-
முழுங்குவது போல் சில
குழந்தைகள் பார்க்குமே அப்படி ஒரு வெண்மை. வெள்ளை வெள்ளையான ஒரு பனிப்பிரதேசம்.
அறையில் குறைவான வெளிச்சம் வரும்படி விளக்கணைத்து ஜன்னல்களின் திரைகளை அங்கங்கே
அட்ஜஸ்ட் செய்து கொஞ்சம் தொலைவில் இருந்து அந்த ஓவியத்தை பார்த்தேன். எனக்கு
வெள்ளை, அதுவும் தூய வெள்ளையை, வரையப் பிடிக்கும். பனிப்பிரதேசங்கள், பனிக்கட்டி,
காற்றில் பறக்கும் பிரம்மாண்டவெண்துகில், வெள்ளையான ஒரு பாப்பாவின் புஷ்டியான
கன்னம் என அதை மட்டுமே வரைந்து கொண்டிருப்பேன்.
ஓவியம் கிட்டத்தட்ட
முடிந்து விட்டதாய் தான் தோன்றியது. தொலைவை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி நின்று
பார்த்தேன். இங்கிருந்து பார்க்க அந்த பனிப்பிரதேசத்தின் மையம் மட்டும் மனதில்
குவிந்தது. மிளிர்வான நீலத்தில், அதாவது எளிதில் புலப்படாத மிக மிக வெளிர்
நீலத்தில் ஒரு பனிக்குளம் வரைந்திருந்தேன். அதில் நான் நிற்பதாய் தோன்றியது. ஜீரோ
வால்ட் பல்புகள் ஒன்று ஓவியத்துக்கு மேலும் இன்னொன்று நிற்கிற இடத்தில் இருந்து
சற்று பின்னாலும் இருந்தன. அவற்றை இயக்கினேன். ஜன்னல் திரைகளை முழுக்க மூடினேன்.
இப்போது ஒரு நீலம் கலந்த வெண்பரப்பாக மிளிர்ந்தது. அதைப் பற்றி யோசித்துக் கொண்டே
அருகில் சென்று தூரிகையை எடுத்தேன். கருப்பும் நீலமும் குழைத்து விளிம்பில்
தேய்த்து தூரிகை முனையை கூராக்கினேன். அடர்த்தியான பெயிண்டின் வாசனை எனக்குள்
படர்ந்து மனதை கிளர செய்தது. அப்போது அந்த போன் அழைப்பு வந்தது.
அம்மா அழைத்தார். அதாவது
விமலனின் அம்மா. மீசை எடுத்து விட்டால் நானும் விமலனும் ஒரே வயிற்று பிள்ளைகள்
போல் இருப்போம். இந்த ஒற்றுமை காரணமாகவோ என்னமோ அவன் அம்மா என்னிடம் ரொம்ப அன்பாக
அக்கறையாக இருப்பார். விமலனைக் காணவில்லை என்றார். எனக்கு அவரிடம் என்ன சொல்வது
எனத் தெரியவில்லை. கொஞ்சம் அழுதார். எனக்கு அவன் முதன்முதலில் அம்மாவின்
கைப்பிடித்து பள்ளிக்கூடத்துக்கு வந்தது நினைவு வந்தது.
விமலன் மாதிரி பளீரென்ற
வெண்சருமம் கொண்ட ஒரு ஆணை நான் பார்தததில்லை. சிலர் சிகப்பாக இருப்பார்கள். ஆனால்
அவனைப் போல் அப்பழுக்கற்ற மெழுகு தேய்த்தது போல் ஒரு சருமம் ஆண்களுக்கு
வாய்க்காது. அதனால் அம்மா அவனுக்கு வலது கன்னத்தில் கண்ணுக்கு சற்று கீழ்
திருஷ்டிப் பொட்டு வைத்திருந்தார். திருஷ்டிப் பொட்டுக்கு கொஞ்சம் தள்ளி சின்னதாய்
ஒரு மரு இருந்தது. பின்னர் அவன் திருஷ்டிப்பொட்டு வைத்திராத போதும் அந்த மரு தனி
வசீகரமாக இருந்தது. கோணலான அவன் பார்வை, நீளமாய் மெல்ல வளைந்த மூக்குக்கு அது
பொருத்தமாய் குறுகுறுப்பாய் இருந்தது. ஏதோ குறும்பு பண்ணப் போகிறவன் போல சதா
தோன்றினான். அந்த மருவினால் தான் அவன் இன்னும் வெள்ளையாய் தெரிந்தான். அல்லது அவன்
அவ்வளவு வெள்ளையாய் இருந்ததனால் இமையும், கண்மணிகளும் ரொம்ப கறுப்பாய்
மினுங்கினவா? எப்படியோ, அவனை பிறகு எப்போது பார்த்தாலும் அம்மாவின் திருஷ்டிப்
பொட்டுடன் சுற்றுவதாகவே தோன்றும்.
