இன்று ஒரு கல்லூரி ஆசிரியர் வேலையிடத்துக்கான
சந்தை மதிப்பு 12 லட்சத்தில் இருந்து 25 லட்சம் வரை. இந்த அதிமுக அரசு பதவிக்கு வந்த
பின், வேலை நியமன ஊழலை ஒழுங்குபடுத்தி ஒரு கட்டாய வடிவத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இது பற்றி முன்னர் ஜுனியர் விகடனில் வந்த அறிக்கை நினைவிருக்கும். இந்த லஞ்சத்தில்
ஒரு பகுதி அரசுக்கும் போகிறது என ஜுவியில் கூறியிருந்தார்கள்.
கிராமங்களில் மக்களுக்கு பணத்தை அதிகம் செலவழிக்காமல்
சேர்த்து வைக்கிற பழக்கம் உண்டு. நகையாகவோ சொத்தாகவோ சேர்த்து அதை மகளுக்கு வரதட்சணையாக
கொடுப்பது நோக்கம். ஆனால் இப்போது இப்பணத்தைக் கொண்டு கார், நகையுடன் தம் மகளுக்கு
அரசு உதவிப்பேராசிரியர் வேலையும் வாங்கிக் கொடுத்து மணமுடித்து வைக்கிற புதுப்பழக்கம்
ஆரம்பித்துள்ளது. இதனால் நெல்லை, குமரி மாவட்டங்களில் கல்லூரி வேலைக்கான லஞ்சத் தொகை
25 லட்சங்கள் வரை போகிறது. ஒரு கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட துறையில் லட்சம் கொடுத்து
சேர ஆள் கிடைக்கவில்லை என்று நிர்வாகமே முயன்று, அங்கு விண்ணப்பிக்காத ஒருவரை தேடிக்
கொண்டு வற்புறுத்தி பணம் 12 லட்சம் வாங்கி சேர்த்துக் கொண்டது என ஒரு நண்பர் தெரிவித்தார்.
எனக்குத் தெரிந்த மற்றொரு கல்லூரி லஞ்சம் வாங்க மறுத்ததால் கடந்த இரு வருடங்களுக்கு
மேலாக அங்கு சில வேலையிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன. அக்கல்லூரியும் பிடிவாதமாக அரசுக்கு
வளைந்து கொடுக்காமல் பகுதிநேர ஆசிரியர்களைக் கொண்டு சமாளித்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, ஒரு கல்லூரி ஆசிரியருக்கான
தகுதியை தீர்மானிப்பதில் யு.ஜி.சியும் நீதிமன்றங்களும் சேர்ந்து பட்டாதாரிகளின் தலையை
உருட்டுகின்றன. முதலில் எம்.பில் பட்டம் போதும் என்றார்கள். பிறகு எம்.பில் செல்லாது
என்றார்கள். அடுத்து முனைவர் பட்டம் போதும் என்றார்கள். பிறகு 2009க்கு முன்பான முனைவர்
பட்டம் செல்லாது என்றார்கள். 2012இல் அலஹபாத உயர்நீதிமன்றம் 2009க்கு முன்பு முனைவர்
பட்டம் பெற்றவர்கள் தகுதியானவர்கள் என்றது. இரு வாரங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம்
அத்தீர்ப்பு செல்லாது என மீண்டும் நாட்டாமை பண்ணியுள்ளது. மீண்டும் 2009க்கு முன்பு
முனைவர் பட்டம் செய்த அப்பாவிகளின் வயிற்றில் அடித்துள்ளது. இப்போது அவர்கள் யுஜிசி
தேர்வெழுத வேண்டும். அல்லது மீண்டும் முனைவர் பட்டம் செய்ய வேண்டும். யுஜிசி தேர்வின்
அமைப்பையும் மீண்டும் இம்முறை மாற்றி இருக்கிறார்கள். இப்படி மூக்கை பிய்த்து தலையில்
வைத்து நாக்கை இழுத்தை கழுத்தில் சுற்றி யுஜிசி செய்கிற மாற்றங்களுக்கு ஒரே நோக்கம்
ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்துவதாம். ஐயா, லட்சோபலட்சம் லஞ்சம் வாங்கி ஆட்களை பட்டவர்த்தமாய்
நியமனம் செய்யும் போது மட்டும் ஆசிரியர் தகுதி பாதிக்கப்படாதா?
