிறோம். அவ்வளவு தான்.
இன்று எழுத்து ஒரு அவஸ்தையாக எரிச்சலாக
பலருக்கும் மாறி வருகிறது. நம் இடத்தை உறுதிப்படுத்தி ஆலாய் பாய்கிறோம். இதைத் தவிர்க்க
நம்மைக் கடந்த ஒரு லட்சியத்தை பற்றிக் கொள்ள வேண்டும். லட்சியங்களின் வறட்சி நம் காலத்தின்
சாபக்கேடு. அதனால் தான் ஏன் எழுத வேண்டும் எனும் கேள்வி நம்மை அலைகழிக்கிறது. பெயருக்காக,
அந்தஸ்துக்காக, சினிமா வாய்ப்புக்காக எழுத முனைந்து ஏமாற்றம் அடைகிறோம். ரெண்டாயிரத்துக்கு
முன்பு வரை இந்த வெற்றிடம் இல்லை. இன்று நாம் ஒரு பெரும் நெருக்கடியை சந்திக்கிறோம்.
இதிலிருந்து எப்படி தப்பிப்பது என யோசிக்க வேண்டும். நம்மைத் தவிர எதையாவது நம்ப தொடங்குவோம்.
அப்படி நம்பினால் நம்முடைய சுய அழற்சி, வெறுமை இல்லாமல் ஆகும். எழுத்தில் மகிழ்ச்சி
உண்டாகும்.
தனிப்பட்ட முறையில் எழுத்தாளனாய் என்னுடைய இலக்கு என்ன? நான் மிக சாதாரணமான இலக்குகளை தான் வைத்திருக்கிறேன். ஆரோக்கியமாக இருக்க
வேண்டும். நல்ல வேலை வேண்டும். அவ்வளவு தான். தினசரி வாழ்வில் அக்கறையுடன் ஈடுபாட்டுடன்
இருக்க வேண்டும். மிக சாதாரண விசயங்களில் தான் ஆசாதாரணம் உள்ளது. ஒரு குங்பூ ஞானி பற்றி
ஒரு கதை உண்டு. அவரது திறமையை கேள்விப்பட்டு சிலர் அவரை பரிசோதிக்க நினைக்கிறார்கள்.
ஒரு உணவகத்தில் அவர் உணவருந்துகிறார். இவர்கள் அவர் அருகே மேஜையில் உட்கார்ந்து அட்டகாசம்
செய்கிறார்கள். அவரை சீண்டுகிறார்கள். அவர் சட்டென தன் சாப்ஸ்டிக் குச்சியால் ஒரு ஈயைப்
பிடித்து கீழே போடுகிறார். அவர்கள் வியந்து போல் வெளியே போகிறார்கள். ஒருவரை அடித்து
வீழ்த்துவதை விட குச்சியால் ஈ பிடிப்பது பெரிய சாதனை. அதையே செய்ய முடிந்த பின் வேறென்ன
வேண்டும்? ஒரு பிரமாதமான புத்தகத்தை எழுதுவதை விட சின்ன சின்ன அன்றாட விசயங்களில் மகிழ்ச்சியாக
இருப்பது கஷ்டம். எனக்கு மேலே மேலே போக வேண்டும் என ஆசை இல்லை. மேலே போக ரொம்ப அவசியம்
என்றால் மொட்டைமாடி மேலே போய் நின்று கொள்ளலாம்.
என் நண்பர் ஒருவர் எனக்கு கிடைத்துள்ள
யுவபுரஸ்கார் விருதை பயன்படுத்தி மிகப்பெரிய வெளிச்சத்தை பெற முயல வேண்டும் என்றார்.
நான் நினைத்தேன்: “அதனால் எனக்கென்ன பயன்? புகழை ஒரு பதிப்பாளர் பயன்படுத்தி புத்தகம்
விற்கலாம். ஆனால் எழுத்தாளனுக்கு அதனால் ஒன்றும் இல்லை. அவன் எழுதி முடித்ததும் அப்புத்தகத்தை
கடந்து போகவே பிரியப்படுகிறான். அடுத்து அவனது புகழை ஒரு நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு எழுத்தாளன் புகழடையும் போது அவன் ஒரு குலுக்கு நடிகையை போல் ஆகிறான். அவனை எல்லாரும்
பயன்படுத்துவார்கள். அவன் பரிதாபமானவன்”
உண்மையிலேயே புகழைக் கொண்டு வாசகனை
சம்பாதிக்க முடியுமா என்பதில் எனக்கு ஐயம் உள்ளது. கோபிநாத் ஒரு ”புகழ்பெற்ற எழுத்தாளர்” தான்.