நாங்கள் பார்த்தவுடன்
ஒட்டிக் கொண்டோம். எனக்கு சின்ன வயதில் இருந்தே முட்டி வலி இருந்தது. அதிகம் ஓடவோ
விளையாடவோ கூடாது என்று டாக்டர் சொல்லி இருந்தார். ஆனால் அவனுடன் இருக்கையில்
ஏற்படும் உணர்வெழுச்சி என்னை அந்த வலியை மறக்க செய்யும். சொல்லப் போனால் அவன்
நட்பு கிடைத்த பின் எனக்கு முட்டி வலியே ஏற்பட்டதில்லை. என்றாவது நாங்கள் சண்டை
போட்டு தனியாய் பிரிந்து இருக்கையில் மீண்டும் முட்டி வலி வரும்.
நாங்கள் சேர்ந்து
பள்ளிக்கூடம் மொத்தமும் ஓடிக் கொண்டிருப்போம். விமலனுக்கு வயதில் சின்ன பையன்களை
துன்புறுத்துவதில் அபார விருப்பம். நாங்கள் பக்கத்து வகுப்புகளுக்கு சென்று சும்மா
இருப்பவர்களிடம் வம்பிழுத்து இருப்பதிலேயே சோனியான ஒருவனை அடித்து விட்டு வருவோம்.
ஆனால் எப்போது வாத்தியாரிடம் நான் தான் மாட்டி தண்டனை பெறுவேன். அவன் ஒன்றும்
நடக்காதது போல் வகுப்புக்கு சென்று யாராவது ஒரு பெண்ணை சைட் அடித்துக்
கொண்டிருப்பான்.
எங்களுக்குள் இப்படி ஒரு
பழக்கம் இருந்தது. ஒரே பெண்ணை சொல்லி வைத்து சேர்ந்து சைட் அடிப்போம். எங்கு
போனாலும் பின் தொடர்ந்து போவோம். அப்பெண் எங்களில் ஒருவரை திரும்ப காதலித்தால்
யார் விலகுவது என்கிற குழப்பமே வந்ததில்லை. ஏனென்றால் அந்த கட்டம் வருவதற்கு முன்
எங்களுக்குள் வேறேதாவது ஒரு விசயம் சொல்லி சண்டை வரும். நாங்கள் பிரிந்ததும்
அப்பெண்ணை சைட் அடிப்பதையும் நிறுத்திக் கொள்வோம்.
ஒரே ஒரு முறை மட்டும்
தான் இந்த வழமை மாறியது. நான்காம் வகுப்பில் எங்கள் ஆசிரியையை சைட் அடித்தோம்.
புஷ்டியான சிகப்பான பெண். அவர் எப்போதும் வாசலுக்கு அருகே லேசாய் பக்கவாட்டில்
திரும்பி தான் நிற்பார். நாங்கள் அதற்கு ஏற்றாற் போல் வலதுபக்க வரிசையில் ஒரு முன்
பெஞ்சில் அமர்ந்து கொண்டு அவரது இடுப்பை, தொப்புளை கண்ணிமைக்காமல் பார்த்துக்
கொண்டிருப்போம். பிறகு ஒரு நாள் அவருக்கு திருமணமாகியது. திடீரென்று வராமல்
போனார். அன்று தான் காதல் தோல்வி போன்றொரு சோகம் எங்கள் நெஞ்சை கவ்வியது.
சைனபாவை பற்றியும் சொல்ல
வேண்டும். அது தான் திருப்புமுனை. நாங்கள் அப்போது பதினோராம் வகுப்பில். சைனபா
எல்லா விசயத்தில் குட்டியான மென்மையான நுணுக்கமான ஒரு பெண். நாங்கள் அவளுக்கு
முயல் என்று பெயர் சூட்டினோம். வழக்கம் போல அவளை பிரித்துக் கொண்டோம். நான்
அவளிடம் சென்று பிராக்டிகலின் போது லேபில் வைத்து காதலை சொன்னேன். அவள் பயமாக
என்னைப் பார்த்து “ஙெ” என்ற போது எனக்கு அத்தனை ஆர்வமும் போய் ச்செ என்றாகி
விட்டது. இனி இந்த பெண்களையே காதலிக்கக் கூடாது என நினைத்தேன். பிறகு அந்த
வெறுப்பினாலோ என்னமோ ஒரு பழைய துரு பிடித்த பிளேடால் மணிக்கட்டில் அறுத்துக்
கொண்டேன். வகுப்பே பரபரப்பாகி விட்டது. சைனபா மாணவிகள் சூழ அழுதாள். நான் அவளிடம்
தப்பாக நடந்து கொண்டு விட்டதாக சிலர் நினைத்துக் கொண்டார்கள். “டேய் நான் தாண்டா
அழுவனும், அவ ஏன் அழுவுறா?” என்று கோபமாய் கேட்டேன் நான். அப்போது அவர்கள் அவள் என்னை
காதலிக்கலாம், அதனால் தான் அழுகிறாளோ என என்று என்னைத் தூண்டி விட்டார்கள். இது
இப்படிப் போக விமலன் இன்னொரு பாதையில் சென்று கொண்டிருந்தான்.
இந்த சைனபாவுக்கு ஒரு
சகோதரன். அப்போது அவன் ஒன்பதாம் வகுப்பு படித்தான். ஒரு பரீட்சையின் போது அவன்
பக்கத்தில் விமலன் அமர்ந்திருந்தான். பார்த்ததும் இருவருக்கும் பிடித்து விட்டது.
