இரண்டு வகையான வெகுஜன நாவல்கள்
உண்டு. ஒன்று மலிவானவை. இன்னொன்று புத்திசாலித்தனமும் கலைநயமும் கூடியவை. முதல் வகைக்கு
ராஜேஷ் குமாரையும், இரண்டாவதற்கு சுஜாதாவையும் உதாரணம் காட்டலாம். இன்று சுஜாதாவின்
வாசகர்கள் அவர் “இலக்கிய எழுத்தாளர் இல்லைன்னு சொல்றாங்களே, உண்மையா?” என விசனமாக கேட்கிறார்கள்.
இன்னும் சிலர் இலக்கியமோ இல்லையோ அவர் போல விற்பனைத் தகுதி கொண்ட எழுத்தை வேறு யார்
உருவாக்கி இருக்கிறார்கள் என கேட்கிறார்கள். எனக்கு இந்த இரு கேள்விகளுமே அவசியமற்றவை
எனத் தோன்றுகின்றன.
இலக்கிய எழுத்தாளனும், வெகுஜன
எழுத்தாளனும் இருவேறு மனநிலைகளுக்கு தீனி போடுகிறார்கள். இருவேறு நுண்ணுணர்வு நிலைகளில்
நின்று வாசகனுடன் உரையாடுகின்றன. வெகுஜன எழுத்து நம்மிடம் அதிக கவனமும் மூளைத்திறனும்
கோருவதில்லை. ஒரு டெம்பிளேட்டுக்குள் இயங்குகின்றன. நம் உணர்ச்சிகளைத் தூண்டி ஆர்வத்தை
தக்க வைக்கின்றன. இவை எவையுமே கெட்ட காரியங்கள் இல்லை. இப்படித் தான் வெகுஜன எழுத்தில்
இயங்க முடியும். இலக்கிய எழுத்தும் இவற்றை எல்லாம் செய்யும். ஆனால் குறைவாக செய்யும்.
இரண்டு வகை எழுத்துக்களும் முக்கியம். ஒரே வாசகர் இரண்டு வகையான எழுத்துக்களையும் படிக்கலாம்.
இரண்டையும் தரம் பிரித்து படிநிலையில் அடுக்குவது அவசியமற்ற பணி. நல்ல இலக்கிய படைப்பைப்
போன்றே நல்ல வெகுஜன படைப்பை எழுதுவதும் மிக சிரமமான காரியம். இரண்டுக்கு பின்னும் கணிசமான
உழைப்பு உள்ளது.
ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் தமிழில்
துப்பறியும் நாவல்கள் மிக மிகக் குறைவு. குற்றத்தை நாம் பார்க்கிற விதத்தில் உள்ள வித்தியாசம்
ஒருவேளை காரணமாய் இருக்கலாம். நம்மூரில் சீரியல் கொலைகள் அதிகம் நடப்பதில்லை. பழிவாங்குவதற்கான,
சொத்து பறிப்பதற்கான குடும்ப கொலைகளே அதிகம். குடும்ப குற்றங்கள் பற்றி துப்பறியும்
நாவல்கள் எழுத நிறைய சாத்தியங்கள் உள்ளன. அமெரிக்காவில் போல இங்கு துப்பாக்கிகள் எளிதில்
கிடைக்காது. அதனால் உயிர்பறிக்கும் வன்முறை சம்பங்கள் அன்றாட வாழ்வில் குறைவு. நாம்
துப்பாக்கி சத்தங்கள் கேட்டு காலையில் கண்விழிப்பதில்லை. மும்பை போன்ற நகரங்களில் கேங்ஸ்டர்கள்
காவல்துறை ஆசீர்வாதத்துடன் தன்னம்பிக்கையாய் செயல்படுகிறார்கள். இச்சூழலை வைத்து விக்ரம்
சந்திரா எழுதிய சேக்ரட் கேம்ஸ் (Sacred Games) விரிவான ஆர்வமூட்டும் நாவல். ஆங்கில
துப்பறிய நாவல்களில் சமீபமாக நார்வேயை சேர்ந்த எழுத்தாளர்கள் தாம் ஆட்சி செய்கிறார்க்ள்.
இவர்களில் ஜொ நெஸ்போ கவனித்தக்கவர். இவரது லெப்பர்ட், ஸ்னோமேன் ஆகியவை என்னை கவர்ந்தவை.
இவரது நாவல்கள் 40 மொழிகளுக்கு மேல் பெயர்க்கப்பட்டுள்ளன. வழக்கமான துப்பறியும் நாவல்
டெம்பிளேட்டுக்குள் இயங்கினாலும் உளவியல் பார்வையும், வாழ்க்கை மீதான தீவிரமான அக்கறையும்
இவரது எழுத்துக்கு அடர்த்தியை அளிக்கின்றன. ஆங்கிலத்தில் இது போல் பல நல்ல துப்பறியும்
எழுத்தாளர்கள் உள்ளார்கள்.
