- 
தமிழின் முக்கிய கவிஞர் ஒருவர்.
அவருடைய உண்மையான பெயர் பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படியே அவரது அப்பா பற்றி
பேச்சு நகர்ந்தது. அப்பா பெயர் கேட்டதும் அது எங்கள் ஊர் மக்களுக்கே உரித்தான பெயர்
அல்லவா என தோன்றியது. இப்போது கவனித்தால் அவர் முகம் கூட எங்கள் ஊர்க்காரர்களுக்கானதாக
தோன்றியது. விசாரித்ததும் அவர் என் ஊர்க்காரர் தான் என ஒத்துக் கொண்டார். இத்தனை வருடங்களில்
இதை எப்படி அறியாதிருந்தேன் என வியந்தேன். அவர் தன் ஊர் அடையாளத்தை எங்கேயும் வெளிப்படுத்தியதில்லை
என கூறினார். ஏன்? அது தன் சாதி அடையாளத்தை பிறருக்கு காட்டிக் கொடுக்கும் என அஞ்சுவதாக
கூறினார்.
சில வருடங்களுக்கு முன் ஒரு கருத்தரங்கில்
ஒரு இளம் சாதிக்கட்சி தலைவர் சாதி என்பது வெறும் இனக்குழு அடையாளம் என பேசுவதைக் கேட்டேன்.
ஒரு புறம் நாம் சாதியை ஒரு ஒடுக்குமுறை சின்னமாக, கட்டமைக்கப்பட்ட ஒன்றாக பார்த்து
அதை மறுக்க, மறைக்க முயல்கிறோம். இன்னொரு புறம் அது ஒரு இயல்பான குழு அடையாளம் என ஸ்தாபிக்க
முனைகிறோம். இதில் எது உண்மை? “சாதிகள் இல்லையடி பாப்பா” என பள்ளிக்கூடத்தில் நாம்
கற்பது ஒரு அபத்தம் என கொஞ்சம் வளர்ந்ததுமே புரிந்து கொள்கிறோம். சடங்குகளாகவும், ஊர்
அடையாளமாகவும், உறவுப்பின்னலாகவும், அதிகார மையமாகவும் சாதி இருக்கிறதே! கல்லூரியில்
படிக்கையில் என் நண்பன் பிராமணர்களை சுட்டிக் காட்டி அவர்களின் முகங்களில் இயல்பாகவே
ஒரு அசடு வழியும், அப்பாவித்தனம் தெரியும் என்பான். அது போல் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு
முகம் உண்டு. பெயரையும், வட்டார வழக்கையும், ஆடைகளையும் மாற்றலாம்; ஆனால் நீங்கள் இந்த
முகங்களை எங்கு போய் தொலைப்பீர்கள்? இவ்வருடம் மலையாளத்தில் யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள
பெண் தன் பெயருக்கு பின் மேனன் என சாதிப்பெயரை வெளிப்படையாக சூட்டி இருக்கிறார். கேரளாவில்
இது ஒரு இயல்பு. ஒருவரை தன் சாதியால் அடையாளப்படுத்தி அழைப்பது வேற்றுமைக்குள் ஒற்றுமை
காணும் ஒரு நல்ல வழிமுறை என இது குறித்து ஜெயமோகன் ஒருமுறை கூறினார். ஒரு குறிப்பிட்ட
சாதியை கீழானதாக நினைக்கையில் மட்டுமே அதைக் கூற நீங்கள் மறுக்க வேண்டும். அதை இயல்பானதாய்
ஏற்கையில் ஏன் சாதிப் பெயரை வெளிப்படையாக கூறக் கூடாது என்று கேட்டார். அதாவது ஜெயமோகனை
நேரில் பார்த்தால் “என்ன நாயர் எப்பிடி இருக்கீங்க?” என நீங்கள் கேட்கலாம். அவர் நிச்சயம்
அதிர்ச்சி அடைவார். ஆனால் கேரளாவில் இருக்கையில் ஒரு மலையாளி அவரிடம் அப்படிக் கேட்டால்
அவருக்கு இயல்பாக தோன்றும்.
