நேற்று ஒரு நண்பரின் திருமண வரவேற்புக்கு
போயிருந்தேன். அங்கு முகநூலில் என் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் ஒரு நண்பர் ஒரு கேள்வி
கேட்டார்: “நீங்கள் ஜெயமோகன் பற்றி எழுதியிருந்தது படித்தேன். அவர் நிஜமாகவே அப்படிப்பட்டவரா?”.
அக்கேள்வி உண்மையில் என்னை வருத்தப்பட வைத்தது. ஒரு சின்ன சங்கடத்துடன் “இல்லை அது
ஜெயமோகனின் ஒரு பக்கம் மட்டுமே” என்றேன். பிறகு நான் எனக்குள் இதுபற்றி உரையாடிக் கொண்டிருந்தேன்.
ஜெயமோகனின் அந்த இன்னொரு பக்கம் என்ன?
ஜெயமோகன் மனிதர்களை தன் தேவைக்கு
ஏற்ப பயன்படுத்தக் கூடியவர், அதைத் தாண்டி அவர்களுக்கு மதிப்பளிக்காதவர் என நான் எழுதியிருக்கிறேன்.
அது உண்மை தான். ஆனால் அது மட்டும் உண்மை அல்ல. அவர் தனக்கு எந்த பயனுமற்ற மனிதர்களிடம்
நிறைய நேரத்தை செலவிட்டுள்ளார். 16 வருடங்களுக்கு முன்பு, நான் படித்த ஸ்காட் கல்லூரியில்
பேசுவதற்கு அவரை அழைக்க மாணவர் அமைப்பு நிர்வாகிகளுடன் அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.
வீட்டில் யாரும் இல்லை. அதனால் ஒரு குறிப்பு எழுதி வாசலில் ஒட்டி விட்டு வந்தோம். அதன்
பின் நினைவுபடுத்தவும் இல்லை. ஆனால் நிகழ்ச்சி அன்று ஜெ.மோ சரியாக வந்து மாணவர்களுடன்
உரையாடினார். வந்து போவதற்கான பயணச் செலவு பற்றிக் கூட அவர் கவலைப்படவில்லை. அவரது
உரையாடும் ஆர்வம், மொழி, பண்பாடு மீதான காதல் தான் இந்த எளிமைக்கு காரணம். அவர் மிகக்கடுமையாய்
எதிர்த்த இடதுசாரிகளின் கலை இலக்கிய பெருமன்றத்தின் ஒரு சின்ன கூட்டத்தில் கலந்து கொண்டு
ஒரு மணிநேரம் இஸ்லாம் பற்றி அவர் பேசினது நினைவுள்ளது. அக்கூட்டத்தில் அவரது ஒரு நண்பர்
கூட இல்லை. தன் எதிரிகள் முகாமுக்கு எந்த சுணக்கமும் இன்றி கலந்து கொண்டு பேசுவார்.
இன்றும் அவர் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ள சன்மானம் பெறுவதில்லை. இந்த மாதிரி பண்புகளை
வேறெந்த எழுத்தாளனிடம் நான் பார்த்ததில்லை.
அவர் தன் வாசகர்களை அடிமைகளை போல் பயன்படுத்துகிறார்
என எழுதினேன். அதை திருப்பியும் சொல்லலாம். அவரது வாசகர்கள் சிலர் அடிமைகளைப் போல்
நடந்து கொள்கிறார்கள். இதில் எது சரியான வாக்கியம் என என்னால் உறுதியாக சொல்ல முடியாது.
