நண்பர் வா.மணிகண்டன் நானும் லஷ்மி சரவணகுமாரும் “வெண்முரசை” தட்டையான படைப்பு
என கூறியது கேட்டு எங்கள் மீது பொங்கி இருக்கிறார். அவரது சில குற்றச்சாட்டுகளுக்கு
எனது பதில்கள் இவை
//தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்கள் சோம்பேறிகள். அதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள்.
அதற்கு ஒரு சால்ஜாப்பும் வைத்திருப்பார்கள். ‘உள்ளுக்குள்ளிருந்து பொங்கி வரும் போதுதான்
எழுதுவேன்’ என்பார்கள். ஆனால்
அப்படியானவர்கள் ஒரு கட்டத்தில் பதற்றமடைகிறார்கள். இந்த உலகம் தன்னை மறந்துவிடுமோ
என்று நடுங்குகிறார்கள். அவர்களுக்கு ஜெயமோகன் அலர்ஜியாகிவிடுகிறார்.//
தமிழில் அதிகமாக எழுதி வரும் இரு படைப்பாளிகள் நானும் லஷ்மி சரவணகுமாரும். எங்களுக்கு
எங்கள் இடம் பற்றின பதற்றம் இல்லை. அதனால் இந்த வாதம் செல்லுபடியாகாது.
//வெண்முரசு மிக முக்கியமான முயற்சி. அது வெற்றியடைகிறதா அல்லது தோல்வியடைகிறதா
என்பது இரண்டாம்பட்சம். ஆனால் இப்படியான ஒரு முயற்சியை ஜெயமோகனைத்தவிர இன்றைய எழுத்தாளர்கள்
வேறு யாராலும் எடுத்திருக்க முடியும் என்று சொல்ல முடியாது. அந்தத் தைரியம் ஜெமோவிடம்தான்
இருக்கிறது//
பதிப்பு தொழில் துவங்கினதில் இருந்து உலகம் முழுக்க எண்ணற்ற தொடர்கள் எழுதப்பட்டு
வந்துள்ளன. பாலகுமாரனை விட அதிகமாகவா ஜெயமோகன் நாவல்கள் எழுதி குவித்து விட்டார்? இல்லை.
அதற்கு தைரியமோ மன உறுதியோ தேவையில்லை. ஒரு வேலையின் அவசியம் தான் கவனத்திற்குரியது.
மகாபாரதத்தை திரும்ப எழுதுவது ஒரு விதத்தில் வசதி. திரும்ப திரும்ப அக்கதையை கேட்கும்
ஆவல் நாம் அனைவருக்கும் உண்டு. நாளை எஸ்.ரா மகாபாரதத்தை எழுதினாலும் படிப்பார்கள்.
ஆனால் கேள்வி திரும்ப எழுதுவதன் மூலம் நாம் என்ன புதிதாய் சொல்ல வருகிறோம் என்பது.
நான் படித்த வரையில் “வெண்முரசு” ஒரு முற்றிலும் புதிதான பார்வையுடன் மறுகதையாக்கம் செய்யப்படவில்லை. ஜெ.மோ
உருவாக்கும் கண்ணன், அர்ஜுனன், பீஷ்மர் யாருமே புது உளவியல் பார்வையோ கண்ணோட்டமோ கொண்ட
நவீன வடிவங்கள் அல்ல. ஏற்கனவே நம் மனதில் ஆழப்பதிந்த உருவங்களை மீள கொண்டு வருகிறார்.
சொல்லப் போனால் தூரதர்ஷன் மகாபாரத தொடரில் பார்த்தது போன்றே இருக்கிறார்கள். இதை எழுத
ஒரு எழுத்தாளன் தேவையில்லை. தொன்மங்களை மீளுருவாக்கம் செய்யும் போது அதன் வழி சமகால
வாழ்க்கையை மறுகட்டமைப்பு செய்து தொகுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அந்நோக்கம் ஜெயமோகனுக்கு
இருப்பதாக தெரியவில்லை. “வெண்முரசின்” அடிப்படை பிழை அது தான். ஒரு படைப்பின் வழி ஒரு கண்டுபிடிப்பு
நிகழ்த்த வேண்டும். ஒரு ஆழமான தத்துவ, உளவியல் விவாதம், கண்டுபிடிப்பு நடக்க வேண்டும்.