இங்கு ஒரு அடிப்படையான கேள்வி
எழுகிறது: கேரளாவில் சாதி உணர்வு வலுவற்றதாக இருப்பதால் அங்கு சாதிப் பெயர் வைத்து
அழைக்கும் போது அது வெறுப்பையும் கோபத்தையும் தூண்டாமல், இயல்பாக இருக்கிறதா? தமிழகத்தில்
சாதி குறிக்கப்படும் போது கொந்தளிப்பை ஏற்படுத்துவது நாம் சாதியை ஏற்று அதை மறைக்கிறவர்களாக,
செயற்கையாக இருப்பதாலா? நாம் சாதியை தவறாக கையாள்கிறோமா?
அல்ல. கேரளா அடிப்படையில் ஒரு
சாதிய சமூகம். அங்கு சாதிய அடுக்குமுறை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அது ஒவ்வொரு மலையாளியின்
அடியாழத்திலும் பதிந்து இயல்பாக மாறி உள்ளது. எப்போது நீங்கள் ஒரு படிநிலையை ஏற்கிறீர்களோ
அப்போது உங்களுக்கு அதன் ஒடுக்குமுறை இயல்பாக தெரியும். எதிர்க்க மாட்டீர்கள். ஆனால்
ஒடுக்குமுறையை எதிர்க்கிற போது தான் நீங்கள் ஒடுக்குமுறையை அதிகமாக உணர ஆரம்பிக்கிறீர்கள்.
தமிழகத்தில் பெரியார் துவங்கி அரைநூற்றாண்டுக்கு மேல் நீட்சி உள்ள ஒரு சாதி எதிர்ப்பு
வரலாறு உள்ளது. ஒவ்வொரு முறை சாதி வெளிப்படுத்தப்படும் போதும் இங்கு எதிர்ப்பு வருகிறது.
சாதி ஏற்பும் எதிர்ப்பும் இணைகிற ஒரு புள்ளி தமிழகத்தில் உள்ளது. அங்கு தான் சாதி வாழ்கிறது.
ஒரு எரிமலை வெடிப்பின் மேல் தெரியும் புகை போல் சாதி மிதக்கிறது. இந்த கோபத்தையும்
வெறுப்பையையும் கடந்து சாதியை பார்க்க நீங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு சாதிய படிநிலையை ஏற்க
வேண்டும். சாதியை ஏற்று சமாதானமாக இயல்பாக இருக்கலாம் எனும் போது ஜெயமோகன் மறைமுகமாக
படிநிலையை ஏற்பது சரி எனத் தான் குறிக்கிறார்.
ஜெயமோகனின் இந்த விவாதம் அடையாளப்படுத்தலின்
சிக்கல் பற்றியதும் தான். தமிழகத்தில் தொண்ணூறுகளில் சாதிய அரசியலின் எழுச்சி ஏற்பட்ட
பின் சாதி பண்டிகைகளை வெளிப்படையாக கொண்டாடுவது, சாதிப்பெயரை பட்டவர்த்தமாக இரண்டாம்
பெயராக வைத்துக் கொள்வது நிகழ்வாகியது. இதை ஒரு எதிர்ப்பரசியலாக தான் ஒடுக்கப்பட்டோர்
பார்த்தனர். ஆனால் இதற்கு இரண்டு எதிர்விளைவுகள் ஏற்பட்டன.