ஆனால் அதேவேளை அவர் சமமாக சுதந்திரத்துடனும் வாசகர்களை நடத்துவதுண்டு. உதாரணமாய் நான்
அவரை முதன்முதலில் சந்தித்து பேசும் போது எனக்கு 16 வயதிருக்கும். என் வாழ்வில் நான்
சகஜமாக பெயர் சொல்லி அழைத்து சமமாய் உரையாடிய ஒரே மூத்த மனிதர் அவர் தான். இலக்கியத்துக்குள்
எல்லாரும் சமம் எனும் ஒரு சிறுபத்திரிகை மரபை அவர் பின்பற்றினார். நான் சொல்லுகிற எவ்வளவு
அசட்டுத்தனமான விசயங்களையும் கேட்டு பொறுமையாக தன் விளக்கத்தை அளிப்பார். அவருக்கு
பிடிக்காத நீட்சேயின் மேற்கோள்களை கூறி அதற்கு விளக்கங்கள் கேட்பேன். எரிச்சலை கட்டுப்படுத்திக்
கொண்டு கூறுவார். எந்த கதை படித்தாலும் அவரிடம் விவாதித்து விடுவேன். அவர் முடிந்தவரை
தன் பார்வையை சொல்லாமல் தவிர்ப்பார். நானாகவே படித்து கதையின் திறப்பை அடைய வேண்டும்
என நினைப்பார். ஆனால் நான் அவரை வற்புறுத்தி அவர் புரிதலை கூற வைப்பேன். அவரிடம் நான்
கூறிய கருத்துகளை வேறு ஏதாவது இளைஞன் இப்போது என்னிடம் கூறினால் என் நேரத்தை அவனிடம்
பேசுவதற்காக வீணாக்க மாட்டேன். ஆனால் ஜெயமோகன் அப்படி அல்ல. ஒருமுறை அவரிடம் நான் “குற்றமும்
தண்டனையும்” எனக்கு பிடிக்கவில்லை என்றேன். அதில் ஒன்றுமே இல்லை என்றேன். அவர் பொறுமையாய்
அந்நாவலின் முக்கியமான அம்சங்களை எனக்கு விளக்கினார். பிறகு அந்நாவலை நான்கைந்து முறை
படித்து விட்டேன். அப்போதெல்லாம் நான் அவரிடம் அந்நாவலைப் பற்றி அசட்டுத்தனமாய் கூறிய
அபிப்ராயங்கள் என் முன் வந்து நிற்கும். எவ்வளவு முட்டாள்தனமாய் யோசித்திருக்கிறோம்
எனத் தோன்றும். ஆனால் அந்த முட்டாள்தனங்களை ஏற்கிற கனிவு அன்று ஜெயமோகனிடம் இருந்தது.
ஒருநாள் என் தொல்லை பொறுக்காமல் சொன்னார் “உங்களுக்கு சுந்தர ராமசாமி தான் சரி. அவர்
பொறுமையாய் பேசி மெல்ல மெல்ல உங்களை மேலெடுக்கும் பக்குவம் கொண்டவர்”. அதன் பொருள்
என்னை விட்டு விடு என்பது. ஆனாலும் இதைச் சொல்லி விட்டு இரண்டு மணிநேரங்கள் என்னிடம்
இலக்கியம் பேசவும் செய்தார். நான் ஊரில் இருந்த போது நான்கு வருடங்களாவது இது போல்
தினமும் அவரை சந்தித்து 2 மணிநேரங்களாவது பேசுவேன். அவருடன் பேசுவதற்காக தினமும் கல்லூரியில்
என் மதிய வகுப்புகளை கட் அடித்து விட்டு தக்கலை தொலைபேசி அலுவலகத்தில் முதல் மாடியில்
உள்ள அவரது அறைக்கு போய் விடுவேன். மொத்தமாய் கணக்கிட்டால் எத்தனை எத்தனை ஆயிரம் மணிநேரங்கள்
அந்த நான்கு வருடங்களில் எனக்காய் செலவிட்டிருப்பார். அதனால் அவர் எதையும் திரும்ப
பெறவில்லை.
இதை ஒட்டி வேறு சில நிகழ்வுகள்
நினைவுக்கு வருகின்றன. ஒரு மதியவேளையில் அவரது அலுவலகத்துக்கு போனேன். அவர் ஏதோ வேலையாக
இருந்தார். அவ்வப்போது என்னிடம் பேசினார். நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
மணி நாலரை ஆனது. மழை தூறல் போடத் தொடங்கியது. நாங்கள் அலுவலக வரவேற்பறைக்கு சென்று
காத்திருந்தோம். மழை வலுத்தது. ஜெயமோகன் பேச ஆரம்பித்தார். அந்த மழை எங்கள் இடையே இருந்த
சம்பிரதாயமான இறுக்கங்களை கரைத்தது. மழைத்திரைகள் ஒரு புது உலகை அங்கே சிருஷ்டித்தன.
அவர் ஷேக்ஸ்பியரின் “ஒத்தெல்லோ” மற்றும் இனக்குழுக்களின் சடங்குகள் எப்படி இன்றைய நவீன
பண்பாடாக வளர்ந்தன என்கிற பல விசயங்கள் பற்றி ஆழமாக மிகுந்த லயிப்புடன் பேசினார். அது
போன்ற ஒரு இலக்கிய உரையாடலில் பிறகு நான் பங்கேற்றதில்லை.
மற்றொரு நாள் நான் சென்னையில் இருந்து ஊருக்கு போயிருந்தேன்.