அதற்காகத் தான் நாவல் எழுதப்படுகிறது. தஸ்தாவஸ்கி அளவுக்கு ஒரிஜினலாக இல்லை என்றாலும்
ஜெயமோகன் சுயமான எண்ணங்களும் கண்டுபிடிப்புகளும் கொண்டவர். அதுவே அவரது முக்கியத்துவம்.
ஆனால் கடந்த பத்து வருடங்களில் அவர் எழுதுவதில் எங்கும் அவர் சுயம், படைப்பூக்கம் இல்லை.
இது இயல்பு தான்.
ஆனாலும் அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆழ்மன நோக்கம் இன்றி வெறும்
இருப்பை தக்க வைக்க அவர் மகாபாரதத்தை பத்து பதினைந்து வருடங்கள் எழுதிக் கொண்டே போகலாம்.
இது வெறும் தந்திரம் தான். ஆனால் ஜெயமோகன் மிகவும் திறமையானவர் மற்றும் சிறந்த வாசகர்
என்பதால், அவருக்கு நுணுக்கமான மனமும் அபூர்வமான கற்பனையும், சொல்வளமும் உண்டு என்பதால்
அவரால் மன ஊக்கம் இன்றியே சுவாரஸ்யமாக எழுதிச் செல்ல முடியும். ஆரம்பநிலை வாசகர்களுக்கு
ஆர்வமூட்ட முடியும். ஆனால் தேர்ந்த வாசகனுக்குன் இன்றைய ஜெயமோகன் அலுப்பூட்டுவார்.
அதனால் தான் நான் அவரை மாவு மிஷின் என்றேன். இதை வெறுப்பில் அல்ல, மிகுந்த ஆவலாதியில்
சொல்கிறேன்.
//இவ்வளவு அவசரமான உலகத்தில் ஒரு எழுத்தாளனை ஏன் தொடர்ந்து வாசிக்க வேண்டும்?
அதுவும் அதிகமான உழைப்பையும், சிதறாத கவனத்தையும் கோரக் கூடிய வெண்முரசு போன்ற தொடரை
ஏன் வாசிக்கிறார்கள்? அதுதான் ஜெயமோகனின் வெற்றி. அடுத்த தலைமுறையில் தீவிரமாக வாசிக்கக்
கூடிய ஒரு பெரிய கூட்டத்தை ஜெயமோகன் உருவாக்கிவருகிறார். //
எழுத்தாளன் வாசகனை உருவாக்குவதில்லை மணி. இது தவறான பார்வை. அப்படி உருவாக்கும்
பட்சத்தில் அந்த எழுத்தாளனுக்கு பிறகு அந்த வாசகர்கள் என்னாகிறார்கள்? ந.பாவிம், மு.வவின்
வாசகர்கள் எங்கே? பாலகுமாரனின், ராஜேஷ்குமாரின் வாசகர்கள் எங்கே? ஒரு படைப்பின் ஒரு
புள்ளியில் இரண்டு மனிதர்கள் சந்திக்கிறார்கள். ஒருவன் எழுத்தாளன், மற்றொருவன் வாசகன்.