ஒன்று சாதிக் கலவரங்கள். இக்கலவரங்களில்
அதிகமும் தலித்துகள் தாம் பாதிக்கப்பட்டனர். தலித் அடையாள அரசியலின் எழுச்சி அவர்களுக்கே
அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இன்னொரு புறம் ஒடுக்கப்பட்டோர் தம்மை தம் சாதியால் அடையாளப்படுத்தும்
போது அதைக் காட்டி அவர்களை ஒடுக்கும் இடைநிலை சாதியினரும் தம்மை ஓர் அடையாளத்தின் கீழ்
தொகுத்து வலுப்படுத்த முடிந்தது. அது மட்டுமல்ல ஒரு அடையாள திணிப்பை எதிர்ப்பதற்காய்
அரசியல் செய்யும் போது தலித்துகள் அதே அடையாளத்தை இன்னும் வலுவாக ஏற்கத்தானே செய்கிறார்கள்?
சமூகம் மக்களை ஒரு குறிப்பிட்ட
வகையினராக பிரித்து பெயரிடுவதன் வழியாகத் தான் அவர்கள் மீது அதிகாரத்தை செலுத்துகிறது.
இது தான் அதிகாரம் செயல்படும் பார்முலா. இந்த அடையாளத்தை அதனால் பாதிக்கப்பட்டவர்களே
இன்னும் அதிகமாய் வலியுறுத்தி முன்னிறுத்தும் போது அதே அதிகாரப் பொறியில் தானே போய்
மாட்டிக் கொள்கிறார்கள்? அதாவது ஒரு பிரிவினர் தாழ்ந்தவர்களாக கருதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு
ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் இயல்பாக தாம் தாழ்ந்தவர்க்ள் இல்லை என மறுக்கிறார்கள்.
ஆனால் இதை எதிர்க்கும் போது அவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட அந்த போலியான அடையாளத்தை வலுவாக
பற்றிக் கொண்டு அதையே முன்னெடுக்க வேண்டியதாகிறது. “நாங்கள் தாழ்ந்தவர்கள் இல்லை” என
சொல்லி விட்டால் பிரச்சனையே ஒன்றுமில்லை என ஆகி விடும். மாறாக “இங்கு ஒரு பிரச்சனை
இருக்கிறது. நாங்கள் உங்களால் தாழ்த்தப்படுகிறோம். அதை நாங்கள் பொருட்படுத்துகிறோம்”
என கோரும் போது அந்த தாழ்வை ஏற்றுக் கொண்டதாகி விடும்.
கிரீமி லேயர் விவாதம் இதன் அடிப்படையில்
இன்னும் சிக்கலானதாகிறது. அதாவது சாதியை பொருளாதார, சமூகவியல் பிரச்சனையாக மட்டுமே
பார்ப்பதா அல்லது அது ஒரு கலாச்சார அடையாளப் பிரச்சனையா? முதலாவது சரி என்றால் ஒரு
சமூக மேல்தட்டில் உள்ள தலித் ஒடுக்குமுறையை உணர்வதில்லையா? அவன் மீது அதிகாரம் செலுத்தப்படுவதில்லையா?
ஒரு தலித் பணக்காரன் ஆகும் போது தலித் அல்லாமல் ஆகிறானா? சாதி ஒரு கலாச்சார அடையாளம்
மட்டுமே என்றால் அது ஒரு பொய்த்தோற்றமா? போலி கட்டமைப்பா? அப்படி என்றால் அதை உதாசீனிப்பதில்
நமக்கு ஏன் இவ்வளவு சிக்கல் இருக்கிறது? ஒருவர் ஏன் தன் ஊரப்பெயர் மறைத்துக் கொள்ள
வேண்டி வருகிறது?
தாழ்வு ஒரு கட்டமைக்கப்பட்ட நிலை.
ஆனால் அதை ஏற்றுத் தான் அதற்கு எதிராய் போராட இயலும். இதில் ஒரு சிக்கல் அப்படி ஏற்றுக்
கொள்ளும் போது நாம் நம் மீது அதிகாரம் செலுத்தப்படுவதையும் மறைமுகமாய் அனுமதித்து தான்
ஆக வேண்டியதாகிறது என்பது. இது எதிர்ப்பரசியலுக்கே எதிரானதாகிறது. ஆனால் இதை தவிர்க்க
முடியாது. இது ஒரு சைக்கிளின் பெடலை மிதிப்பது போல. ஒரு காலை மிதித்து அழுத்த அடுத்த
காலை பெடலில் இருந்து எடுக்க வேண்டும். அப்போது தான் சைக்கிள் நகரும்.