அப்போது கிறித்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். மாமல்லபுரம் கோயிலில் பூமாதேவியை
வராக அவதாரம் மடியில் வைத்திருக்கும் சிற்பம் பார்த்து மிகவும் கவரப்பட்டிருந்தேன்.
அதைப் பற்றி அவரிடம் பேசின போது அவர் நெகிழ்ந்து போனார். எனக்கு அவரது மலையாள கவிதை
மொழியாக்க நூலை அளித்தார்.
சென்னை கிறித்துவக் கல்லூரியில்
முதுகலை முதல் வருடம் பயிலும் போது அவரை போனில் தொடர்பு கொண்டு அவரது வெளியாக இருக்கும்
நூல்கள் பற்றி விசாரித்தேன். “இப்போதைக்கு அந்நூல்களை வாங்க எனக்கு பணமிருக்காது” என்று
எதேச்சையாய் சொன்னேன். இரண்டு நாட்களில் என் விடுதிக்கு இரண்டு பண்டல்கள் வந்தன. ஒரு
கட்டு அவரது இலக்கிய முன்னோடிகள் முழுவரிசையும். இன்னொன்றில் காடு மற்றும் ஏழாம் உலகம்.
எனக்கு திகைப்பும் மகிழ்ச்சியும் ஒரே நேரம் ஏற்பட்டன. இதையெல்லாம் அவர் செய்ய அவசியம்
இல்லை. ஏனென்றால் தினமும் அவரிடம் பல புத்தகங்களை பேசும் போதும் ஒருநாள் கூட அவரது
நாவல்கள் பற்றி பாராட்டி ஒருவரியை கூட அவரிடம் சொன்னதில்லை. அவருக்காக லாபி செய்ததில்லை.
கூட்டம் நடத்தியதில்லை. என்னிடம் அவர் எதையும் தனக்காக செய்யக் கேட்டதும் இல்லை.
இன்னொரு சம்பவம். அதைப் பற்றி
என் முதல் நூலின் முன்னுரையில் எழுதியிருக்கிறேன். கல்லூரி முடித்து வேலைக்கு போன பின்
தனிப்பட்ட உறவுநிலை சார்ந்த ஒரு மோசமான அவமானத்துக்கு உள்ளானேன். அதன் வலி தாங்க முடியாமல்
ஆன போது எனக்கு பேசத் தோன்றின ஒரே ஆள் ஜெயமோகன் தான். அவருக்கு போன் செய்தேன். அப்போது
தான் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தார். அவர் நடந்து தான் அலுவலகம் போவார். ஆக வீட்டில்
இருந்து கிளம்பி நடந்து அலுவலகம் சேரும் வரை என்னிடம் விசாரித்துக் கொண்டே வந்தார்.
என்னால் தான் என்ன பிரச்சனை என கூற இயலவில்லை. ஒரு வார்த்தை சொல்ல முயன்றால் அழுகை
கரைபுரண்டு வரும். அரைமணி நேரம் ஒன்றுமே சொல்லாமல் போனில் அழுது கொண்டே இருந்தேன்.
அவர் திரும்பத் திரும்ப “என்ன ஆச்சு?” என கேட்டுக் கொண்டிருந்தார். அலுவலகம் போன பின்
அழைக்கிறேன் என துண்டித்தவர் பிறகு உடனே அழைத்து ஒரு பத்து நிமிடம் கடுமையாக ஆனால்
அன்பாக பேசினார். அன்று அவர் சொன்ன அறிவுரை என் வாழ்வை மாற்றியது. மனத்திடம் கொண்ட,
முனைப்பு மிகுந்தவனாக ஆக்கியது.
கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு
படிக்கையில் ஊட்டியில் அவர் நடத்தின முகாமில் கலந்து கொண்டேன். முகாம் முடிந்து வீடு
திரும்பிய பின் காலையில் அவர் என்னை போனில் அழைத்து அன்பாக விசாரித்தது நினைவிருக்கிறது.
என்னை ஊக்கப்படுத்தும்படி நிறைய நல்ல சொற்களைக் கூறினார்.