அரவிந்த் சச்சிதானந்ததின் “தட்பம்
தவிர்” தமிழில் நான் வாசித்த மிகச் சில நல்ல துப்பறியும் நாவல்களில் ஒன்று. தரமான வெகுஜன
எழுத்து இவருடையது. இந்நாவல் ஒரு கல்லூரியை ஒட்டி நிகழும் தொடர் கொலைகளை துப்பறியும்
கார்த்திகேயன் எனும் அதிகாரியின் கண்ணோட்டத்தில் நகர்கிறது. என்னை மிகவும் கவர்ந்த
விசயம் அரவிந்த் திகில் மற்றும் வேகத்துக்காக நாவலை நகர்த்துவதில் அவசரம் காட்டவில்லை
என்பது. ஒரு துப்பறியும் நாவலுக்கு நிதானம் முக்கியம். அப்போது தான் திகில் அதிகமாகும்.
அது போல் நாவலின் மையபாத்திரமான இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்
பெரும் வல்லவனாக அல்லாமல் நிறைய பலவீனங்களும் குழப்பங்களும் கொண்டவராக வருகிறார். கொலையாளி
அவரை எளிதில் மனதளவில் பலவீனப்படுத்த முடிகிறது. அவரது மனைவி பிரிந்து போய் விடுகிறார்.
அவர் நாவலின் போக்குடன் முதிர்ச்சி கொண்டவராக மாறுகிறார். இது நாவலை எதார்த்தமாக்க
உதவுகிறது. நாவலின் இறுதியில் கொலையாளி வெல்ல துப்பறியும் அதிகாரி முறியடிக்கப்படுகிறார்.
சொல்லப்போனால் நாவலின் இறுதியில் நாயக பாத்திரம் கீழிறங்க கொலையாளியும் மற்றொரு எதிர்நிலை
பாத்திரமான அசிஸ்டெண்ட் கமிஷ்னர் தேவும் மேலெழுகிறார்கள். ஒரு துப்பறியும் அதிகாரியை
குற்றவாளிகள் எப்படி முட்டாளாக்குகிறார்கள் எனச் சொல்லும் கதையாகவும் இது உள்ளது. குற்றவாளியின்
உளவியல் பற்றி பாதிரியாரான தன் வளர்ப்பு தந்தையுடன் கார்த்திகேயன் விவாதிக்கும் இடங்கள்
நன்றாக உள்ளன. ஆனால் பாதிரியார் இவ்விதமான உளவியல் பார்வை தவறான பாதையில் வழக்கை திருப்பக்
கூடும் என அஞ்சுகிறார். இறுதியில் அவ்விதமே ஆகிறது.
இப்படி நாவலின் களத்தைப் பொறுத்தமட்டில்
அரவிந்த் நிறைய புது விசயங்களை முயன்றுள்ளார். ஒரே சிக்கல் கொலைகாரர்களின் திட்டங்களும்
அவற்றின் வெற்றியும் நம்பகத்தன்மையுடன் இல்லை என்பது. அதே போல், துப்பறிந்து வழக்கை
மெல்ல மெல்ல திறக்கும் இடங்கள் சாதாரணமாய் எதிர்பார்க்கும்படியாய் உள்ளன. ஆனால் டேன்
பிரவுன் பாணியில் புதிரை அழகாய் அவிழ்த்து குற்றத்தை கண்டுபிடிப்பது அரவிந்தின் வலிமை
அல்ல. அவர் அதிகமும் கதைகூறலில், பாத்திர அமைப்பில், நடையில் மெனக்கட்டிருக்கிறார்.
துப்பறியும் நாவல்களில் பாத்திர
அமைப்பு தட்டையாக இருக்கும். காரணம் பாத்திரங்களுக்குள் நுழைய நேரம் இருக்காது. ஆனால்
அரவிந்த் பொறுமையாக மைய பாத்திரங்கள் மட்டுமல்ல அடுத்த கட்ட பாத்திரங்களைக் கூட உயிரோட்டமாய்
உருவாக்குகிறார். கார்த்திகேயன், அவருக்கு உதவும் ஏழுமலை, கொல்லப்படும் பிரகாஷ், கொலையாளனின்
பாட்டி ஆகியோரின் பாத்திரங்களை சொல்லலாம். டி.ஜி.பி வீரபத்திரன் தனது அலுவலகத்தில்
கூட்டம் நடக்கும் அறையில் நுழைந்திட பிற அதிகாரிகள் எழுந்து நிற்கிறார்கள். அவர் அதெல்லாம்
வேண்டாமென அவசரமாய் கையசைத்து விட்டு கேள்விகளை கேட்கத் துவங்கி விடுகிறார். இந்த ஒரே
வரியில் நமக்கு அவரது குணநலன் புரிந்து விடுகிறது.
துப்பறியும் நாவலில் பிரதானமான
திகில் உணர்ச்சியை அதிகப்படுத்த கூடவே ஒரு காமம் அல்லது நகைச்சுவை சார்ந்த தொனி வருவது
வெகுவாக உதவும். அரவிந்த பகடியை அழகாக பயன்படுத்தி இருக்கிறார்.
இந்நாவல் கூகிள் பிளே ஸ்டோரில்
இலவசமாய் தரமிறக்கக் கிடைக்கிறது. நல்ல முயற்சி. படித்து பாருங்கள்!