நீயாநானா மூலம் கிடைத்த ஒளியைக் கொண்டு அவர் விகடன், நக்கீரனில் தொடர்கள் எழுதுகிறார்.
அவரது “நீயா நானா” பிமபத்துக்காக அவர் புத்தகங்கள் விற்கின்றன. நாளை ரஜினிகாந்த் ஒரு
தொடர் எழுதினால் அது கோபிநாத்தை விட நூறுமடங்கு அதிகம் மக்களால் படிக்கப் படும். அவர்
புத்தகங்களும் நூறு மடங்கு அதிக வாசகர்களால் வாசிக்கப்படும். அதனால் ரஜினி எழுத்தாளரா?
இக்கேள்விக்கு பதில் அவரை வாசிக்கிறவன் உண்மையான வாசகனா என்பது. பொழுதுபோக்கிற்காக
வாசிக்கிறவன் வாசகன் அல்ல. அவன் ஒரு நுகர்வோன். கோபிநாத்தை படிப்பவர்களும் நுகர்வோர்
தான். ஜெயகாந்தன் வாசகனை பாதித்தது போல் கோபிநாத்தால் முடியாது. அதாவது புகழ் மூலம்
அடையும் வாசகன் நம் புகழை, அதற்கு காரணமான பிம்பத்தை மட்டுமே மேய்வான். ஆனால் அசலான
வாசகர்களும் இந்த புகழ் மூலம் நம்மை கண்டடைவார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால்
அது பெண் பார்க்கும் சடங்கின் போது ஒரு பெண்ணின் மீது நமக்கு காதல் ஏற்பட்டு அவளையே
திருமணம் செய்து உன்னத உறவு உருவாவது போல் ஒரு அபூர்வ விசயம். பெரும்பாலும் அசல் வாசகர்கள்
மிக மிக குறைவாகவே புகழ் வழியாக வசீகரிக்கப்படுவார்கள். என் நண்பர் ஒருவர் அடிக்கடி
டி.வியில் தோன்றுகிறவர். ஆனால் தீவிரமான கவிஞர். அவர் நூலை வாங்கிப் படித்த வாசகன்
ஒருவன் போன் செய்து அவரிடம் ஏமாற்றம் தெரிவித்தான்: “சார் நீங்க டிவியில ரொம்ப முற்போக்கா
ஆவேசமா சமூக கருத்துக்கள் பேசுறீங்க. அது பிடிச்சு போய் தான் உங்க கவிதை நூல் வாங்கினேன்.
ஆனால் உங்க கவிதையில அதே மாதிரி சமூக கருத்துக்கள், விமர்சனங்கள் இல்லியே. ஏன்?”. இப்படியான
வாசகர்கள் தாம் அதிகம் நாடி வருவார்கள்.
எழுத்தாளன் எழுதி மட்டுமே வாசகனை
அடைய முடியும். பேஸ்புக்கில் ஒரு கணக்கு உண்டு. உங்களுக்கு பத்தாயிரம் பாலோயெர்ஸ்
(பின் தொடர்பவர்கள்) அல்லது நண்பர்கள் என்றால் ஆயிரம் பேர் உங்களை தினமும் படிப்பார்கள்.
ஆயிரம் பாலோயர்கள் என்றால் அதில் நூறு பேர் படிப்பார்கள். மிச்ச 90% செயலற்ற “நண்பர்கள்”. இவர்களால்
உண்மையான நண்பர்கள் உங்களை அடைய முடியாது போகும். இவர்கள் எண்ணிக்கை வைத்து நீங்கள்
பந்தா பண்ணலாம். ஆனால் இவர்கள் வெறும் எண்ணிக்கை மட்டும் தான். எழுத்தாளனுக்கு புகழினால்
உண்மையில் எந்த லாபமும் இல்லை.
நன்றி: அம்ருதா, அக்டோபர் 2014