நான் கல்லூரியில் கற்றதை விட,
நூல்கள் வழி கற்றதை விட அவருடனான உரையாடலில் கற்றது அதிகம். உதாரணமாய், சென்னையில்
படிக்கும் போது அடிக்கடி ஊருக்கு வந்து ஜெயமோகனிடம் பேசுவேன். திரும்ப போகும் போது
மனம் முழுக்க அவர் கூறின பல கருத்துகள், அவதானிப்புகள் இருக்கும். வகுப்புகளின் போது
அதை முன்வைத்து நான் சில கேள்விகள் கேட்டாதோ, விவாதங்கள் செய்தாலோ என் பேராசிரியர்கள்
பதில் கூற முடியாது திகைத்துப் போவார்கள். இப்பேராசிரியர்கள் சாதாரண ஆட்கள். அல்ல சென்னை
கிறித்துவக் கல்லூரியில் பிரபலமான, பல பெருமைகளைப் பெற்ற மூளைக்காரர்கள். அப்போது என்
வகுப்பில் என்னை விட நன்றாக ஆங்கிலம் பேசுகிற, தரமான கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள்
இருந்தார்கள். ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் கூட இருந்தார்கள். அவர்களுடன் போட்டியிடுவது
எனக்கு சவாலாக இருந்தது. ஒருமுறை பின்நவீனத்துவம் பற்றி ஒரு தேர்வு வந்தது. பேராசிரியர்
தந்த விளக்கங்களும் குறிப்புகளும் மாணவர்களை குழப்பி இருந்தன. நான் ஜெயமோகன் தன் “தேவதேவனை
முன்வைத்து” நூலின் பின்னிணைப்பில் பின்நவீனத்தும் பற்றி எழுதியிருந்ததை மட்டும் படித்து
விட்டு அதை ஆங்கிலத்தில் மாற்றி தேர்வில் எழுதினேன். முதல் மதிப்பெண் பெற்றேன். ஒரு
தமிழ் நூல் மூலம் தேர்வெழுதி ஆங்கில இலக்கியத்தில் முதலில் வந்தது எனக்கு பெருமையாக
இருந்தது.
இப்படி இப்படி நிறைய நிறைய நல்ல
அனுபவங்கள் எனக்கு அவர் சார்ந்து உள்ளன. ஒரு மோசமான அனுபவம் கூட இல்லை. இதை நான் எழுதக்
காரணம் என்னை விட அவர் பல மடங்கு நல்லவர் என குறிப்பிடத் தான். நான் அவர் பற்றி விமர்சித்து
எழுதி உள்ளவையும் உண்மை. ஆனால் இந்த நேர்மறையான பரிமாணங்களும் சேர்ந்தது தான் ஜெயமோகன்.
இந்த எதிர்நிலைகள் ஒன்றாய் சந்திக்கும் ஒரு புள்ளி அவரிடத்து உள்ளது.
ஜெயமோகனை ஒரு புலியுடன் ஒப்பிடலாம். பிசிற தட்டாத
வரை அவருடனான உறவு அற்புதமான பலன்களைத் தரும். எதையும் எதிர்பாராத அன்பையும், அளப்பரிய
அறிவையும் நம்முடன் பகிர்ந்து கொள்வார். இன்றைய இந்து பத்திரிகையில் தாய்லாந்தில் உள்ள
மடாலயத்தில் வளர்க்கப்படும் புலியின் புகைப்படத்தை பார்த்தேன். அதில் ஒரு இளம் துறவி
புலியின் தலையை வருடி விட, அப்புலி ஒரு கம்பீரத்துடன் அந்த செல்லம் கொஞ்சலை
ஏற்றபடி இருக்கிறது. இன்னொரு புலிக்கு ஒரு துறவி உணவு ஊட்டி விடுகிறார். ஒருவேளை என்றாவது ஒருநாள் புலியின் மனநிலை சிறிதே மாறினால் முற்றிலும் வேறு விதமாகவும் நடக்கலாம்.
அப்படி நடந்தால் நாம் அதை ஒரு கொடூரமான புலி எனக் கூற முடியாது. ஏனென்றால் புலியின் குணம் அப்படி.
ஏதோ ஒரு கட்டத்தில் நான் அவருடன்
முரண்படத் தொடங்கினேன். 2007இல் இருந்து நான் எழுதிய சில கட்டுரைகளில் அவரை நக்கலடித்தும்
விமர்சித்தும் வந்தேன். அதற்கு முன் மூன்று வருடங்கள் அவரிடம் நான் போனில் உரையாடுவதும்
குறைந்து போனது. இதன் ஒட்டுமொத்த விளைவு தான் அவர் நான் அவரது எதிரிமுகாமில் சேர்ந்து
கொண்டதாக கற்பனை செய்து என்னை மோசமாய் தாக்கி எழுதினது. மனுஷ்யபுத்திரனின் கவிதைகள்
பற்றி அவர் எழுதிய கட்டுரைகளை விமர்சித்து நான் எழுதிய கட்டுரை இதற்கு வெறும் முகாந்திரம்
தான்.