இதில் ஒருவர் மேல், இன்னொருவர் கீழ் என்றில்லை. ஜெயமோகனோ சாருவோ இத்தனை வாசகர்களை உருவாக்கியதாக
நான் நம்பவில்லை. மொத்த உலகத்தையும் ஒரு குடும்பமாக, பெற்றோர் பிள்ளைகளை பெறுவது போல்
எழுத்தாளர் வாசகரை உருவாக்குவதாக நினைக்கிற பிழையான பார்வை இது. வாசிப்பில் எழுத்தாளனும்
வாசகனும் ஒரு கட்டத்தில் மறைந்து விடுவார்கள். ஜெயமோகனையும் சாருவையும், கல்கியையும்
அகிலனையும், சுஜாதாவையும், பாலகுமாரனையும் இத்தனை ஆயிரம் வாசகர்கள் உருவாக்கினார்கள்
என்றும் கூட சொல்லலாம். பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை படைப்பாளிகள் தம் பெயரை
படைப்புக்கு முன் போட்டுக் கொள்கிற பழக்கம் இல்லை தெரியுமா? யார் படைப்பையும் யார்
வேண்டுமானாலும் எடுத்தாள்வார்கள். அதனால் தான் ஒரு வள்ளுவரா, ஒரு ஔவையா அல்லது பலரா
எனும் குழப்பம் ஏற்படுகிறது. நாளையில் இருந்து நாமும் நம் படைப்பின் முன் நம் பெயரை
போடவில்லை என்றால் என்னாகும்? அந்த படைப்பு அனைவருக்கும் சொந்தமாகும். எழுத்தாளன் என்பது
செயற்கையான ஒரு வணிக ஏற்பாடு அன்றி வேறில்லை. உங்கள் இணையதளத்தை தெளிவாக ஒரு பிராண்டாக
மாற்றி வரும் நீங்கள் இதை நன்றாகவே அறிந்திருப்பீர்கள். ரிலையன்ஸ், ஆப்பிள் போன்ற பிராண்டுகளுக்கும்
வா.மணிகண்டன், ஜெயமோகன் போன்ற எழுத்தாள பெயர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை.
//வெண்முரசை தினந்தோறும் வாசிக்கக் கூடிய ஏகப்பட்ட வாசகர்களை புத்தகக் கண்காட்சியில்
சந்திக்க முடிந்தது//
நான் இதை பொருட்படுத்த மாட்டேன். தல்ஸ்தாய், தஸ்தாவஸ்கி, நீட்சே, பூக்கோ, ஷிசெக்
போன்றோரை விரிவாக விவாதிக்கிற, நுணுக்கமாய் அறிந்த ஒருவர் தான் வெண்முரசை மிகவும் விரும்பி
வாசிப்பதாய் சொன்னால் மட்டுமே கவனித்து ஏன் என அறிய முயல்வேன். நீங்கள் குறிப்பிடுகிறவர்கள்
தீவிரமான வாசகர்கள் அல்ல. அவர்கள் பொழுதுபோக்கு வாசகர்கள். அத்தகைய வாசகர்கள் எனக்கும்
உங்களுக்கும் லஷ்மி சரவணகுமாருக்கும் உண்டு. அவர்களை என் ஆழ்மனதில் பொருட்படுத்த மாட்டேன்.
கொடுமை என்னவென்றால் உங்கள் மேலாளரிடம் விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் போன்ற
படைப்புகளை கொடுத்துப் பாருங்கள். இதே வெறியோடு படிக்க மாட்டார்கள். இன்று ஜெயமோகன்
தன்னை இந்த தட்டையான பொழுதுபோக்கு வாசகர்களை நோக்கி தகவமைத்துக் கொண்டு விட்டாரோ எனும்
ஐயம் எனக்கு உள்ளது.
//அபிலாஷ், லட்சுமி சரவணக்குமார் இரண்டு பேர் மீதுமே எனக்கு மரியாதையுண்டு.
இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள். அதற்காக ஜெயமோகனின் எழுத்துக்களை
பெருமொத்தமாகக் குப்பை என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.//
நாங்கள் இருவருமே “பெருமொத்தமாகக் குப்பை” என கூறவில்லை. இருவருக்கும் ஜெயமோகன் மீது மிகுந்த
மரியாதை உள்ளது. ஆனால் கடந்த பத்து வருடங்களாக அவர் உயிரற்ற எழுத்துக்களை சிருஷ்டித்துக்
கொண்டிருக்கிறார் என்று மட்டுமே நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன்.
இதை ஒரு எழுத்தாளனான நாங்கள் சொன்னவுடன் எங்களுக்கு ஜெயமோகன் மீது பொறாமை, எரிச்சல்,
கோபம் என பார்க்க கூடாது. தமிழில் இப்போதைக்கு விமர்சகர்கள் என யாரும் இல்லாததால் நாங்களே
விமர்சிக்க வேண்டியதாகிறது. ஒன்று எதைப் பற்றியும் கருத்துசொல்லாமல் பல மூத்த எழுத்தாளர்கள்
வேடிக்கை பார்க்கிறார்கள். ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். தனிப்பட்ட
முறையில் என் கருத்துகளோடு ஒத்துப் போகிற மூத்த எழுத்தாளர்கள் சிலர் ஜெயமோகன் பற்றி
பொதுப்படையில் எழுத அஞ்சுகிறார்கள். என்ன செய்ய? ஊரோடு ஒத்து வாழ்!