அவனுக்கு அத்தனைக் கேள்விகளுக்கும் விமலன் தான் விடை எழுதிக் கொடுத்திருக்கிறான்.
தினமும் இடைவேளையின் போது ஒன்பதாம் வகுப்புக்கு அவனைத் தேடிப் போவான். அவனுக்கு
சாக்லேட் வாங்கிக் கொடுப்பான். எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. அப்போது விமலன்
சொன்னான் “அவன் யாருன்னு நெனச்சே, சைனபாவுக்க தம்பி. அவனை கவர் பண்ணினா இவளும்
விழுந்திருவா, எப்பிடி? பாரு இன்னும் கொஞ்ச நாளில நான் அவ வீட்டுக்குள்ள
இருப்பேன்”. எனக்கு இது சரியான போக்காக தோன்றவில்லை.
ஒருநாள் விமலன் என்னை
வற்புறுத்தி அவனைக் காட்ட அழைத்து சென்றான். அட, பார்க்க அச்சு அசல் சைனபா போலே
தான் இருந்தான். தம்பி முயல். அவளை விட இன்னும் அதிக அழகாகவும் இருந்தான். ஆனால்
பைவ் ஸ்டார் சாக்லேட்டை இவ்வளவு ஆசையாய் வாங்கி சாப்பிடும் ஆணை அப்போது தான்
பார்க்கிறேன். அது மட்டுமல்ல விமலன் வாங்கிக் கொடுத்த அத்தனை சாக்லேட்களின்
உறைகளையும் பத்திரமாய் தன் பையில் வைத்திருந்தான். எனக்கு இது ரொம்ப அருவருப்பாய்
தோன்றியது.
நாங்கள் சைனபாவின்
தம்பியை முன்னிட்டு பலமுறை சண்டையிட்டோம். ஒரு நாள் நான் அவனை பஸ்ஸில் இருந்து
கீழே தள்ளி விட்டேன். அவன் கால் உடைந்தது. இதனால் சைனபாவுடனான என் காதல்
முறிந்தது. நான் கொடுத்த பரிசுகளை மொத்தமாய் திருப்பித் தந்து இனி என் முகத்தில்
முழிக்காதே என்று விட்டாள்.
கல்லூரியில் சேர்ந்து ஒரே
துறையில் ஒரே பெஞ்சில் அமர்ந்து தான் படித்தோம். கல்லூரியில் அவனுக்கு நண்பர்கள் அதிகமானார்கள்.
வகுப்புகளுக்கு அநேகமாய் வர மாட்டான். விடுதியில் ஏதாவது மாணவனின் அறையில் தூங்கி
விடுவான். நாட்கணக்காய் வீட்டுக்கு போக மாட்டான். நீண்ட குடுமி வளர்ந்து கண்கள்
மேலேறி செருகியது போல் பார்வையை வைத்துக் கொள்ள ஆரம்பித்தான். ஆனால்
பேராசிரியர்களுக்கு அவனைப் பிடித்தது. பெண்களுக்கும் தான். அவன் மடியில் விழத்
தயாராய் இருந்தார்கள். மாறாக கல்லூரிக்குள் பிற மாணவர்கள் அவனை ஒன்பது என பரவலாய்
என் காதுபடவே ஓட்டினார்கள். அவன் பொருட்படுத்தவில்லை.
அவன் மெல்ல இடையை அசைத்து
நடப்பதை அப்போது தான் கவனித்தேன். ஏன் அத்தனைக் காலம் அது கவனத்தில் படவில்லை
என்று ஆச்சரியமாக இருந்தது.
நான் அவனைப் பார்க்க
விடுதிக்கு செல்லும் போது இவனும் ஹோமோ என்பது போல் என்னைப் பார்த்து நக்கலாய்
சிரிப்பார்கள். அறையில் அவன் ஜட்டியுடன் கட்டிலில் வேறு சிலருடன் படுத்துக்
கிடப்பான். இரண்டு கத்திரிக்கோல்களை திறந்து படுக்கப் போட்ட்து போல் கோணலாய்
கிடப்பார்கள். எனக்கே கொஞ்சம் லஜ்ஜையாய் இருக்கும்.
ஒரு நாள் இரவு விடுதியில்
விமலனுடன் தனியாய் இருந்தேன். மின்சாரம் இல்லை. வெக்கை தாங்காமல் ஆடைகளைக் களைந்து
ஜன்னல் பக்கமாய் காற்று பட கிடந்தேன். விமலன் வந்து என்னருகே ஒண்டிக் கொண்டான்.