நான் அவருடன் ஏன் முரண்பட வேண்டும் என அடிக்கடி யோசிப்பேன்.
அதற்கான எந்த அவசியமும் இருந்ததில்லை. அவரது அரசியல், இலக்கிய நிலைப்பாடுகள் மீது பலருக்கும்
விமர்சனங்கள் உள்ளன. பலரது நிலைப்பாடுகள் மீதும் எனக்கு அது போல் மாறுபட்ட கருத்துக்கள்
இருக்கலாம். ஆனால் அவரை இலக்காக்கி என் மொத்த எதிர்ப்பாற்றலையும் கடந்த 8 வருடங்களில்
செலவழித்திருக்கிறேன். என்னுடைய இந்த நடவடிக்கைகளின் உளவியல் என்ன?
அவருடன் ஒரு இணக்கமான உறவையே பேணி
இருக்கலாம் என பலமுறை யோசித்ததுண்டு. ஆனால் இன்னொரு புறம் அவரை மறுத்து எழுதுவதை மனம்
விரும்பவும் செய்தது. இந்த உள்முரண்பாட்டை எப்படி விளக்குவது? அவருடனான தொடர்பில் ஏற்பட்ட
ஒரு இடைவெளி பல எதிர்மறை கற்பனைகளுக்கு உரம் போட்டிருக்கலாம். ஜெயமோகனின் கற்பனை வளமானது.
நேரடி வாழ்வில் அதன் செயல்பாடு பிழையானது. மனுஷ்யபுத்திரனை பிரீதி செய்ய நான் அவரை
விமர்சிப்பதாக அவர் கற்பனை பண்ணிக் கொண்டார். ஆனால் உண்மையில் என் ஜெ.மோ விமர்சனங்களுக்கும்
மனுஷுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் யாரையும் தூண்டி விடுபவர் அல்ல. மனுஷிடம் நண்பராய்
இருக்கும் போது நீங்கள் அவருக்கு முற்றிலும் மாறான கருத்துக்களை கொண்டிருக்கலாம். அவரை
கடுமையாய் தாக்கி கூட நீங்கள் எழுதலாம். அடுத்த நாளே அவரிடம் போய் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கலாம்.
அந்தளவுக்கு தனிமனித சுதந்திரத்துக்கு இடமளிக்கக் கூடிய நண்பர் அவர். சொல்லப் போனால்
ஜெயமோகனை அங்கதம் செய்து நான் எழுதி வருகிற காலகட்டத்தில் “எதற்கு அவரை தேவையில்லாமல்
சீண்டிக் கொண்டே இருக்கிறீர்கள்?” என அவரே கேட்டிருக்கிறார். சாரு ஜெ.மோவின் நூலைக்
கிழித்த கூட்டம் நடந்த போது நான் கீழே விழுந்து கால் உடைந்து வீட்டில் ஓய்வில் இருந்தேன்.
அந்த வாரம் முழுக்க என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. அப்போது பேஸ்புக் இருந்தாலும்
யாரும் இவ்வளவு மும்முரமாக அதில் இயங்கவில்லை. நான் எதேச்சையாக மனுஷ்யபுத்திரன் கவிதைகள்
பற்றி ஜெ.மோ எழுதின தொடர் கட்டுரைகளை அவரது இணையதளத்தில் படித்தேன். எனக்கு சற்றும்
அவற்றுடன் உடன்பாடு ஏற்படவில்லை. குறிப்பாய் உடலை மையப்படுத்தி ஒரு உளவியலை கற்பனை
செய்து அவர் மனுஷின் கவிதைகள் மீது திணிப்பது ஒரு தவறான ஆய்வுமுறை என நினைத்தேன். மனுஷை
ஆண்டாள் போன்ற ஒரு தேவதுதி பாடும் கவிஞராக ஜெயமோகன் பார்ப்பதும் எனக்கு ஏற்புடையதாக
இல்லை. அன்றிரவே என் கருத்துக்களை தொகுத்து எழுதினேன். அடுத்த நாள் தான் இலக்கிய உலகில் நடந்து கொண்டிருக்கும் சாரு×ஜெயமோகன்
சர்ச்சைகள் பற்றி அறிந்து கொண்டேன். நான் எழுதின கட்டுரையை அப்போது உயிரோசையில் வெளியிட்டால் அது
முற்றிலும் வேறு வெளிச்சத்தில் பார்க்கப்படும் என எனக்கு புரிந்தது. ஜெயமோகனின் கடும்
கோபத்துக்கு ஆளாகக் கூடும் எனவும் ஊகித்தேன். என் முன் இரண்டு வாய்ப்புகள். ஒன்று விலகி
நிற்பது. இன்னொன்று எரியும் பிரச்சனைக்குள் குதித்து உடம்பெல்லாம் தீக்காயம் பெறுவது.