இந்த சிக்கல் இஸ்லாமியர்களுக்கும்
பாபர் மசூதி இடிப்பிற்கு பின் ஏற்பட்டது. இந்து தேசியவாதிகள் இஸ்லாமியர் இந்தியர்கள்
அல்ல வேறுபட்ட இனத்தவர், அவர்களுக்கு தேசப்பற்று இல்லை, குடியேறிகள் என ஒரு செயற்கை
கட்டமைப்பை உருவாக்கி அதை அவர்கள் மேல் திணித்தனர். இஸ்லாமியரும் தம் எதிர்ப்பரசியலுக்காய்
குல்லா, பர்தா போன்ற வெளிப்படையான மத அடையாளங்களை மேற்கொண்டனர். இந்திய இஸ்லாமில் இருக்கிற
உள்ளூர் கலப்பை சுத்திகரித்து வஹாபிய இஸ்லாம் நோக்கி நகர்ந்தனர். இஸ்லாமிய அடையாள அரசியல்
கட்சிகள் தோன்றி வளர்ந்தன. இன்றும் தாம் இந்தியக் குடிமக்கள் என்று தான் அவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் அதற்காக அவர்கள் அடையாளமற்றவர்களாக தம்மை காட்டிக் கொள்ள முடியாது. தம் மீதான
அதிகாரத்தை எதிர்க்க இந்துத்துவா போன்ற மற்றொரு மத தேசியவாதமான வஹாபிசத்தை அவர்கள்
முன்னெடுக்க வேண்டியதாகிறது.
ஐ.டியில் வேலை பார்க்கும் என்
நண்பர் ஒருவர் அலுவலகத்தில் உள்ள பெண்கள் தன் பெண்ணிய அடையாளத்தை மிகைப்படுத்தி, தம்
உடல்சார்ந்த பிரச்சனைகளை பெரிதுபடுத்தி அனுகூலம் பெறுவதாய் புகார் கூறினார். ஒருமுறை
வைரமுத்து பெண்கள் உடலின் உணர்ச்சிகளால் அதிகம் கட்டமைக்கப்படவர்க்ள், ஆண்கள் அதைக்
கடந்தவர்கள் என எழுதப் போக பெண்ணியவாதிகள் அவரை கடுமையாக கண்டித்தனர். ஒரு புறம் பெண்கள்
தாம் தம் உடலால் அடையாளப்படுத்தப்படுவதை விரும்பாததையும், ஆனால் அடையாள அரசியல் பேசும்
போது மாறாக உடலாக தம்மை முன்னிறுத்துவதையும் காண்கிறோம். மாதவிலக்கு, குருதிப்பெருக்கு,
குழந்தைப்பேறு உள்ளிட்ட விசயங்கள் அவர்களை ஆண்களை விட அதிகம் உடலுடன் பிணைக்கப்பட்டவர்களாக
ஆக்குகிறது. ஆனால் இந்த உடல் எனும் வரையறை கொண்டு தான் அவர்கள் இத்தனைக் காலமாக ஒடுக்கப்பட்டு
வந்தார்கள். அவர்கள் அதனால் தமக்கான உரிமைகளை கோரும் போது தம்மை உடலைக் கடந்தவர்களாக
கட்ட நேர்கிறது. ஆனால் ஆண்கள் கட்டமைத்த பெண்நிலை எனும் உடல் பிம்பத்தை ஒட்டித்தான்
அவர்கள் தம்மை முன்னிறுத்தி போராடவும் நேர்கிறது. இந்த உள்முரண்பாட்டை அவர்கள் தவிர்க்க
முடியாது. உதாரணாய், மாதவிலக்கு மாதாமாதம் ஒரு பெண்ணுக்கு அவஸ்தைகளை, வலியை தருவது.