பிறகு அவன் கிக்கீ என சிரித்துக் கொண்டு காதில் வந்து “உனக்கு செக்ஸ் பீலிங் வருதா
சொல்லு” என்றான். திக்கென்றது. என் மனதிலும் அந்த குழப்பம் தான் ஓடிக்
கொண்டிருந்த்து. எங்கள் நட்புக்கிடையே வந்த ஒரு நெருக்கடியாக அவனது மாற்றத்தை
நினைத்திருந்தேன். ஒருவேளை நாங்கள் நண்பர்கள் இல்லையோ, வேறாதவதோ என்று ஒரு நரம்பு
பரபரத்துக் கொண்டிருந்த்து. நான் இல்லை எனத் தலையாட்டினேன். “எனக்கும் தான்”
என்றான். பிறகு என் போர்வைய்க்குள் புகுந்து என் குறியை பற்றி அசைத்தான். “எங்கே
தம்பி எழுந்திட்டானா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான். “சும்மா இருடா” என்று
கண்டித்தேன். “அப்போ சரிதான்” என்று விட்டு தளர்வாக படுத்துக் கொண்டான். எங்கள்
இருவருக்குள்ளும் ஒரே மாதிரி நிம்மதி படர்வதை உணர்ந்தேன். எங்கள் நட்பும் வழக்கம்
போல் வலுவாக தொடர்ந்தது.
அப்போது தான் நான் உரிமை,
சமத்துவம், எழுச்சி பற்றி அதிகமாய் யோசிக்க ஆரம்பித்தேன். கோட்பாடுகள் வாசித்தேன்.
எங்கள் கல்லூரிக்குள் சிறு குழுக்கள் நிறைய இருந்தன. வீதி நாடகங்கள், புரட்சிக்
கூட்டங்கள், நள்ளிரவு விவாதங்கள் நடந்தன. கல்லூரியை முடித்து வெளியே வருவதற்குள்
உலகம் மாறப் போகிறது என்கிற உணர்வு எங்களுக்கு வலுவாக இருந்தது. எனக்கு நெருக்கமான
பேராசிரியர் ஒருவர் அந்த அமைப்பில் இருந்தார். அந்த அமைப்பு திருநங்கையர்,
ஓரினச்சேர்க்கையாளர், மாற்றுப்பாலினத்தவருக்காக தீவிரமாக இயங்கியது. நான் அது
குறித்து நிறைய படிக்க ஆரம்பித்தேன். அமைப்புக்காக துண்டறிக்கைகள் தயாரித்து
விநியோகிப்பதில் மும்முரமாக இருந்தேன். இது குறித்து விமலனிடம் பேசும் போது அவன்
துளியும் ஆர்வம் காட்ட மாட்டான். வாழ்க்கைக்கு ஒவ்வாத விசயங்களை நான் பேசுவதாக
சொல்வான்.
அவனது பழக்கத்தினால் கல்லூரி
வளாகத்தினுள் உள்ள ஓரினச்சேர்க்கை ஆர்வலர்களை எனக்குத் தெரிய வந்தது.
மாற்றுப்பாலியல் பற்றி கல்லூரிகள் பல பங்கேற்ற ஒரு கருத்தரங்கு நடத்தினோம்.
ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் அந்த பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை.
சம்மந்தமே இல்லாதவர்கள் தான் விழுந்து விழுந்து பேசினார்கள், சண்டையிட்டார்கள்,
புஸ்புஸென்று ஆவேசத்தில் மூச்சு விட்டார்கள். இதே போல் அமைப்பில் மும்முரமாய்
இயங்கின உள்வட்டத்தை சேர்ந்தவர்களில் ஒரு சிலரை தவிர வேறு யாரும் வெளிப்படையான
ஓரினச்சேர்க்கையாளர் அல்ல. “உங்க பொண்ணு லெஸ்பியன ஆனா ஒத்துப்பீங்களா?” என
நிர்வாகிகளில் ஒருவரிடம் கேட்டேன். “சமூகத்தை எப்படி சமாளிக்கிறது என்கிறது தன
கவலையாக இருக்கும்” என்றார். நான் விமலனிடன் அவன் நண்பர்கள் பாசாங்கானவர்கள் என்று
கத்தினேன். அவன் சொன்னான் “குசு வந்தா விடனும், அதைப் பத்தி பேசிக் கிட்டே இருக்கக்
கூடாது”.
பிறகு நாங்கள் வீதி
நாடகங்களில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தோம். நான் வற்புறுத்தி விமலனை சேர்த்து
விட்டேன். அவன் வந்த்துமே அனைவரையும் கவர்ந்தான். நிகழ்ச்சிகளில் ஜொலிக்க
ஆரம்பித்தான். அவனுக்கு சரளமாக அழகாக பாட வந்த்து. வசன்ங்களை சூழ்நிலைக்கு
ஏற்றவாறு மாற்றி பேசினான். அவன் நின்று தன் பாணியில் பேச ஆரம்பித்த்தும் கூட்டம்
கலகலத்த்து. கல்லூரியில் சில நாடகங்கள் போட்டோம். விமலன் வரும் போதெல்லாம் விசில்
பறந்த்து. அவனும் நடிப்பதை ரசிக்க தொடங்கினான். அவனது ஹோமோ நண்பர்களையும் சேர்த்து
விட்டான். அவர்கள் கூட்டங்கள், பேரணிகளுக்கு எல்லாம் வர மாட்டார்கள். அதாவது
வருவார்கள், பங்கு பெற மாட்டார்கள். அப்படி ஒரு கூட்டம் எங்கள் அமைப்பில் இருந்தது.
அதன் நோக்கம் எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை.