எனக்கு தற்கொலை இச்சை அதிகம் என்பதால் இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தேன்.
இச்சூழலில் ஜெயமோகனின் மூளை மாந்திரிக
எதார்த்த பாணியில் இயங்கியது. ஒரு மிகப்பெரிய சதிக்கூட்டத்தின் தூண்டுதலின் பெயரில்
நான் அக்கட்டுரையை எழுதியதாய் நினைத்தார். என் பெயரில் மனுஷ்யபுத்திரன் எழுதின கட்டுரையாக
அதை கற்பித்துக் கொண்டார். கடுங்கோபம் கொண்டார். என்னை துரோகி என்றும், பிரசுர வாய்ப்புக்காய்
தன்னை எதிர்க்கிற நபர் என்பனை கற்பித்து ஒரு சாபக் கட்டுரை இயற்றினார். அதன் பிறகு
நானும் அவரை பன்மடங்கு கடுமையாய் தாக்கி எழுத ஆரம்பித்தேன்.
உயிர்மையில் ஒரு கட்டுரை பிரசுரிக்க நான் ஜெயமோகனை
எதிர்த்து எழுத வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என அவருக்கு விளங்கவில்லை. ஜெயமோகனுக்கு
அணுக்கமாய் உள்ளவர்கள் கூடத் தான் உயிர்மையில் தொடர்ந்து எழுதுகிறார்கள். மேலும் அப்பத்திரிகையில்
எழுதுவதன் பின் எனது கடுமையான உழைப்பும் வாசிப்பும் உள்ளது. நடைமுறை உலகில் பல விசயங்களை
தியாகம் செய்து தான் இத்தனை ஆண்டுகளாய் எழுதி வருகிறேன். தன்னை ஒருவர் விமர்சிப்பதற்கு
பின்னால் சில சிக்கலான காரணங்கள் இருக்கலாம் என அவருக்கு புரியவில்லை. இவ்வளவு புத்திசாலியான,
ஆழமான உளவியல் அவதானிப்புகள் கொண்டவரான அவருக்கு அது ஏன் புரியவில்லை என்பது எனக்கும்
புரியவில்லை. தன்னை ஒருவர் விமர்சித்தால் அவர் (1) இடதுசாரியாகவோ, (2) காலச்சுவடு அல்லது
(3) உயிர்மை ஆளாக இருக்க வேண்டும் என எளிமைப்படுத்த முனைகிறார். பல சமயங்களில் அவரை
எதிர்ப்பவர்கள் எந்த முகாமிலும் இருப்பதில்லை என்பதே உண்மை. இப்போது போகனையும் அவர்
இந்த வகைமைகளுக்குள் அடைக்கப் பார்க்கிறார். எழுத்தில் எதையும் சிக்கலாக பார்க்கும்
அவர் ஏன் நடைமுறையில் எல்லாவற்றையும் இவ்வளவு எளிமைப்படுத்துகிறார் என எனக்கு விளங்கவில்லை.
ஆனால் ஒரு சண்டை ஏதோ ஒரு கட்டத்தில்
துவங்கினால் அது ஒரு மீளாத கசப்பை தோற்றுவிக்கிறது. பிறகு அது நீண்டு கொண்டே போகும்.
தேவையில்லை என நாமே நினைத்தாலும் நிறுத்த முடியாது. அன்றிருந்ததை விட இன்று முதிர்ச்சியாக
இருக்கிறேன். இந்த சச்சரவெல்லாம் அவசியமற்றது என தோன்றுகிறது. எவ்வளவு சிறந்த எழுத்தாளர்,
எனக்காய் எவ்வளவோ மணிப்பொழுதுகள் தன் மதிப்பற்ற நேரத்தை செலவிட்டவர், பொருட்படுத்தி
நட்பு பாராட்டியவர் அவரிடம் இன்னும் மரியாதையுடன் நடந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
மரியாதையின் நிமித்தம் அவரது உவப்பற்ற பரிமாணங்களை கவனிக்காமல் விட்டிருக்கலாம் எனத்
தோன்றுகிறது. நமது பல நல்ல நண்பர்களிடம், உறவினர்களிடம் அப்படித் தானே இருக்கிறோம்?