அதற்காய் அலுவலகத்தில் விடுப்பெடுக்க நேர்கிறது. அப்படி விடுப்பெடுப்பதனால் பெண்ணிய
அனுகூலம் எடுப்பதாய் குற்றச்சாட்டு வருகிறது. அதே போல் பெண்கள் குழந்தைப்பேறுக்காய்
சம்பளத்துடன் விடுப்பு பெற சில தனியார் நிறுவனங்களில் இன்னும் போராட நேர்கிறது. சில
தனியார் நிறுவனங்களில் சில வருடங்களில் கர்ப்பமாக மாட்டார்கள் என ஒரு மறைமுக உறுதிமொழி
வாங்கிய பின் தான் வேலைக்கே எடுக்கிறார்கள். இவ்வாறு அவர்களை உடல் ரீதியாய் அடையாளப்படுத்தி
தான் ஆண்கள் தம் அதிகாரத்தை செலுத்துகிறார்கள். இதை தவிர்ப்பதற்காய் ஒரு பெண் ஒரு அறுவை
சிகிச்சை செய்து கருப்பையை நீக்கி விட்டால் பிறகு “பெண்ணிலை” எனும் கட்டமைப்பில் இருந்து
தப்பித்து விடலாம். ஆனால் திருமணம் செய்ய விரும்பாத, குழந்தை பெறாத பெண்கள் கூட இதை
செய்வதில்லை. அவர்கள் தம் “பெண் நிலையை” வலியுறுத்திக் கொண்டே அதற்கு எதிராக போராடி
வருகிறார்கள். வேறு வழியில்லை.
சமீபமாக இமையம் ஒரு இலக்கிய கருத்தரங்கில்
கலந்து கொண்டார். அங்கு அவரை “தலித் எழுத்தாளர்” என பட்டம் தந்து அழைக்க அவர் கோபமாகி
கடுமையாக கண்டித்தார். பிறகு அவரிடம் அமைப்பாளர்கள் மன்னிப்பு கேட்டனர். “என்னை தலித்
எழுத்தாளர் எனும் போது நீங்கள் உண்மையில் என்னை ஒரு பறைய எழுத்தாளன் என அழைக்கவே (வகைப்படுத்தவே)
முயல்கிறீர்கள், அந்த வகைப்பாட்டை நான் ஏற்க மாட்டேன். அப்படி ஏற்பது என் மீதான உங்கள்
அதிகாரமாக்கலை ஏற்பதாக மாறும்” என்பது இமையத்தின் வாதம்.
இமையம் ஒரு மானுடவாதி. சு.ரா பள்ளியை
சேர்ந்தவர். அவரது “பெத்தவன்” சிறுகதை உண்மையில் திவ்யாவின் அப்பாவின் பார்வையில் இருந்து
ஒடுக்குமுறையின் சிக்கலை பார்க்கிறது. அதாவது ஒடுக்கப்பட்டவரின் நெருக்கடியில் இருந்து
ஒடுக்குமுறையின் கோரத்தை காட்டுகிறது. ஒரு சாதிய ஒடுக்குமுறையின் போது மானுட நேயம்
கொண்ட, அதேநேரம் ஒடுக்குமுறை செய்யும் சாதியத்தை நேரடியாக மீற முடியாத, அடுத்த சாதியை
ஒடுக்குபுவரின் தரப்பில் நிற்கிற ஒரு ஆள் உணரும் நெருக்கடியை சித்தரிக்கிறது. அது இளவரசனின்
தரப்பில் இருந்து கதையை கூறவில்லை. ஒரு தலித் அரசியல் களப்பணியாளர் அவ்வாறு தான் எழுதியிருப்பார்.