நிர்வாகிகளில் ஒருவரான
தமிழ்ச்செல்வன் அடிக்கடி என்னை தன் வீட்டுக்கு அழைப்பார். அவர் ஒரு முக்கிய
கட்சியில் அதிகாரமிக்க இடத்தில் வேறு இருந்தார். ஒரு நாள் நிகழ்ச்சி ஒன்றுக்காக
பாண்டிச்சேரிக்கு பேருந்தில் போகும் போது என் சட்டைக்குள் கை விட்டு மாரை பிசைய
பார்த்தார். தட்டி விட்டேன். பயணத்தின் போது ஒரே அறையில் தங்கலாமே என்றார். நான்
“எனக்கு விருப்பமில்லை. நான் அந்த மாதிரி இல்லை. ஹெட்ரோ” என்றேன். அவருக்கு கோபம்
வந்த்து. “நீயெல்லாம் ஏன் பிறகு அமைப்பில இருக்கே?”என்று கேட்டார். “உன்னை மாதிரி
புல்லுருவிகளால் தான் அமைப்பு சீர்கெட்டு போவுது” என்றார். “இதென்ன ஜாதி சங்கமா?”
என நான் திருப்பிக் கேட்டேன். அவர் அதற்கு “ஆமாம். மாற்றுப்பாலுறவில் நம்பிக்கை
இல்லாட்டா நீயெல்லாம் ஏன் அதை ஆதரிச்சு பேசற மாதிரி நடிக்கிற? உன் உண்மையான
அடையாளம் என்ன? யாரை ஏமாத்துற?” என்று கேட்டார். எனக்கு அப்போது எந்த பதிலும்
தோன்றவில்லை. ராத்திரி தூக்கம் மட்டும் வரவில்லை. அவரது கேள்விகள் காதுக்குள்
ஒலித்துக் கொண்டே இருந்தன. பிறகு நான் அமைப்பில் பங்கெடுப்பதை மெல்ல மெல்ல
குறைத்துக் கொண்டேன்.
ஆனால் விமலன் தொடர்ந்து
அமைப்பில் தீவிரமாய் இருந்தான். ஒரு கட்டத்தில் அமைப்பின் முகமாகவே மாறினான்.
நாங்கள் அமைப்பு பற்றி பேசிக் கொள்வதை நிறுத்தினோம். நான் அமைப்பு பற்றி குறை
கூறும் போதெல்லாம் அவன் “அது வெறும் பிக்கப் ஜாயிண்ட் ரா. நீ என்னமோ மார்க்ஸ்
ஏஞ்செல்ஸ் ரேஞ்சுக்கு யோசிக்காத” என்பான். வார இறுதிகளை என்னோடு கழிக்க வருவான். வெள்ளைவெளேரென
வெற்று முதுகு தெரிய ஒரு ஆண் திரும்பிப் பார்த்தபடி இருக்கும் எனது அந்த பிரபலமான
ஓவியம் அவனை மாடலாக வைத்து வரைந்த்து தான். சில ஓவியங்களில் முகத்தை மட்டும்
மாற்றி இருக்கிறேன். பிறகு எனக்கு கனவில் அதே ஓவியங்கள் அவன் முகத்தோடு திரும்பி
வரும்.
பிறகு நாங்கள் சந்தித்து
கொள்வது வெகுவாக குறைந்து போனது. அவன் ஏதோ ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை
பார்த்தான். அவ்வப்போது வீட்டுக்கு போனால் அவன் அம்மாவும் சித்திகளும் மட்டும்
இருப்பார்கள். அவன் வீட்டுக்கு வருவதில்லை என்றும், நிறுவனம் பக்கத்தில் ஒரு
வீட்டை எடுத்து சில நண்பர்களுடன் வசித்து வருவதாக வருந்தினார்கள். நான் போனில்
அழைத்து கேட்டால் அவன் ஏதாவது சொல்லி சமாளித்தான். ஆனால் முடிந்தவரை அம்மாவை
பார்ப்பதை தவிர்க்க நினைத்தான். அவன் அம்மாவோ அவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தால்
எல்லாம் சரியாகி விடும் என நினைத்தார். ஊருக்குள்ளோ ஜாதிக்குள்ளோ அவனுக்கு பெண் தர
தயங்கினார்கள். “விமலாவை நான் சின்ன வயசில பொட்டு வச்சு பின்னல் போட்டு பொண்ணு
மாதிரி வளர்த்த்தினால தான் இப்படி ஆயிட்டோனோ என்னவோ, என் தப்பு தான் பா நான் சரியா
அவனை வளர்க்கல” என என் தோளில் சாய்ந்து அழுதார். நான் ஒருவரது பால் விழைவு
இயற்கையானது, அதை யாரும் தூண்ட முடியாது என புரிய வைக்க முயன்றேன். அவர்
சமாதானமடையவில்லை. போகும் முன் என்னிடம் “நீ ஏன்பா கல்யாணம் பண்ணிக்கல?” என்று
சந்தேகமாக கேட்டார். விமலனுக்கும் எனக்கும் ஒரே மேடையில் தான் திருமணம் நடக்கும்
என்று அவரிடம் உறுதி அளித்து விட்டு வந்தேன், அது பொய் என்று ஆழ்மனதுக்கு
தெரிந்திருந்தாலும்.