ஆனால் பிரச்சனைகளை தனக்குத் தானே ஏற்படுத்தி அதை ருசிப்பதும் எனக்கு பிடித்திருக்கிறது.
என்ன செய்ய?
இன்னொரு காரணமும் தோன்றுகிறது.
இதை போகனுக்கும் பொருத்திப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது. ஜெயமோகன் போன்ற ஒரு பெரும்
வசீகரமான ஆளுமையுடன் தொடர்ந்து இருப்பது சிலருக்கு மூச்சு முட்டக் கூடியதாக மாறும்.
குறிப்பாய் எழுத்தாளனுக்கு, சிந்தனையாளனுக்கு. அவரிடம் இருந்து சற்று விலகி மூச்சு
வாங்கி சொந்தமாய் யோசிக்க, படைக்க மனம் ஏங்கும். பெற்றோரிடம் இருந்து குழந்தைகள் தப்பித்து
சுயமாய் வாழ ஏங்குவது போன்றது இது. ஆனால் இதை சுலபமாய் செய்ய இயலாது. ஜெயமோகனின் பக்கவேர்கள்
அவரது நண்பர்களின் மனதின் பல இடங்களில் நுழைந்து பற்றி உறிஞ்சிக் கொண்டிருக்கும். அதை
அறுத்து எறிந்து தான் நீங்கள் புதிதாய் உருவெடுக்க முடியும். அப்போது இயல்பாய் மனக்காயங்கள்
நேரும். ஆக இந்த விரோதமும் எதிர்ப்பும் சச்சரவுகளும் அவரிடம் இருந்து விலகி நின்று
மூச்சு வாங்குவதை நியாயப்படுத்துவதற்கான என் ஆழ்மனதின் ஒரு நுட்பமான தந்திரமாகவும்
இருக்கலாம்.
அவருடைய சாபக்கட்டுரை வெளியாகி
இரண்டு வருடங்களில் நான் மிக மோசமாய் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிற்கு
சென்று எப்படியோ மீண்டு வந்தேன். அதைப் பற்றி உயிரோசையில் எழுதினேன். அத்தருணத்தில்
என் பல நண்பர்கள் யாரும் நலம் விசாரிக்கவோ, தங்கள் அண்மையை தெரிவிக்கவோ இல்லை. அவர்களுக்கு
என்ன நடந்ததென தெரியாமலும் இருந்திருக்கலாம். ஒரே ஒருவரிடம் இருந்து எனக்கு நலம் வாழ்த்தி
மின்னஞ்சல் வந்தது. அது ஜெயமோகன் அனுப்பியது. இப்படி எழுதி இருந்தார்:
அன்புள்ள அபிலாஷ்,
உயிர்மையில் உங்கள் கட்டுரையை ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். அதைப்பார்த்து கிட்டத்தட்ட உறைந்து போனேன். இத்தகைய அனுபவங்கள் இந்தியாவில் அபூர்வமல்ல. ஆனால் தெரிந்தவருக்கு நடக்கும்போது அவை உலுக்கிவிடுகின்றன. கடந்த ஏழெட்டாண்டுகளாக மருத்துவர்களின் அராஜகங்களாக கேள்விப்பட்டு வருகிறேன். கிட்டத்தட்ட கொலைகாரர்களின் மனநிலையுடன் இருக்கிறார்கள். அவற்றை பொதுவெளியில் வைக்க வைக்க மேலும் மேலும் இங்கே நாம் அன்னியமாக நேர்கிறது. தனக்கு வராதபோது மக்கள் பொருட்படுத்துவதில்லை என்பதே என் அனுபவம்
உங்கள் உடல்நலம் திரும்பியது ஆறுதல் அளிக்கிறது. அது ஒரு தற்செயலாக இருக்கலாம். ஆனால் அதை ஒரு நல்வாய்ப்பாக கொள்ளும் உங்கள் மனநிலை சிறப்பானது
என் இத்தனைநாள் வாழ்க்கையில் வெளியே சொல்லமுடியாத ஏமாற்றங்களையும் நம்பமுடியாத சுரண்டல்களையும் பலமுறை சந்தித்திருக்கிறேன். அதைவிட என் நண்பர்களுக்கு நிகழக்கண்டிருக்கிறேன் . மனிதனுக்கு சகமனிதன் மீது உள்ள அளவிடமுடியாத அச்சமும் அருவருப்பும் ஒரு இயற்கைச்சக்தி என்றே இன்று படுகிறது. அதை ஒன்றும் செய்யமுடியாது. எந்த மனிதரும் எதையும் செய்யக்கூடும் என்பதே உண்மை.