ஆனால் இமையம் அப்படி செய்யவில்லை. அவர் மானுட நேயத்தை பேசுவதன் வழி “சாதிய கட்டமைப்பை
கட்டமைப்புக்கு உள்ளிருந்து எதிர்க்கிற விளையாட்டில்” இருந்து தப்பிக்கிறார். இப்படி
ஒரு தரப்பு உள்ளது. அத்தரப்பை எடுக்க நீங்கள் லட்சியவாதியின் கண்ணாடியை போட்டுக் கொள்ள
வேண்டும். திவ்யாவின் அப்பாவை நல்லவராக ஏற்று, அவரிடம் சாதிய அதிகாரம் இல்லை என நம்ப
வேண்டும். மனிதர்களை அதிகாரத்துக்கு அப்பாற்பட்டவர்களாக, அன்பினால் ஆனவர்களாக பார்க்க
வேண்டும். ஆனால் இந்த தரப்பும் முக்கியமானது தான். இதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்து, நாம் இதுவரை பார்த்து
வந்த சிக்கல் ஒரு தத்துவச் சிக்கலும் தான். சாதியோ, பெண்ணுடலோ வெளியே ஏற்கனவோ இருக்கிற
ஒரு பொருள் அல்லது நிலையா அல்லது அது உள்ளார்ந்து சமூகத்தால் ஏற்படுத்தபட்ட ஒரு அமைப்பா?
அது ஒரு பொருளா அல்லது கருத்தா? பொருள்முதல்வாதமா? கருத்துமுதல்வாதமா? அது உண்மையில்
இருக்கிறதா அல்லது போலியாக உருவாக்கப்பட்டதா? ஒரு திருநங்கை ஏற்கனவே அப்படி இருக்கிறாரா
அல்லது வலதுசாரி சமூக நிறுவனங்கள் திருநங்கைகளை உருவாக்குகிறார்களா? திருநங்கைகள் உடல்ரீதியாக
மாறுபட்டவர்களாக தான் பிறக்கிறார்கள். அல்லது பிற்பாடு தம்மை அவ்வாறு மாற்றிக் கொள்கிறார்கள்.
ஆனால் இயல்பிலேயே அவர்களின் பால்நிலை மாறுபட்டது தான். உண்மையில் அதில் எந்த சிக்கலும்
இல்லை. அரசும், மருத்துவத் துறையும், ஊடகங்களும் அவர்களை பகுத்து மாறுபட்ட பாலினமாக
முன்வைக்கும் போது தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. அவர்கள் “பிறிது” ஆகிறார்கள். ஒருவரை
மாறுபட்டவராக அடையாளப்படுத்தும் இடத்தில் இருந்து தான் அவர்களை ஒடுக்குவது ஆரம்பமாகிறது.
நீங்கள் கேட்கலாம் அவர்கள் ஏற்கனவே வித்தியாசமானவர்கள் தானே என. அதை எப்படி உணர்கிறீர்கள்?
உங்களை உரைகல்லாக வைத்து உலகின் ஒவ்வொரு உயிரையும் இயற்கை நிலையையும் ஒப்பிட்டு மாறுபடுத்துவதன்
வாயிலாக அப்படி உணர்கிறீர்கள். அதாவது நீங்கள் ஒப்பிட்டு வரையறுக்கும் போது தான் ஒருவர்
வித்தியாசமானவர் ஆகிறார். அதற்கு முன் அவர் மற்றொரு ஆளாகவே இருக்கிறார். உங்களது இந்த
அளந்து வெட்டி வெள்ளைத்தாளில் ஒட்டி பெயரெழுதும் செயல் ஒரு மறைமுகமான சிலுவையில் அறைதல்.
இப்படி நீங்கள் தலித்துகளை, ஆண்களிடம் இருந்து உடலால் வேறுபடும் பெண்களை, ஆண், பெண்
இருசாராரிடம் இருந்தும் வேறுபடும் திருநங்கைகளை உருவாக்குகிறீர்கள். கறுப்பானவர்களை,
அழகற்றவர்களை உருவாக்குகிறீர்கள்.
