சங்கர் படங்களின் பொதுவான களன்
சமூக நோக்குக்காக பழிவாங்கும் ஒரு நாயகன் என்பதாக இருக்கும். “ஐ”யில் அவர் அதில் இருந்து
ஆச்சரியமாக விலகி தனிப்பட்ட காரணத்துக்காக தண்டிக்கப்படும் ஒரு நாயகன் வில்லனை பழிவாங்குவதாக
காட்டி இருக்கிறார். இந்த புதுவித கதையை சமாளிக்க முடியாமல் திணறி இருக்கிறார் என்பது
அதை விட ஆச்சரியம். “ஐ” சங்கர் படம் போலவே இல்லை. பினாமி தொழிலதிபர் போல பினாமி இயக்குநர்
வைத்து எடுத்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. அந்தளவுக்கு அவர் வழக்கமாய் ஸ்கோர் பண்ணுகிற
இடங்களில் கூட அசட்டுத்தனமாக வழுக்குகிறார்.
இப்படத்தின் முக்கிய வில்லன் திரைக்கதை
தான். இவ்வளவு மட்டமான சோம்பேறித்தனமான திரைக்கதையை சங்கர் படங்களில் பார்க்க முடியாது.
விஜய் டிவி “கனெக்ஷன்ஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் சொல்லும் திரைக்கதை போன்றே
கோமாளித்தனமாக இருக்கிறது. சங்கர் எப்போதும் திறமையான வசனகர்த்தா (பாலகுமாரன்) அல்லது
திரைகதையாளர்களுடன் (சுஜாதா) வேலை பார்த்திருக்கிறார். முதல்முறையாக இவர்கள் இல்லாமல்
கோதாவில் சுபாவுடன் இறங்கியிருக்கிறார். அதன் ரத்தக்களரியான விளைவு தான் இப்படம். பல
காட்சிகள் எந்த கற்பனையோ உழைப்போ இன்றி உருவாக்கியதாய் உள்ளன. அதனாலே படம் ஆரம்பித்த
கொஞ்ச நேரத்தில் பார்வையாளர்கள் பேசத் துவங்கி விடுகிறார்கள். அப்புறம் இது பி.சி ஸ்ரீராம்
படம் என்றே தோன்றவில்லை. அவரும் தூங்கி விட்டார் போல.
சங்கரின் பிரம்மாண்டம் பொதுவாக
சித்தரிப்பில் மட்டுமல்ல கதையின் கற்பனையிலே இருக்கும். கதையின் பிரம்மாண்டம் தான்
சித்தரிப்பின் பிரம்மாண்டத்தை தாங்கும். இதில் பிரம்மாண்டம் என்பது செலவில் மட்டும்
தான் இருக்கிறது.
சங்கரின் படங்களில் “ஐயோ எனக்கு
வலிக்கிறதே, ஐயோ எனக்கு ரொம்ப கோவமாக வருகிறதே, பார்டா உன்னை பழிவாங்கிட்டேனே, எனக்கு
உன்னை ரொம்ப பிடிக்கும், நீ என் மனசை உடைச்சிட்டே” போன்ற மொட்டை வசனங்கள் இராது. அதையெல்லாம்
அவர் காட்சியாக காட்டி விடுவார். தேவையில்லாத விசயங்களைக் கூட காட்சிபூர்வமாக்குவார்
(வயிறு பொறாமையில் எரிவது – “பாய்ஸ்”). ஆனால் இந்த மிகையான visual sense தான் அவரது
மொழி. இப்படத்தில் அது சுத்தமாக இல்லை. ஒருவருக்கு வருத்தமாக இருக்கிறது என்றால் அது
வசனமாக வருகிறது. பிறகு அந்த பாத்திரத்தையே தன் வருத்தத்தை அழுது காட்டவும் விடுகிறார்.
சுமார் இருபது நொடிகள் ஒரு ஆள் தன் வருத்ததை காட்ட அழுதால் என்ன கண்றாவியாக இருக்கும்?
அழுகையை “காட்டுவது” தானே சினிமா? அழுவதை காட்டுவது இல்லையே!
சங்கரின் முதல் படமான “ஜெண்டில்மேனில்” போலிஸ் அதிகாரியின்
பதற்றத்தை காட்ட அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் கவனமின்றி சொதப்புவதை காட்டுவார்.
அக்காட்சியின் நோக்கம் நாயகன் விரலில் அணிந்திருக்கும் மோதிரத்தில் உள்ள தாலி ஒரு பிராமணத்
தாலி அல்ல எனக் காட்டுவது. ஆனால் அக்காட்சி மூலம் மூன்று விசயங்களை காட்டி விடுவார்.