ஏன் அரசின் குறுக்கீட்டில் லஞ்ச அறுவடை நடப்பது பற்றி
ஒருவரும் வழக்கு தொடுப்பதில்லை; ஏன் எந்த நீதிபதியும் கருத்து சொல்வதில்லை. ஏனென்றால்
ஊழலினால் அரசு, தனியார் நிர்வாகங்கள், பணமுள்ள பட்டதாரிகள் என முத்தரப்பினரும் லாபமடைகிறார்கள்.
ஆனால் மூன்று தரப்பினருமே ஆசிரியர்களின் தகுதி குறைந்து விட்டது என விடாமல் நாமம் ஜெபித்துக்
கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்களின் தகுதி அல்ல கொடுக்க லஞ்சப் பணம் தான் குறைந்து
விட்டது. யுஜிசி எப்படியெல்லாம் தேர்வை நடத்தி சிரமமாக்கி அப்பாவிகளை பல்டி அடிக்க
வைக்கலாம் என யோசிக்காமல் குறைந்த வட்டியில் 25 லட்சம் கடன் வழங்குவது ஏற்பாடு செய்யலாம்.
பணமில்லாத பட்டதாரிகள் இதற்கும்
ஒரு வழி கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் வட்டிக்கு பணம் வாங்கி வேலையில்
சேர்ந்து விடுகிறார்கள். நியமனம் உறுதி ஆன கடிதம் வந்ததும் அதைக் கொண்டு தனியார் வங்கியில்
கடன் வாங்கி வட்டியை அடைத்து விட்டு மாத சம்பளத்தை ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு அப்படியே
வங்கியில் கட்டி விடுவார்கள். அதுவரை சம்பளம் இல்லாமல் கழித்து விடுவார்கள். ஆனால்
இப்படி தகிடுதித்தம் செய்து, கைக்கு வரும் சம்பளத்தை பாக்கெட்டில் வைத்து பார்க்க முடியாமல்
பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் எந்தளவுக்கு விசுவாசமாய் இருப்பார்கள் தம் தொழிலில்?
அவர்கள் தான் ஏன் விசுவாசமாக இருக்க வேண்டும்?
சரி, தகுதித் தேர்வில் ஜெயித்து
வேலையில் அமர்கிறவர், லஞ்சம் கொடுத்து வந்திருந்தாலும், தகுதியாகத் தானே இருப்பார்?
இல்லை. தகுதித்தேர்வு வெறுமனே ஒருவரின் தகவல் அறிவை, நினைவுத் திறனைத் தான் சோதிக்கிறது.
இத்தேர்வின் முறை குறிப்பாக இலக்கியம், தத்துவம், சமூகவியல் உள்ளிட்ட கலைத்துறைகளுக்கு
பொருந்தாது. Gate, GMAT போன்ற அறிவியல் தேர்வுகளின் பாணியை அப்படியே யுஜிசி தகுதித்
தேர்விலும் பயன்படுத்துவது தான் சிக்கல். கலைத்துறைகளில் உள்ளார்ந்த புரிதல், மொழித்திறன்,
விளக்கும் திறன், அலசும் திறன் ஆகியவை பிரதானம். சரியாக பேச வராத ஒருவர் எவ்வளவு தான்
தகவல்திறனுடன் இருந்து பயனில்லை. மேலும் ஒரு எழுத்தாளர் எவ்வளவு நூல்கள் எழுதினார்,
அவர் என்று பிறந்தார், இறந்தார், அவர் இறுதியாக எழுதிய கவிதை எது போன்ற கேள்விகளுக்கு
இலக்கியத்தில் எந்த மதிப்பும் இல்லை. அவர் எழுதிய நூலில் என்ன இருக்கிறது, அது சரியா,
அதில் உள்ள வாழ்வு சார்ந்த சிக்கல்கள் என்ன எனும் விவாதம் சார்ந்த, ஆய்வுபூர்வமான கருத்துக்களை
தான் முதுகலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். அதற்குத் தான் முனைவர்
பட்ட ஆய்வு தரும் பயிற்சியும் அனுபவமும் அவசியம்.