என் நண்பர் தன் மூளை வளர்ச்சி
குறைவான குழந்தையை வழக்கமான பள்ளிக்கூடங்களில் சேர்க்க முயன்றார். பல பள்ளிகளில் சேர்த்துக்
கொள்ள மறுத்தார்கள். அத்தகைய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகளில் சேர்க்க சொன்னார்கள்.
தங்களால் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ள முடியாது என்றார்கள். ஆனால் இத்தகைய
குழந்தைகள் வழக்கமான பள்ளிகளில் படிப்பது தான் நல்லது. இவர்களுக்கு ஏதாவது விபத்து
நேர்ந்தால் தாம் பொறுப்பாகக் கூடும் என ஆசிரியர்களும் நிர்வாகிகளும் அஞ்சுவதும் ஒரு
மிகையான நிலைப்பாடு தான். சின்ன வயதில் ஒன்றாம் வகுப்பு வரை நான் ஒரு கான்வெண்டில்
படித்தேன். பிறகு பள்ளி தலைமை ஆசிரியர் என் பெற்றோரை அழைத்து என்னை வேறு பள்ளிக்கு
மாற்ற சொன்னார். ஊனமுற்ற நான் அங்கு படிப்பது ஆசிரியர்களுக்கு மிகுந்த நெருக்கடி அளிப்பதாகவும்,
எனக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என அவர்கள் அஞ்சுவதாகவும் சொன்னார். இத்தனைக்கும் மூன்று
வருடங்களில் நான் ஒருமுறை கூட கீழே விழவோ காயமுறவோ இல்லை. ஆனாலும் என் இருப்பு அவர்கள்
வகுப்பில் விரும்பும் ஒரு பொதுத்தன்மையை மறுத்து உறுத்தியது. அடுத்து நான் சேர்ந்த
பள்ளியில் எனக்கு எந்த சிறப்பு கவனமும் தரவில்லை. கயிறறுந்த கன்றுக்குட்டி போல் ஓடிக்
கொண்டிருப்பேன். இப்படி ஓடுவதால் என் காலில் உள்ள காலிப்பர் பல முறை ஒடிந்திருக்கும்.
ஆனால் அதை அவர்கள் ஒரு பெரிய விசயமாகவே பொருட்படுத்தவில்லை. முதல் பள்ளியில் எனக்கு
சிறப்பு இடம் அளித்து அவர்கள் மறைமுகமான ஒரு அதிகாரத்தை என் மீது செலுத்தினார். ஆனால்
இரண்டாவது பள்ளியில் என்னை முழுமையாக கவனியாமல் விட்டதால் அந்த அதிகாரத்தின் ஒடுக்குமுறை
இன்றி மிக சுதந்திரமாக இருந்தேன். முதல் பள்ளியில் ஊனமுற்றவனாகவும் இரண்டாவது பள்ளியில்
ஊனமற்றவனாகவும் இருந்தேன். ஆனால் இரண்டு பள்ளிகளில் என் உடல் ஒன்றாகத் தான் இருந்தது.
இப்போது நீங்கள் கேட்கலாம்: “அப்படி
என்றால் ஊனம் ஒரு மாற்ற முடியாத உடல்சார்ந்த எதார்த்தம் தானே. பிறர் என்னை நடத்தும்
விதம் அதை எப்படி உண்டு பண்ணும்?”. ஊனம் ஒரு பௌதீக எதார்த்தம் தான். என்னுடைய ஒரு காலோ
கையோ பலவீனமாக இருக்கலாம். ஆனால் என் பலவீனமான கை, காலும் உங்களது பலமான கை காலும்
ஒன்று தான். உலகத்தை மாசற்ற கச்சிதமான ஒன்றாக பார்க்கிற தவறை நாம் செய்கிறோம். இரண்டு
இலைகளை எடுத்துப் பாருங்கள். ஒன்று போலவே இருக்கும். ஆனால் நுணுகி பார்த்தால் அவற்றிடையே
ஆயிரம் வேறுபாடு இருக்கும். உலகம் முழுக்க உயிர்களும் மனிதர்களும் அப்படித் தான். பொருட்களை
நாம் சீரானதாகவும் சீரற்றதாகவும் பிரித்து பார்ப்பது நமது பார்வை பிழையினால் தான்.