அதிகாரியின் கவனம் கொள்ளாத மனம், அவருக்கு திருமணமாவது போவது, தாலியின் சாதி. மூன்றை
நாசுக்காக ஒரே காட்சியில் சுவாரஸ்யமாக திணிப்பார். திருமணமானால் தான் மனம் அமைதியாகும்
என அதிகாரியின் அப்பா சொல்ல அவர் “இல்லை இப்போ பாருங்க” என மிகச் சரியாக இலக்கின் மையத்தில்
சுட்டுக் காட்டுவார். “எப்படி மந்திரம் ஓதும் ஒரு ஐயருக்கு கொள்ளையடிக்கும் துணிச்சல்
வரும்?” எனும் அவரது பிற்போக்குத்தனமான குழப்பத்துக்கு விடை கிடைத்து விட்டது. உடனே
அமைதியாகி விடுவார். ஆனால் இந்த குழப்பத்தை எங்கும் வசனமாக வைக்க மாட்டார். அப்பா நினைப்பது
போல் இல்லாமல் பையனுக்கு நிம்மதி வழக்கை தீர்ப்பதில் தான் என்பதையும் வசனமாக சொல்ல
மாட்டார். இரண்டுமே அக்காட்சியில் காட்சிபூர்வமாக உணர்த்தப்படும். இன்னொரு காட்சியில்
நாயகன் கிச்சா கண்காட்சியில் ஒரு பொம்மையை திருட முயல அது “திருடன்” எனக் கத்த அவனுக்கு
பயந்து வியர்க்க தொடங்கும். “ஐயோ ஒரு நிமிசம் பக்கென்னு ஆயிடுச்சு” என வசனம் வராது.
ஆர்ஜுனின் முகபாவமே அதைக் காட்டி விடும். அது போல் பிறகு அவன் பிடிபடப் போவதற்கான முன்னோட்டக்
காட்சியாகவும் இது அமையும். “முதல்வனில்” இன்னொரு அழகான காட்சி. ரகுவரனின் வீட்டுக்குப்
போய் அவரது கழுத்தைப் பிடித்து நெரித்து மிரட்டி விட்டுப் போகிறார் அர்ஜுன். உடனே ரகுவரன்
பதறி ஓடி வரும் தன் மனைவியிடம் அமைதியாக “ஒரு சீப்பு குடு, கலைச்சிட்டு போயிட்டான்”
என்பார். பிறகு பொறுமையாக தலைவாரிக் கொண்டு தன்னைப் பார்ப்பார். உண்மையில் கலைந்தது
அவரது மனம். வாரியவுடன் மனமும் அமைதியாகிறது. அதே போல் எந்த மிரட்டலையும் உணர்ச்சியற்று
எதிர்கொள்பவர் என்பதையும் இதன் மூலம் காட்டியாயிற்று. இங்கும் “என்னையே நடுங்க வச்சிட்டான்
பார்” என இருபது நொடி புலம்பும் வசனம் இராது. ஆனால் “ஐ” யில் வெறும் மொட்டை வசனங்கள்
தான் இருக்கின்றன. காட்சிபூர்வம் இல்லை. அது போல் ஒரு காட்சி இன்னொன்றை நகர்த்தவும்
இல்லை. காட்சிகள் மொட்டை மாடியில் காயப்போட்ட துணிகள் போல் அப்படியே நிற்கின்றன.
பொதுவாக சங்கர் படங்களில் நம்ப
முடியாத காட்சிகள் இருக்கும். ஆனால் நம்பத்தகுந்த பல காட்சிகள் நடுவே அவற்றை மறைத்து
விடுவார். ஆனால் “ஐ”யில் அடிப்படை கதையே நம்பத்தகுந்ததாய் இல்லை. ஒரு பாடி பில்டர்
மாடல் ஆகிறார். பிறகு அவர் செலிபிரிட்டி ஆகிறார். அவர் கொடுக்கிற ஒரு பேட்டியினால்
ஒரு கார்ப்பரேட் நிறுவனமே நஷ்டத்தில் போகிறது. இது சாத்தியமே இல்லை. நம்மூரில் மாடல்களை
யாருக்குமே தெரியாது. அவர்கள் பேட்டி கொடுத்தால் அதை பொருட்படுத்தவும் மாட்டார்கள்.
இதற்கு பதில் அவரை ஒரு சினிமா நட்சத்திரமாக போட்டிருக்கலாம். அசட்டுத்தனமாய் ஒரு ஆணழகன்
போட்டி, அங்கு போட்டி பொறாமை அடிதடி என நேரம் வீணடித்திருக்க வேண்டாம். ஒரு அழகான,
வலுவான உடல் கொண்ட செலிபிரிட்டி நாயகன். அவர் கார்ப்பரேட்டுகளோடும் சில தயாரிப்பாளர்களோடும்
அரசியல்வாதியோடும் முறைத்துக் கொள்ள அவன் உருவத்தை சிதைக்கிறார்கள். அவன் காணாமல் போகிறான்.
