என் நண்பர் ஒருவர் தொழில்முறை
சினிமாக்காரர்களுடன் இணைந்து ஒரு குறும்படம் எடுத்தார். அவர்களின் தொழில்நேர்த்தி,
கடப்பாடு பற்றி வியந்தார். தொடர்ந்து பத்து மணிநேரம் லைட் பாய்கள் நின்று வேலை பார்ப்பது,
அனைவரும் நேரத்துக்கு வேலைக்கு வருவது போன்றவற்றை கூறி நம் எழுத்தாளர்கள், இலக்கிய
ஆட்களுக்கு இந்த மாதிரியான மனநிலை இல்லை. நாம் அடிப்படையில் சோம்பேறிகள் என்றார். இது
உண்மை தான். நான் முன்னர் "இன்மைக்காக" ஒரு நண்பரிடம் ஒரு அஞ்சலிக்கட்டுரை எழுதித் தரக்
கேட்டேன். அவர் நான்கு வரிகள் எழுதி அனுப்பினார். நான் இன்னும் சில வரிகள் எழுதுங்கள்
என்றேன். அவர் கூட ஒரு வரி எழுதி அனுப்பினார். ஆனால் ஒரு பத்தியை எப்படி ஒரு கட்டுரை
என்று போடுவது? கடைசியில் இறந்து போனவரின் கவிதை ஒன்றையும் சேர்த்து கொஞ்சம் நீளமாக்கி
பிரசுரித்தோம்.
பொதுவாக தமிழ் எழுத்தாளர்களில்
உழைக்க தயாராக இருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இது என்னையும் சேர்த்து தான்.
எனக்கு தினமும் கணிசமான மணிநேரங்கள் ஒரு ஒழுங்கோடு இருந்து எழுத ஆசை. அது போல் இவ்வளவு
மணிநேரம் படிக்க என ஒதுக்கி கொண்டு படிக்கவும் ஆசை. ஆனால் எப்போதும் சாத்தியமானதில்லை.
நண்பரிடம் பேசிய பின் அடிக்கடி உடல் உழைப்புசார்ந்த ஆட்களைப் போல் நாம் உழைப்பதில்லை
எனும் எண்ணம் எனக்குள் உருவாகும். சில நாட்கள் அலுப்பாய் என் போக்குக்கு தோன்றுவதை செய்து கொண்டிருப்பேன்.
வேலையை தள்ளிப் போட்டபடி இருப்பேன். அப்போது நண்பன் சொல்வது நினைவுக்கு வர என்னை ஊக்குவித்துக்
கொண்டு அலுப்பையும் பொருட்படுத்தாமல் எழுதுவேன். பன்னிரெண்டு மணிநேரம் உடலுழைப்பு செலுத்த
மனிதர்கள் தயாராக இருக்கும் போது, இரவு பகல் என மனிதர்கள் அலுவலகங்களில் நம்மை சுற்றி
உழைத்துக் கொண்டிருக்கும் போது நாம் மட்டும் ஏன் சோம்பலாய், இளைப்பாறும் மனநிலையில்
இருக்கிறோம் என யோசிப்பேன்.
பிறகு எனக்கு நான் வேலைக்கு போன
நாட்கள் நினைவு வந்தது. தினமும் எட்டு முதல் பத்து மணிநேரம் ஒரே வேலையை செய்வது எனக்கு
எழுதுவதை விட எளிதாக இருந்தது. இது எப்படி? உடல் உழைப்பை போன்றே மூளை உழைப்பும் தொடர்ந்து
செய்வது சாத்தியம் தான். அதற்கு ஒரு காரணம் அலுவலக மூளை உழைப்பில் நம் திறன்களில் ஒரு
5% தான் பயன்படுத்துகிறோம். அலுவலக வேலையின் சவால் கடுமையான அழுத்தம், நெருக்கடியை
தாங்குவது மற்றும் கவனம் செலுத்துவது தான். அதுவும் இந்த நெருக்கடி வெளி நெருக்கடி.
சில எளிய விதிமுறைகளை தினமும் பின்பற்றி ஒரு சடங்கைப் போல் அதிக ஈடுபாடின்றி செய்ய
வேண்டியது தான் அலுவலக வேலை. சில வேலைகளில் நீண்ட நேரம் “இருக்க” வேண்டி வரும். ஆனால்
மொத்த ஆற்றலையும் செலுத்த தேவையில்லை. மிகப்பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களை விட கணிசமான
பிறருக்கு ரிஸ்க் குறைவு (வேலை போகும் ரிஸ்கை தவிர). இது ஒரு விதத்தில் நம்மை அதிக
சேதாரம் இன்றி முப்பது நாற்பது வருடங்கள் உழைக்க உதவுகிறது.
ஆனால் எழுத்தோ, இசையோ, ஓவியமோ,
ஆய்வோ வேறு எந்த கலை சார்ந்த தேடலோ குறைந்த நேரத்தில் மிக அதிக ஆற்றலை செலுத்த தூண்டுகிறது.