ஆனால் இன்று மாணவர்கள் இளங்கலை மூன்றாம் வருடத்தில்
இருந்தே தகுதித் தேர்வு நோக்கி தயாரிக்க தொடங்குகிறார்கள். ஆய்வு, விவாதம், கோட்பாடு
ஆகியவற்றை புறக்கணித்து தகவல்களை மனனம் செய்கிறார்கள். தகுதித்தேர்வில் ஜெயிக்கும்
பொருட்டு தான் ஆசிரியர்களும் அவர்களுக்கு வகுப்பில் கற்பிக்கிறார்கள். அவர்கள் முதுகலைப்
படிப்பில் இரண்டாம் வருடமே தகுதித் தேர்வில் வென்று கல்லூரி ஆசிரியர் ஆகி விடுகிறார்கள்.
அவர்களுக்கு ஆய்வுப் பார்வையோ ஆசிரிய அனுபவமோ இருப்பதில்லை. அப்படியே வகுப்புக்கு போய்
தாம் மனனம் செய்த தகவல்களை மாணவர்களுக்கு ஒப்பித்து அவர்களையும் மனனம் செய்ய வைத்து
அடுத்த தகுதித் தேர்வுக்காக அவர்களை தயாரிக்கிறார்கள். இப்படி ஒரு கோழிப்பண்ணை தான்
கல்விக்கு பதில் நடக்கிறது.
இத்தீர்ப்பின் விளைவு என்ன? தற்போது
முனைவர் பட்ட ஆய்வு செய்கிறவர்களை இது பாதிக்காது என்றாலும், பொதுவாக ஆய்வாளர்களை கடுமையாக
சோர்வு கொள்ள வைக்கும். முனைவர் பட்டம் என்றாலே தகுதியற்றது எனும் எண்ணத்தை பரவலாக்கும்.
அடுத்த இரு பத்தாண்டுகளில் முனைவர் பட்ட ஆய்வுக்கான நெளியாளர்களுக்கு கடும் பற்றாக்குறை
ஏற்படும். நம் நாட்டில் ஆய்வுச் சூழல் அழியும்.
2009இல் யுஜிசி முனைவர் பட்ட ஆய்வுக்கான
விதிமுறைகளை பெயரளவில் மாற்றி அதை சீர்திருத்தியதாக பாவலா பண்ணி, அதுவரை ஆய்வு பண்ணி
வந்தவர்களை தகுதி அற்றவர்களாக அறிவித்ததும் சரி, இப்போது இத்தீர்ப்பும் சரி மூட்டைப்பூச்சியை
அழிக்க வீட்டைக் கொளுத்துவது போன்ற செயலாகும். யுஜிசி நினைத்தால் மட்டமான, போலியான
ஆய்வு அறிக்கைகளையும் அவற்றை ஊக்குவிக்கும் நெறியாளர்களையும் தடை செய்ய முடியும். அங்கங்கே
சிலருக்கு எதிராக கராறான நடவடிக்கை எடுத்தாலே போலி ஆய்வுகள் குறையும். ஆனால் அதற்குப்
பதில் தொடர்ந்து முனைவர் பட்டங்களை வழங்கிக் கொண்டே அப்பட்டங்களுக்கு மதிப்பில்லை என
யுஜிசி கூறுவது நகைப்புக்குரியது.