ஆனால் என் நாக்கின்
கோளாறோ என்னமோ விமலன் கல்யாணம் தீர்மானிக்கப்பட்ட்து. பெண் பக்கத்து ஊரை
சேர்ந்தவர். ஒரு பள்ளியில் அறிவியல் சொல்லித் தரும் சாதுவான பெண். பார்க்க ரொம்ப
ரொம்ப சுமார் தான். நான் அவனிடம் அது பற்றி சொன்ன போது “சைட் டிஷ் சூப்பரா
இருக்கணும்னு அவசியம் இல்லடா” என்றான். ஆனால் அவன் பதற்றமாக இருந்த்தை உணர்ந்தேன்.
திருமணத்துக்கு முன்பான சடங்குகளுக்காக அவள் வீட்டுக்கு போய் வருவது அவனை வெகுவான
எரிச்சலூட்டியது. எனக்கு போன் செய்து அப்பெண்ணையும் அவள் குடும்பத்தினரையும்
கெட்டவார்த்தையால் திட்டுவான்.
ஆனால் அந்த கல்யாணம்
நின்று போனது. பெண் வீட்டில் யாரோ போய் விமலன் ஒரு ஹோமோ என்று கூறி திருமணத்தை
நிறுத்தியதாக சொன்னார்கள். விமலன் தான் திருமணத்தை நிறுத்த ஏற்பாடு செய்தானோ என
எண்ணி அவனிடம் கேட்ட போது “எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் தாண்டா, நான் ஏன் அதை
தடுக்க போறேன்”. அமைப்பில் இருந்து சிலர் சென்று பெண் வீட்டில் நெருக்கடி
கொடுத்த்தாகவும், திருமண நாளன்று பிரச்சனை பண்ணப் போவதாய் மிரட்டியதாகவும்
கூறினான். இதை அடுத்து ஊரிலும், உறவினர்கள் மத்தியிலும் அவனுக்கு நெருக்கடி
அதிகமானது. அப்போது தான் அவன் காணாமல் போனான். எனக்கு பயமாகியது. எங்கே தேடியும்
அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
நான் எட்டு
வருடங்களுக்குப் பிறகு அமைப்பில் எனக்குத் தெரிந்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக தேடிப்
போய் பார்த்து விசாரித்தேன். அவர்கள் மாறுதல் இன்றி என்னை தமிழ்ச்செல்வனைப் போய்
பார்க்க சொன்னார்கள். தமிழ்ச்செல்வன் “வாங்க தோழர்” என்றார். நான் நிலைமையை
எடுத்துச் சொன்னேன் “அவன் குடும்பமா செட்டில் ஆகிறத நீங்க ஏன் தடுக்கிறீங்க
பிரதர்?” என்றேன்.
“இந்த அமைப்பில நாம
இவ்வளவு நாளா பேசி வந்த்துக்கு என்ன அர்த்தம் அப்போ? அவன் பாட்டுக்கு ஒரு பொண்ணை
கல்யாணம் பண்ணி வாழ்றானா எதுக்கு எங்க கூட இருக்கான்? அவனால நிம்மதியா இருக்க
முடியுமா சொல்லுங்க?”
“அவனுக்குன்னு குடும்பம்
வேணாமா? அவன் அம்மாவுக்கும் ஆசை இருக்காதா? இப்போதைக்கு அவனை அவன் சொந்தத்தில
யாருமே மதிக்கிறது இல்ல தெரியுமா. அவனுக்கு ஒரு சமூக வாழ்க்கை வேணாமா பிரதர்?
எவ்வளவு வேணும்னா புரட்சி பேசலாம், ஆனால் நீங்க இந்த சமூகத்தில தானே
வாழ்ந்தாகனும். அங்க இருக்கிற நடைமுறையை மீறி நீங்க எங்க போயும் வாழ முடியாது.”
தமிழ்ச்செல்வன் சொன்னார்
“உங்களை மாதிரி புஸ்தக புழுக்கள் இப்படித் தான் உங்களுக்கு ஏத்த மாதிரி கொள்கையை
மாத்துவீங்க. அமைப்பை கொஞ்ச நாள் உங்க தேவைக்கு பயன்படுத்தினீங்க, அப்புறம்
துரோகம் பண்ணீட்டு வெளியேறினீங்க. இப்போ உங்க பிரண்டு துரோகம் பண்ண போறார்”
“கொள்கைக்கும்
வாழ்க்கைக்கும் ரொம்ப தூரம் இருக்குங்க. அவன் உங்க கூடத் தான் இருப்பான். ஆனா
அவனுக்கு வேலை, குடும்பம் எல்லாம் வேணும். அப்போ தான் நிம்மதியா வாழ முடியும். அதை
ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க?”
தமிழ்ச்செல்வன் ஏற்றுக்
கொள்ளவே இல்லை. அவர் இறுதியாக சொன்னார் “இது விமலன் சம்மந்தப்பட்ட பிரச்சனை
மட்டும் இல்ல பிரதர். ஒரு பொண்ணு வாழ்க்கை இதுல சம்மந்தப்பட்டிருக்கு. ஒரு
ஹோமோசெக்ஷுவல் ஆணை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு பொண்ணு சந்தோசமா குடும்ப வாழ்க்கை
வாழ முடியுமா? முடியாது. அதை சொல்லாம அந்த பொண்ணை ஏமாத்தி கட்டிக்கிறது ஒரு
வன்முறை இல்லையா? அதை தான் தடுத்து நிறுத்தப் பார்க்கிறோம்”
“நீங்க எப்போ பெண்ணுரிமை
இயக்கமா மாறுனீங்க?”