ஒரு தீவிரமான கதையோ கட்டுரையோ எழுதி முடித்ததும் நீங்கள்:
1)
உணர்வுரீதியாய் களைத்து வெறுமையாய் உணர்கிறீர்கள்.
ஒரு திருப்தியும் உற்சாகமும் இருக்கும். ஆனால் அதை அனுபவிக்கும் சக்தி இருக்காது
2)
உங்களை மீறின எண்ணங்கள், பிரச்சனைகள், சிந்தனைகள்,
உளவியல் சிக்கல்கள், ஆன்மீக நெருக்கடிகளை கையாள நேர்வது உங்கள் மனதை குலைய செய்யும்.
சிலர் இதனால் மதுப்பழக்கம், மிதமிஞ்சிய காமம் என தொலைந்து போவார்கள். ஆனால் தினசரி அலுவலக
வேலை உங்களை கட்டுக்கோப்பாக பாதுகாப்பாக வைத்திருக்கும். குளிர்பதனப்பெட்டி ஆப்பிள்
போல் இருப்பீர்கள். ஆனால் சிந்தனையாளன் வாகன விபத்தில் தப்பி வந்தவனைப் போல் இருப்பான்.
3)
இறுதியாக பலரையும் எழுத தடுக்கிற பயம் நம் ஒவ்வொரு
சொல்லுக்கும் நாம் உத்தரவாதம் ஆக வேண்டும் என்பது. ஒரு அலுவலக வேலையை தினமும் சரியாக
கூட செய்து விடலாம். ஆனால் படைப்பூக்கம், சிந்தனை சார்ந்த பணிகளில் நீங்கள் தோற்கும்
வாய்ப்பு மிக மிக அதிகம். எப்போதும் உங்களை மீறின விசயங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருப்பீர்கள்.
இது மிகப்பெரிய ரிஸ்க்.
இதனாலேயே
மூளை உழைப்பையும் படைப்பு வேலையையும் ஒப்பிடக் கூடாது எனும் முடிவுக்கு வந்தேன். ஆனால்
நம் தமிழ் படைப்பாளிகள் இதை உள்ளுணர்வால் முன்னரே அறிந்திருக்கிறார்கள். அவர்கள் எப்போதுமே
சோம்பேறிகள் தாம்.
Writer’s
block என்பார்கள். என்ன தான் உட்கார்ந்து முரண்டு பிடித்தாலும் எழுத்து வராது. அல்லது
எழுதினாலும் தட்டையாக இருக்கும். இதற்கு ஒரு காரணம் உருவாக்கப் போகும் படைப்பு சரியாக அமையாவிட்டால்,
படைப்பூக்கத்துடன் ஒளிராவிட்டால் செய்த வேலையெல்லாம் எல்லாம் வீணாகி விடுவோமோ, நாம் முட்டாளாக தெரிவோமோ
எனும் அச்சம். இந்த அச்சம் தான் நம்மை பல படைப்பு சார்ந்த வேலைகளை தள்ளிப் போட வைக்கிறது.
சுஜாதா ஒரு முறை சொன்னார், பத்திரிகை எடிட்டர்கள் டெட்லைன் வைத்து தன்னை நிர்பந்திருக்காவிட்டால்
இவ்வளவு பக்கங்கள் எழுதியிருக்க மாட்டேன் என்று. ஏனென்றால் எழுதும் தருணத்தை தள்ளிப்
போடுவதே பொதுவாக எழுத்தாளனின் இயல்பு.
இனி கடுமையான
உழைப்பாளி எழுத்தாளர்களுக்கு வருவோம். தினமும் மிக சாதாரணமாய் முப்பது நாற்பது பக்கங்கள்
எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். இது சாத்தியம் தான். தினமும் ஐந்து பக்கங்கள் எழுதிப்
பாருங்கள். சில மாதங்களில் பத்து பக்கங்கள் எழுதுவது இயல்பாகும். சில வருடங்களில் கண்ணை
மூடி அடித்தாலே இருபது பக்கங்கள் அடித்த பின் கை இயல்பாக ஓயும். களைப்பு என்பது பயிற்சி
சார்ந்தது. பயில பயில களைப்பு தோன்றும் நேரமும் தள்ளிப் போகும். வலியைத் தாங்கும் திறன்
போல களைப்பை உணராமல் இருக்கும் திறனும் நம் மனதுக்குள் சில நியூரான முடிச்சுகளுக்குள்
தான் இருக்கிறது. அதை நாம் இஷ்டத்துக்கு வடிவமைக்க முடியும். நிறைய பிடிவாதமும் உழைக்கும்
மன வலுவும் இருந்தால் போதும்.
ஆனால் எல்லா எழுத்தாளனும் நிறைய எழுதும் உழைப்பாளியாய் இருக்க வேண்டிய அவசியம்
இல்லை. நம் தேடல் என்ன, இலக்கு எது என்பதைப் பொறுத்தே எழுதும் அளவும் இருக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் இயல்பான ஒரு மன அமைப்பும் உள்ளது. எல்லாரும் உழவு மாடாக இருக்க வேண்டியதில்லை.
சிலர் கோயில் காளையாகவும் இருக்கலாம்.