உதாரணமாக நீண்ட காலமாக உடல்பருமன் ஒரு நோய்மை என அறிவியல் கூறி வந்தது. மாரடைப்பு,
ரத்த கொதிப்பு ஆகியவை ஏற்பட்டு பருமனானவர்கள் சீக்கிரம் இறந்து விடுவார்கள். அதனால்
கொழுப்பு குறைவான, நார்ச்சத்து அதிகமுள்ள உணவை உண்டு தினமும் உடற்பயிற்சி செய்கிறவர்கள்
தாம் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள் என நம்பினோம். விளைவாக குண்டானவர்கள் சதா குற்றவுணர்வுடன்
திரிந்தார்கள். நாமும் குண்டானவர்களை கிண்டலாக இரக்கமாக பார்த்தோம். மாறுபட்ட உடல்
ஒரு ஊனமானது. ஆனால் சமீப கால அறிவியல் ஆய்வுகள் இதை மறுக்கிறது. உடல் பருமனுக்கும்
ஆயுளுக்கும் தொடர்பில்லை என்கிறது. ஒல்லியாக இருந்து, தினமும் உடல்பயிற்சி செய்கிறவர்களுக்கும்
பருமனாக இருப்பவர்களுக்கும் மாரடைப்பு வரும் வாய்ப்பு ஒன்று தான் என்கிறது. எதார்த்ததில்
கூட ஒல்லியாக இருப்பவர்கள் பல வியாதிகளுடன் இருப்பதையும் நாற்பது வயதில் பட்டென போய்
விடுவதையும் பார்க்கிறீர்கள். ஆனாலும் உடலை ஒல்லியாக்குவதறாக நம்மை வற்புறுத்துவதை
மருத்துவர்களும் மருந்து நிறுவனங்களின் விளம்பரதாரர்களும் விடுவதாக இல்லை. அவர்கள்
உடல் பருமனாயிருப்பதன் மருத்துவ பிரச்சனைகளை பட்டியல் இட்டு இதை ஒரு நவீன பாவமாக விட்டார்கள்.
இதன் பின் ஒரு ஒழுக்கமனப்பான்மையும், அந்த ஒழுக்கத்தின் பின் ஒரு அதிகார வேட்கையும்
உள்ளது. ஆனால் மனித உடல் என்பது அது குறைபாடு கொண்டதானாலும் நிறைவாக தோன்றினாலும் ஒன்று
தான். மனித உடல் ஒரு இசைக்கருவி போல. அதை ஸ்ருதி கூட்டி வாசிக்க கற்பது தான் பிரதானம்.
உடைந்ததோ உடையாததோ எல்லாருடைய இசைக்கருவியிலும் ஒரே இசை வருகிறது. எல்லாரும் ஒரே போல்,
ஒரே தரத்துடன் தான் வாழ்கிறோம்.
ஒருவரைப் பார்த்து “உனக்கு ஒரு
பிரச்சனை இருக்கிறது” என சொல்வதில் நமக்கு ஒரு தனி மனக்கிளர்ச்சி உள்ளது. அதை நாம்
இங்கு தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர், திருநங்கைகள், ஊனமுற்றோர் போன்றோரை நோக்கி
சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் பிரச்சனையாக்கப்படும் போது தான் ஒரு பிரச்சனையே
அங்கு தோன்றுகிறது.
நன்றி: உயிர்மை, பெப்ரவரி 2015
நன்றி: உயிர்மை, பெப்ரவரி 2015