“நாங்க எல்லா
ஒடுக்கப்பட்டவங்க உரிமைக்காகவும் போராடுறோம். எங்களுக்கு ஹோமோ ஹெட்ரோ செக்ஷுவல்னு
எல்லாம் வித்தியாசம் இல்ல”
நான் எரிச்சலாகி அவரை
நோக்கி கத்தி விட்டு எழுந்தேன் ”உங்களில ஒருத்தன் நிம்மதியா வாழக் கூடாது. அது
உங்களுக்கு பிடிக்கல. அவன் காலம் பூரா தனிமையா யாருமில்லாம கஷ்டப்படனும். அது தானே
வேணும்? நடத்துங்க”
அவர் என்னை நோக்கி
நக்கலாய் புன்னகைத்து விடைகொடுத்தார். \
அதன் பிறகு என்னால் அந்த
விசயத்தில் ஏதும் செய்ய இயலவில்லை. அந்த திருமணம் நடக்கவில்லை என நினைக்கிறேன்.
விமலன் மும்பை போய் விட்ட்தாக யாரோ சொன்னார்கள்.
என்னுடைய பதினைந்து வருட
ஓவியங்களை மொத்தமாய் தேர்ந்தெடுத்து ஒரு வார கண்காட்சி நடத்தினார்கள். நான் வரைவது
நிறுத்தி சில வருடங்களாகி இருந்தன. என் பழைய ஓவியங்கள் ஒவ்வொன்றாய் பார்க்க ஏதோ
அந்நிய மனிதனின் கனவுலகை தரிசிப்பது போல் இருந்த்து. பிற்காலத்தில் நான் நிறைய
இருட்டான ஓவியங்களை வரையத் தொடங்கி இருந்தேன். பழுப்பான பின்னணியில் இருட்டான
சிதைந்த உடல்கள் பதுங்கியும் பாய்ந்தும் நகர்வது போல் பல தரப்பட்ட ஓவியங்கள். கால
முறைப்படி பிரித்து வைத்திருந்தபடியால் ஒரு பக்கம் வெள்ளை வெள்ளையான படங்களும் இன்னொரு
பக்கம் இருட்டுலகமுமாய் இருந்த்து. நான் நடுவே நின்று ஆட்களை வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தேன். என் பின்பக்கமாய் யாரோ தட்டினார்கள்.
விமலன் சின்ன தொப்பை
கழுத்து மடிப்புகள், தடித்த இமைகளுடன் என்னை அதே குறும்பு சிரிப்புடன் பார்த்தான்.
“வீட்டுக்கு போயிருந்தேன். இங்கே இருப்பாங்கன்னு சொன்னாங்க” என்று விட்டு என்
முதுகை சேர்த்து அணைத்தான். ஆனால் அடுத்த நொடியே தயங்கி விலகினான். எங்கள் இருவர்
உடல்களிலும் பழைய ஒத்திசைவு இல்லை. ஆனாலும் கையை இறுகப் பற்றிக் கொண்டு சற்று
நேரம் பேசிக் கொண்டிருந்தேன். இதனிடையே கூட்டத்தில் அவனை யாரோ கண்டு கொண்டு
கட்டிக் கொண்டார்கள். கழுத்தை முகர்ந்து பார்த்து நெற்றியில் முத்தமிட்டார்கள்.
அதைத் தொடர்ந்து இன்னும் நான்கு பேர் அவனை சூழ்ந்து கொண்டார்கள்.
பிறகு என் காதருகே வந்து
சொன்னான் “இங்க வந்திருக்கிற குரூப்ல நிறைய பேர எனக்குத் தெரியும்.” சில பிரபல
ஓவியர்களைக் காட்டி அவர்களில் யாரெல்லாம் ஹோமோ, யாருக்கு யாரெல்லாம் ஜோடி என
விளக்கினான். “இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா ஒரு குர்தா மாட்டிக்கிட்டு நானும்
எக்ஸிபிஷனுக்கு நாளையில இருந்து வர ஆரம்பிச்சிருவேன், ஹா ஹா” என்றான்,
“அந்தளவுக்கு இந்த ஊரில ஆட்டம் போட்டிருக்கேன்”.
வெளியே அழைத்துப் போய்
காண்டீனில் ஒரு சேலை அணிந்த சின்ன பெண்ணையும் அருகே கோன் ஐஸ்கிரீமை
கண்ணுங்கருத்துமாய் முகமெல்லாம் தேய்த்து நக்கிக் கொண்டிருந்த இளஞ்சிவப்பு பிராக்
அணிந்த குழந்தையும் காட்டினான். “மை பேமிலி”. அந்த பெண் என்னைப் பார்த்து
வணங்கினாள்.