பிறகு எப்படி பழிவாங்குகிறான் என அமைத்திருக்கலாம். படத்தின் பல குழப்பங்கள் ஏற்படாமல்
இருந்திருக்கும்.
முதல் பதினைந்து நிமிடங்களுக்குள்
ஒரு படத்தின் தொனி என்ன என பார்வையாளனுக்கு உணர்த்தப்பட வேண்டும். “அந்நியன்” படத்தில்
விக்ரம் தன் வீட்டில் இருந்து வெளியேறி பைக்கில் சென்று பிரேக் வயர் அறுகிற ஒரே துவக்க
காட்சியில் கதையின் பிரச்சனை சொல்லப்பட்டு விடும். “ஐ”யில் இறுதிக் காட்சி வரை நாயகனின்
பிரச்சனை என்ன என நாயகனுக்கே புரியவில்லை. அவனை ஏன் அழிக்கிறார்கள்? நாயகி அதற்கு தானே
காரணம் என்கிறாள். நாயகன் இல்லை என்கிறான். “யாரும் நல்லா இருந்தா அடுத்தவங்களுக்கு
பிடிக்கிறது இல்ல” என்கிறார். அப்படி என்றால் வாழ்க்கையில் முன்னேறுகிறவர்களை யாராவது
ஆசிட் அடித்துக் கொண்டே இருக்கிறார்களா? வைரஸ் ஊசி போட்டு சிதைக்கிறார்களா? அப்படி
எங்கும் நடப்பதில்லை. ஒரு வலுவான தனிப்பட்ட காரணம் வேண்டும். அது இப்படத்தில் இல்லை.
ஒரு மசாலா கதையை அதற்கான விதிமுறைகள்
படி ஓரளவுக்கு நம்பும்படியாய் எடுக்க வேண்டும். ஆனால் அடிப்படை கதையிலேயே இவ்வளவு பலவீனம்
கூடாது. பழிவாங்கும் கதையில் வில்லனுக்கு ஒரு நம்பும்படியான நியாயம் வேண்டும். “முதல்வனில்”,
“சிவாஜியில்” அது இருந்தது. அர்ஜுன் ஒரு முதல்வரை பதவி இறக்கி, கைது வேறு செய்கிறான்.
அவர் அவன் குடும்பத்தை அழிக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் அழகிரி புண்ணியத்தால் இதெல்லாம்
மிக நம்பத்தகுந்ததாக மாறி விடுகிறது. சிவாஜியை ஏழையாக்கி தெருவுக்கு கொண்டு வருவது
முக்கிய பிரச்சனை இல்லை. வில்லன் அவரது கனவுத்திட்டத்தை தகர்க்கிறான். அதற்குத் தான்
சிவாஜி பழி வாங்குகிறார். அது நியாயமாக இருக்கிறது. ஆனால் “ஐ”யில் வில்லன்கள் காமிடியாக
இருக்கிறார்கள். ஒரு வில்லி தன்னை நாயகன் காதலிக்கவில்லை என்று, கார்ப்பரேட் முதலாளி
தன் விளம்பரப்படத்தில் அவன் நடிக்கவில்லை என்று, இதையெல்லாம் விட கொடூரமாக ஒரு வயதான
மனிதர் நாயகி தன்னை கல்யாணம் பண்ணவில்லை என்று நாயகனை அழிக்கிறார்கள். “சூது கவ்வுமில்”
விஜய் சேதுபதியிடம் ஒருவன் நேரம் விசாரிப்பான். அவர் கவனிக்காமல் பிச்சைக்காரன் என
நினைத்து சில்லறை இல்லை என்று கூற அவன் வெறியாகி அவரை துரத்த ஆரம்பிப்பான். இது படத்தில்
வேடிக்கை காட்சி. ”ஐ”யில் வில்லன் வரும் காட்சிகள் இது போல் ஒரு காட்சியை ரொம்ப சீரியசாக
எடுத்தது போல் இருக்கிறது. சில்லறை இல்லை என்றதற்காக மூன்று வில்லன்கள் கிளம்புகிறார்கள்.