// எந்தச் சலனமுமின்றி வெறும் வாசிப்பை மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கக் கூடியவர்களையும்
சந்திக்க முடிகிறது. இத்தகையவர்கள் ஜெயமோகனை வாசிக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்//
சரி மணி இந்த வாசகர்களை வெளியே வரச் சொல்லுங்கள். நான் அவர்களுடன் விவாதித்து
பார்க்கிறேன். இப்போதைக்கு ஜெயமோகனுக்கு ஆதரவான வாசகர்களாக வெளியே தெரியும் விஷ்ணுபுரம்
வட்ட ஆட்கள் மற்றும் ஜடாயு போன்றவர்கள் எழுதுவதை படித்ததில் அவர்களுக்கு தீவிரமான வாசிப்போ,
நுண்ணுணர்வோ, பயிற்சியோ இல்லை என்பது தெளிவாகிறது. ஒரு நல்ல வாசகன் என்றதும் நான் வைக்கிற
அளவுகோல் ரவிக்குமார், ராஜ்கௌதமன், தமிழவன் போன்றவர்களின் நிலையில் இருப்பவர்கள். அந்தளவுக்கு
நுண்ணறிவும் பயிற்சியும் கொண்டவர்களை. ஜெயமோகன் வாசகராக நீங்கள் கோருபவர்கள் எந்த நிலையில்
இருக்கிறார்கள்? வாசகனின் தரம் எதுவோ அதுவே எழுத்தாளனின் தரமும்! இன்றைய ஜெயமோகனை கொண்டாடுபவர்கள்
இன்றைய ஜெயமோகனை தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உலக இலக்கியம், தத்துவம்,
கோட்பாடுகள் பற்றி விமர்சனம் எழுதி தம்மை சிறந்த விமர்சகர்களாக நிறுவட்டும். பிறகு
அவர்கள் ஜெயமோகனின் தரத்தை நிறுவட்டும். அதுவரை நான் அவர்களை பொருட்படுத்த மாட்டேன்.
ஜெயமோகனின் வாசகர்களை வைத்து அவரை நிறுவ நீங்கள் துணிந்ததால் தான் நான் இத்தனையும்
சொல்ல நேர்கிறது. மற்றபடி எனக்கு இந்த நிறுவல்களில் ஆர்வமில்லை.
// ஜெயமோகனை நிராகரிப்பதும் அவர் எழுதிக் கொண்டிருப்பதெல்லாம் குப்பை என்றும்
எந்தத் தரவுமில்லாமல் முன் வைப்பதும் அபத்தம். அப்படியொரு வாதத்தை முன் வைக்க வேண்டுமானால்
ஒரு விமர்சனக் கட்டுரை எழுத வேண்டும். அந்தப் படைப்பில் என்ன பிரச்சினை இருக்கிறதென்று
விரிவாக எழுத வேண்டும். பிறகு வாசகர்கள் முடிவு செய்யட்டும். //
இதை நிச்சயம் ஏற்றுக் கொள்கிறேன். நான் முடிந்தளவு எனக்கு பிடித்த படைப்புகள்
பற்றி எழுதி வந்திருக்கிறேன். என்னைக் கவராத படைப்புகளைப் பற்றி எழுதி நேரம் வீணடிக்கக்
கூடாது என்பது என் கொள்கை. ஆனாலும் உங்களுக்காக ஜெயமோகனின் சமீபத்திய நாவலொன்றை எடுத்து
ஒரு விரிவான விமர்சனம் எழுதி அது ஏன் தட்டையாக உள்ளது என நிறுவுகிறேன். அடுத்த வாரமே
செய்கிறேன். ஆனால் அது ஜெயமோகன் மீதான வெறுப்பின் வெளிப்பாடு என அவசரகோலத்தில் சிலர்
முடிவு செய்யக் கூடும் என்பதால் ஜெயமோகனின் பழைய சிறந்த நாவல் ஒன்று பற்றியும் விமர்சனம்
எழுதி விடுகிறேன். நீங்களே உருண்டு பிரண்டு முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்.