அதைக் கண்டபின்னும் அதைக்கடந்து ஆம் நான் மனிதன் என்று சொல்பவனையே நான் எழுத்தாளன் என்பேன் -தஸ்தயேவ்ஸ்கியைப்போல.
அந்த மனநிலை உங்களுக்கு வாய்க்கட்டும்
வாழ்த்துக்கள்
நலம்பெறுக
ஜெ
உயிர்மையில் உங்கள் கட்டுரையை ஒரு நண்பர் அனுப்பியிருந்தார். அதைப்பார்த்து கிட்டத்தட்ட உறைந்து போனேன். இத்தகைய அனுபவங்கள் இந்தியாவில் அபூர்வமல்ல. ஆனால் தெரிந்தவருக்கு நடக்கும்போது அவை உலுக்கிவிடுகின்றன. கடந்த ஏழெட்டாண்டுகளாக மருத்துவர்களின் அராஜகங்களாக கேள்விப்பட்டு வருகிறேன். கிட்டத்தட்ட கொலைகாரர்களின் மனநிலையுடன் இருக்கிறார்கள். அவற்றை பொதுவெளியில் வைக்க வைக்க மேலும் மேலும் இங்கே நாம் அன்னியமாக நேர்கிறது. தனக்கு வராதபோது மக்கள் பொருட்படுத்துவதில்லை என்பதே என் அனுபவம்
உங்கள் உடல்நலம் திரும்பியது ஆறுதல் அளிக்கிறது. அது ஒரு தற்செயலாக இருக்கலாம். ஆனால் அதை ஒரு நல்வாய்ப்பாக கொள்ளும் உங்கள் மனநிலை சிறப்பானது
என் இத்தனைநாள் வாழ்க்கையில் வெளியே சொல்லமுடியாத ஏமாற்றங்களையும் நம்பமுடியாத சுரண்டல்களையும் பலமுறை சந்தித்திருக்கிறேன். அதைவிட என் நண்பர்களுக்கு நிகழக்கண்டிருக்கிறேன் . மனிதனுக்கு சகமனிதன் மீது உள்ள அளவிடமுடியாத அச்சமும் அருவருப்பும் ஒரு இயற்கைச்சக்தி என்றே இன்று படுகிறது. அதை ஒன்றும் செய்யமுடியாது. எந்த மனிதரும் எதையும் செய்யக்கூடும் என்பதே உண்மை.
அதைக் கண்டபின்னும் அதைக்கடந்து ஆம் நான் மனிதன் என்று சொல்பவனையே நான் எழுத்தாளன் என்பேன் -தஸ்தயேவ்ஸ்கியைப்போல.
அந்த மனநிலை உங்களுக்கு வாய்க்கட்டும்
வாழ்த்துக்கள்
நலம்பெறுக
ஜெ
இந்த கோபங்கள், பழிவாங்கும் உணர்ச்சி,
சாபங்கள் ஆகியற்றுக்கு அப்பால் அவருடைய அன்பு இன்னும் உலராமல் இருக்கிறது என உணர்ந்த
தருணம் அது. ஆனால் அதை அவர் வெளிப்படுத்த நான் மரணத்தை தொட்டு திரும்ப வர வேண்டியிருக்கிறது.
மரணம் நமது ஈகோ உருவாக்கும் பல கற்பிதங்களை உடைத்து பார்வையை தெளிவாக்குகிறது. மனதை
இயல்பாக, சன்னமாக, களங்கமற்று ஆக்குகிறது. இது போன்ற அக்கறையை என்னை விரோதித்த ஒருவரிடம்
நான் காட்டுவேனா தெரியாது.
ஆகையால் நண்பர்களே! ஜெயமோகனை கண்டித்தும்
விமர்சித்தும் நான் எழுதுகிற கட்டுரைகளைப் படித்து உங்களில் ஒரு சிலர் அவர் பொல்லாதவர்
என நினைத்திட வேண்டாம். உண்மையில் அவர் நல்லவர், நான் தான் கெட்டவன். (இதை நான் குற்றவுணர்விலோ
தன்னிரக்கத்திலோ சொல்லவில்லை. சஞ்சலமற்ற. தெளிவான மனதுடன் சொல்கிறேன்.)
பின்னிணைப்பு:
