ஐந்து தமிழக மீனவர்களை இலங்கை ஹெராயின் கடத்தல் போன்ற குற்றத்துக்கு வழக்கத்துக்கு மாறாக தூக்குத்தண்டனை விதித்தபோதே இது ஒரு நாடகம் எனும் சந்தேகம் தோன்றியது. இந்தியாவை சற்று மட்டம் தட்டவும், இலங்கையில் வாக்காளர்களிடம் நல்ல பெயர் வாங்கவும், மோடி அரசுடன் பேரம் பேசவும் இந்த தண்டனையும் இப்போதைய விடுதலையும் ராஜபக்சேவுக்கு உதவியது. ஒரே கையெழுத்தில் ஐவரையும் விடுவிக்க அதிகாரம் கொண்ட ராஜபக்சே ஏன் அதற்கு தன் பிறந்த நாள் வரும் வரை காத்திருக்க வேண்டும்?
மனித உயிரை வைத்து பகடையாடுவதில் இந்த அரசியல்வாதிகளுக்கு தனி கிளுகிளுப்பு தான். இதன் மூலம் ராகபக்சே தான் இந்தியாவையே
மிரட்டி கெஞ்ச வைக்க தயங்காத ஆள் என தன் வாக்காளர்களுக்கு நிரூபித்திருக்கிறார். தமிழக
மீனவர்கள் எல்லை கடந்து மீன் பிடிப்பதனால் எரிச்சலாகி உள்ள இலங்கை மீனவர்களையும் தற்காலிகமாய்
திருப்திப் படுத்தி இருக்கிறார். அதேவேளை இந்தியாவின் முன் அடி பணியாமல் அதன் தோளிலே
கையிட்டு இலங்கை ஒரு நட்பு நாடு என சேதி விடுக்கவும் செய்து விட்டார்.
இந்த சாக்கில் அடிவாங்கின கைப்புள்ளையான மோடியை புகழ்ந்து கொண்டாட சிலர் களமிளங்கி இருப்பது தான் வேடிக்கை. “தமிழக மீனவர் பிரச்சனையை
சுமூகமாக தீர்த்ததற்காக மோடிக்கும் ராஜபக்சேவுக்கும் நம் தேசம் நன்றி தெரிவிக்கிறது” என சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
ஒரு வெளியுறவுத் துறை பேரத்துக்காக ஐவரின் உயிரும் நாடகமாக்கப்பட்டிருக்கிறது என்பது
போக இதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? நியாயமாக பார்த்தாலும், ஐவருக்கும் முதலில்
தூக்குத்தண்டனையே விதித்திருக்க கூடாது. நீதித்துறை, ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும்
கட்டுப்படுத்தும் ராஜபக்சே தான் தூக்குத்தண்டனை தீர்ப்பின் பின்னாடி இருந்திருக்கிறார்
என்பது தெளிவு. இப்போது அவரே தான் “கொண்டு வந்த” தீர்ப்பை ரத்து பண்ணியிருக்கிறார்.
“முதல்வனில்” ரகுவரன் சொல்வது போல் “இவரே பாம் வைப்பாராம். இவரே போய் கரெக்டா எடுப்பாராம்”.
இந்த விசயத்தில் மோடியை கொண்டாடுவது
தான் வேடிக்கை. என்னாவாக இருந்தாலும் மோடியை விட ராஜபக்சே மேல். மோடியை விட அவர் பத்து மடங்கு ஆட்களை கொன்றிருக்கிறார். அவர் அளவுக்கு போக இவர் இன்னும் பல படிகள் ஏற வேண்டும்.
