தன் முகநூல் பக்கத்தில் சர்வோத்தமன்
சினிமாவின் எதிர்காலம் பற்றி ஒரு முக்கியமான பதிவு எழுதி இருக்கிறார். சினிமா மீது
இன்று மக்களுக்கு பழைய வசீகரம், மயக்கம் இல்லை என்கிறார். திரையரங்கில் பார்வையாளர்கள்
கவனம் செல்போனில் முகநூல் அப்டேட்களை பார்ப்பதில் தான் உள்ளது, திரையில் இல்லை. நாம்
இன்று பேசவும் எழுதவும் தான் விரும்புகிறோம், உட்கார்ந்து இன்னொருவர் சொல்வதை கேட்க
ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால் தான் பல படங்கள் தோல்வியை தழுவுகின்றன. மக்களின்
ஆர்வத்தை ஒரு படம் நோக்கி குவிக்க ரஜினி, சங்கர் போன்றவர்களோ பாடாய் படுகிறார்கள்.
எதிர்காலத்தில் சினிமாவின் நிலை இன்னும் பலவீனமாகும் என்கிறார்.
நாம் இதைப் பற்றி விரிவாக பேச
வேண்டும். சினிமா தன் வசீகரத்தை இழக்குமா? அவ்விடத்தை சமூக வலைதளங்கள் எடுத்துக் கொள்ளுமா?
ஆனால் இப்போது கூட நாம் சமூக வலைதளங்களிலும் டிவியிலும் சினிமா பற்றித் தானே அதிகம்
பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சினிமா தன் மதிப்பை இழந்து வருவதும் உண்மை. அதே கோணத்தில்
பார்த்தால் இன்று காதல், உறவுகள், செக்ஸ் என பல விசயங்கள் பழைய கிளர்ச்சியை இழந்து
விட்டன. ஒருவேளை இந்த ஆர்வக் குறைவு ஒட்டுமொத்தமாய் நம் வாழ்வை பாதிக்கிறதா? மேகமூட்டம்
போல் நம் வானை மூடிக் கொண்டதா? ஒருவேளை சினிமா மற்றொரு சாதாரண பொழுதுபோக்காக நிலைக்கலாம்.
என்னுடைய ஆசை நிறைய குட்டி சினிமாக்கள் வர வேண்டும் என்பது. அரைமணிநேரம், ஒருமணிநேர படங்களாக இருக்கலாம். குறைந்த செலவில் நிறைய பேர் படம் எடுத்து தமக்கான பார்வையாளர் கூட்டத்திற்கு காட்டும் வாய்ப்பு, அதற்கான திரையரங்குகள் வர வேண்டும். அது வணிக ரீதியாக செயல்படுத்தப்பட வேண்டும். கார்த்திக் சுப்புராஜ் போன்றோர் முதல் படி எடுத்து வைத்திருக்கிறார்கள். வணிக இயக்குநர்கள் பலர் குறைவான பொருட்செலவில் குறைவான நேரம் கொண்ட படங்களை எடுக்க முன்வர வேண்டும். அது வெற்றி பெற்றால் சிறப்பான மாற்றங்கள் வரும். எழுத்தில் இது நடந்து வருகிறது. ஆனால் இன்னொரு பக்கங்கள் பெரும் பொருட்செலவிலான பெரிய படங்களும் வேண்டும். பெரிய நாவல்கள் போலே இவையும் இருந்து கொண்டிருக்கும்.

சமூக வலைதளங்களின் சில தன்மைகளை
சினிமாவும் வசீகரித்து பார்க்கலாம். ரியாலிட்டி ஷோ தன்மை கொண்ட சினிமாக்களை முயன்று
பார்க்கலாம். மக்களிடம் நேரடியாக பேசும், அவர்களும் பேச வாய்ப்பளிக்கும் படங்களை செய்யலாம்.
வெளியான பின் தொடர்ந்து மக்களின் பங்களிப்புக்கு ஏற்றபடி மாறி வரும் சினிமாவை முயலலாம்.
இன்று பார்க்கிற சினிமா நாளை முற்றிலும் புது அர்த்தத்துடன் வசனங்களுடன் காட்சி அமைப்புகளுடன்
முடிவுடன் இருக்கும்படி செய்து பார்க்கலாம். ஒவ்வொரு நிமிடமும் புதிதாய் ஒன்று நடப்பதாய்
சினிமாவை மாற்றலாம். பேஸ்புக் டைம்லைன் போன்றே செயல்படும் ஒரு சினிமாவை உருவாக்கி பார்க்கலாம்.
எவ்வளவோ செய்யலாம்!