கூட்ட்த்தில் இருந்து
இரண்டு பேர் வந்து “விமல்” என்று கூவிக் கொண்டு அவன் அருகே வந்தார்கள். இடுப்பை
அணைத்து பாம்பு போல் வளைந்து பேசினார்கள். அவன் அவர்களுடன் போனான்.
நான் உள்ளே சென்று ஒரு
லெமன் டீ சொல்லி காத்திருந்தேன். விமலனின் மனைவி என்னை நோக்கி வந்தாள்.
புன்னகைத்தாள். இந்தி கொச்சையுடன் தமிழ் பேசினாள். பூர்வீகம் கோவை என்றாள். இரண்டு
தலைமுறையாய் மும்பை வாசம் என்றாள். “அவர் எப்பவுமே உங்களைப் பத்தி தான் பேசுவார்
அண்ணா” என்றாள். எப்போ திருமணம் ஆகிற்று எனக் கேட்டேன். ஏழு வருடங்களுக்கு முன்
ஆகிற்றாம். காதல் திருமணம் என்றாள்.
”கல்யாணத்துக்கு பிறகு
ரொம்ப மாறிட்டாருண்ணா. வீட்டுக்கே வரதில்ல. எதாவது கேட்டா அடிக்கிறாரு. இன்னொரு
வீடு வைச்சிருக்காரு. அங்கே இன்னொரு...” தயங்கியவள் “அண்ணா நீங்க அவருக்கு ரொம்ப
குளோசுங்கறதுனால சொல்றேன்... நீங்க நீங்க அந்த மாதிரி இல்ல இல்ல?”
நான் இல்லை எனத்
தலையாட்டினேன்.
“அந்த வீட்டில இன்னொரு
ஆம்பிளை கூட இருக்காரு. எப்பயாவது தான் வீட்டுக்கு வருவாரு. வந்தா என்னைப் பத்தி
அசிங்கமா பேசறது தான் அவர் வேலை”. அப்போது பக்கத்தில் வந்து நின்ற குழந்தையின் தலையை
வருடி விட்டு சொன்னாள் “இந்த குழந்தை அவருது இல்லன்னு சொல்றாருண்ணா” அவள் கண்ணீரை
முந்தானையில் துடைத்துக் கொண்டாள். மூக்கை உறிஞ்சினாள்.
“நான் என்ன பண்ணுறது?
அவர் சம்பளம் மொத்தமும் செலவு பண்றாரு. அவனுக்கு கொடுக்கிறாரோ இல்ல எங்க போய்
கொட்றாரோ தெரியல. குடும்பத்துக்குன்னு அஞ்சு காசு தரதில்ல. நான் வேலைக்கு போய்
சம்பாதிக்கிறேன். ஒரு வீட்டுக்கார்ரா அடங்கி கூட இருக்கலாமில்ல, அதுவும் பண்றது
இல்ல. என் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு. அவங்க எங்க கூட பேசறது இல்ல. என்
சொந்தக்காரங்க அசிங்கமா பேசுறாங்க அண்ணா, ஒரு கல்யாணம் நிகழ்ச்சிக்கு போக முடியறது
இல்ல. இவரை நான் எதுனா கேட்டா அடி உதை
தான்”. தன் தலையை சாய்த்து காதைக் காட்டினாள். அங்கு தையல் போட்டிருந்த்து. பிறகு
தன் முழங்கையை காட்டி அவன் சூடு வைத்த தடத்தை காட்டினாள். எனக்கு கோபமோ வருத்தமோ
வரவில்லை. என்ன சொல்வதென்று புரியவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
மீண்டும் கும்பிட்டபடி
சொன்னாள் “கடவுளை நினைச்சு நீங்க அவருகிட்ட பேசுங்க அண்ணா, உங்கள சொந்த அண்ணனா
நினைச்சு கேட்கிறேன். ஆனால் ப்ளீஸ் நான் சொன்னதா மட்டும் சொல்லிராதீங்க”
அவள் முகம் தூய பால்
வெள்ளையாக இருந்த்து. ரொம்ப காலத்திற்கு பிறகு விமலனைப் போன்றே அப்பழுக்கற்ற
வெண்மையான நிறம் கொண்ட ஒருவரை பார்க்கிறேன். அவளுக்கு மூக்குக்கு கீழே ஒரு மரு
இருந்த்து. அது அவளது வெண்மையை இன்னும் தூக்கலாய் காட்டியது. அது நிஜமான மருவா
அல்லது திருஷ்டிக்காக வைத்த பொட்டா? சரியாகத் தெரியவில்லை. பார்க்க பார்க்க என்னை
அந்த முகம் முழுங்கி விடும் போல் இருந்த்து. விரலை நீட்டி என்னையறியாமல் அவள்
மருவைத் தொட முயன்றேன். சருமத்தில் விரல் பட்ட்தும் அவள் பதறி விலகினாள். ஏன்
அப்படி பண்ணினேன் என அப்போது தான் உறைத்த்து. தள்ளி நின்று வெருண்டு போய்
பார்த்தாள்.
“சாரி ரொம்ப சாரிம்மா”
என்றேன், அந்த வெள்ளையை விட என்ன கருமையான கறுப்பு அது என நினைத்துக் கொண்டே.