ஒருவிதமான நான்லீனியர் கதைகூறலை
முயன்றிருக்கிறார். அதை நான்லீனியர் என்றால் என் முகத்தில் காறி துப்புவீர்கள். ஒருவித
பிளேஷ்பேக்குகளின் சரவரிசை எனலாம். அது படத்தை இன்னும் சொதப்ப செய்கிறது. படம் ஆரம்பித்து
ஒரு மணிநேரம் வரை ஏன் ஒரு கூனன் இவ்வளவு அசட்டுத்தனமாக சிலரை பழிவாங்கி கோரமாக்குகிறான்
என பார்ப்பவர்களுக்கு புரிவதில்லை. “ஜெண்டில்மேனில்” கிட்டத்தட்ட இதே பிளேஷ்பேக் வடிவம்
தான். ஆனால் நாயகன் விதவிதமாய் திருடுகிற சாகசம் இக்கேள்வியை கேட்க தூண்டவில்லை. ஆனால்
இங்கு நாயகன் வில்லி தினம் தேய்க்கிற கிரீமில் மூலிகை, ரசாயனம் கலந்து அவள் உட்ல் முழுக்க
முடிமுளைப்பதாய் பண்ணுவது போன்ற அசட்டு காட்சிகள் தான் திரும்பத் திரும்ப வருகின்றன.
ஏன் வில்லியின் தோசை மாவில் பேதி மருந்து கலப்பதாய் வைக்க வேண்டியது தானே? இதனாலேயே
ஏதோ பள்ளிக்கூட நாடகம் பார்க்கும் உணர்வு படம் முழுக்க நமக்கு வருகிறது. இன்னும் இரண்டு
வில்லன்களின் பழிவாங்கல்கள் அதை விட கண்றாவி. சுரேஷ் கோபியை நாய் கடிக்க வைத்து, ஊசி
போடும் மருந்தை மாற்றி விடுகிறார். மருந்துக்கு பதில் வைரஸை வில்லனுக்குள் ஏற செய்கிறார்.
இன்னொரு வில்லனை மின்ரயிலுக்கு மேலே ஓடும் மின்கம்பியை பிடிக்க வைக்கிறார். எப்படித்தான்
யோசித்தார்களோ?
இடையிடையே “அதுக்கும் மேல” எனும் கொடூரமான பஞ்ச் வசனம் வேறு.
இதுவும் போதாதென்று சிதைக்கப்பட்ட
வில்லன்களை சந்தானம் போய் பார்த்து கலாய்ப்பதாய் சில குரூரமான காட்சிகள் வேறு. இது
பார்வையாளனை எண்ணெய் கொப்பறையில் போட்டு வறுக்கிற பாகமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில்
பழிவாங்கல் காட்சிகள் போதுமான தாக்கத்தை உருவாக்கவில்லை என சங்கருக்கு தோன்றியிருக்க
வேண்டும். அதற்காக வில்லன்களின் அவலத்தை குளோசப்பில் ஆளூக்கு பத்து நொடிகள் காட்டி
சந்தானத்தை பேச வைத்து குஷ்டரோகிகளை வைத்து கண்காட்சி நடத்துவது போல் பண்ணியிருக்கிறார்.
தாக்கமின்மைக்கு காரணம் வில்லன்கள் வில்லன்களாக இருப்பதற்கும் நியாயம் போதவில்லை, அவர்கள்
தாங்க முடியாத வில்லத்தனம் எதையும் செய்யவில்லை என்பது. ஒருவனை சிதைப்பதே கொடூரம் தான்.
ஆனால் பார்வையாளனுக்கு அது உறைக்க அவனை அவ்விடத்தில் பொருத்த வேண்டும். எப்போதும் குடும்பமோ
காதலியோ கொல்லப்படும்போது தான் பார்வையாளன் அதிகமாய் உணர்ச்சிவசப்பட்டு “பழிவாங்குவதற்கு
ஏங்குகிறான்”. அப்போது காட்சியில் தாக்கம் இருக்கும்.
விக்ரமின் நடிப்பு படுகேவலமாக
இருக்கிறது. அவரது கவனம் முழுக்க பாடி பில்டராகவும் கூனனாகவும் உடலை மாற்றுவதில் இருந்திருக்கலாம்.
ஆனால் அத்தனையும் இப்போது வீண்.
சங்கரின் அடுத்த படத்துக்கு வசனகர்த்தா
யார் என அறிந்தால் இன்னும் பயமாக இருக்கிறது. சங்கர் பேசாமல் நலன் குமாரசாமி, கார்த்திக்
சுப்புராஜ் போன்ற திறமையான திரைக்கதையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்லது. சங்கரின்
இதுவரையிலான வெற்றிக்கு சுஜாதா எந்தளவுக்கு பக்கபலம் என்பது அவர் இல்லாத போது இன்னும்
தெளிவாக தெரிகிறது.
